சில சிறப்புச் சமரசங்கள்

வழக்கமான நேற்று கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாய்க் கடந்து போனது. ஒவ்வொரு முறையும், வலிய செயற்கை உற்சாகம் திணிக்கப்படும் தினம் அது. கொஞ்ச காலமாய் மிகப் பெரிய வியாபார தினமும் கூட. புத்தாண்டுச் சலுகை என பெரும்பாலான கடைகள் இன்னொரு தீபாவளிக்கு முந்தைய நாட்களாகவும், தி.நகர் ரங்கநாதன் தெரு போலவும் ஒரு பிம்பத்தை எங்கள் ஊரிலும் கட்டமைக்கும் வல்லமை பெற்றுவிட்டது.

சட்டம் ஒழுங்கிலும் கூட கொஞ்சம் தளர்ச்சி, இரவு ஒரு மணி வரை எவ்வளவு குடித்து விட்டு ஓட்டினாலும் பரவாயில்லை. ஏதும் சத்தம் போடாமல், சாகசம் நிகழ்த்தாமல் போனால் போதும். பக்க வாட்டில் சாலையோரம் பாதுகாப்புக்கு(!) நிற்கும் காவல்துறையினரை வினாடி நேரமேனும் தலைவர்களுக்கு பாதுகாப்பிற்கு நிற்பது போல் நமக்கும் நிற்கிறார்கள் என கற்பனை செய்து கொள்வதில் சில துளிகளேனும் மகிழ்ச்சி நமக்குள் சுரக்கத்தான் செய்கின்றன.

ஓநாய்க் குரலை ஒலிப்பானில் ஒலித்து அலட்டல் விடும் இரு சக்கர வாகன சர்க்கஸ்காரர்களை விரட்டிப் பிடிக்க, தயார் நிலையில் காவல் வாகனங்கள் ஆங்காங்கெ தென்படுவதும் இந்த நாட்களின் அடையாளம்.
காலை முதலே யாரை நோக்கினாலும், உடனே ஒரு செயற்கைச் சாயம் வழியும் புன்னகை பூத்துக் கொள்கிறது. “ஏப்பி நியூ இயர்” என்ற கை பற்றும் வாழ்த்துகளுக்கு, அட நாளையும் ஒரு நாள்தானே என்ற எண்ணம் இருப்பினும், மரியாதை(!) நிமித்தமாய் “ஸேம் டூ யூ” வென உதடுகளில் பதில்கள் அனிச்சையாய் கசிந்தோடிவிடுகிறது.

குடி பழகிய காலத்திலிருந்து, தவறாமல் தவிர்க்காமல் குடிக்கும் 31ம் தேதி இரவுகளில் நேற்று மட்டும் அதீத சுய கட்டுப்பாடு(!), விருப்பத்தின் பேரில் தப்பித்துக் கொண்டது. ஏனைய நாட்களில் எப்போதாவது குடிப்பதற்கு எல்லைகளும் அளவுகளும்  இருக்கும். இந்த நாளில் மட்டும் செயற்கைக் கொண்டாட்டம் செய்யும் சித்து விளையாட்டுகளில் அளவுகள் மாறிப் போவதும், வாழ்த்துகிறேன் என வழவழவென அழைப்புகள் தொடுப்பதில் அடுத்த நாள் விழித்து கைபேசியின் அழைப்புப் பட்டியலை பார்க்கும் போது, ஒரு கௌரவ வெட்கம் சூழ்ந்து கொள்வதும் வாடிக்கை.

நல்ல பிள்ளையாய் 9 மணிக்கு வீடு சென்று, நன்றாய் சாப்பிட்டு, பொறுமையாய் உட்கார்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் தசாவதாரத்தை தரிசனம் பண்ணக் கொட்டாவி அழைத்தது, வந்து தூங்கு என்று. மிகத் தெளிவாக கைபேசியை அமைதி நிலையில் கிடத்திவிட்டு உறக்கத்தைத் தழுவ, சற்று நேரத்தில் சட சடவென பட்டாசும், வானவேடிக்கையும் சப்தங்களாக அடைபட்ட சன்னல் வழியே கசிந்து வந்து எழுப்பியது.

”அடேங்கப்பா! என்ன்ன்ன்னா பெரிய்ய்ய்ய சாதனை புது வருசம் சுகப்பிரசவமாய் அமைந்தது போலும்” என அரைத்தூக்கத்தில் கடந்து காலை எழுந்த போது, விடுமுறையில் என் அம்மா வீட்டிலிருக்கும் மகள் பல முறை அழைத்திருந்தது கைபேசியில் தவறிக் கிடந்தது. கொஞ்சம் குறுகுறுக்கும் மனதோடு திருப்பியழைக்க, எட்டு மணிக்கும் எழாமல் “போங்கப்பா, ஹேப்பி நியூ இயர் சொல்லக் கூப்பிட்டா, போனே எடுக்கல…” என சிணுங்கிவிட்டு வாழ்த்தைத் தவழவிட்டாள். என்னதான் வாதம் விதண்டாவாதம் வைத்தாலும் குழந்தைகள் முன், அதுவும் சொந்த மகள் முன் எல்லாம் துறந்து, இனிப்பாய் இனிக்கும் வாழ்த்துகளை அள்ளி எடுத்துக் கொள்ளும் சமரசத்தில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.

நேற்றுத் தவிர்த்த மது குறித்து நண்பரிடம் பெருமையாக தம்பட்டம் அடிக்கும் போது “ம்ம்ம்ம்…. குடிக்காம அப்படி என்னதான் சாதிச்சிட்டீங்களாக்கும்” என்று சொல்லிவிட்டு “என்ன்ன்ன்ன இந்தக் கருமத்தக் குடிச்சா, அடுத்த நாளு தலை வலிக்கத்தான் செய்யுது. செரி வாங்க ஒரு டீ அடிப்போம், தலை வலிக்குது” என அழைத்த போது மின்னலாய் ஒரு மகிழ்ச்சி நேற்று தவிர்த்த குடிக்கு நிகராய் ஒரு போதையை மனதுக்குள் பரவவிட்டது.

வழக்கம் போல் அலுவலகம் வந்தாகிவிட்டது, நாட்காட்டித் தாளை கிழிப்பதற்குப் பதிலாக, கிழிக்க வசதியாய் 365 தாள்கள் கொண்ட, அன்பளிப்பாய்க் கிடைத்த நாட்காட்டியை புதிதாய் மாட்டி, புதிய வருடத்தைத் துவங்கியாவிட்டது. நாட்காட்டிகளைத் தவிர குறிப்பிடத்தகுந்த விசயம், இன்னும் பல நாட்களுக்கு எதற்காகவேனும் தேதிகளை எழுதும் போது ஏற்படும் 11க்கு பதிலாக வழக்கம் போல 10 என்றே எழுதும் குளறுபடிகள்தான். 

எனக்கு இது நடந்தது, அவருக்கு அது நடந்தது என்று ஒவ்வொரு முக்கிய செயல்களிலும் ஆண்டுகளின் எண் ஒட்டிக்கொண்டேதான் இருக்கின்றது. அரிய நட்புகளையும், உறவுகளையும் கண்டெடுத்தது குறித்து நினைவுகளை மீட்டும் போது, அதில் 2010 என்ற எண்ணிற்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கவே செய்யும்.

ம்ம்ம்ம்… தேடல் தானே வாழ்க்கை…. தேடுவோம், அன்பு, நேசம், நெகிழ்ச்சியோடு இன்னும் கூடுதல் நட்புகளையும், உறவுகளையும். கூடவே தேவையானவற்றை அடையாளப்படுத்துவோம், ஆவணப்படுத்துவோம் நமக்கு கிடைத்த வாய்ப்புகளின் வழியே.

-0-

23 comments:

சத்ரியன் said...

புத்தாண்டு.

முதல் வருகை.

ஆதலால் முதல் வடை...!!!!!!

சத்ரியன் said...

//தேடல் தானே வாழ்க்கை…. தேடுவோம்...//

தேடுவோம் கதிர்.

ஜாபர் ஈரோடு said...

தமிழ்மனம் 2010 டாப் 100 லில் 10 ஆம் இடத்திற்க்கு வாழ்த்துக்கள்..

க.பாலாசி said...

எந்த வருஷமுமில்லாம நேத்து நைட்டு 12 மணிக்கு எக்காகிட்டேர்ந்து போனு.. அய்யய்யோ என்னமோ ஏதோன்னு பதறிப்போயி எடுத்தா ‘யேப்பி ந்யூ இயர் மாம்மா‘ங்கறா அக்கா மொவ... அடிபோடி இவளேன்னு மனசுலையே நெனச்சிகிட்டு வாழ்த்க்கள்டா செல்லம்னு கொஞ்சநேரம் கொஞ்சிட்டு வய்ச்சேன். என்ன பண்றது சிலநேரத்துல நமக்கின்னு விதைத்த கட்டுப்பாடுகளை எல்லாயிடத்திலையும் பயன்படுத்த முடியறதில்ல..அப்படி இருக்கவும் கூடாது..

மோனி said...

சமரசம் உலாவுமிடமே ...

vasu balaji said...

ம்கும். ஆசனூரானுக்கு வெளிச்சம். யாப்பி நிவி இயரு.

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

SATYA LAKSHMI said...

என்னதான் வாதம் விதண்டாவாதம் வைத்தாலும் குழந்தைகள் முன், அதுவும் சொந்த மகள் முன் எல்லாம் துறந்து, இனிப்பாய் இனிக்கும் வாழ்த்துகளை அள்ளி எடுத்துக் கொள்ளும் சமரசத்தில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. .. s daughter is so precious very nice hats off to u kathir

சிநேகிதன் அக்பர் said...

2011 க்கு பதில் 2010. ஆமாம் ஒவ்வொரு வருடமும் இது நிகழ்வே செய்கிறது.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Unknown said...

தேடல் இல்லையென்றால் வாழ்வின் சுவை குன்றிவிடும் ...

Mahi_Granny said...

100 இல் 10 வதற்கு வாழ்த்துக்கள் கதிர்.

Unknown said...

//ம்கும். ஆசனூரானுக்கு வெளிச்சம். யாப்பி நிவி இயரு.//
ம்ம்ம் நாமட்டும் என்னத்தச் சொல்லிறப்போறேன்,போம்போது உட்டுட்டு போயிட்டு நல்லா கொண்டாடுங்கப்பு. எப்படியோ இந்த வருசத்துல அன்பு, நேசம், நெகிழ்ச்சியோடு இன்னும் கூடுதல் நட்புகளையும் கொடுத்த ஈரோடு தமிழ் குழுமத்தின் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

venkat said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

@@தாமோதர் சந்துரு

அண்ணா, மனசைத் தேத்திகுங்க... தெளிய வெச்சி அடிக்கிற மாதர, கூப்ட்டுச் சொல்றாய்ங்க எனக்கு... வயிறு எரியுது!!

அப்பொறம்... சகலைங்ற சொல் வாயில வரல... என்னவோ கோகோன்றாரு... கலிகாலம்!

'பரிவை' சே.குமார் said...

//தேடல் தானே வாழ்க்கை…. தேடுவோம்...//



தேடல் இல்லாத வாழ்க்கை ஏதண்ணா...
தேடுவோம்... நல்ல தேடல்களைத் தேடி நாமும் பயணிப்போம்.

Ganesan said...

வாழ்த்துக்கள் கதிர்.

நல்ல நடை.

Stumblednews said...

If you have an English blog, submit your post at Stumblednews.0fees.net to get more visitors to your blog.

தாராபுரத்தான் said...

ஒண்ணாம் தேதி ஒண்ணும் இல்லைங்களா.

Thenammai Lakshmanan said...

இனிய சமரசம்.. தேடல்.. அருமை.. இந்த ஆண்டும் நட்பூக்கள் புதிதாய் மலரட்டும்.. கிடைத்த நட்பூக்களும் மணம் பரப்பட்டும்..

ADMIN said...

அரிய நட்புகளையும், உறவுகளையும் கண்டெடுத்தது குறித்து நினைவுகளை மீட்டும் போது, அதில் 2010 என்ற எண்ணிற்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கவே செய்யும்.


இதுதான் உங்களிடத்தில் எனக்கு பிடித்தது.. வரிகள் ஒவ்வொன்றின் சாரத்தையும், ஆழத்தையும் நன்றாக ஆழ்ந்து படிக்க நேர்ந்தது.. காரணம் தங்களின் எழுத்து வன்மை அப்படி..! நன்றி! வாழ்த்துக்கள்..!

ஹேமா said...

இன்னும் நிறையவே நல்லது செய்ய மனம் நிறைந்த வாழ்த்து கதிர் !

Ramesh said...

கடைசிவரிகளை அழகாக்கிறது மனதை உங்களையும் வெள்ளையடிக்கும் நினைவுகளைக்கொணர்ந்து..

r.v.saravanan said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்