ஒரு ஏழு மணி எழவு


செல்லாத்தா செழிப்பா வாழ்ந்தது பட்டிக்காடு
புருசனுக்கு பிறகு பட்டணத்துல பையனோட
நாலாவது மாடியில பளபளன்னு தங்க(க்) கூடு
எல்லாம் வீட்டுக்கே வந்துடும் மனுசமக்கா தவிர

வேலைக்கு ஆளு, வெளுக்கறதுக்கு மெசினு
போகவரக் கார், பெரிய கலர் டிவி, ஏசி மெசின்
படுக்க பஞ்சு மெத்தை, பக்கத்திலயே கக்கூஸ்
காசு இருந்தா என்ன குறை பட்டணத்துல

நெஞ்சுல சுருக்குங்குதேன்னு கூப்பிட
பரிட்சை புத்தகத்தோட ஓடிவந்த பேத்தியும்
பதறியடிச்சு ஓடிவந்த மருமகளும்
தந்த தண்ணியில ரெண்டு வாய் எறங்கல

மேல் வீட்டு கம்பவுண்டர கூப்பிட்டுப் பார்க்க
பேச்சும் இல்ல பேசறதுக்கு மூச்சும் இல்ல
எந்தச் சிரமும் வைக்காம ஏழுமணிக்கு
செத்துப் போச்சு செல்லாத்த கெழவி

கடிகாரத்தப் பார்த்து நேரத்த குறிச்சிட்டு
பாயை விரிச்சு பாட்டி உடம்ப படுக்கைல போட்டு
கலைஞ்சு கெடக்குற வீட்ட கொஞ்சம் அடுக்குறதா
கண்ணுமூடுன பாட்டிக்கு அழுவறதான்னு நிக்க

செல்லாத்தா மகனுக்கு தகவல் வந்தப்போ
ஏழுமணி வியாபாரக் கூட்டம் பிதுங்குச்சு
கல்லா மாத்திவிடற கணக்குப்பிள்ளை லீவு
எப்படியும் கடைமூட இன்னொரு மணி ஆகும்

வெளியூருக்கு லைனுக்குப் போன பேரனுக்கு
எந்த போன்லயிருந்து கூப்பிட்டாலும் ஏனோ
தொடர்பு எல்லைக்கு வெளியவே இருக்கானாம்
எப்போ வருவானோ கொள்ளிக்குச் சொந்தக்காரன்

பங்காளி வீட்டுக்கும் ஊருக்கும் சொன்ன கையோட,
பக்கத்து வீடு, எதுத்த வீடுன்னு தட்டிச் சொல்லியும்
ஏனோ இன்னும் ஒருத்தரும் வந்து சேர்ந்தபாடில்ல
ஒருவேள ராத்திரி சோறு தின்னுட்டு வருவாங்களோ

அசையாம கிடந்த செல்லாத்தா மூஞ்சியில
அழைக்காமலே அலையலையா மொய்க்குது ’ஈ’
எல்லாம் சுளுவா கிடைக்கிற பட்டணத்துல
ஏனோ எழவுக்குத்தான் ஒரு சனத்தையும் காணல

___________________

36 comments:

கார்த்திக் said...

நிதர்சனம்.

இராமசாமி கண்ணண் said...

எல்லா இடத்துலயும் இப்படி நடக்முமான்னு தெரியல.. சென்னை மாதிரி பெருநகரங்கள மத்திய தர மக்கள் புலங்குகிற அடுக்கு மாடி குடியிருப்புகளில் இந்த மாதிரி நடக்காதுன்றது என்னோட அனுமானம்..

அகல்விளக்கு said...

பொட்டில் அறைகிறது கவிதை...

Sethu said...

கதிர்,
நிதர்சனமான் உண்மைகள். நேரில் பார்த்திருக்கிறேன். பிணம் போன மறுநாளிருந்து கூட ஆறுதலுக்கு ஒரு வார்த்தை சொல்ல கூட இல்லாத சனம்.

வானம்பாடிகள் said...

பட்டணத்து பொழப்புங் சார் இது. ஃப்ளாட்ல விடமாட்டாங்கன்னு ஆசுபத்திரில போனத மார்ச்சுவரில வச்சோ நேரவோ சுடுகாட்டு வீதில கெடத்தி காரியம் மட்டும் பண்ணிடுவாங்க.

ராமலக்ஷ்மி said...

கனம்.

அரசூரான் said...

உண்மை, இனி இழவு எல்லாம் சனி, ஞாயிறு என்று விடுமுறை நாளில்தான் வரவேண்டும்.

விமலன் said...

எல்லாம் சுளுவா கிடைக்கிறபட்டணத்துல மட்டுமா,கிராமத்திலும் அப்படியாகிவருகிறது.

அன்பரசன் said...

கடைசிவரி நச்.

Anonymous said...

அசையாம கிடந்த செல்லாத்தா மூஞ்சியில
அழைக்காமலே அலையலையா மொய்க்குது ’ஈ’
எல்லாம் சுளுவா கிடைக்கிற பட்டணத்துல
ஏனோ எழவுக்குத்தான் ஒரு சனத்தையும் காணல

எதுவும் சொல்ல தோனலை..மனசுக்குள் காட்சி மட்டும் கண்ணுக்குள்

லவ்டேல் மேடி said...

நேருல ஒரு சனமும் வராட்டியும்.....!! பின்னூட்டத்துல பத்தாளுக்கு அப்புறம் பதினோராவது ஆளா வந்து செல்லாத்தாவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள சொல்லிக்கிறேன்..!! மண்வாசனை அவளுக்கு குடுத்துவெக்கல.....

சே.குமார் said...

நிதர்சனம் இங்கே கவிதையாய்...

நிலாமதி said...

அழைக்காமலே அலையலையா மொய்க்குது ’ஈ’.......

...நிதர்சனம்

பரிசல்காரன் said...

:-(

ரொம்ப கனமான கவிதை கதிர்...

கும்க்கி said...

ஆஹா...

அடுத்த நாள் ஆபீசுக்கும்.
அவசரமா இஸ்கூலுக்கும்..
அடுத்தவீட்டு அக்கா கூட கடத்தெருவுக்கும்...
இன்னம் என்னென்னவோக்கும்..

நேரம் கெட்டு போச்சாக்கும்...

க்ளாஸிக் கவிதை.

Sethu said...

ஒரு காலத்தில எங்க ஊரிலே பிணம் தூக்கிட்டுப் போற வரை தெரு முழுவதும் யார் வீட்டிலும் சமைக்கமாட்டங்க. எப்படா தூக்கிட்டு போவாங்கன்னு இருப்பாங்க. விவரம் புரிஞ்ச வயசில வெருப்புண்டான விஷயம் இது ஒன்னு. சில நல்ல உள்ளங்கள் அந்த சூழ்நிலையில் கூட காபி கொண்டு வந்து தருவாங்க.

naanjil said...

Thirumllar vaacchu sariyathaan irrukku

தமிழ்நதி said...

வெளிநாடுகளிலும் இப்படித்தான். நல்லா மேக் அப் எல்லாம் போட்டு Funeral home என்கிற இடத்தில் பார்வைக்கு வைப்பார்கள். சில மணி நேர விடுப்பு எடுத்துக்கொண்டு போய், பெரிதாக அடித்துப் புரண்டு அழாமல் இறந்தவர் பக்கத்தில் துக்கத்தோடு இருக்கும் நெருங்கிய உறவிடம் ஒரு வார்த்தை பேசவேண்டும். பிறகு, கொஞ்ச நேரம் மௌனமாக நாற்காலியில் அமர்ந்திருக்க வேண்டும். இறந்தவர் மிக நெருங்கியவர் என்றால் ஒரு ஆளியைத் தட்டி எரித்துப் பிடி சாம்பல் கொடுக்கிற இடம் வரை போகவேண்டும்.

மூக்கைச் சீறி சேலையிலோ அடுத்தவர் முதுகிலோ துடைத்துவிட்டு கட்டியணைத்து ஒப்பாரி பாடும் பெண்களையும் நாம் இழந்தோம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

புள்ள குட்டிகளாவது பக்கத்துல இருக்காங்கன்னு நினைச்சு ஆறுதல் கொள்ள வேண்டியது தான்..

ஹேமா said...

இன்றைய வாழ்வியலை மனதில் இன்னும் பாரமேற்றுமளவுக்குச் சொல்லியிருக்கிறீர்கள் கதிர் !

சத்ரியன் said...

கதிர்,

சமீபத்திய நிகழ்வு எதையோ கவிதை படுத்தியிருக்கீங்க போல தெரியுது. என்ன செய்ய? வாழ்வு அப்படித்தான் ஆகிப்போச்சு.

சத்ரியன் said...

//மூக்கைச் சீறி சேலையிலோ அடுத்தவர் முதுகிலோ துடைத்துவிட்டு கட்டியணைத்து ஒப்பாரி பாடும் பெண்களையும் நாம் இழந்தோம்...//

நெசந்தான் தமிழக்கா.

பழமைபேசி said...

என்ன எழவா இருக்கு ஊர்ல? முதல்ல அல்லாம், ஆருக்காவது ஒன்னுன்னா ஊரே கூடுமே??

ஆ.ஞானசேகரன் said...

ஆகா.....

இளைய கவி said...

நிதர்சனமான் உண்மைகள்.

ஈரோடு கதிர் said...

@@ கார்த்திக்

@@ இராமசாமி கண்ணண்

@@ அகல்விளக்கு

@@ Sethu

@@ வானம்பாடிகள்

@@ ராமலக்ஷ்மி

@@ அரசூரான்

@@ விமலன்

@@ அன்பரசன்

@@ தமிழரசி

@@ லவ்டேல் மேடி

@@ சே.குமார்

@@ நிலாமதி

@@ பரிசல்காரன்

@@ கும்க்கி

@@ naanjil

@@ தமிழ்நதி

@@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..

@@ ஹேமா

@@ சத்ரியன்

@@ பழமைபேசி

@@ ஆ.ஞானசேகரன்

@@ இளைய கவி

நட்புகளே, கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி

விக்னேஷ்வரி said...

ரொம்ப அழகா நச்ன்னு சொல்லியிருக்கீங்க. நல்லா இருக்கு கதிர்.

கலகலப்ரியா said...

ம்ம்... நிதர்சனம்..

கலகலப்ரியா said...

என் வீட்டு எழவுல இங்க வர முடியல... மன்னிப்ஸ்..

பத்மா said...

ஆமாம் கதிர் சார்
சரியாய் சொல்லிருக்கீங்க

பிரியமுடன் பிரபு said...

ஒவ்வொரு வரிகளும் அழகு

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஒரு கிராமத்து ஜீவனது கடைசி நிமிடங்களை அவளது மொழியிலேயே நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். மனம் கனக்கச் செய்யும் கவிதை.

அன்னு said...

//அசையாம கிடந்த செல்லாத்தா மூஞ்சியில
அழைக்காமலே அலையலையா மொய்க்குது ’ஈ’
எல்லாம் சுளுவா கிடைக்கிற பட்டணத்துல
ஏனோ எழவுக்குத்தான் ஒரு சனத்தையும் காணல//

இது கிராமங்களில் மட்டுமல்ல. மேலை நாடுகளிலும் நடக்கும் துரோகம். பணத்திற்காகவும், சவுகரியங்களுக்காகவும் பெற்றோரை இப்படி அனாதையாய் விடுவது இப்பொழுது சர்வ சாதாரணமாகிவிட்டது. நெஞ்சை சுடும் வரிகள்ண்ணா..!!

Mahi_Granny said...

பட்டணத்தில் தங்க (க்) கூடு தான்

Amudha Murugesan said...

Painful!

lakshmi prabha said...

ஒரு ஷணம் செத்து போய் திருப்பி வரேன் ...!