பயணச் சலனங்கள்

ஈரோட்டிலிருந்து எப்போது ரயிலுக்கு கிளம்பினாலும் ஒரு பெரிய அஜாக்கிரதை மனதிற்குள்ளே இருப்பது வழக்கமாகிவிட்டது. வாகனத்தில் கிளம்பினால் 3 நிமிடங்கள், நடந்து சென்றால் 10 நிமிடங்கள் தொலைவில் ரயில் நிலையம் என்பதால், எப்போதுமே வேலையே இல்லாவிடினும் கடைசி நிமிடங்களில் கிளம்பி, சென்றடையும்போது கொஞ்சம் ’திக் திக்’ எனச் செல்வது கிட்டத்தட்ட ஒரு வியாதி போல் மனதிற்குள் படிந்துவிட்டது.அன்றைக்கு, இரவு ஒரு மணிக்கு ரயில். மிகத் சாவகாசமாக இணையத்தில் பொழுதை ஓட்டிவிட்டு, புறப்படும் முன் ஃபேஸ்புக்கில் ”கடைசி நிமிசத்துல 'திக் திக்'னு ரயிலைப் பிடிக்கிறவங்களுக்காகவேதான் ரயிலு அப்பப்போ லேட்டா வருது போல!” என்றொரு நிலைச்செய்தியை போட்டுவிட்டு, பொடிநடையாக நடக்கத் துவங்கினேன்.

மூன்றாவது நடைமேடையில் ரயில் இருப்பதாக அறிவிப்பு தெரிவித்தது. ரயில் நிலைய படியேறும்போது மணி பார்த்தேன் 12.57. 1 மணி வண்டிக்கு எப்படி ’கிண்’னுனு நிக்கிறோம்ல என எனக்கு நானே மதப்பாய் நினைத்தபடி வண்டியை நெருங்க, மனதுக்குள் ஒரு மின்னல் அடித்தது. பயணச்சீட்டு எந்தப் பையிலும் இல்லையென்று. ஒருவிநாடி குப்பென வியர்த்தது. பரபரப்பாய் உடையில் இருந்த 5 பைகளிலும், உடன் இருந்த பையின் பக்க உறைகளிலும் தேடத்தேட தெளிவானேன் பயணச்சீட்டு இல்லவே இல்லையென்று. நேரத்தைப் பார்த்தேன் 1 மணி.

பயணத்தை ரத்து செய்துவிட வேண்டியதுதான் எனத் தீர்மானித்தேன், இருந்தாலும் முயற்சிப்போம் என்று அருகில் தென்பட்ட பயணச்சீட்டு பரிசோதகரிடம்

“சார், தட்கால் டிக்கெட், ஈ-டிக்கெட், ப்ரிண்ட் அவுட் எடுத்துட்டு வராம விட்டுட்டேன், என்ன சார் பண்ணனும்” என்று கேட்டபோதே… கடைசியாக ஃபேஸ்புக்கில் போட்ட நிலைச்செய்தி வந்து மனதுக்குள் பல்லிளித்தது.

“எந்தக் கோச்”

“அது தெரிலையேங் சார், பெர்த் நெம்பர் 8, தட்கால்ல தான் போட்டேன், ஒரிஜினல் ஐடி ப்ரூஃப் வேணும்னா இருக்கு” புதிய அனுபவம், என் குரலில் நம்பிக்கை கரைந்துகொண்டிருந்தது

“கோச் சொல்லுங்க, ஒரிஜினல் ப்ரூப் இருந்தா, ஃப்ட்டீ ரூபிஸ் பே பண்ணிட்டா ட்ராவல் பண்ணிக்கலாம்” என்றார்

பதிவு பெட்டிகளில் இடம் கிடைக்குமா என கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.

கிளம்பும்முன் ரயில் வருகை நிலவரம் குறித்து தேடியதில் வரவேண்டிய நேரத்திற்கு 3 நிமிடங்கள் முன்பாக வந்து 23 நிமிடங்கள் தாமதமாகக் கிளம்புவதாகப் போட்டிருந்தது ஒரேயொரு சிறிய ஆறுதலாக இருந்தது.

”எஸ்-2னு நினைக்கிறேன் சார்”

“இது எஸ்-4, எஸ் 2க்கு வேற டீடீ, அங்கே கேட்டுப்பாருங்க”

“சார் எஸ்-4 ல, எட்டாம் நெம்பரானு பாருங்க”

தேடினார், வேறு பெயர் இருந்தது.

பயணச்சீட்டு பதிவுசெய்தவுடன், குறுந்தகவல் வந்தது, மின் மடல் வந்தது எல்லாம் நினைவிற்கு வந்தது. பிரதியெடுத்துவிட்ட தைரியத்தில் எல்லாவற்றையும் அழித்ததும் கடுப்பாய் நினைவிற்கு வந்தது.
அலைபேசியில் இணையத்தை உசுப்பினேன். மின்மடல் உள்பெட்டியில் மடல் ஏதுமில்லை. அழித்த மடல்களைத் திறக்க முயற்சித்தேன் ”போடா வெண்ணை”யென அது திறப்பதற்கான அறிகுறியையே காட்டவில்லை.

உடனே வெளியே ஓடிப்போய், ஒரு ஆட்டோ பிடித்து அலுவலகம் சென்று, கணினியை இயக்கி, பிரதியெடுத்து… நினைக்கும் போதே ”அது வேலைக்கு ஆவாது” எனத் தோன்றியது.

S3, S2, S1 என வரிசையாகச் சென்றேன். கதவுகள் இழுத்துப் பூட்டப்பட்டிருந்தன. பரிசோதகர் இருப்பதற்கான சுவடே தெரியவில்லை. எதிலுமே கதவோரம் ஓட்டப்பட்டிருக்கும் பெயர் பட்டியலையும் காணோம்.

ஆபத்பாந்தவன், எங்கள் ஆசான் பாலா அண்ணன் நினைவுக்கு வந்தார். அலைபேசியில் அழைத்தேன். 

”அண்ணா, தட்கால் டிக்கெட், டிக்கெட்ட விட்டுட்டு வந்துட்டேன், என்ன பண்றது”

”டிக்கெட் இல்லனா சிரமமுங்ளே, டீடீ ஒத்துக்கிட்டா ஒன்னும் பிரச்சனையில்ல”

“அது ஓகேண்ணா, ஆனா கோச் எதுனும் தெரியலையே”

“எஸ்எம்எஸ் வந்திருக்குமே அதைக் காட்டுங்க போறும்”

“அதையும் அழிச்சுத் தொலைச்சுட்டேண்ணா”

நிச்சயமாக கெட்ட வார்த்தையில் திட்டியிருப்பார். ஆனால் எனக்குத்தான் காதில் விழவில்லை.

“அண்ணா ஒன்னு பண்றீங்களா, என்னோட IRCTC அக்கவுண்ட ஓப்பன் பண்ணுங்க, அதில இருக்கும் பார்த்துச் சொல்றீங்ளா?”

“ம்ம்ம்… யூசர் நேம், பாஸ்வேடு சொல்லுங்க”

சொன்னேன்

“இருங்க, ஓப்பன் ஆகலையே”

இணையப்பக்கம் திறக்க வேண்டுமேயென்று ’இல்லையெனக் கூறும் கடவுளைக்கூட வேண்டத்தோன்றியது’

“ம்ம்ம்ம்…. ஓப்பன் ஆயிடுச்சு, திரும்பவும் பாஸ்வேடு கேக்குது, சொல்லுங்க’

சொன்னேன்

பரபரவென பெட்டி, PNR எண் எல்லாம் வாசித்தார்

பேனாவை எடுத்து உள்ளங்கையில் பெரிதாக குறித்துக்கொண்டேன். உடனே குறுந்தகவலாகவும் அனுப்பிவைத்தார்

படபடப்பெல்லாம் நீங்கி, எப்படியோ சிக்கலைத் தீர்த்துட்டோம்ல என்ற மதப்பு வந்து தொலைக்கத்தான் செய்தது.

S4ல் நின்றிருந்த அந்த பரிசோதகரையே அணுகி “சார் எஸ்-5 டீடீ எங்கேயிருக்காரு”

”அதுக்கும் நான்தான்” என்றவாறு பட்டியலைப் புரட்டினார்

“எட்டாம் நெம்பர் பர்த் சார்”

”ம்ம்ம்ம்.. ஒரிஜினல் ஐடி குடுங்க”

கொடுத்தேன்

”சரி போங்க” என என் உறுப்பினர் உரிமைத்தை திருப்பியளித்தார்

மீண்டும் ஃபேஸ்புக்கில் போட்ட நிலைச்செய்தி நினைவுக்கு வந்தது. அலைபேசியை இயக்கி, அந்த நிலைச்செய்தியைப் பார்த்தேன், சில Like-களும், மறுமொழிகளும் விழுந்திருந்தன. ஏதோ இனம்புரியா வெட்கம் கவ்வியது.

”ம்ம்ம்ம்… இந்தப் பொழப்புக்கு…” என ஏதோ மனதில் ஓடியது.

நடந்த கூத்தை எப்படி எழுத்தாக்கலாம் என மனசு அசைபோடத்துவங்கியது.


-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-


மதிய வெய்யிலின் உக்கிரம் அந்த ரயில் பெட்டிக்குள்ளும் புழுக்கமாய் தூறிக் கொண்டேயிருந்தது. எல்லா இருக்கைகளும் பிதுங்கி வழிந்தன. நான் 30ம் எண் இருக்கையில் சன்னலோரம். 32ல் மட்டும் அவ்வப்போது மாறிமாறி அமர்ந்துகொண்டேயிருந்தனர்.

திருச்சியிலிருந்து கிளம்புகையில், 31ம் எண் இருக்கையைச் சுட்டி ஒருவர் வந்து கேட்டார்

“சார் ஆள் வருதா”

மெல்ல புன்னகைத்தவாறு இடவலமாய் தலையாட்டினேன். தன்னை வாகாக சொருகிக்கொண்டார். அதுவரை இருந்த வசதிகள் சட்டெனப் பறிக்கப்பட்டதுபோல் தோன்றியது.

ரயில் நகரத் துவங்க, கையிலிருந்த நிழற்படக்கருவியால் சன்னல் வழியே காட்சிகளைச் சுட்டுக்கொண்டிருந்தேன். வண்டி வேகம் பிடிக்க, நேராக நிமிர்ந்து அமர்ந்தவாறு வலதுபக்கம் பார்த்தேன். முன் இருக்கையில் இணைக்கப்பட்ட பலகைமேல் வைத்தவாறு குமுதம் ரிப்போர்ட்டர் படித்துக்கொண்டிருந்தார்.

அவர் பக்கத்தைப் புரட்ட “ஆன்லைன் ஆப்பு” பக்கத்தில் நித்தியானாந்தா பல்லிளித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அட இன்னைக்கு வெள்ளிக்கிழமையா என நாள் நினைவுக்கு வந்தது. நான் எழுதிய கீச்சு (ட்வீட்) எதும் வந்திருக்கிறதா என்று ஓரக்கண்ணால், கொஞ்சம் பார்வையக் குவித்துப் பார்த்தேன்.ஈரோடு கதிர் என்ற பெயர் ஓரிடத்திலும், கதிர் என்ற பெயர் இரண்டு இடத்திலும் தென்பட்டது. இன்னும் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

அவர் அடுத்த பக்கத்திற்கு திருப்ப முயல, நான் அமைதியாகவே இருந்திருக்கலாம். ஆனால் இருக்கவில்லை

“சார் அந்த பக்கத்தக் கொஞ்சம் குடுங்க, ஒரு போட்டோ எடுத்துக்குறேன்” என்றேன்

அதை அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பேயில்லை

கொஞ்சம் திடுக்கிடலோடு “ஏன்.. எதுக்கு எடுக்றீங்க”

“இல்ல சும்மாதாங்க, அந்தப் பக்கம் மட்டும் ஒரு ஸ்னேப் எடுத்துக்கிறேன்” நிழற்படக்கருவியைக் கைக்கு கொண்டுவந்தேன்

“அதுல என்ன இருக்கு, ஏன் எடுக்னும்ங்றீங்க”

பந்தாவா, தன்னடக்கமா, கர்வமா, கூச்சமா என்றெல்லாம் தெரியவில்லை, ஆனாலும் ஏதோ ஒரு உணர்வு முகத்திலாட, ”அந்த மூனு ட்விட்டும் என்னோடதுங்க” என்றேன்

இன்னும் கொஞ்சம் அவர் அதிர்ச்சியானதுபோல் தெரிந்தது

“எந்த மூனுங்க, எது சொல்றீங்க” என்றார்

ஈரோடு கதிர் என்ற பெயரோடு இருந்ததைச் சுட்டிக்காட்டினேன்

”நீங்கதான் ஈரோடு கதிரா!?” என்றார்

முகத்தில் பல்பு எரிய, மேலும் கீழும் தலையாட்டினேன்

“பொய் சொல்லாதீங்க, ஏற்கனவே ஈரோடு கதிர்னு இதுல வந்ததப் படிச்சிருக்கேன்”

எரிந்த பல்பு பொசுக்கென புகைந்து போக, உணர்வுகள் நீர்த்த வெளுத்த முகத்தை, ஏதுமில்லாததுபோல் காட்டிக்கொண்டே தலையசைத்தேன்

”கீழ கதிர்னு இருக்கிறதும் நீங்கதானா?”

தலையசைத்தேன்

“நீங்க, எந்த ஊரூ ஈரோடா!?”

ஆமெனத் தலையசைத்தேன்.

”பத்திரிக்கைல வேல பாக்குறீங்ளா”

இல்லையென்பதாய் தலையசைத்தேன்

”யோவ் வாயத்தெறந்து பேசுய்யா” என நிச்சயம் மனதில் நினைத்திருப்பார்

”நிஜமாவே நீங்க எழுதினதா இது?” என்றவாறு சந்தேகமாக புத்தகத்தை என் பக்கம் தள்ளினார்

பக்கத்தை படமாகச் சுட்டுக் கொண்டு, புத்தகத்தை அவர் பக்கம் நகர்த்தினேன்.

”இந்தமாதிரி நீங்க எழுதி அனுப்புவீங்ளா?” என்றார்

”இல்லைங்க, அவங்களா எடுத்துப் போட்டுக்குவாங்க” என்றேன்

இன்னும் சந்தேக நிழல் அவர் முகத்தில் படிந்திருந்தது

அலைபேசியை இயக்கி twitter பக்கத்தைச் சொடுக்கி, ”வீரபாகு – கணபதி அய்யர் பேக்கரி” கீச்சு எப்போது வந்ததென்று தேடினேன். ஒருவழியாகச் சிக்கியது. அலைபேசியை அவர் பக்கம் காண்பித்தவாறு

“நான் இணையத்தில இப்படி எழுதுறதை, அவங்க எடுத்து வெளியிடுவாங்க” என்றேன்

அலைபேசியை வாங்கிப் படித்துவிட்டு, அதிலிருக்கும் பெயரையும் முனுமுனுத்துவிட்டு, கொஞ்சம் வெட்கத்தில் வழிந்தவாறு திருப்பிக்கொடுத்தார்.

பொசுங்கிய பல்பு என் முகத்தில் பளிச்சென எரிவது போலவும், அவர் முகத்தில் இருள் கவ்வுவது போலவும் ஏதோ தோன்றியது.

மெல்ல ஒருமுறை எழுந்து அமர்ந்தார், சில அங்குலம் இடைவெளி கிடைத்தது போன்று ஒரு மாய நினைப்புத் தோன்றியது.

-0-

8 comments:

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

வானம்பாடிகள் said...

நித்தியே கூச்சப்படல. உங்களுக்கென்னா கூச்சமாம்:)))

arul said...

nalla echarikkai pathivu anna

mohamed salim said...

ஈரோடு கதிர்
நீண்ட நாட்களா உங்க்கள் பதிவுகல் வசித்து வருகிறேன் பின்னுட்டம் இடுவது முதல் முறை நல்ல பதிவு கொஞ்சம் த்ரில்!! கொஞ்சம் சிரிப்பு!! எல்லாம் கலந்த சிறப்பான எழுத்து நடை!!

சே. குமார் said...

அனுபவத்தை அழகான எழுத்து நடையில் சொல்லியிருக்கீங்க...
வாழ்த்துக்கள் அண்ணா.

ராஜ நடராஜன் said...

இங்க வந்தா பாலாண்ணாவை பிடித்து விடலாம் என நித்திக்கு இப்பத்தான் தகவல் சொன்னேன்:)

ARUN PALANIAPPAN said...

உங்களை ஈரோடு கதிர் என்பதை அறிந்தவர் நிச்சயம் இன்னும் பிரகாசமடைந்து இருப்பார்!!

அப்புறம், உங்களை விட எனக்கு மிகவும் மோசமான பயண அனுபவம் உண்டு.. அதைப் பதிவிட்டுள்ளேன்: http://www.aalunga.in/2012/01/blog-post.html

படித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான அனுபவங்கள். பதட்டமில்லாமல் பாலா அண்ணன் மூலம் காரியத்தை முடித்து விடீர்கள்.