கடிதம்.நெட் – வெளிநாடு வாழ் தமிழ்க் குடும்பங்களுக்கான உறவுப்பாலம்

கவல் தொழில்நுட்பம் நாம் வாழும் தூரத்தைக் குறைத்துப்போட்டதில் கசங்கிப்போனது நாம் எழுதிவந்த கடிதங்களும்தான். கடந்துகொண்டிருக்கும் தலைமுறை நினைத்து நினைத்துச் சிலாகிக்க இருக்கும் நினைவுகளில் மிஞ்சியிருப்பது கடிதங்களும், கடிதங்களோடு காலம்காலமாய் நிகழ்ந்த சுவாரசியங்களும்தான். என்னதான் இனி அதைச் செயல்படுத்தினாலும் மின்மடல், குறுந்தகவல் என்று தொலைத்தொடர்பு மிக மிக எளிமையாகிவிட்ட காலகட்டத்தில் அந்தச் சுகானுபவம் கிட்டாதுதான்.



நானறிந்த தமிழ்ச் சொந்தங்களில், உள்ளூர், மாவட்டம், மாநிலம், உள்நாடு எனப் பிரிந்துகிடக்கும் மனிதர்கள் பெரிய இடைவெளிகளிலின்று கூடி மகிழ வாய்ப்புகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

அதே சமயம் வெளிநாடுகளுக்குப் பணி நிமித்தம் பெயர்ந்த தமிழ் உறவுகள், தன் குடும்பம், பிள்ளைகள் என மிகக் குறுகிய வட்டத்திற்குள் வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். ஒவ்வொருவருக்குள்ளும் மெலிதாய் இருக்கும் மனக்குறை தங்கள் பிள்ளைகளுக்கும், தமிழகத்தில் இருக்கும் தங்கள் முந்தைய தலைமுறைக்குமான இடைவெளி நீண்டு கிடக்கின்றன என்பதுதான்.


என்னதான் ஆண்டுக்கொரு முறை தாய்நாட்டுப் பயணம், வாரம் ஒரு முறை தொலைபேசியில் பேச்சு, எப்போதாவது மின் அரட்டை மூலம் காணொளி உரையாடல், சில நேரங்களில் மின்மடல் தகவல் பரிமாற்றம் என்றிருந்தாலும், எதையுமே சேமித்து வைத்தோ, அடைகாத்துச் சிலாகிக்கவோ வாய்ப்பின்றி மிகக் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றோம்

அன்புள்ள அப்பா அம்மாவுக்கு / தாத்தா பாட்டிக்கு,
நலம், நலறிய ஆவல்…..  எனத்தொடங்கும் கைப்பட எழுதப்படும் கடிதங்களில் வெறும் எழுத்துகள் மட்டுமா நிரம்பியிருக்கும். உயிரோட்டமாய், எழுதுபவரின் அன்பும், அக்கறையும் ஒவ்வொரு எழுத்தில் வளைவு நெளிவுகளிலும் கலந்து கரைந்துதானே கிடைக்கும். எத்தனையெத்தனை அன்பு, மகிழ்ச்சி, பாசம், பிரியம் அதில் நிரம்பியிருக்கும் என்பதை அனுபவித்தவர்களால் மறந்திடமுடியுமா?

அதே மகிழ்ச்சியைச் சிந்தாமல் சிதறாமல், வெளிநாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கும், தமிழகத்தில் வாழும் அவர்தம் உறவுக்கும் ஏற்படுத்தித்தர அமெரிக்காவில் இருக்கும் உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை அமைப்பால் தோற்றுவிக்கப்பட்டதுதான் கடிதம்.நெட் கடிதச் சேவை மையம்.


  
கடிதம்.நெட் என்பது

கடிதம்.நெட் என்பது வெளிநாடு வாழ் தமிழ்ப் பிள்ளைகளுக்கும், தமிழகத்தில் இருக்கும் அவர்தம் உறவுக்கான ஓர் அஞ்சலம். வெளிநாட்டுக் குழந்தைகள் எழுதும் கடிதங்களை அவர்களின் உறவுகளுக்கு அனுப்பவும், அவர்களிடமிருந்து கடிதங்களைப் பெற்று வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு விரைந்து அனுப்பவும் செய்கின்றது.


வெளிநாட்டுக் குழந்தைகள் தாயகத்திற்குக் கடிதம் அனுப்புவது எப்படி

http://kaditham.net இணையதளத்தில் பயனாளராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். கைப்பட தமிழில் எழுதிய கடிதத்தை PDF அல்லது JPG கோப்பாக அனுப்பலாம். கடிதங்களைத் ஒருங்குறி எனச் சொல்லப்படும் Unicode தமிழில் தட்டச்சுச் செய்தும் அனுப்பலாம். பெறுபவரின் முகவரியைக் குறிப்பிட்டு http://kaditham.net/ இணையத்தளம் வாயிலாக அனுப்பவேண்டும். நிழற்படம் (புகைப்படம்) அனுப்ப இருப்பின் அதையும் இணைக்கலாம். தமிழகத்தில் இருக்கும் கடிதம் சேவை மையம் மின்மடலில் பெறப்பட்ட கடிதங்களையும் நிழற்படங்களையும் அச்சிட்டுக் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரிக்கு அனுப்பும். அந்தக் கடித்ததோடு பதில் மடல் எழுதுவதற்குத் தேவையான வெற்றுத்தாள்கள், கடிதம் சேவை அமைப்பின் முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட கடித உறை ஆகியவற்றை இணைத்து அனுப்பும்.




தமிழகத்தில் இருப்பவர் பதில் கடிதம் அனுப்பும் முறை...

வெளிநாட்டுக்குழந்தைகள் அனுப்பிய கடிதத்தோடு, கடிதம் சேவை மையம் அனுப்பியிருக்கும் வெற்றுத்தாள்களும், அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட கடித உறையும் பெற்றுக்கொண்டவர், அந்தக் காகிதங்களில் தாங்கள் எழுதவேண்டியதை எழுதி, உறையில் இட்டு ஒட்டி அருகில் இருக்கும் அஞ்சல் பெட்டியில் போட்டால் போதும். அந்தக் கடிதம் எங்கள் சேவை மையத்திற்கு வந்தடையும்.


வந்தடையும் கடிதம் உடனடியாகப் படமாக்கப்பட்டு (scan செய்யப்பட்டு) PDF அல்லது jpg கோப்பாகக் குறிப்பிட்ட பிள்ளையின் (பயனாளரின்) மின்மடல் முகவரிக்கு அனுப்பப்படும்.




நிபந்தனைகள்...
கடிதம் தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும். மற்ற மொழிகளில் அனுப்பப்படும் கடிதங்கள் சேவை மையத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.



கட்டணம்...                                                                     
கடிதம் சேவை முற்றிலும் இலவசம்.  தமிழை வளர்ப்பதைத் தவிர இந்தச் சேவையினால் எந்த ஆதாயமும் கடிதம் சேவை மையத்திற்கோ உலகத் தமிழ்மொழி அறக்கட்டளைக்கோ இருக்காது


கொள்கை...                                                                    
கடிதம் சேவை மையம் கடிதங்களையோ நிழற்படங்களையோ மின்னஞ்சல் அல்லது வீட்டு முகவரிகளையோ வேறு யாருக்கும் அளிக்காது, எங்கும் பிரசுரிக்காது. அதே சமயம் தனிப்பட்ட ரகசியங்கள், அந்தரங்கங்கள், சட்டத்திற்குப் புறம்பான தகவல்கள் போன்றவற்றை எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகிறோம். நீங்கள் அனுப்பும் கடிதங்களை வாசிப்பதில் கடிதம் சேவை அமைப்பினர்க்கு ஆர்வம் இல்லாவிட்டாலும், தவறான முறையில் இந்தச் சேவை பயன்படாமால் இருப்பதை உறுதிப்படுத்துவதற்குப் பல கடிதங்கள் வாசிக்கப்படும்

-
வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் உறவுகள் தங்கள் குடும்பத்தோடு, கூடுதல் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள கடிதம்.நெட் அரிய வாய்ப்பாக விளங்குகிறது. அதோடு மாதாமாதம் குழந்தைகள் தாத்தா, பாட்டிக்குத் தொடர்ந்து கடிதம் எழுதி, இருபக்கமும் அந்தந்தக் காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை எழுத்தில் பகிர்ந்துகொள்வதன் மூலம், அக்கடிதங்களின் தொகுப்பு குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளுக்கான வரலாற்று ஆவணமாகவும் இருக்கும்.  

எதிர்காலத்தில் கடிதம்.நெட் சேவை புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் தமிழ்ப்பிள்ளைகளையும் தமிழகத்தில் வாழும் பிள்ளைகளையும் இணைக்க விரும்புகிறது.  

அனைத்து விபரங்களுக்கும்......  http://kaditham.net/

-0-

8 comments:

MARI The Great said...

கடிதம் எழுதும் பழக்கம் தற்போது முற்றிலும் அழிந்து வருவது வருத்தத்திற்குரியது .. :(

SELECTED ME said...

மிகவும் உபயோகமான ஒன்று - தகவலுக்கு நன்றி

arul said...

nice post anna

hariharan said...

இது என்னுடைய நீண்டநாள் கனவாக இருந்தது இப்படி ஒரு சேவை நிறுவனம் இருந்தால் வசதியாக இருக்கும். நல்ல் முயற்சி.

hariharan said...

இது என்னுடைய நீண்டநாள் கனவாக இருந்தது இப்படி ஒரு சேவை நிறுவனம் இருந்தால் வசதியாக இருக்கும். நல்ல் முயற்சி.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

அம்மாச்சியின் கடிதம் அந்தக் காலத்துக்கே இட்டுச் செல்லக் கூடியதான ஒரு பொக்கிஷம்.

பழமைபேசி said...

தமிழ்ப்பணியில் கரம் கோர்த்த மாப்பு வாழ்க!!

'பரிவை' சே.குமார் said...

கடிதம் எழுதுவதையே மறந்தாச்சு...

இண்லேண்ட் லெட்டர், தபால் கார்டு எல்லாம் போயாச்சு...

நல்ல முயற்சி... வாழ்த்துக்கள் அண்ணா...