பாவம் சுமக்கும் சந்ததி

நாளுக்கு நாள் கரைபுரளும் பொருளாதாரத்தின் நீட்சியாக, தனிமனித விழாக்கள் வண்ணமயமாக, வெறித்தனமான ஆடம்பரத்தோடு கொண்டாடப்படுவதை கண்டும் காணாமலும் ரசித்தும் ரசிக்காமலும் பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றோம். அதேசமயம் இத்தனை ஆடம்பரம் தேவைதானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

நடுத்தரக் குடும்பங்களில் கூட சர்வசாதரணமாக மூன்றாயிரம் நபர்களை ஒரு திருமணத்திற்கு அழைப்பதை கௌரவமாக நினைக்கின்றனர். மேல் தட்டு மக்களின் திருமணக் கூட்டத்தை சொல்லவே வேண்டியதில்லை.

அவர்களின் தனிப்பட்ட சொந்த ஆடம்பரங்களைக் கண்டு கொஞ்சம் முகம் சுழித்து சகித்துக் கடந்தாலும், சகிக்க முடியாமல் போகும் சந்தர்ப்பம், விருந்துகளில் ஒவ்வொரு இலையிலும் குடிப்பதற்காக தனித்தனியாக தண்ணீர் பாட்டில்களை வைக்கும் விபரீதங்களைக் காணும் போதுதான்.

எவ்வளவு பேரை அழைத்தோம் என்ற எண்ணிக்கையை கௌரவமாக நினைப்போர், தாங்கள் உணவுக்கூடத்தில் வழங்கும் பிளாஸ்டிக் டம்ளர் அல்லது பிளாஸ்டிக் பாட்டில் மூலம் பல ஆயிரக்கணக்கான சதுர அடி நிலத்தை மலடாக்குவது குறித்து சற்றும் குற்ற உணர்வு கொள்வதேயில்லை. இது எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் அல்லது என்ன நடந்தால் எனக்கென்ன என கண்டும் காணாமல் போகும் மனப்போக்கின் விபரீதம்.

கடந்த பத்து ஆண்டுகளுக்குள் தான் இந்த பிளாஸ்டிக் பூதம் வெறித்தனமாக நிலத்தின் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துள்ளது. அதுவரை விருந்துகள், விழாக்களில் தண்ணீர் குடிக்க எவர்சில்வர் டம்ளர்கள் மட்டுமே முழுக்க, முழுக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. ஒரு பந்தி முடிந்தவுடன் எடுத்து, கழுவி மீண்டும் அடுத்த பந்திக்கு வைக்கும் வழக்கம் சிதைந்தது, எளிது, சுகாதாரம்(!) என்ற அற்ப காரணங்களையொட்டி யூஸ் அன் த்ரோ டம்ளருக்கு புலம் பெயர்ந்தது. அதன் அடுத்த கட்டமாக இலைக்கு இலை குட்டி தண்ணீர் பாட்டிலை வைப்பது வாடிக்கையாகிப் போனது. இது நாகரிகத்தின்(!) அடையாளமாகவும், விழா நடத்துவோரின் அந்தஸ்த்தை(!) வெளிக்காட்டும் ஒரு வித மனவியாதியாகவே மாறிப்போனது.

இன்னும் சில விழாக்களில் விருந்து கூடத்திற்கு வெளியே தண்ணீர் வைத்திருக்கும் இடத்தில் மையமாக நின்று கொண்டு சுற்றிலும் இருக்கும் மேசைகள் மேல் டம்ளர்களை அடுக்கி, ஒரு ஆள் தொடர்ந்து தண்ணீர் நிரப்பிக் கொண்டிருப்பார். தண்ணீர் குடிக்கச் செல்பவர் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டு, காலி டம்ளரை அருகிலிருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, அடுத்த டம்ளரை எடுத்து குடிப்பார், இப்படியாக ஒரே நேரத்தில், ஒரே ஆள் மூன்று நான்கு டம்ளர்களை நசுக்கி எறியும் போது, பூமியின் ஜீவாதார நரம்புகள் நசுங்கிப்போவது குறித்து விருந்துக்கு செலவு செய்பவருக்கும், ஊற்றுபவருக்கும், குடிப்பவருக்கும் என யாருக்குமே துளியும் கவலையேயில்லை.

விருந்துகளில் இலைகளில் பரிமாறப்படும் 300 மி.லி தண்ணீர் பாட்டிலை உடைத்து விரித்தால், ஏறத்தாழ ஒரு சதுர அடி பரப்பு அளவுக்கு விரியும். விழாவில் பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களில் சராசரியாக நாற்பது சதவிகிதம் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக பயன்படுத்தப் படுவதில்லை. மீதி யாவும் குப்பைகளோடு குப்பைகளாக கள்ள மௌனத்தோடு மண்ணை தொடர்ந்து தொடர்ந்து மலடாக்கும் பணியினை செவ்வனே செய்து வருகின்றது.

திருமணங்களின் நோக்கம் பலவாக இருந்தாலும், சந்ததிகளும் ஒரு முக்கியக் காரணம். ஒரு திருமணத்தால் விதைக்கும் பிளாஸ்டிக் விருட்சத்தை வேரறுக்கும் பாரத்தையும் வருங்கால சந்ததிமேல் சுமத்துகிறோம் என்ற எண்ணம் மெலிதாய் அடிமனதில் குறுகுறுக்க ஆரம்பித்தாலே, மகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கும் ஒரு விழா, மண்ணின் கருவறைக்கு சாவு மணியடிப்பதை நிறுத்திட முடியும்.

____________________________________________________


29 comments:

vasu balaji said...

இங்கே நகரத்தில் கூடவே டிஃபன் சாப்பிடும் போது வாழையிலை மந்தார இலையேல்லாம் போய் ப்ளாஸ்டிக் தாள் என்றாகி, இப்போது விசேஷங்களிலும் ப்ளாஸ்டிக் பேப்பர் வாழையிலையாகி விட்டது:(.

கலகலப்ரியா said...

வருமா... விழிப்பு...

vasu balaji said...

பிளாஸ்டிக் விருட்சத்தை வேரறுக்கும் பாவத்தையும் வருங்கால சந்ததிமேல் சுமத்துகிறோம் என்ற எண்ணம் மெலிதாய் அடிமனதில் குறுகுறுக்க ஆரம்பித்தாலே, மகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கும் ஒரு விழா, மண்ணின் கருவறைக்கு சாவு மணியடிப்பதை நிறுத்திட முடியும்.//

கட்டாயம் அவசரகதியில் செய்ய வேண்டியது இது.

ராமலக்ஷ்மி said...

சிந்திக்க வைக்கும் பதிவு.

//குப்பைகளோடு குப்பைகளாக கள்ள மௌனத்தோடு மண்ணை தொடர்ந்து தொடர்ந்து மலடாக்கும் பணியினை செவ்வனே செய்து வருகின்றது.//

:(! உணரவேண்டும் மக்கள்.

பின்னோக்கி said...

அருமையான கருத்து.

என்னளவில், பிளாஸ்டிக் பேக் தருபவர்களிடம் வேண்டாம் என்று சொல்லி, கையில் எடுத்து வருவதை செய்கிறேன்.

திருமணம் மற்றும் சந்ததி - ஒவ்வொருவரும் மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம்.

Unknown said...

ஆமாம் கதிர். எவ்வளவு அருமையா சொல்லியிருக்கீங்க. நன்றி.

பழமைபேசி said...

//கள்ள மௌனத்தோ//

எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கு...

அம்பிகா said...

நல்ல பகிர்வு.

a said...

அருமையா சொல்லி இருக்கீங்க கதிர்....

Kumky said...

மேம்போக்கான பதிவு தோழர்.,

பயன்படுத்துவோரின் கண்னோட்டத்துடனே யோசித்துள்ளீர்கள்.

தண்ணீர் குறித்தான பயம் பண்ணாட்டு (சொற்பிரயோகம் சரியாக இருந்தாலுமே தவறாகத்தான் புரிந்துகொள்ளப்படும்) கம்பேணிகளின் ஆகச்சிறந்த விளம்பரங்களினால் பயமுறுத்தப்பட்டே இன்னமும் கொட்டாம்பாட்டிகளுக்கு போனாலும் மினரல் வாட்டர் தேடுகிற மனோநிலை செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

நாகரீகத்தினால் அல்லாமல் செயற்கையான உருவாக்கப்பட்ட பயங்களின் காரணமாகவே இத்தைகைய பயன்பாடுகள் என்பதை கவனத்தில் கொள்வீர்களேயானால் பயன் யாருக்கு பழி யாருக்கு என்பதான புரிதல் உருவாகும்...

Unknown said...

அண்ணே பிளாஸ்டிக் கழிவுகளை டீசலாக மாற்றும் புதிய கண்டுபிடிப்பு வந்துள்ளது .. இன்னும் சில நாட்களில் செய்திகளில் வெளியாகும்...

நிலாமதி said...

நிறைய மக்களிடம் போய் சேரவேணும் உங்கள் பதிவு.உங்கள் விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி .

தாராபுரத்தான் said...

மனசு ..இந்த பிளாஸ்டிக்காலே வலிக்குதுங்க கதிரு..இதுக்கு ஒரு விடிவே வராதா..

காமராஜ் said...

கதிர் இந்தப்பதிவு பயத்தை கொடுக்கிறது.ப்ளாஸ்டிக்கைத்தொடும்போதெல்லாம் குற்ற உணர்ச்சி மேலிடுகிறது. ஆனாலும் புற உலகம் இது பற்றிக்கவலைப்படுவதாக இல்லை.மூவாயிரம் பேர் ற்றுக்கும் கூட்டத்தில் ஒற்றை ஆளாய் மனம் வெதும்பி ரத்தக்கொதிப்பேறி. ஊதுவோம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சிந்திக்க வைக்கும் பதிவு

இளங்கோ said...

கதிர் அண்ணா,
ரெண்டு இட்லி வாங்கினால் கூடவே நாம் மூன்று பிளாஸ்டிக் கவர்களையும் பெறுகிறோம்( சட்னி சாம்பருக்கு இரண்டு, மொத்தமாக பெரிய கவர் ஒன்று). சொல்ல போனால் டீயைக் கூட அதில் ஊத்தி தருகிறார்கள். முன்னாடி மாதிரி வீட்ல இருந்து கூடை பை, பாத்திரங்கள் எடுத்துட்டு போய் பொருள் வாங்கி வர்றதெல்லாம் கெடையாது. கைய வீசிட்டு போய், வரும்போது ரெண்டு கையிலும் பாலிதீன் கவர்களோடு வரும் நம்ம ஆட்களை என்ன செய்வது?. ஏன்னா, நாகரிகம் வளர்ந்த மக்கள் இல்லையா. முடிந்த வரை கடைகளுக்கு போகும்போது கூடவே பைகளைக் கொண்டு செல்லலாம்.
அப்புறம் இந்த விருந்துகளில், பிளாஸ்டிக்கை ஒழிக்க நமது அரசுகள் எதாவது முயற்சி எடுக்கலாம்.

Mahi_Granny said...

முழு மறு சுழற்சி இல்லாதவரை பாவம் தான்

dheva said...

ஒரு தலைமுறை இந்த பிளாஸ்டிக்கின் பயன்பாடு இல்லாமலும் அதை குறைத்தும் வாழ்ந்து மடிந்தாகி விட்டது ஒரு தலைமுறை. நாம் தான் நவீனம் என்ற போர்வையில் இன்னும் விசம் காய்ச்சி நிலத்தில் ஊற்றிக் கொண்டிருக்கிறோம்.

விழிப்புணர்வை ஏற்றியிருக்கும் இந்த கட்டுரைக்கும் கதிருக்கும் நமஸ்காராங்கள்!

Thamira said...

இன்னொரு தரமான விழிப்புணர்வுப் பகிர்வு உங்களிடமிருந்து.

Chitra said...

ஒரு திருமணத்தால் விதைக்கும் பிளாஸ்டிக் விருட்சத்தை வேரறுக்கும் பாரத்தையும் வருங்கால சந்ததிமேல் சுமத்துகிறோம் என்ற எண்ணம் மெலிதாய் அடிமனதில் குறுகுறுக்க ஆரம்பித்தாலே, மகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கும் ஒரு விழா, மண்ணின் கருவறைக்கு சாவு மணியடிப்பதை நிறுத்திட முடியும்.


...... விழிப்புணர்வு பதிவு. உண்மைதான்..... மக்களுக்கு இதனை குறித்த விழிப்புணர்வு அவசியம்.

சத்ரியன் said...

// ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டு, காலி டம்ளரை அருகிலிருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, அடுத்த டம்ளரை எடுத்து குடிப்பார், இப்படியாக ஒரே நேரத்தில், ஒரே ஆள் மூன்று நான்கு டம்ளர்களை நசுக்கி எறியும் போது, பூமியின் ஜீவாதார நரம்புகள் நசுங்கிப்போவது....//

விழித்தே ஆகவேண்டிய தருணம் இது.

கொஞ்சமும் குற்ற உணர்வே இல்லாமல் “அவன்” செய்யாததையா “ நான்” செய்துட்டேன் -னு திருப்பி கேள்வி கேக்குற உலகமா போயிடுச்சே. என்ன செய்யலாம் கதிர்?

நாடோடி இலக்கியன் said...

ஆழ்ந்து சிந்திக்க‌ வைத்த‌ ப‌திவு க‌திர்.

'பரிவை' சே.குமார் said...

சிந்திக்க வைக்கும் பதிவு.

க.பாலாசி said...

அது என்னமோ போங்க.. இங்க பாட்டில வாட்டர் வைக்கிறவங்க எல்லாரும் அந்தஸ்த்த காட்டவே செய்யுறமாதிரி தோணுது. அந்த மாதிரி நெனக்கிறவங்களுக்கு சமூகத்தபபத்தி என்ன கவல...

sakthi said...

கதிர் உங்கள் சமூக அக்கறை எனக்கு புரிகின்றது ஆனாலும் இது தவிர்க்க இயலாததாகிவிட்டது என்பதை ஒத்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்!!!!

செல்வா said...

//கடந்த பத்து ஆண்டுகளுக்குள் தான் இந்த பிளாஸ்டிக் பூதம் வெறித்தனமாக நிலத்தின் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துள்ளது.///
ஆமாம் அண்ணா .. இதைப் பற்றி நான் கழு வலைதளத்தில் எழுதியுல் கட்டுரையையும் இங்கே பாருங்கள் ..

priyamudanprabu said...

சிந்திக்க வைக்கும் பதிவு.

Thenammai Lakshmanan said...

ஆமாம் பாலா சார் சொன்னபடி ப்ளாஸ்டிக் இலையையும்சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அன்புடன் அருணா said...

தரமான விழிப்புணர்வுப் பகிர்வு !பூங்கொத்து!