சேவலும் கெண்டகி வறுத்த கோழிக்கறியும்

இருள் வடிந்துபோகப் போகிறது
அடுக்ககச் சாளரப் பொத்தல்களில்
ஆங்காங்கே சில வெளிச்ச அருவிகள்
ஒரு சேவல் கூவுகிறது
அடுக்ககத்தில் எங்கனம் இக்குரல்

பிசிறில்லா சேவல் மொழியில்
நேர்த்தியிருந்தென்ன
உயிர்ப்பில்லையே
ஒருவேளை ஏதோ ஒரு வீட்டின்
எழுப்பு மணியாக இருக்கலாமோ
அவ்விதமாயினும் பிழையன்று
சேவலும் கோழியும்
யாருக்கும் அந்நியப்பட்டுவிடவில்லை

இந்த அடுக்ககத்தின்
ஏதோவொரு வீட்டின்
குளிர்ப் பெட்டிக்குள்
நேற்றிரவு மிஞ்சிப்போனதால்
நடுங்கிக் கிடக்கும்
கெண்டகி வறுத்த கோழிக்கறியை
நித்திரையிலிருந்து எழுப்பாமல்
எவ்வளவு வேண்டுமானாலும்
கூவிக்கொள்ளட்டும்!


2 comments:

Mathu S said...

மிக அருமையான பதங்கள்

பிசிறில்லா சேவல் கூவல், ஆனால் எலக்ட்ரானிக்..

அந்த ஒலி கென்டகி சிக்கனை எழுப்புகிறதா...

அய்யா எங்கயோ போய்ட்டிங்க ...

சைக்கிள் பிரியருக்கு வாழ்த்துகள்

வாவ்

பரிவை சே.குமார் said...

அருமை அண்ணா...