விடியல் தெரியா இருள்

வறண்டு தகிக்கும்
கோடை நிலத்தின்
பசியாற்ற வந்த
பெருமழையாய்
அமைந்ததுன் வருகை…

நகர்ந்து போகும்
விநாடி முட்களும்
படபடக்கும் சன்னலோர
திரைச்சீலைகளும்
பிரியங்களால்
நிரம்பி வழிகின்றன

கண் பார்த்து
கண்களிலே கதை பேசி
கிறுகிறுப்பாய்
குறும்புகள் சில செய்து
புருவம் உயர்த்தி
போர் தொடுத்து…

செல்லமாய்ச் சீண்டி
கனமாய்ப் பேசி
அன்பாய் விசாரித்து
ஆதரவாய் தேற்றி
பட்டென பரிகசித்து

வெப்பம்
குளிர்
சிலுசிலுப்பு
கதகதப்பு
வியர்வை
சிலிர்ப்பு
விதவிதமாய் விதைத்து

காதோரம் கிசுகிசுத்து
கண்கள் சிமிட்டி
கை அசைத்து
உதடுகள் குவித்து
முத்தம் ஊதி
காற்றோடு கரைந்துபோகிறாய்

விழிப்பு பீரங்கியில் தகர்ந்த
கனவுக்கோட்டையின் எச்சங்களோடு
ஈரம் ஒட்டிக்கிடக்கும்
கன்னத்தை வருடிப்பார்க்கிறேன்…
விடியல் தெரியா இருளில்!


5 comments:

shammi's blog said...

good one kathir ....

வானம்பாடிகள் said...

nice

arul said...

nice

gowri said...

வெகு அருமை கதிர்..
//விழிப்பு பீரங்கியில் தகர்ந்த கனவுக்கோட்டையின் எச்சங்களோடு ஈரம் ஒட்டிக்கிடக்கும் கன்னத்தை வருடிப்பார்க்கிறேன்… விடியல் தெரியா இருளில்! //

selvishankar said...

நல்லாருக்கு கதிர்...