கிராமங்களில் எல்லாப் பருவத்திலும் விளையாட ஏதோ ஒன்று கிடைத்துக் கொண்டேயிருக்கும். அதில் கிடைக்கும் நிறைவு இதமான ஒன்று. ஒவ்வொரு விளையாட்டுப் பொருளையும் உருவாக்க ஒரு குறிப்பிட்ட யுக்தியும், உழைப்பும் தேவைப்படும்.
வெயில்காலம் துவங்கும் காலத்திற்கு முன்பே, பனை மரங்களில் குறும்பைகள் விடத் துவங்கியிருக்கும். அப்போதே ஆளாளுக்கு இது என் மரம், இது உன் மரம் என்று நானும் அண்ணனும் பங்கு பிரித்துக்கொள்வோம். அடிக்கடி பார்த்துப் பார்த்து எத்தனை குலை விடுகிறது என்பது குறித்து தோராயமாக ஆராய்ச்சி நடக்கும்.
நாட்கள் நகர ஒரு சுபயோக சுப ஞாயிற்றுக்கிழமை நொங்கு வெட்ட நிர்ணயிக்கப்படும். காலையிலிருந்தே கூடையோடு பரபரப்பாக காத்திருந்து, ஆள் மேலே ஏறி வெட்டிப்போடும் போது தூரமாய் ஒதுங்கி நின்று, கீழே விழுந்தவுடன் குலையிலிருந்து சிதறியோடும் நொங்குளைப் பொறுக்கி, இப்படியாக ஒவ்வொரு குலைக்கும் சிதறிய காய்களை கூடையில் சேர்க்க, பெரியவர்கள் குலைகளைச் சுமந்து வர, அதிக குலை, இளம் நொங்கு என யார் மரம் சிறந்தது என்று ஒரு தீர்ப்பு வழங்கப்படும்.
வாகாய் ஒரு இடத்தில் எல்லாவற்றையும் குவித்து, பளபளவென தீட்டிய அரிவாளால்,பதமான நொங்கை எடுத்து, சரக்கென சீவித் தர, கைகள் பரபரக்கும். கட்டை விரலால் வேகமாய் பளபளக்கும் நொங்கை குத்த வெதுவெதுப்பா தண்ணீர் பீச்சியடிக்கும் முகம் முழுதுக்கும். அப்படியே உதட்டோடு ஒட்டி உறிஞ்சி, அடுத்த சில மணி நேரங்களில் வயிறு கனக்க அடுத்த பணி ஆரம்பிக்கும்.
சீவிப் போட்டு, உறிஞ்சி வீசிய காய்களில் ”இது உனக்கு, இது எனக்கு” கையகப்படுத்துவதில் போட்டி நிலவும். ஒரு வழியாய் வட்டமாய், அழகாய் சீவப்பட்ட நொங்கை எடுத்து பத்திரப்படுத்திவிட்டு, அரிவாளாடு நொச்சி மரத்துக்கோ, கொய்யா மரத்துக்கோ ஓடி ஒரு நீளமான, அதுவும் மிக நேர்த்தியாக கிளை பிரியும் குச்சியை வெட்டி அதை அழகாக கத்தரித்து, கூடவே ஒரு அடி நீளத்திற்கு ஒரு குச்சியை வெட்டி எடுத்துக்கொண்டு வருவோம்.
அடுத்து வண்டி தயாரிக்கும் பணி சிரத்தையாக நடைபெறும். சமமான அளவில், ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு காலி நொங்கு காய்களை எடுத்து, அந்த ஒரு அடி குச்சியை அச்சாக வைத்து இரண்டு நொங்குகளின் முதுகில் இரு சிறு துளை போட்டு, அச்சின் இரண்டு பக்கமும் சக்கரமாக பொருத்தப்படும்.
அடுத்து கவட்டியாக இருக்கும் நீண்ட குச்சியின் தலையில் ஒரு நொங்கு ஸ்டியரிங்காக பொறுத்தப்படும். அடுத்து ஸ்டியரிங் பொறுத்தப்பட்ட குச்சியின் மறுமுனையிலிருக்கும் கவட்டி அச்சின் மையத்தில் வைக்கப்பட்டு, கவட்டி பிரியாமல் இருக்க சின்ன கம்பியின் துணையோடு கட்டப்பட்டவுடன் நொங்கு வண்டி தயாராகிவிடும்.
அடுத்த விநாடி முதல் வீடு, வாசல், காடு மேடு, களத்து மேடு என எங்கு சென்றாலும் நொங்கு வண்டி முன்னே செல்ல, பின்னால்தான் பயணம். சில சமயம் வீட்டில் கிடக்கும் பழைய இரும்பு முறத்தையோ அல்லது தகரத்தையோ முறம் போல் வளைத்து ஒரு கம்பியால் கட்டி வண்டிக்கு ட்ரெய்லர் செய்வதும் உண்டு.
வீட்டில் எப்போதும் வேலை சொன்னால் பிடிக்காது, ஆனால் நொங்கு வண்டி செய்த பின் வண்டியோடு சென்று செய்யும்படியான வேலைகள் மிகவும் பிடித்ததாக மாறிவிடும். நொங்கு வண்டியின் வாழ்நாளும் சில நாட்கள்தான். அடுத்த சில நாட்களில் நொங்கு காய்கள் சுருங்க ஆரம்பிக்க, அச்சில் இருந்து சக்கரம் கழண்டு போக ஆரம்பிக்கும். மனம் தளராத விக்கிரமாதித்தனாக அடுத்த வாரம் வெட்டப்படும் நொங்கிற்காக காத்திருக்க ஆரம்பிக்கும்..
நொங்கு வண்டியைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. வெறும் ஒரு பிம்பமாக மட்டுமே நினைவில் புகைபடிந்த உருவமாய் இருக்கின்றது. கிராமத்தில் குலையாய் வெட்டி வந்து சீவிச்சீவி வயிறு புடைக்க நொங்கு தின்று எத்தனை வருடம் ஆகிறது என்பதுவும் நினைவில் இல்லை.
நெடுஞ்சாலைகளில் சாலையோரம் கேரி பேக்குகளிலோ அல்லது பச்சை பனை ஓலைகளிலோ தொல்லியோடு (நொங்கு ஓடு) தோண்டி எடுத்து விற்பனையாகும், முற்றிய நிலையில் இருக்கும் கடுக்காய் நொங்குகளை வாங்கித் தரும் போது, ஒரு மாதிரியாக சுவைத்துத் தின்னும் குழந்தையை பார்க்கும் போது, கொஞ்சம் குற்ற உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
வண்ணத்தால் ஈர்க்கப்பட்டு, ஆசையாய் வாங்கி அடுத்த சில நாட்களில் திகட்டிப் போகும் விளையாட்டுப் பொருட்களைக் காணும் போதெல்லாம் சுயமாய், இயந்திரவியலோடு உருவாக்கி விளையாடி மகிழ்ந்த நொங்கு வண்டிகள் மனதுக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடி விளையாடுவதை என்ன செய்தாலும் நிறுத்த முடிவதில்லை.
42 comments:
:)
நொங்கு வண்டி நானும் நிறைய ஓட்டி இருக்கேன்:)
நான் எழுதலாம்னு நினைச்சேன்...நீங்க எழுதிட்டீங்களே மேயர் சார்:))
மறக்க முடியாத வண்டி நொங்கு வண்டி... இதுல ரேஸ் எல்லாம் விட்டு இருக்கோம்.... அந்த நாள் ஞாபகம் மீண்டும் நன்றி கதிர்...
நொங்கு வண்டி ஒரு சீசனுக்கு தான்...அதனால எப்பவும் கைவசம் சைக்கிள் வீல் ஒண்ணு வச்சிருப்போம்... கட்டை குச்சி ஒண்ணு வச்சிக்கிட்டு அதை ஓட்டிட்டு ஓடுறது செம ஜாலியா இருக்கும்:))
பழைய நினைவுகளை கிளறி விட்ட அருமையான பதிவு. பாராட்டுகள்.
ரேகா ராகவன்.
காய்ந்த தென்னை ஓலைல உக்காந்து யாராவது இழுத்து கிட்டு போனா அது சூப்பர் பஸ் இல்லையா
நுங்கு வண்டிய விடுங்க ..பனம் பழம் எவ்வளவு ருசி !அது போல காய்ந்து பூவாய் போன நுங்கும் கூட ...
நெஞ்சின் ஓரத்தில் ஒதுங்கி கிடந்த பழைய நினைவுகள் எல்லாம்....மொத்தமாய் நினைவுக்கு வந்துடுச்சு கதிர்....ரொம்ப நேரமா பால்கனிலயே உக்காந்து இருக்கேன்....ஊர் நினைவுகளோடு.....இரைச்சலான இயந்திர இயக்கத்தைப் பார்த்துக் கொண்டு.....
அல்லோ! நாங்களும் நொங்கு வண்டிதான் ஓட்டிட்டு போறம். இதுல என்ன ஓரம் போறது. ங்கொய்யால ஊருல அங்க இங்க பனமரம் விட்டு வெச்சிருக்காங்கன்னு ஏத்தம். அவ்வ்வ்வ்வ்..ஆனா.வெயில் காலம் வந்தா 10ரூ க்கு 10 நுங்கு வாங்காம வரதில்லை.
நானும் தான் ஓட்டிருக்கேன்..
அவ்வ்... பழைய நினைப்புதான்... பேராண்டி பழைய நினைப்புதான்...
அன்பின் கதிர்
நொங்கு வண்டி ஓட்டாத பிள்ளைகளே இருக்க முடியாது.கொசுவத்தி சுத்திப் பாத்துட்டேன். நன்று நன்று கதிர்
நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா
நுங்குவண்டி நல்ல நினைவுகள்!
ஓ மலரும் நினைவுகளா, நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
நொங்கு வண்டிகள்தான் அப்ப எங்களுக்கு ..
இப்ப பிள்ளைகளுக்கு வாங்கிய பொம்மை கார்களுக்கு ஒரு நிஜக்காரே வாங்கியிருக்கலாம்..
நல்ல பதிவு நண்பரே . நானும் இந்த நொங்கை மரத்தில் ஏறி வெட்டி இருக்கிறேன் . ஒருமுறை இப்படிதான் ஏறி வெட்டுகிறேன் என்று கீழ விழுந்ததில் கால் ஒடிந்து நான்கு மாதங்கள் மாக்கட்டு போட்டு நான் பட்ட வேதனைகள் இன்னும் கண்முன் நெச்சில் மாறாமல் நிற்கிறது இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது .
நொண்டி தின்ன நொங்கு நினைவுகள்...இல்லை கொங்கு நினைவுகள் ....
நொங்கு வண்டி, டயர் வண்டி எல்லாம் பார்க்க முடியாத விசயம் ஆயிருச்சுங்க..
நல்ல கொசுவத்தி.
வீட்டில் எப்போதும் வேலை சொன்னால் பிடிக்காது, ஆனால் நொங்கு வண்டி செய்த பின் வண்டியோடு சென்று செய்யும்படியான வேலைகள் மிகவும் பிடித்ததாக மாறிவிடும். நொங்கு வண்டியின் வாழ்நாளும் சில நாட்கள்தான். அடுத்த சில நாட்களில் நொங்கு காய்கள் சுருங்க ஆரம்பிக்க, அச்சில் இருந்து சக்கரம் கழண்டு போக ஆரம்பிக்கும். மனம் தளராத விக்கிரமாதித்தனாக அடுத்த வாரம் வெட்டப்படும் நொங்கிற்காக காத்திருக்க ஆரம்பிக்கும்..
.... so sweet! வாசிக்கும் போதே, மனதில் ஒரு துள்ளல் வரத்தான் செய்தது..... நல்ல பதிவுங்க!
நொங்குதின்னி வித்தகர் நசரேயன் இன்னும் பின்னூட்டமிடாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பழைய நினைவுகளைக் கிளறிவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் கதிர்.
நுங்கு குடித்து 15 வருஷத்துக்கு மேலாகிவிட்டது !
நானும்.. நானும் ஓட்டியிருக்கேன்.. :)
அருமையான நினைவலைகள்!
நொங்கு வண்டி நாங்களும் ஓட்டியிருக்கோம்:)
நொங்கின் மேல் தடித்த பேப்பரால் பட்டை ஒன்று செய்து ஆனியால் அடித்து ஓட்டினால் “புல்லட்” பைக் போல் சத்தம் வரும்...
//
ரவிச்சந்திரன் said...
அருமையான நினைவலைகள்!
நொங்கு வண்டி நாங்களும் ஓட்டியிருக்கோம்:)
நொங்கின் மேல் தடித்த பேப்பரால் பட்டை ஒன்று செய்து ஆனியால் அடித்து ஓட்டினால் “புல்லட்” பைக் போல் சத்தம் வரும்...
//
அப்படியே நானும் வழிமொழிகிறேன்......
யார் வண்டியில் இருந்து சத்தம் அதிகமா வருதுன்னு போட்டி வேற நடக்கும்...
அழகா அசைபோட்டிருக்கீங்க...என்னதாயிருந்தாலும் அதுவொரு காலம்ங்க... இன்னைக்கும் ஊருக்குப்போனா எவனாச்சும் இப்டி விளையாடுறானான்னு பாத்தா இருக்காது. எல்லாம் மட்டையத்தூக்கிகிட்டு கிரவுண்டுக்கு கிளம்பிடுறானுங்க..
பச்சை பனை ஒலையில மட்டை கட்டி, குடிநுங்கை தோண்டிப் போட்டு, அதில பதினி ஊத்தி அதிகாலைல அடிச்சா, குடிக்கக்குடிக்க வயிறு விரிஞ்சுக்கிட்டே...
இப்ப குழந்தைகளுக்கு க.பாலாஜி சொன்ன மாதிரி கிரிக்கெட் மட்டைதான், பாவம்.
நொங்கு வண்டி விளையாடியதில்லை! ஆக வாசிக்க இன்னும் இனிமை நொங்கின் சுவை போல:)!
//வண்ணத்தால் ஈர்க்கப்பட்டு, ஆசையாய் வாங்கி அடுத்த சில நாட்களில் திகட்டிப் போகும் விளையாட்டுப் பொருட்களைக் காணும் போதெல்லாம் சுயமாய், இயந்திரவியலோடு உருவாக்கி விளையாடி மகிழ்ந்த நொங்கு வண்டிகள் மனதுக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடி விளையாடுவதை என்ன செய்தாலும் நிறுத்த முடிவதில்லை.//
அருமை.
மலரும் நினைவுகள் மிக அருமை
பழைய பசுமை நினைவுகள் கிளறிட்டீங்க
நொங்கு நல்ல சுவை . வண்டி தான் புதிது. இத்தனை பேரை கொசுவத்தி சுற்ற வைத்து விட்டீர்களே
நொங்கு வண்டி நானும் நிறைய ஓட்டி இருக்கேன்:)
நொங்கு வண்டி நானும் நிறைய ஓட்டி இருக்கேன்.பழைய நினைவுகளை கிளறி விட்ட அருமையான பதிவு.
தலை... தூளான பதிவு... எத்தனை வண்டி ஓட்டினாலும் அந்த நொங்கு வண்டி ஓட்டுற சுகமே தனி!!!
மீண்டுமொரு அழகியல் பதிவு உங்களிடமிருந்து. பாதுகாக்கப்பட வேண்டிய பதிவுகளைச் செய்கிறீர்கள். தொடர்க உங்கள் பணி.
நீங்கள் சொன்னது இரட்டை நுங்கு வண்டி. பின்னூட்டத்தில் ரவிச்சந்திரன் சொல்லியிருக்கிறார், ஆனால் முழுமையில்லாமல். அது ஒற்றைச் சக்கரவண்டி. அது நடுவே துளைத்த காயில் இருபுறமும் அச்சுடன் இருக்கும். அதில் ட்ராக்ஸ் போல ஸ்டெப்ஸ் உருவாக்கி பனையோலையை அடித்தோமானால் 'டபடப' வென சத்தம் வரும்.
இப்போதும் சீசனில் ஊர்போகையில் அப்பாவின் நண்பர் புண்ணியத்தில் இவை எங்களுக்குக் கிடைக்கின்றன. என் பிள்ளைக்கு வண்டி ஓட்டும் அனுபவம் கிடைக்கப்போவதில்லை எனினும் ஒருநாளாவது இது போல மிச்சமிருக்கும் விஷயங்களை அறிமுகமாவது படுத்திவிடமுடியும் என நம்புகிறேன்.
அந்த நாள் ஞாபகம்..
நொங்கு ... கொங்கு நாட்டின் கிங்கு....
எனது எல்லா இந்திய வருகையும் மே மாதம் வைத்துகொள்வது நொங்கு, இளநீர், மா, கொய்யா மற்றும் பலா ...
இவை இங்கே (இம் வாழ்கை தேடி அமெரிக்க வந்து இழந்தது ) ஏது? பாட்டிலில் அல்லது டின்னில் அடைத்து விக்கிறான்.
அவ்வபோது சீனா மார்க்கெட்டில் கிடைத்தாலும் அவை கொங்கு நாட்டில் சுவைத்தது போல இல்லை.
கதிர் னொங்கு வண்டி நானும் ஓட்டி இருக்கேன்.விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டுக்கு போகும் போதெல்லாம் ஒரே அமர்க்களம் தான்.மலரும் நினைவுகளாய் னாபகங்கள்.ரொம்ப நன்றி.
அருமை.....
இப்படித்தான் எனது முதல் சொந்த வாகன கனவு நிறைவேறியது.
அருமை.....
இப்படித்தான் எனது முதல் சொந்த வாகன கனவு நிறைவேறியது.
நினைவுகளை அசைபோடச்செய்த பதிவு. அற்புதம்.....
சும்மா கடுப்பேத்தாதீங்க பாஸ்...அந்த விளையாட்டெல்லாம் பையங்களுக்கு தான்...பொண்ணுங்க சும்மா நொங்கு திங்கறதோட சரி...
Post a Comment