ஏசி தியேட்டரா இருந்தா கொடுக்கும் காசுக்கு அசல் எடுக்கலாம் - தீரன் அதிகாரம் ஒன்று.



கதை என்னங்க!?

கதை என்னங்க பெரிய கதை, ஒரு குழு தொடர்ச்சியா கொலை செஞ்சுட்டு கொள்ளை அடிக்கிறாங்க. அவங்களை ஒரு போலீஸ் அதிகாரி கண்டுபிடிக்கிறார்.

படத்தில் சுவாரஸ்யமா ரொமான்ஸ், காமெடி!?

அய்யோ... காதல் காட்சியெல்லாம் நல்ல்ல்ல்லாத்தான் இருக்கு, ஆனாப் பாருங்க அந்தக் காட்சிகள் வந்தாலே.... ஷ்ஷப்பா....னு ஆயிடுது. காமெடியா... ம்ஹூம்.... சிறுத்தை படத்திலெல்லாம் கார்த்தி காமெடில என்னாமா பிச்சு ஒதறியிருப்பாரு... இதுல.... ம்ஹூம்.... சின்னக் குழந்தைகளைக்கீது கூட்டிட்டுப் போயிறாதீங்க.... மருந்துக்கு கூட காமெடி இல்ல..... சூரி, சந்தானம், விவேக், வடிவேல்.... நோ...நெவர்... காமெடிக்குனு தெரிஞ்ச ஒரே முகம் மனோபாலா மட்டும் தான். அதுவும் இயக்குனர் மனோபாலாவுக்கு செய்திருக்கும் நன்றிக்கடன்னு நினைக்கிறேன்.

சரி... கொடுக்குற காசுக்கு தேறுமா!?

ம்ம்ம்... அதெல்லாம்... தேறும் தேறும்.... ரெண்டே முக்கால் மணி நேரப் படம்... ஏசி தியேட்டரா இருந்தா கொடுக்கும் காசுக்கு அசல் எடுக்கலாம்...

அப்ப பார்க்கிறதா வேண்டாமா!?

அதென்ன பொசுக்குனு கேட்டுட்டீங்க.... கட்டாயம் பார்க்கனும்

யோவ் என்னது கட்டாயம் பார்க்கனுமா? இப்படிச் சொன்னதுக்குப் பிறகும் பார்க்கிறதுக்கு.... நான் என்ன மெண்டலா?

இந்த மாதிரி ஒரு படம் எடுக்க தமிழில் எந்த டைரக்டருக்கு தில் இருக்கு....!? அதுக்காக.... அந்த தில்லுக்காக மட்டுமே நம்மை ‘‘மெண்டலா’ நினைச்சுட்டே படம் பார்க்கலாம்!

அப்படி என்னத்த எடுத்துட்டாரு!?

மாற்று மொழிப்படங்கள் நிறையப் பார்ப்பதால், சினிமாவாக்கப்படும் உண்மைக் கதைகள் மீது கூடுதல் ஆர்வம் உண்டு. அவற்றைப்போல் தமிழில் உண்மைக் கதைகள் படமாக்கப்படவில்லையே எனும் ஏக்கம் எப்போதும் உண்டு. படு பிரபலமான இயக்குனர்களும், மெகா இயக்குனர்களும், பழம் தின்று கொட்டை போட்ட இயக்குனர்களும் கதைகளைத் தேடி, கிடைக்கவே கிடைக்காமல் ஏற்கனவே வந்த படங்களில் சுட்டு, அங்கு தொட்டு, இங்கு தொட்டு, காசைக் கொட்டி வீணடித்து, நாயகனின் உடலைச் சிதைத்து என என்னென்னவோ தம் கட்டி நம்மை மூச்சு முட்ட வைக்கும் சூழலில்...

இயக்குனர் வினோத் தன்னை நிரூபித்திருக்கிறார்.

கொள்ளையர்களைப் பிடித்த போலீஸ் என்பது மிகச் சாதாரணமா ஒரு வரி தலைப்புச் செய்திதானே!? இப்படி பல நூறு செய்திகளை வாசித்துக் கடந்திருப்போம், சிலவேளைகளில் வியந்திருப்போம்... அதன்பிறகு வழக்கம்போல் மொத்தமாய் மறந்திருப்போம். அப்படியான ஒரு வரி தலைப்புச் செய்தியை வைத்துக் கொண்டு, தமிழகத்தில் ஒரு காலத்தில் நிகழ்ந்த ஒரு முக்கியமான தொடர் கொலை, கொள்ளைச் சம்பவத்தை தமிழக காவல்துறை துப்பறிந்து கண்டுபிடித்த உண்மைச் சம்பவத்தை கதையாக்கி, திரைக்கதையாக்கி, அசர வைத்திருக்கும் இயக்குனருக்காக இந்தப் படத்தைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

காவல்துறை மேல் பல தருணங்களில் விமர்சனங்கள் வைத்திருந்தாலும், “கொள்ளையர்கள் கைதுஎனும் ஒரு வரித் தலைப்புச் செய்திகளுக்கு பின்னால் அவர்கள் உழைத்த உழைப்பில்தான் சமூகத்தின் கணிசமான பங்கு ஓரளவு நிம்மதியாகத் தூங்குகிறது. கிராமத்தில் தோட்டத்திற்குள் தனி வீட்டில் வசித்துப் பழகிய எனக்கு, இம்மாதிரியான கொள்ளையர்கள் மீது அப்பொழுதெல்லாம் மிகுந்த பயமுண்டு. அவர்கள் நிகழ்த்தும் கொடூரமான காட்சிகளை திரையில் கண்டு இப்போதும்கூட ஒடுங்கிப் போய்தான் இருந்தேன். அந்தப் பயம் அவசியமற்றது எனும் நம்பிக்கையைக் கொடுத்ததில் காவல் துறைக்கு பெரும்பங்கு இருக்கும். அது அந்தப் பயம் சார்ந்தவர்களுக்கு மிக ஆழமாகப் புரியும்.

அந்த வகையில் என்னளவில் தீரன் அதிகாரம் ஒன்று கண்டு சிலாகிக்கும் சினிமா. சதுங்க வேட்டையில் சாதித்துக் காட்டிய இயக்குனர் வினோத், தீரனில் தான் யார் என்பதை நிரூபித்திருக்கிறார். அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைக்கலாம் என்றே தோன்றுகிறது.

நேரடியாக குரூப்-1 தேர்ச்சி பெற்று துணை காவல்துறை கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி) பணியமர்கிறவர் சென்ட்ரி முதல் ஆய்வாளர் வரை எல்லாப் படி நிலைகளிலும் பணியாற்ற வேண்டும் என்பது ஆச்சரியமான தகவல். (அது உண்மைதானா!?) இப்படி ஒவ்வொன்றையும் அவர் டீட்டெயிலிங் செய்திருக்கும் விதம், அதற்கான உழைப்பு பாராட்டுக்குரியது. படத்தில் சொல்லப்படும் பவேரியா குழுவின் பின்னணி உள்ளிட்ட குற்றப்பரம்பரை குறித்த விவரனைகள் ஆவணப்படத்திற்கே உரியது என்றாலும், அவைதான் பார்வையாளர்களை படத்தோடு ஒன்ற வைக்கிறது. ”மதராஸி போலீஸ் மதராஸி போலீஸ்” எனும் வில்லனின் புலம்பல் உள்ளிட்ட பலவற்றில் போலீஸ்க்கான இமேஜ்ஜை மிரட்டலாய்  உயர்த்தும் அதே இயக்குனர்தான், உத்திரபிரதேஷ்ல கொள்ளையடிச்சுட்டு லாரில போனா போலீஸ் சுட்டுடுவாங்க, ஆனா தமிழ்நாட்டுல 20 ரூபா வாங்கிட்டு விட்டுடுவாங்க என்பதில் ஒரே கும்மாய் கும்முகிறார்.

பின்னணி இசையும், ஒளிப்பதிவும், படத்தின் வேகமும் அசர வைக்கின்றன. அழகுராஜா முதல் சிறுத்தை வரை மொக்கியாகிப் போயிருந்த கார்த்தி... இதில் தன்னை வெகுவாக கூர்மையாக்கியிருக்கிறார்.

படத்தில் ஒரே ஒரு குறை என்றால் காதல் காட்சிகளுக்கு, பாடல்களுக்கு என ஒதுக்கப்பட்ட நேரத்தைக் கத்தரித்து 43 நிமிடங்களைத் தியாகம் செய்திருந்தால், படம் கச்சிதமாக இருந்திருக்கும். ஒருவேளை அப்படி கத்தரித்து கச்சிதமாக்கப்பட்டால் அந்த அனுபவத்தைப் பெற இன்னொரு முறையும் ”தீரன் அதிகாரம் ஒன்று” பார்க்க தயங்க மாட்டேன்.

இயக்குனர் வினோத்திற்குச் சொல்வது ”வெல்டன் வினோத்!. ஒரு வரிச் செய்திகளுக்குள் உங்களுக்கான, உலகத்துகான கதை இருக்கு. தேடுங்க... கொடுங்க... நாங்கள் பார்ப்போம்... கொண்டாடுவோம்!”


2 comments:

Unknown said...

நேரடியாக குரூப்-1 தேர்ச்சி பெற்று துணை காவல்துறை கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி) பணியமர்கிறவர் சென்ட்ரி முதல் ஆய்வாளர் வரை எல்லாப் படி நிலைகளிலும் பணியாற்ற வேண்டும் என்பது ஆச்சரியமான தகவல். (அது உண்மைதானா!?)

UNNMAI

'பரிவை' சே.குமார் said...

நல்ல விமர்சனம்.
எனக்கும் படம் பிடித்திருந்தது.
ரொமான்ஸ் காட்சிகள் இழுவை... இக்கதைக்கு அது தேவையே இல்லை.
அதனால்தான் இடைவேளை வரை படம் மெல்ல நகர்கிறது.
இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்பு...