காலவோட்டத்தின் ஒவ்வொரு அடியிலும் மனிதர்களைச் சந்திக்காத தருணம் என்று எதைச் சொல்ல முடியும். அப்படிச் சந்திக்கும் மனிதர்களில் ஒரு சிலர் நட்பாய் மனதோடு இருக்கமாய் ஒட்டிக் கொள்வதுண்டு. தொடர்ந்து ஓடும் ஓட்டங்களில் அப்படிப் பட்ட நட்புகளை அடிக்கடி சந்திக்காமல் இருந்தாலும் கூட, மனதை விட்டு அகலாமல் ஆணித்தரமாய் இருக்கும் நட்புகள். அப்படிப்பட்ட ஒரு நண்பன் திருப்பூரைச் சார்ந்த “சந்துரு”.
திருப்பூர் நகரை எதற்காக நினைத்தாலும் பளிச்சென மனதில் மின்னலடிப்பது சந்துரு என்ற அந்த நண்பன் தான். அவரோடு சேர்ந்து திருப்பூரில் சுத்தாத வீதிகள் இல்லை, போகாத பயணங்கள் இல்லையென்றே சொல்லலாம். எந்தவித தயக்கமும் இல்லாமல் புழங்கிய வீடு. அன்பால் பின்னிப் பிணைந்த கணவனும் மனைவியுமாய் என் குடும்பத்தோடு மிக நெருங்கிய உள்ளங்கள்.
திருப்பூர் நகரத்து சந்தடியில் பரபரப்பாய் தன் தொழிலில் இயங்கிக் கொண்டிருந்தவரிடம் எதேச்சையாய் ஒரு நாள் பேசும் போது திடீரென ஒரு வரி வீர்யமாய் வந்து விழுந்தது “கதிர், மாட்டுப் பண்ணை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்”. ஒரு விநாடி என் காதில் விழுந்ததை சற்றும் நம்பாமல், திரும்பத் திரும்பக் கேட்டேன் “என்ன, உண்மையாவா?”
என்னால் நிச்சயமாக நம்ப முடியவில்லை. கிராமம் நாலுகால் பாய்ச்சலில் நகரத்தை நோக்கி ஓடி வரும் நேரத்தில், திருப்பூர் போன்ற தொழில் நகரத்திலிருந்து கிராமத்தை நோக்கிய பயணத்தையும், கிராமத்து தொழிலை நோக்கிய பார்வையையும் எண்ணும் போது மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.
கோவை சூலூருக்கு அருகே பண்ணை வேலைகள் ஆரம்பமானது, அடுத்தடுத்து அவ்வப்போது பேசும் நாட்களில் பண்ணை வேலைகள் குறித்து பேசுவதும், மாடுகள் வாங்குவது குறித்துப் பேசுவதும் என எங்கள் உரையாடல்கள் பண்ணை குறித்தே அதிகம் இருந்தது. கட்டிட வேலை, மாடுகள் கொள்முதல், கறவைக்கான கருவிகள், வாகனம் என முதலீட்டில் பாரத ஸ்டேட் வங்கியும் கை கொடுக்க இன்று சுரபி பால் பண்ணை மிக அழகாய் தன் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
காலங்கள் கரைந்ததில் நகரத்துச் சாயல் படிந்த நண்பரின் கனவு மாட்டுப் பண்ணை மிக அழகாய் செழித்து நிற்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடு வகைகள், திட்டமிட்ட வளர்ப்பு முறை, ஆரோக்கியமான தீவனம், மிகச் சிறந்த மருத்துவ கவனிப்பு என ஒரு நிபுணத்துவம் வாய்ந்த தொழில் முறையில் விவசாயம் சார்ந்த மாட்டுப் பண்ணை நவீனத்தோடு நிமிர்ந்து நிற்கிறது.
நகரத்துத் தொழில் நிமித்தம் சொகுசான வாழ்க்கை, சொகுசான பயணம் என்று சொகுசாய் வாழ்ந்து பார்த்த நண்பனை, இன்று கடிகாரத்தில் எழுப்பும் மணி வைக்காமலே அதிகாலை மூனரை மணிக்கு பண்ணைக்கு ஓடுவதை அறியும் போது ஆச்சரியமும், பிரமிப்பும் என்னைச் சூழ்கிறது. தினமும் காலையும் மாலையும் பண்ணை நிர்வாகம், பால் விற்பனை என சுழன்று ஓடிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கின்றது.
மனம் விட்டுப் பேசும் நேரங்களில், ”எப்படி இதுல ஆர்வம் வந்துச்சு” என மனதைக் கிளறும் போது ”தினமும் மக்கள் பயன் படுத்தும் பொருளாக இருக்கவேண்டும், அதில் கலப்படம் இல்லாமல் மிகத் தரமாக கொடுக்க வேண்டும்” என்ற கொள்கையே இதற்குக் காரணம் உத்வேகத்தோடு பேசுகிறார். நேர்மையான, நல்ல வியாபாரக் கொள்கை கொண்டவரின் ”சுரபி பாலு”க்கு சூலூர் பகுதியில் மிகப் பெரிய வரவேற்பு மக்கள் தரத்தின் பொருட்டு அளித்திருக்கிறார்கள் என்பது விற்பனை முறையை உற்று நோக்கும் போது தெளிவாகிறது.
பண்ணையில் கறக்கும் பாலை மற்ற நிறுவனங்களுக்கு விற்காமல், நேரிடையாக தாங்களே கடைகள் அமைத்து நேரிடையாக விற்பதால் வாடிக்கையாளர் வரை தரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்றும் கூறுகிறார். கூடவே தங்கள் பண்ணையின் பால் மட்டுமல்லாது, அருகிலிருக்கு விவசாயிகளிடமும் ஒப்பந்த அடிப்படையில் பால் கொள்முதல் செய்து தங்கள் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்கிறார்கள்.
![]() |
பண்ணை முகப்பு - பதிவர்கள் ஆரூரன், பழமைபேசி மற்றும் சந்துரு |
பண்ணையில் சந்துரு |
![]() |
தீவனக் கலப்பு |
![]() |
கறவைக் கருவிகள் |
![]() |
உணவு, மருத்துவ திட்டமிடல் விபரங்கள் |
நேர்த்தியான பண்ணை மற்றும் சிறந்த பால் விநியோகத்தைக் கண்டு பொதிகை தொலைக்காட்சி இவர்களுடைய பண்ணைக்கு நேரில் வந்து ஒரு கலந்துரையாடலை பதிந்து ஒளிபரப்பியது குறிப்பிடத் தகுந்தது. புதிதாய் பால் பண்ணைத் தொழிலை ஆரம்பிக்க விரும்புபவர்களுக்கு தன்னுடைய ஆலோசனைகளை மகிழ்ச்சியோடு தெரிவித்தும் வருகிறார். (தொடர்புக்கு: சந்துரு 98428-42049, e-mail : surabidairy@gmail.com)
பொருளீட்டுவது மட்டுமே நோக்கமாக இல்லாமல், பொருளீட்டுவதில் ஒரு நியாயத்தையும் கற்பிக்க நினைக்கும் ”சந்துரு” மற்றும் அவருடைய கனவுத் திட்டமான சுரபி பால் பண்ணை வளர்ந்தோங்கங்கட்டும்.
___________________________________________
41 comments:
சந்துருவின் திட்டம் அருமை , அதை செயல் படுத்திய விதம் மிகவும் கவர்ந்த்து , மேலும் இது போல தொழில் ஆரம்பிப்பவர்களுக்கு உதவும் மனப்பான்மை மிகவும் கவர்கிறது...நல்ல மனிதர்... வாழ்க
சந்த்ருவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! Sure, he would become role model to many in coming days!!
மனமார்ந்த வாழ்த்துக்கள்
இன்னொரு அருமையான அறிமுகம் கதிர். நேர்த்தியான மனிதர். நேர்த்தியான அமைப்பு. பார்க்கவே அழகு.
அருமை. உங்க நண்பருக்கு வாழ்த்துகள்.
"தீவனக் கலப்பு"
மாப்பு! மாட்டுக்கும் கலப்பு தானா?
தலைப்பு சரிதான்.
"”தினமும் மக்கள் பயன் படுத்தும் பொருளாக இருக்கவேண்டும், அதில் கலப்படம் இல்லாமல் மிகத் தரமாக கொடுக்க வேண்டும்”
- Excellent. Thank You Sir.
நான் 23 வருஷத்துக்கு முன்பு எழுதிய என் முதல் முழு சாப்ட்வேர் ப்ரோக்ராம் ப்ராஜெக்ட், திருச்சி பால் பண்ணையின் பால் கொள்ளளவு, மற்றும் பாலில் உள்ள கொழுப்புச் சத்து (fat and non-fat content) பற்றிய ஆய்வு.
இதை தொடர்ந்து குறிப்பெடுத்து வந்தால், உங்கள் நண்பருக்கு அவரது வியாபாரத்தில் நல்ல பயன் தரும்.
பகிர்தலுக்கு நன்றி. சில வாரங்கள் முன்பு ஆசியாநெட் /கைரளி டி வி யில் , கேரளா கிராமத்தில் ஒரு முதுநிலை பட்டதாரி முழுநேர மாட்டுப் பண்ணை வைத்து தொழில் வெற்றிகரமாக , மகிழ்ச்சியாக நடத்துவதை காட்டினார்கள். பார்க்க மகிழ்வாக இருந்தது. அதேபோல iவரும் சிறக்க வாழ்த்துக்கள்.
ஆசைகள்.
சந்த்ருவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
சந்துரு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்ந்த தங்களுக்கு நன்றி.
அருமையான அறிமுகம்
நல்ல அறிமுகம் :)
வெரி குட்...
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரது தைரியமும் திட்டமிடலும் சரியாக இருக்கிறது. நிச்சயம் வெல்வார்.
சந்துருவுக்கு வாழ்த்துகள்.
பொருளீட்டுவது மட்டுமே நோக்கமாக இல்லாமல், பொருளீட்டுவதில் ஒரு நியாயத்தையும் கற்பிக்க நினைக்கும் ”சந்துரு” மற்றும் அவருடைய கனவுத் திட்டமான சுரபி பால் பண்ணை வளர்ந்தோங்கங்கட்டும்.
......நல்ல விஷயம். மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
மாடுகளை நல்ல முறையில் வளர்ப்பவராகவும், கொள்முதலுக்கு நல்ல விலை கொடுப்பவராவும் இருப்பின், எனது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்..
சந்த்ருவைப் பற்றியும் அவருடைய துணைவியாரைப் பற்றியுமே ஒரு நாள் முழுவதும் பேசிக் கொண்டிருக்கலாம். பொருத்தமான தம்பதிகள். அவர்களின் விருந்தோம்பல் இன்னும் நினைவில் நிற்கிறது.
வாழ்த்துக்கள் சந்த்ரு.......
அன்புடன்
ஆரூரன் விசுவநாதன்
நல்லதொரு பதிவு கதிர்....... சந்துருவுக்கு வாழ்த்துகள்.
பதிவு சூப்பர் சார்
நன்றி அறிமுகத்துக்கு. அருமை சந்ரு. வாழ்த்துக்கள். தொடர்க தடைகளைத்தாண்டி வளர்க.
மிகவும் அருமையான தகவல்.. மாநகரத்திலேயே பலகாலம் வாழ்ந்து சளித்த விட்ட நான். கிராமம் நோக்கி புலம் பெயர்ந்து விடலாம் என்று எண்ணியது உண்டு... ஆனால் இந்த நண்பர் செய்தே காட்டி விட்டார்.
ஆனால் ஒன்று மட்டும் கூற விரும்புகிறேன்.. வசதிகள் இருக்கும் இடத்தை நோக்கி ஓடுவதை விட, நமக்கு பிடித்த இடத்தில் இருந்தே அந்த இடத்தில் அனைத்து வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.. அது மட்மில்லை நகரத்தில் இருந்தால் மட்டுமே நிறைய சம்பாதிக்கலாம் என்று இல்லை.. கிராமத்தில் இருந்துக் கொண்டே நிறைய சம்பாதிக்கலாம். இதனை அமெரிக்காவில் நான் சுற்றுப் பயணம் செய்த போது அறிந்துக் கொண்டேன். பல கிராமங்களில் நகரை விட அதிகம் சம்பாதித்து நல்ல பெரிய வீடுகளில் வாழ்கிறார்கள்.. அவர்கள் தமக்கு தேவையான வசதிகளையும் கிராமங்களில் கொண்டு வந்துள்ளனர். உண்மையில் லாயக்கற்றவன் மட்டுமே நகரத்தில் கிடைக்கும் வேலையை செய்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறான். அவற்றில் நானும் அடங்குவேன்...
இதில் எதைக்குறிப்பிட்டு பாராட்டுவதுன்னே தெரியலை கதிர்..வரவேற்கவேண்டிய ஒன்று..அவருடைய எண்ணம் பாராட்டமட்டுமல்ல பின்பற்றவேண்டியதும் கூட... நேர்த்தியாய் நவீனமாய் அமைந்திருக்கிறது பால் பண்ணை..வாழ்த்துக்கள் சந்துரு..
சந்த்ருவுக்கு என் வாழ்த்துக்கள்...
கதிர் சார் இன்னும் 5 ஆண்டுகளில் நிறைய பேர் விவசாயம் செய்கிறேன் என்று கிராமத்தை நோக்கி வரத்தான் போகிறார்கள்...
உங்களின் இந்த பதிவின் மூலம் நிறைய பேர் நிச்சயம் யோசிக்க ஆரம்பித்து இருப்பார்கள் அதில் நானும் ஒருவன்...
சந்துரு அவர்களுக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்....
சிறந்த முன்மாதிரி மனிதரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி அண்ணா...
மிக நல்ல பகிர்வு. உருப்படியான சமூகம் சார்ந்த பகிர்வுகளுக்கு உங்கள் வலைப்பூவுக்குதான் வந்தாகவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் கதிர். தொடர்க உங்கள் பயணம்.
சந்த்ருவை நினைத்தால் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வாழ்த்துகள் அவருக்கு.
கதிர்...நீண்ட நாட்களின்பின் உங்கள் பதிவோடு.சுகம்தானே !
இப்படியும் மனிதர்கள் இருப்பதால்தான் வீடு,நாடு,உலகம் இன்னும் ஓரளவு உயிரோடு இருக்கிறது கதிர் !
உங்கள் நண்பருக்கு வாழ்த்துகள் !
சந்த்ருவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
தைரியமான புதுப் பயணத்திற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். ஆலோசனைகள் தேவைப்படலாம்.
பகிர்விற்கு நன்றி.
நண்பருக்கும், உங்களுக்கும் பாராட்டுக்கள்..
கிராமங்களும் பால் பாக்கெட்டுகள் பக்கம் போய்விட்ட நிலையில் பால் பற்றாக்குறை என்பது சென்னையில் மட்டும் தினசரி ஒன்றரை லட்சம் லிட்டர்..
படிக்கிறவங்களுக்கும் மிக மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கின்றது...
இயற்கைத்தன்மை மாறாமல் என்றும் அவர் பயணிக்கவேண்டும்.. வாழ்த்துவோம்..
நேர் மனிதர்களை சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
Congratulations to Chandru. May be he should expand his service to other cities as well including Chennai.
சந்துரு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்ந்த கதிருக்கும் நன்றி.
வரவேற்கதக்க பதிவுங்க..
மனமிருந்தால் மார்கம் உண்டு...
சந்ருவுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் வணக்கங்கள்.
மனமார்ந்த வாழ்த்துகள்
சந்துருவுக்கு வாழ்த்துக்கள்.. பகிர்வுக்கு நன்றீ கதிர்..
வியாபாரத்திலும் ஒரு நேர்மை வேண்டும் என்று நினைக்கும் சந்துருவுக்கு மேலும் வளர என் வாழ்த்துக்கள்!
எனக்கும் கிராமத்துப் பக்கம் சென்று செட்டிலாகவேண்டும் என்ற கனவு உண்டு. நேர்மையான விவசாயம்தான் இனி சக்கை போடு போடும்!!
அருமையான பகிர்வு.
// ”தினமும் மக்கள் பயன் படுத்தும் பொருளாக இருக்கவேண்டும், அதில் கலப்படம் இல்லாமல் மிகத் தரமாக கொடுக்க வேண்டும்”//
தரத்தினாலேயே மக்கள் மனதில் நிரந்தர இடம் பெறமுடியும் என்பதை அறிந்தவர் சந்துரு. உயர்வார் வாழ்வில். வாழ்த்துக்கள் அவருக்கும் உங்களுக்கும்.
வாழ்த்துக்கள்
மனமார்ந்த வாழ்த்துக்கள் சந்துரு. உணமையும், விடா முயர்ச்சியும், இறைவனின் அருளும் இருந்தால் வெற்றி நிச்சயம்
Post a Comment