கானல் வரி - வாசிப்பு அனுபவம்

பிறத்தியாரின் நாட்குறிப்புகளையோ, கடிதங்களையோ வாசிப்பதில் ஒரு குரூரம் கலந்த ஆர்வம் இருக்கத்தானே செய்கின்றது. அதுவும் ஒருத்தியின் கணவனுக்கும், இன்னொருவனின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட காதல், அது நகர்த்தி நிறுத்திய காமம் என்பது குறித்த ஒரு பெண்ணின் கடிதத்தைப் படிக்க ஆர்வம் இல்லாமலா போய்விடும். அதுவும் ஒரு பக்கம் இரண்டு பக்கம் அல்ல…. அறுபது பக்கங்கள். ஒரு கடிதத்தை மூச்சு முட்ட தொடர்ந்து வாசிக்கும் வேகத்தோடு நகர்த்தி செல்கிறது கதை.

எந்தக் காதலிலும் காமத்திலும் இல்லாத குறுகுறுப்பை, ஆர்வத்தை ஒருவனின் மனைவி மாதவிக்கும், இன்னொருத்தியின் கணவன் மௌலிக்கும் இடையே நிகழும் இந்தக் காதலும், காமமும் கூடை நிறைய கொண்டு வந்து சேர்க்கிறது. விபச்சாரி(ரன்)கள் மேலும், அவர்களின் வாடிக்கையாளர்கள் மேலும் படியும் இகழ்ச்சியைவிட, திருமண பந்தத்திற்குள் ஆட்பட்டோர் பிறர் மேல் கொள்ளும் காதல் மேல், கூடுதல் இகழ்ச்சி மனோபாவத்தை மனதிற்குள் விதைப்பது என்னவோ ஆச்சரியம்தான்.



மாதவிக்கும், மௌலிக்கும் இடையே ஏற்படும் காதல் இன்றைக்கு இணையத்து மின் அரட்டைகளில் வழமையாக நிகழும் காதல்களின் ஒரு பிரதிதான். இந்தக் காதல்களின் அவசியம் என்னவென்று பார்த்தால், அவசியம் என்பதையும் தாண்டி மிக எளிதாக, மலிவாக கம்பிகள், காற்றலைகள் வழியே கிடைப்பது என்ற வசதிதான். ஒத்த சிந்தனை என்ற கண்ணியை தொடுக்கிறது. கிடைக்கும் நேரம், வாய்ப்பு, இனிப்பு தடவி தட்டச்சும் வார்த்தை, அடுத்தவன் மனைவி / கணவன் என்ற குறுகுறுப்பு, மிக எளிதாக தொடர்ந்து கண்ணிகளைக் கோர்த்து நீளச் செய்கிறது.

மாதவிக்கும், மௌலிக்கும் இடையே மிக எளிதாய்க் கிடைத்த வாய்ப்புகளே காதலிக்க வேண்டும் என்ற மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கி, துளி துளியாய் அதை நிரப்பிக் கொள்வது போல் ஒரு பிம்பத்தை கொடுக்கிறது. மாதவியின் கூற்றில் அந்த வெற்றிடம் மௌலியால் நிரம்பியதாகவே அறிவிக்கவும் செய்கிறது. காதலை மிதமிஞ்சிக் கொண்டாடுகிறாள், எல்லையில்லா மகிழ்ச்சியைக் கொடுத்த அதே காதல், எல்லையில்லா வலியையும் கொடுப்பதை மாதவின் தொடர் வார்த்தைகளில் அனுபவிக்க முடிகிறது.

மாதவி எழுதும் கடிதம் என்பதால், மாதவிக்குத் தெரிந்த மௌலி  மட்டுமே வரிகளில் வார்த்தைகளாக நிரம்புகின்றன. இந்தக் கதையின் (கதைதானே!) இரண்டு பாத்திரங்களும் கவிதைப் பித்து பிடித்த இரண்டு வலைப்பூ எழுத்தாளர்கள். எல்லோருக்குள்ளும் ஏற்படுவது போன்று ஒரு மரியாதையான அறிமுகத்தின் பின்னணியில் தொக்கி நிற்பது பாவனைப் பேச்சுகள். சில காரணங்களால் தற்காலிகமாக துணையைப் பிரிந்திருந்த இருவருக்குமிடையே இணையச் சிலந்தி ஈர வலையை பின்னுகிறது.

வேறு வேறு தேசங்களில் இருந்தாலும் சிலந்தி வலை இருவரையும் அருகருகே பிடித்துப் பிணைக்கிறது. வலையில் பிணைந்தவர்கள் வாழ்க்கையிலும் பிணைகிறார்கள். வெற்றிடங்கள் நிரம்பியதாக ஒருவருக்கொருவர் நம்புகின்றனர். திளைக்கத் திளைக்க காதல் பிணைப்பதில் மனைவிகள் / கணவர்கள் கண்டிப்பானவர்களாகவும், காதலிகள் / காதலன்கள் கனிவானவர்களாகவும் இருப்பது போல் இருவருக்குள்ளும் தோன்றுவதில் வியப்பில்லாமல் இல்லை. அவளுக்குள் அத்தனை சங்கீதம் நிரம்பியிருந்ததை அவன் தான் கண்டு பிடித்து மீட்டுகிறான்.  பல ஊர்களில் சந்திக்கிறார்கள், கொஞ்சம் சண்டை பிடிக்கிறார்கள், கூடலில் எல்லாச் சண்டையும் குலைகிறது. கூடல் காதலை கெட்டிப்படுத்துவதாக அவர்களை நம்ப வைக்கிறது. வழக்கம் போல்  கூடல்(கள்) காதலின் வர்ணத்தை நீர்க்கச் செய்கிறது.

ஆனாலும் காலம் தாழ்த்திப் புரிகிறது அன்பென்ற பெயரில் வதை செய்ததும் குரூரமாகத் துன்புறுத்தியதும். காலம்தானே எல்லாவற்றையும் உணர்த்துகிறது. அதேபோல் அதிர்ச்சியும் ஒளியும் இணைந்திருக்கும் மின்சாரம் போல் அவர்களுக்குள் அன்பும், வதையும் சேர்ந்திருப்பதை காலம் உணர்த்துகிறது.

ஆளுதல் என்னவென்று தெரியாமல் பெண்ணை ஆள நினைக்கும் ஆண் இனத்தின் பிரதியின் பலவீனம் வெளிப்படும் நேரமே, வெற்றுச் சந்தேக விதைகளை வளர்த்தெடுப்பது. பிறன் மனையை  விழையும் பேராண்மைக்கு(!) அவள் மேல் வைத்திருக்கும் அன்புக்கு நிகராக, அவளுடைய ஒழுக்கத்தின் மேல் அவ நம்பிக்கையை அவனின் மத்திய தர மனோபாவம் புகுத்தவே செய்கிறது. அதற்கு மாதவி வைத்திருக்கும் ஆண் நட்புகள் உரம் போடச்செய்கிறது. காலம் மாதவிக்கு மௌலியை காதலன் போலவும், விரோதி போலவும் பக்கங்களைப் புரட்டி வாசித்துக் காட்டுகிறது.

எல்லா நினைவுகளையும் இறக்கி வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வரையப்பட்ட கடிதத்தின் முதல் பக்கத்திலேயே முடிவு இப்படி இருக்கும் என்று யூகிக்க முடிந்தாலும், யூகித்த முடிவே கடைசிப் பக்கத்தில் இருந்தாலும், ஏனோ மாதவியை உள்ளங்கையில் ஏந்திக் கொண்டு மிகுந்த வலியோடு, வதையோடுதான் கடைசிப் பக்கத்தைக் கடக்க முடிகிறது. வலியை முழுக்க உணரவைத்ததற்கு எழுத்தில் இருக்கும் ஈர்ப்பும், அந்நியத்தன்மையற்ற போக்குமே காரணம் என்று சொல்லலாம்.

பக்கங்களை நகரவிடாமல் வார்த்தைச் சிலந்தி சிறை பிடித்து தன் வலையின் கோடுகளில் கட்டிப்போடுவது போல் வாசிப்பை கனமாக்கிய புத்தகம். அடிக்கோடிட்ட பல வரிகளை மடித்து எழுதினால் அழகழகாய் கவிதைகள் பூக்கும் என்பது உண்மை. அதே அடிக்கோடிட்ட வரிகள்தான், அந்த இடத்தை கடக்க முடியாமல் சிந்தனைக் கிளைகள் பரப்புவதையும் மறுக்க முடியாது.

இது யாரும் அறியாத கதையோ, வித்தியாசமான கதையாகவோ சொல்ல முடியவில்லை. பெண்ணால், பெண் பார்வையில் எழுதப்பட்ட துணிச்சலான படைப்பு. மிக முக்கியமான ஒன்று வித்தியாசமான, சுவை மிகுந்த எழுத்து. எடுத்தால் கீழே வைக்க விடாமல் படிக்க வைப்பதில் தமிழ் நதி வென்றிருக்கிறார்.

புத்தகம் : கானல் வரி | ஆசிரியர் : தமிழ்நதி | வெளியீடு : உயிர்மை | பக்கம் : 79 | விலை ரூ.50

குறிப்பு: சாய்ந்த எழுத்துக்கள் புத்தகத்தில் இருந்து நேரிடையாக  திருடப்பட்டவை

__________________________

25 comments:

Anonymous said...

நீங்க 60 பக்கம் படித்ததை ஒரே பக்கத்தில் எங்களுக்கு சொல்லிவிட்டீர்கள்..

மாதவியும் மெளலியும் இணையத்திலும் கவிதையிலும் மட்டுமே உலாவரும் உண்மை கதாபாத்திரங்கள் அல்ல... அன்றைய இன்றைய நிகழ்வுதான்,,அன்று எதற்கோ எவர்கோ பயந்து மறைக்கப்பட்டது இன்று திறந்த இதயமென காட்டி வெளிப்படையாய் நிகழ்கிறது..இதையெல்லாம் கடக்கும் தாங்கும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கெல்லாம் என்றொ வந்துவிட்டது ...

கலகலப்ரியா said...

பகிர்வுக்கு நன்றி கதிர்.... புத்தகம் படித்தத் போலிருக்கிறது..

vasu balaji said...

வாங்கணும்ணே. பகிர்வுக்கு நன்றி.

அகல்விளக்கு said...

நிச்சயம் வாங்கிப் படிக்கணும்....
பகிர்வுக்கு நன்றி அண்ணா.....

Unknown said...

அவசியம் வாசிக்கத்தூண்டும் விமர்சனம்..

settaikkaran said...

பொதுவாக, புத்தகமெல்லாம் வாசிக்கிற அளவுக்கு எனக்குப் பொறுமை கிடையாதுன்னாலும், ஓசியிலே வாசித்த மாதிரி இருக்கிறது. :-) நன்றி!

Kumky said...
This comment has been removed by the author.
SATYA LAKSHMI said...

பிறன் மனை னோக்கா பேராண்மை ராம ரஜ்ஜியதில் வேண்டுமனால் சாத்தியம். இங்கு ராமானும் இல்லை இது கலியுகம் கதிர் கண்டிப்பாக சாத்தியம் இல்லை

ராமலக்ஷ்மி said...

விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி கதிர்.

பழமைபேசி said...

//வானம்பாடிகள் said...
வாங்கணும்ணே//

இது எப்பத்துல இருந்து? என்ன நடக்கு நாட்டுல??

க.பாலாசி said...

நல்ல விமர்சனம்... படிக்கணும்..

Unknown said...

தங்களின் வலைப்பூவிற்கு முதன்முறை வருகிறேன். கசியும் மௌனம் அருமையான தலைப்பு. இதயத்தை வருடுகிறது..

VELU.G said...

நல்ல பகிர்வு

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்கன்னா...

உங்கள் வரிகள் கானல் வரி மீதான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Jerry Eshananda said...

வாழ்த்துகள் கதிர்....கானல் வரி பற்றி எழுத நினைத்திருந்தேன்..முந்திக்கொண்டீர்கள்,நானும் மதுரையில் இருந்து சென்னை செல்ல வேண்டியிருந்த வைகை விரைவு ரயிலில் ....இதமான சூழலில் படிக்க நேர்ந்தது..சும்மா புரட்டி பார்ப்போமே என நினைத்து..பிரபஞ்சனின் முன்னுரையை படித்தவுடன் பற்றிக்கொண்டது...படித்துவிட வேணுமென்ற ஆவல்..ஏற்கனவே தமிழ்நதியின் தீவிர வாசகனான எனக்கு இது மேலும் ஆவலைத்தூண்ட ஒரே மூச்சில் படித்துமுடித்தேன்...யூமா வாசுகியின் மஞ்சள்வெயிலை ப்போல..கானல் வரியும் ஒரு இலக்கிய ப்பூஞ்சோலை....தான் கதிர்.மொத்தத்தில் ...kaanal vari: "Melancholy of a paramour.".

தமிழ்நதி said...

அன்புள்ள கதிர்,

வாசித்தேன். புத்தகம் வெளிவந்து ஏறத்தாழ ஓராண்டின் பின்னரே பெரும்பாலானோருக்குத் தெரியவருகிறது. அதையிட்டு மகிழ்ச்சியடைய வேண்டும். ஏனென்றால், ஆனானப்பட்ட எழுத்தாளர்களுக்கே ஐந்தாண்டு, ஆறாண்டு, பத்தாண்டு கழித்துக்கூட விமர்சனம் வந்திருக்கிறதாம்.

விமர்சனத்திற்கு நானே விமர்சனம் வைக்கக்கூடாது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். மௌலியின் பக்கம் சொல்லப்படவில்லை என்பது இக்குறுநாவல் பற்றிய குற்றச்சாட்டாக அமைந்திருந்தது.

நன்றி.

Unknown said...

கதிர்,
அருமையான விமர்சனம்.
எழுத்தாளர் தமிழ்நதிக்கு வாழ்த்துகள்.

நிலாமதி said...

விமர்சனத்துக்கு நன்றி .

தமிழ் நதிக்கு பாராட்டுக்கள்.

ஹேமா said...

விமர்சனமே புத்தகத்தைப் படிக்கத்தூண்டுகிறது !

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

படிக்கணும் போலிருக்குது.. இனிமே புத்தக விமர்சனம் எழுதறவங்க விருப்பப்பட்டவங்களுக்கு புத்தகத்தையும் அனுப்பி வைக்கும் பொறுப்பை மேற்கொள்ளனும்ன்னு கேட்டுக்கறேன்.. :)

Romeoboy said...

அண்ணே புத்தகத்தை பற்றி இன்னும் கொஞ்சம் எளிமையான நடையில் எழுதி இருக்கலாம். எப்பொழுதும் முதல் வாசிப்பில் உங்கள் எழுத்துகள் பிடிபடும் ஆனால் இந்த பதிவை முன்று முறை படிக்கவேண்டி வந்தது. உண்மையில் நீங்க என்ன சொல்லவறீங்கன்னு புரிவதற்கே மீள் வாசிப்பு தேவைப்பட்டது :(.

ஈரோடு கதிர் said...

நண்பர்களே பின்னூட்டங்களுக்கு நன்றி

@@ பழமை
மாப்பு! இடுகை படிக்காம பின்னூட்டம் மட்டும் படிப்பாரு போல!

@@ ஜெரி
கட்டாயம் நீங்களும் எழுதுங்கள்

@@ கும்க்கி
பின்னூட்டதை தூக்கியிருக்க வேண்டியதில்லை

@@ தமிழ்நதி
மாதவியின் பக்கத்தை மட்டும் வாசிப்பதில் ஏதுவும் குறையாகத் தென்படவில்லை.

மௌலியின் பக்கம் சொல்வதென்றால் அதற்கு இன்னொரு புத்தகம் தேவைப்படுமே, அடுத்து மௌலியின் மனைவி / ராகவன் என எல்லோருக்கும் ஒரு பக்கம், கதை இருக்கத்தானே செய்யும்.

என்னைப் பொருத்த வரையில் மாதவியின் பக்கம் மட்டுமே இதில் இருக்கிறது. அது குறித்துப் பேசலாம், விவாதிக்கலாம். இல்லாத இன்னொரு பக்கத்தை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தால், அது எல்லைகளற்று விரிந்துதானே போகும்.

உங்கள் புத்தகம் குறித்த பார்வைக்கு, உங்கள் பின்னூட்டம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி!

@@ ரோமியோ
ஏற்றுக் கொள்கிறேன்
நன்றி!


இன்னும் இரு நண்பர்கள் விமர்சனம் சரியில்லையென்றும், கதைச்சுருக்கம் போல் உள்ளதென்றும் தெரிவித்தனர்....

பழமைபேசி said...

மாப்பு... கோச்சுகாதீங்க... நேரம் போதலை.... இங்க வேலை, வாட்டி வளைவு எடுக்குது....

சிவாஜி said...

ஒன்றும் புதிய விசயமில்லையெனினும், படிப்பவரை மீண்டும் அனுபவிக்கச் செய்து வாழ்வின் அந்தரங்கங்களை புதிய பரிமாணத்தில் அவிழ்க்கச் செய்யும் ஆசிரியர் மற்றும் உங்களின் எழுத்து என்னை இங்கே கட்டிப் போடுகிறது. மூன்று முறை படித்தாயிற்று...!

வாழ்வை எப்படி வாழ? என்ற கேள்விக்கு விடை தேடினால் வாழ்வின் பிழைதான் முன் நிற்கிறதே தவிர, வாழ்வின் நெறியை அறிய முடிவதில்லை.

மிகவும் அருமையான பகிர்வுக்கு நன்றி.

Prapavi said...

நன்று! முழுமையாய் கதையை படித்த உணர்வு ஏற்படுகிறது!