தாயுமானவள்


பெருந்துறை பேருந்து நிலையம். ஞாயிற்றுக்கிழமைதான், எனினும் நீண்ட நேரம் பேருந்து ஏதும் வராததால், அப்போதுதான் வந்த அந்த 7ம் எண் பேருந்து உடனே நிரம்பித் தளும்பியது. நாகரிகம், ஒழுக்கம் எல்லாம் தொலைத்து, சிறிது போராடி ஏறியதில், இறுதி வரிசை இருக்கையின் மையத்தில் இடம் கிடைத்தது. ஒருவாறு இடம் கிடைத்தோர் அமர, பெருவெள்ளமாய் கூட்டம் நெருங்கித் தளும்பியது.

என் அருகே ஒரு பாட்டி, அதன் மடியில் சோர்ந்து கிடக்கும் ஒரு கொழுகொழு சிறுவன். அவன் சிறுவனும் குழந்தையுமல்லா பருவத்தில் இருந்தான். பேருந்தின் ஒரு மாற்றுச் சக்கரம் அந்தப் பாட்டியின் காலருகே கிடந்தது. அதன் மேலும் சில மூட்டை முடிச்சுகள். அதில் மிஞ்சியிருந்த இடத்தில், அருகில் நின்றிருந்த சிறுமியை அந்தப் பாட்டி பிடித்து இழுத்து அமர்த்தினார்.

பேருந்து இரையெடுத்த பாம்பு போல ஊரத்தொடங்கியது. நெரிசல் என் உள்ளடங்கிய கால் வரை அழுத்தம் தந்துகொண்டிருந்தது. கைபேசியில் ஏதேதோ செய்து பார்த்தேன். மனம் லயிக்கவில்லை. கசகசக்கும் சலசலக்கும் மனிதர்களைத் தாண்டி வேறு எதுவும் நோக்கிட முடியவில்லை.

சக்கரத்தின் மேல் அமர்ந்திருந்த சிறுமியைப் பார்த்தேன். வயது 12 அல்லது 13 இருக்கலாம். பளிச் சென்ற அழகு அந்த முகத்தில் தளும்பிக்கொண்டிருந்தது, தமிழனின் நிறம் என்பது போன்ற மாநிறத்துக்கும் குறைவான நிறம், பளிச்சிடும் கண்கள், தலைகுளித்து முடி காற்றில் மெல்ல சிலுசிலுத்துக் கொண்டிருந்தது. மறைந்து மறைந்து சிறறும் மாலை வெளிச்சத்தில் அந்தச் சிறுமி கூடுதல் அழகாய்த் தெரிந்தாள். என் மகளின் நினைவு வந்தது. இவள் உயரம், முகத்தில் முதிர்ச்சி வர இன்னும் 2-3 ஆண்டுகள் ஆகும் என்று தோன்றியது. இருவர் முகத்தையும் ஒரு கணம் ஒப்பிட்டுப் பார்க்க மனம் விழைந்தது. நம் வயதொத்த குழந்தைகளை, நம் குழந்தையின் உடைபோன்று உடையணிந்த குழந்தைகளைக் காணும்போது, ஒரு கணம் அதை நம் குழந்தையோடு ஏதோ ஒரு விதத்தில் ஒப்பிட்டுப் பார்க்கும் மனோபாவம் வந்துவிடுகிறது. 

மீண்டும் முகத்தைப் பார்க்கும்போது, அது ஒரு அழகிய நிழற்படத்திற்கான முகமாய்த் தோன்றியது. சமீபத்தில் ஒரு திருமணத்தில் நண்பர் கும்க்கி, இதேபோல் ஒரு பெண்ணைக் கண்டு, அந்த முகத்தை நிழற்படம் எடுக்க தவித்தது நினைவிற்கு வந்தது. அந்தச் சிறுமி தன் அருகே நெருக்கி நிற்கும் மனிதர்களின் இடைவெளியில் வெளியே கடக்கும் கட்டிடங்களைக் கண்டுகொண்டிருப்பது போல் தோன்றியது.

அவள் முகத்தில் சிறுசிறு நுண் வரிகள் ஓடிக்கொண்டிருந்தன. கால்சட்டை இடது பையில் இருந்த நிழற்படக்கருவி உறுத்திக்கொண்டேயிருந்தது. ஒரு படம் எடுப்போமா என்று தோன்றியது. இந்த நெரிசலில் தேவையா, படம் எடுத்தால் அந்தச் சிறுமி திடுக்கிடலாம், அதற்குப்பின் ஒரு செயற்கைத்தனம் வரும் என்றும் தோன்றியது.

கூட்ட நெரிசலில் பயணச்சீட்டு வாங்கச் சொல்லி நடத்துனர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.

”ஏனுங்க மடம் மூனு டிக்கெட்டு தரச்சொல்லுங்கோ” எனப் பதட்டத்தோடு பாட்டி பணத்தை எடுத்து நீட்டிக்கொண்டிருந்தார்.

“கண்டக்டரு வருவாரு பொறுங்க” என ஆற்றுப்படுத்தினேன்

“இல்லீங்கோ, டிக்கெட்ட எடுத்துக்குவோம், இல்லீனா, கண்டபுடி பேசுனாலும் பேசுவாங்க”

நடத்துனர் வருவதாகத் தெரியவில்லை. அடுத்தடுத்த நிறுத்தங்களில் நிச்சயம் வருவார் எனப் பொறுமையாக இருந்தேன். பாட்டி யார் யாரிடமோ கொடுத்து, 20 ரூபாய் போதவில்லையென இன்னும் 1 ரூபாயை பைக்குள் தேடி எடுத்துக்கொடுத்து பயணச்சீட்டை வாங்கி வைத்துக்கொண்டார். அதுவரை அவரிடமிருந்த பதட்டம் தணிந்திருந்தது. அடுத்த சில நிமிடங்களில் நடத்துனர் இறுதி இருக்கை வரிசையருகே வந்து பயணசீட்டைத் திணித்துக் கடந்தார்.

பயணச்சீட்டை வாங்கிய பாட்டியின் விரலிடுக்கில் இருந்து அந்தச் சிறுமி மெல்லப் பிடுங்கிக்கொண்டாள். மூன்று காகிதங்களிலும் இருந்த சுருக்கத்தை நீவி விட்டாள். பாட்டியின் மடியில் இருந்த சிறுவனின் ஒரு கை கீழே தொங்கிக்கொண்டிருந்தது. அந்தக் கையை எடுத்து அவள் முழங்கால் மேல் வைத்து, பயணச்சீட்டை மடித்து, அதன் ஒருமுனையைக் கொண்டு சிறுவனின் நகத்தில் படிந்திருந்த அழுக்கை எடுக்க ஆரம்பித்தாள். அவனும் குறிப்பிட்ட இடைவெளியில் மற்ற விரல்களை மடக்கி அடுத்த விரலை நீட்டிக் காட்டினான்.

படம் பிடிக்கலாமா, அதைக் காட்சிப்படுத்தலாமா என மனம் நினைத்தது. மிக குறுகிய இடைவெளியில் படம் சரிவராது என்றும் பட்டது. படம் எடுத்தால், அந்தச் சிறுமிக்கு ஒருவித அதிர்ச்சி, வெட்கம் உருவாகலாம். அடுத்த நொடி அந்தச் சிறுமியின் செயலில் ஒரு பிசிறு அல்லது போலித்தனம் கூடிவிடும் எனத் தோன்றியது. படம் பிடித்து என்ன சாதிக்கப்போகிறாய் என்ற கேள்வியும் வந்தது. படம் பிடிப்பது ஒருவித வணிக மனப்பான்மையோ என்று தொடர்பில்லாமல் ஒரு சிந்தனை வந்தது.

ஒவ்வொரு நகமாய் சுத்தம் செய்து, விரல்களை மெல்ல இழுத்து இழுத்து நெட்டி முறித்துவிட்டாள். இதழில் புன்னகை தவழ வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அடுத்து அவன் காலை இழுத்து தன் முழங்கால் மேல் வைத்துக்கொண்டு, நகங்களை சுத்தம் செய்யத் துவங்கினாள். ஒரு கணம் எனக்குள் அந்தச் சிறுமியின் பிஞ்சு முகத்திற்குள் ஒரு அம்மா முகம் ஒட்டிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். அவள் கை, தேர்ந்த ஒரு அம்மாவின் கைப்பக்குவத்தோடு செயல்பட்டுக் கொண்டிருந்தது. எனக்கு கண்கள் வழியே மனது முழுதும் மகிழ்ச்சி நிரம்பிக்கொண்டிருந்தது.

சீனாபுரம் தாண்டி பேருந்து ஓடிக்கொண்டிருந்தது. கூட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. காற்று சிலுசிலுவென வீசியது. நான் இறங்கும் இடம்வரை அவர்கள் இருவரையும் பார்ப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை.

குழந்தைகள் குழந்தைத்தனமாய் செலுத்தும் தாயன்புக்கு முன்பு, தாயே கூட சில நேரங்களில் தோற்றுப்போய்விடுவாளோ எனத் தோன்றியது.


*

16 comments:

ரேகா ராகவன் said...

அருமை.

வானம்பாடிகள் said...

அற்புதமான அனுபவம்ணே. பகிர்ந்து மகிழச் செய்ததற்கு நன்றி

Anonymous said...

தாய்மைய்ணர்வு சிறு வய்திலிருந்தே பெண்களிடம் இருப்பது தான்...:) இப்போதெல்லாம் வயதேற வயதேற பெருக வேண்டிய தாய்மையுணர்வு குறுகிப் போவது கொடுமை...:(

குரங்குபெடல் said...

நெகிழ்வான ஒரு பதிவு

பகிர்வுக்கு நன்றி

ILA(@)இளா said...

ஆகா என்னவொரு வர்ணனனை ? சாண்டில்யந்தான் ஞாபகத்துக்கு வந்தாரு

துளசி கோபால் said...

அருமையான பதிவு!

பெண்குழந்தைகளின் தாயன்பு இயற்கையின் கொடைதான்!

ராமலக்ஷ்மி said...

/குழந்தைகள் குழந்தைத்தனமாய் செலுத்தும் தாயன்புக்கு முன்பு, தாயே கூட சில நேரங்களில் தோற்றுப்போய்விடுவாளோ எனத் தோன்றியது./

உண்மைதான். அழகான பகிர்வு.

தமிழ் மீரான் said...

இதையெல்லாம் அனுபவிக்கத் தெரியாத அரக்கர்கள் இன்னமும் நம் நாட்டில் இருப்பதுதான் வேதனை!

arul said...

anna, what you had said is true really.

i hope u had visited my blog atleast once

mohamed salim said...

அருமையான பதிவு வாழ்த்துக்கள்

shammi's blog said...

அழகான பதிவு ...

Jaikumar said...

Very nice narrative!

I always wonder how you people have got a good creative thinking with the scenes you observe.

gopinath said...

ஒரு உயிரோட்டமான திரை காவியத்தை பார்த்தது ஒரு போன்று பாதிப்பு.,ஒவ்வொரு வரிகளையும் படித்த பின்பு உடனடியாக அவ்வரிகள் காட்சியாய் மனதில் விரிகிறது (அந்த பாட்டி முதற்கொண்டு).,மனதை / இதயத்தை தொடும் கட்டூரைகள், கதைகள், நாவல்கள் மட்டுமே படித்த பின்பும் மீண்டும் மீண்டும் வாசிக்க தோன்றும் வாசித்த பின்பும் மனதில் காட்சியாய் பதிந்து இருக்கும்., "தாயுமானவள்" கட்டுரையும் அந்த வகை தான்.,இக்கட்டுரையை வாசித்த அந்த நாளின் இரவு உறக்கர்த்திற்கு முன்பு மனதில் ஒரு வித உளமரியயாத மகிழ்ச்சி பல நாள் தவத்திற்கு பிறகு உறங்கும் முதல் உறக்கம் போல் அன்று அப்படியொரு நிம்மதியான உறக்கம்.,காரணம் "தாயுமானவள்" கட்டுரையும் அதை வடித்த கதிர் சாரும்.,நாம் பார்த்து ரசிக்கும் நிகழ்வுகளை கட்டுரையாய் பதிவு செய்யும் பொழுது அவை கற்பனை கதைகள்,கட்டுரைகளை விட அதிக ஈர்ப்பு உடையதாகவே அமைகிறது.,மீண்டும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் கதிர் சாரிடம் இருந்து இது போன்று ஒரு அழகிய பதிவையும் எனக்கு அந்த பதிவை வாசித்த பின்பு கிடைக்கும் நல்லதோர் உறக்கத்தையும்.,

நன்றி,
கோபிநாத் பழனிசாமி.

Unknown said...

Superb

Unknown said...

Superb

Unknown said...

Superb