எந்தக் காதலிலும் காமத்திலும் இல்லாத குறுகுறுப்பை, ஆர்வத்தை ஒருவனின் மனைவி மாதவிக்கும், இன்னொருத்தியின் கணவன் மௌலிக்கும் இடையே நிகழும் இந்தக் காதலும், காமமும் கூடை நிறைய கொண்டு வந்து சேர்க்கிறது. விபச்சாரி(ரன்)கள் மேலும், அவர்களின் வாடிக்கையாளர்கள் மேலும் படியும் இகழ்ச்சியைவிட, திருமண பந்தத்திற்குள் ஆட்பட்டோர் பிறர் மேல் கொள்ளும் காதல் மேல், கூடுதல் இகழ்ச்சி மனோபாவத்தை மனதிற்குள் விதைப்பது என்னவோ ஆச்சரியம்தான்.
மாதவிக்கும், மௌலிக்கும் இடையே ஏற்படும் காதல் இன்றைக்கு இணையத்து மின் அரட்டைகளில் வழமையாக நிகழும் காதல்களின் ஒரு பிரதிதான். இந்தக் காதல்களின் அவசியம் என்னவென்று பார்த்தால், அவசியம் என்பதையும் தாண்டி மிக எளிதாக, மலிவாக கம்பிகள், காற்றலைகள் வழியே கிடைப்பது என்ற வசதிதான். ஒத்த சிந்தனை என்ற கண்ணியை தொடுக்கிறது. கிடைக்கும் நேரம், வாய்ப்பு, இனிப்பு தடவி தட்டச்சும் வார்த்தை, அடுத்தவன் மனைவி / கணவன் என்ற குறுகுறுப்பு, மிக எளிதாக தொடர்ந்து கண்ணிகளைக் கோர்த்து நீளச் செய்கிறது.
மாதவிக்கும், மௌலிக்கும் இடையே மிக எளிதாய்க் கிடைத்த வாய்ப்புகளே காதலிக்க வேண்டும் என்ற மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கி, துளி துளியாய் அதை நிரப்பிக் கொள்வது போல் ஒரு பிம்பத்தை கொடுக்கிறது. மாதவியின் கூற்றில் அந்த வெற்றிடம் மௌலியால் நிரம்பியதாகவே அறிவிக்கவும் செய்கிறது. காதலை மிதமிஞ்சிக் கொண்டாடுகிறாள், எல்லையில்லா மகிழ்ச்சியைக் கொடுத்த அதே காதல், எல்லையில்லா வலியையும் கொடுப்பதை மாதவின் தொடர் வார்த்தைகளில் அனுபவிக்க முடிகிறது.
மாதவி எழுதும் கடிதம் என்பதால், மாதவிக்குத் தெரிந்த மௌலி மட்டுமே வரிகளில் வார்த்தைகளாக நிரம்புகின்றன. இந்தக் கதையின் (கதைதானே!) இரண்டு பாத்திரங்களும் கவிதைப் பித்து பிடித்த இரண்டு வலைப்பூ எழுத்தாளர்கள். எல்லோருக்குள்ளும் ஏற்படுவது போன்று ஒரு மரியாதையான அறிமுகத்தின் பின்னணியில் தொக்கி நிற்பது பாவனைப் பேச்சுகள். சில காரணங்களால் தற்காலிகமாக துணையைப் பிரிந்திருந்த இருவருக்குமிடையே இணையச் சிலந்தி ஈர வலையை பின்னுகிறது.
வேறு வேறு தேசங்களில் இருந்தாலும் சிலந்தி வலை இருவரையும் அருகருகே பிடித்துப் பிணைக்கிறது. வலையில் பிணைந்தவர்கள் வாழ்க்கையிலும் பிணைகிறார்கள். வெற்றிடங்கள் நிரம்பியதாக ஒருவருக்கொருவர் நம்புகின்றனர். திளைக்கத் திளைக்க காதல் பிணைப்பதில் மனைவிகள் / கணவர்கள் கண்டிப்பானவர்களாகவும், காதலிகள் / காதலன்கள் கனிவானவர்களாகவும் இருப்பது போல் இருவருக்குள்ளும் தோன்றுவதில் வியப்பில்லாமல் இல்லை. அவளுக்குள் அத்தனை சங்கீதம் நிரம்பியிருந்ததை அவன் தான் கண்டு பிடித்து மீட்டுகிறான். பல ஊர்களில் சந்திக்கிறார்கள், கொஞ்சம் சண்டை பிடிக்கிறார்கள், கூடலில் எல்லாச் சண்டையும் குலைகிறது. கூடல் காதலை கெட்டிப்படுத்துவதாக அவர்களை நம்ப வைக்கிறது. வழக்கம் போல் கூடல்(கள்) காதலின் வர்ணத்தை நீர்க்கச் செய்கிறது.
ஆனாலும் காலம் தாழ்த்திப் புரிகிறது அன்பென்ற பெயரில் வதை செய்ததும் குரூரமாகத் துன்புறுத்தியதும். காலம்தானே எல்லாவற்றையும் உணர்த்துகிறது. அதேபோல் அதிர்ச்சியும் ஒளியும் இணைந்திருக்கும் மின்சாரம் போல் அவர்களுக்குள் அன்பும், வதையும் சேர்ந்திருப்பதை காலம் உணர்த்துகிறது.
ஆளுதல் என்னவென்று தெரியாமல் பெண்ணை ஆள நினைக்கும் ஆண் இனத்தின் பிரதியின் பலவீனம் வெளிப்படும் நேரமே, வெற்றுச் சந்தேக விதைகளை வளர்த்தெடுப்பது. பிறன் மனையை விழையும் பேராண்மைக்கு(!) அவள் மேல் வைத்திருக்கும் அன்புக்கு நிகராக, அவளுடைய ஒழுக்கத்தின் மேல் அவ நம்பிக்கையை அவனின் மத்திய தர மனோபாவம் புகுத்தவே செய்கிறது. அதற்கு மாதவி வைத்திருக்கும் ஆண் நட்புகள் உரம் போடச்செய்கிறது. காலம் மாதவிக்கு மௌலியை காதலன் போலவும், விரோதி போலவும் பக்கங்களைப் புரட்டி வாசித்துக் காட்டுகிறது.
எல்லா நினைவுகளையும் இறக்கி வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வரையப்பட்ட கடிதத்தின் முதல் பக்கத்திலேயே முடிவு இப்படி இருக்கும் என்று யூகிக்க முடிந்தாலும், யூகித்த முடிவே கடைசிப் பக்கத்தில் இருந்தாலும், ஏனோ மாதவியை உள்ளங்கையில் ஏந்திக் கொண்டு மிகுந்த வலியோடு, வதையோடுதான் கடைசிப் பக்கத்தைக் கடக்க முடிகிறது. வலியை முழுக்க உணரவைத்ததற்கு எழுத்தில் இருக்கும் ஈர்ப்பும், அந்நியத்தன்மையற்ற போக்குமே காரணம் என்று சொல்லலாம்.
பக்கங்களை நகரவிடாமல் வார்த்தைச் சிலந்தி சிறை பிடித்து தன் வலையின் கோடுகளில் கட்டிப்போடுவது போல் வாசிப்பை கனமாக்கிய புத்தகம். அடிக்கோடிட்ட பல வரிகளை மடித்து எழுதினால் அழகழகாய் கவிதைகள் பூக்கும் என்பது உண்மை. அதே அடிக்கோடிட்ட வரிகள்தான், அந்த இடத்தை கடக்க முடியாமல் சிந்தனைக் கிளைகள் பரப்புவதையும் மறுக்க முடியாது.
இது யாரும் அறியாத கதையோ, வித்தியாசமான கதையாகவோ சொல்ல முடியவில்லை. பெண்ணால், பெண் பார்வையில் எழுதப்பட்ட துணிச்சலான படைப்பு. மிக முக்கியமான ஒன்று வித்தியாசமான, சுவை மிகுந்த எழுத்து. எடுத்தால் கீழே வைக்க விடாமல் படிக்க வைப்பதில் தமிழ் நதி வென்றிருக்கிறார்.
புத்தகம் : கானல் வரி | ஆசிரியர் : தமிழ்நதி | வெளியீடு : உயிர்மை | பக்கம் : 79 | விலை ரூ.50
குறிப்பு: சாய்ந்த எழுத்துக்கள் புத்தகத்தில் இருந்து நேரிடையாக திருடப்பட்டவை
__________________________
