என் இனமடா நீ!!!!

பரபரப்பு வற்றிப்போய் விடிந்தது இந்த விடுமுறை தினம். வழக்கமான அவசரத்தோடு சமைத்து பிள்ளைகளுக்குத் திணித்தும் திணிக்காமல்  கொத்திப்போக வீதி மூலையில் வாகனக் கழுகுகளுக்கு துரத்த வேண்டிய அவசரமில்லை. கடந்த சில ஆண்டுகளைப் போல் விடுமுறை நாளில் வந்து தொலைக்காமல் கூடுதலாய் ஒரு விடுமுறையை பரிசாகக் கொடுத்து வழக்கச் சிறையிலிருந்து சிறகுகளை விடுவித்த இந்தப் புனித குடியரசு தினத்திற்கு கூடுதல் நன்றிகள்.


கொடியேத்தி முட்டாய் கொடுக்கும்’ முக்கிய தினங்களின் மிக முக்கிய சமூகக் கடமையாற்றும் தொலைக்காட்சிகளின் எல்லாச் சேனல்களிலும் செயற்கைத் தேசப்பற்று அடர்த்தியாய் மின்னுகிறது. திரைகளின் ஏதோ ஒரு மூலையில் கொடி பாவமாய் பட்டொளி வீசி ஆட்டம் போட்டுக்கொண்டேயிருக்கின்றது. 

அரசு தொலைக்காட்சிகளில் அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் வயதான முதல்வர் எடுபிடிகளோடு அமர, அவர்களை விட வயதான, ஆளும் மாநிலத்தின் மொழியறியா ஆளுநர்கள் பெருமையோடு(!) குடியரசு தின உரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒழுங்கற்ற குரல்களில் மாநில மொழியிலும் ஆங்கிலத்திலும் ஆண் பெண் குரல்கள் வர்ணனை என்ற பெயரில் முக்கி முக்கிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பாரம்பரியக் கலைகள் வளர்க்க முயலும் கலைஞர்கள், தொடங்கும் முன் ஒரு கும்பிடு, முடிந்து ஒரு கும்பிடு என இயந்திர கதியில் கொளுத்தும் முற்றிய காலை வெயிலில், தகிக்க முனையும் மைதானத்தில் வெறும் ஐந்து நிமிடங்களுக்காக பல நாள் ஒத்திகை பார்த்த ஆட்டத்தை ஆடித்தீர்த்துவிட்டு நகர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.

சன்னலினூடே தெரியும் சாலையில் பள்ளி வாகனங்களில் மாவட்ட தலைநகரங்களில் ஆட்சித் தலைவரோடு குடியரசைக் கொண்டாடிவிட்டு வண்ண உடையோடு, தீரப்போகும் விடுமுறை தினத்தை அனுபவிக்கும் குதூகலத்தோடு பள்ளிப்பிள்ளைகள் கூடுதல் உற்சாகத்தோடு கத்தி, கையாட்டித் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

செய்தித் தொலைக்காட்சிகள் வழக்கமான தொணியில் நாட்டின் 62வது குடியரசு தினம் உற்சாகத்தோடும், பெருமிதத்தோடும் கொண்டாடப்பட்டது” என்ற வரிகளை எந்தச் சலனமில்லாமல் வாசித்துக் கொண்டிருக்கின்றன. ஒரே வரியை 60க்கும் மேற்பட்ட முறை வாசிக்கும் போது சலனத்தை எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் தானே!

வெளியே கிளம்புகையில் “வரும் போது கொடி வாங்கிட்டு வாங்கப்பா” என்ற வார்த்தைகளைச் சேமித்துக் கொண்டு கீழே வந்து வண்டியை நகர்த்தும் போது கீழ் வீட்டு உரையாடல் வலிய வந்து காதில் விழுந்தது…. ”டாடி! குடியரசு தினம்னா என்ன டாடி!!!!?” என்ற கீழ்வீட்டுச் சுட்டிப் பையனின் கேள்விக்கு வண்டியைத் துடைத்துக் கொண்டிருந்த அப்பா “ஏண்டா இத்தன பணத்தப் புடுங்குறாங்களே, இதெல்லாங்கூட உங்க ஸ்கூல்ல சொல்லித்தரமாட்டாங்ளா?” எனக் கேள்வியால் கேள்வியை வீழ்த்தி பெருமைப் பட்டுக் கொண்டிருந்தார்.

மூன்றாவது பருவக் கட்டண ஓலை தந்த கடுப்பு ”என் இனமடா நீ!!!!” என அவரைத் தோளோடுதோள் அணைத்துக்கொள்ளத் தோன்றியது.

கூடவே…. குடிமக்களின் அரசு, மக்களாட்சி, மக்களுக்காக மக்களால் சுயமாகத்(!!) தேர்ந்தெடுக்கப்படும் அரசு, மக்களுக்காக ஆட்சி நடத்தும் அரசியலைமைப்புச் சட்டம் என ஏதோதே வார்த்தைகளும், வரிகளும் எனக்குள் ஏளனமாய் கும்மியடித்துக் கொண்டிருந்தது?

-0-

17 comments:

மோனி said...

http://www.facebook.com/photo.php?fbid=1504674790717&set=a.1260386003650.30798.1649690675&notif_t=like

நாடோடி இலக்கியன் said...

ப‌திவின் இறுதி அட‌ர்த்தி.

தொட‌ர்ந்து ச‌மூக‌ பொறுப்போடு இய‌ங்கும் உங்க‌ளை வ‌ண‌ங்குகிறேன்

Anonymous said...

இதனினும் கடுமையான சாட்டையடிகளை தாங்கும் பக்குவம் வந்துவிட்டது நமக்கு...தலை நிமிர வேண்டிய நாள் தலை குனிய வைக்கும் நிகழ்வுகளின் ஊடே வாழ்க்கை..என்ன சொல்ல கதிர்.. நானும் ஒரு சாராசரி

பிரபாகர் said...

என் இனமடா நீ... கேப்பில நாங்களும் சொல்லுவோம்ல... நல்ல இடுகை கதிர்...

பிரபாகர்...

shanmugavel said...

//’கொடியேத்தி முட்டாய் கொடுக்கும்’//
சடங்காகிப்போனதே.

சே.குமார் said...

சாட்டையடியாய் ஒரு பதிவு.

வானம்பாடிகள் said...

/ பிரபாகர் said...

என் இனமடா நீ... கேப்பில நாங்களும் சொல்லுவோம்ல... நல்ல இடுகை கதிர்...

பிரபாகர்.../

சாச்சுப்புட்டியே பங்காளீஈஈஈஈ. கதிர்!! ஈரோட்டுக்கு வரப்ப நான் வெட்றேன். வாகா பதமா ஒன்னு செலக்ட் பண்ணி வைங்க:))

ஆரூரன் விசுவநாதன் said...

தாய்த் திருநாடு முழுவதும் காலை முதலே குடி” ஆட்சியின் பெருமையை பேசத்தொடங்கிவிட்டது, அறியாமல் பேசுவது நன்றாக இல்லை கதிர்.

நாளை அரசாங்கம் அறிவிக்கும் பாருங்கள், மக்கள் குடி” அரசு நாளை சிறப்பாக கொண்டாடினர். மாநிலத்தில் மது விற்பனை*****கோடியைத் தாண்டியது....அப்படின்னு


விடுங்க.....மொதல்ல விடுமுறையைக்கொண்டாடுவோம்....அப்புறமா ஒரு அலுவல் நாளில் இது குறித்து திட்டித் தீர்ப்போம்.....

ஷர்புதீன் said...

//நாளை அரசாங்கம் அறிவிக்கும் பாருங்கள், மக்கள் குடி” அரசு நாளை சிறப்பாக கொண்டாடினர். மாநிலத்தில் மது விற்பனை*****கோடியைத் தாண்டியது....அப்படின்னு


விடுங்க.....மொதல்ல விடுமுறையைக்கொண்டாடுவோம்....அப்புறமா ஒரு அலுவல் நாளில் இது குறித்து திட்டித் தீர்ப்போம்.....//


விடுங்க கதிர்., நம்ம கணக்குல கொஞ்சம் ஹிட்ஸ் சேரும் , அவ்வளவுதான்.,

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - இது ஒரு சடங்கு - சம்பிரதாயம் - அவ்வளவு தான் - விடுமுறையைக் கொண்டாடுங்கள். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

அன்புடன் அருணா said...

/“ஏண்டா இத்தன பணத்தப் புடுங்குறாங்களே, இதெல்லாங்கூட உங்க ஸ்கூல்ல சொல்லித்தரமாட்டாங்ளா?” /
எனக்குத் தெரிந்த வரை எல்லா பள்ளிகளிலும் கொடியேற்றப் படுகின்றது.அன்று குடியரசு பற்றி குழந்தைகள்,முதல்வர்,சிறப்பு விருந்தினர்கள் பேசுகின்றனர்.நாட்டுப் பற்றுமிக்க பாடல்கள் பாடப்படுகின்றன.இவையெல்லாம் செய்தும் குடியரசு பற்றி முந்தைய நாள் விளக்கவும் செய்யப்படுகின்றது(என் பள்ளியில்)இவையெல்லாம் செய்வது குழந்தைகள் மனதில் இவை பற்றிய தெளிவு ஆழப் பதிவதற்காகத்தான். இவையெல்லாம் செய்தால் சம்பிரதாயமாகச் செய்வது என்றால் என்ன செய்யலாம்?எங்கிருந்து ஆரம்பிக்கலாம்.?இதையெல்லாம் விட்டுவிட்டால் பின் என்ன செய்து இந்தக் காலியிடங்களை நிரப்பலாம்?
என்னைப் பொறுத்தவரையில் இப்படியிருக்கே இப்படியிருக்கே என்று புலம்புவதை விட நான் இருக்குமிடத்திலேயே முடிந்த அளவு குழந்தைகளிடம் விழிப்புணர்வு கொண்டு வர முயற்சிப்பதுவே நல்ல ஆரம்பம்தான்.எல்லோரும் இப்படி சம்பிரதாயக் கொடியேற்றம்...மிட்டாய் வழங்குதல் எனச் சொல்வது மனதுக்குக் கஷ்டத்தைத் தருகிறது.என்ன செய்யலாம் என்று யாராவது சொல்லுங்களேன்......

Sethu said...
This comment has been removed by the author.
ராமலக்ஷ்மி said...

அருணா, உங்களை வழிமொழிகிறேன்.

நாட்டை நடப்பைப் பற்றி நமக்கு என்னதான் சலிப்பு இருப்பினும், நாளைய தலைமுறைக்கு நாட்டுப் பற்றை வளர்க்கும் வகையிலான இது போன்ற விழாக்களே நம்பிக்கையின் ஊற்றாக உள்ளன. இளம் வயதில் விதைக்கப்படும் நல்லெண்ணங்களில் நாளைய நாடாவது நல்ல தலைமைகளை, தவறுகளைத் தைரியமாகத் தட்டிக் கேட்கும் குடிமக்களைப் பெறட்டும்.

VELU.G said...

நானும் உங்க இனம்தாங்க நமக்கும் 3வது ஓலை வந்திடுச்சு

க.பாலாசி said...

இப்ப கல்யாணம்னா தாலிக்கட்டணும், மோதிரம் போடணும், சோறு போடணும் போலவே குடியரசோ, சுதந்திர நாளோ கொடியேத்தணும், முட்டாய்த் தரணும், ரெண்டு தலைவர்களைப்பத்தி பேசணும் அவ்ளோத்தான். இது கட்டாய சடங்கு சம்பிரதாயம் என்ற உணர்வில் நிகழ்கிறது.

தாராபுரத்தான் said...

கல்விக் கட்டணம் கடுப்பு...இன்னும் இருக்குது..ங்கோ.

காமராஜ் said...

அன்பின் தோழா...
மிக அழகான பதிவு.one day leave தொலைக்காட்சி விழா descripe அழகு.