போதை கனக்கும் டாஸ்மாக் குடுவை



மாயப்போதை தேடும் மூளையோடும்
எச்சிலூறும் நாவோடும்
சில்லறைகளைப் பொறுக்கி
போதை பதுங்கிக்கிடக்கும் குடுவையை
கையகப்படுத்துகிறான் குடிமகன்.

அழுக்கடைந்த குடிப்பக மூலையில்
ஆலமரக்கிளையொன்று சிந்தும் நிழலில்
கோணலாய் நிற்கும் மேசையில்
காக்கையொன்று நேற்றும் எச்சமிட்டிருந்தது.

முதலிரவுக்கு வந்த மனைவியைப்போல்
குறுகுறுப்பாய் குடுவையைக் கையாள
அடைபட்டுக்கிடந்த அவனுக்கான அமிர்தம்
விடுபட்டு மெல்லச் சிரிக்கிறது

நடுங்கும் விரல்களோடு குவளையில் சரித்து
இனிப்பூட்டிய குளிர்பானத்தையோ
வாயு நிரம்பிய சோடாவையோ
பிளாஸ்டிக் பை தண்ணீரையோ பீய்சிக்கலந்து
ஒரு புணர்ச்சியின் தொடக்கம் போல்
தன் அனுபவத்துக்கேற்றார்போல் அருந்துகிறான்.

நாவு கடக்கும் மதுவின் கடுமையை
காரக்கடலையிலோ ஊறுகாயிலோ,
திட்டிய மனைவியின் வார்த்தைகளிலோ,
தன்னை ஒதுக்கிய சகமனித நினைப்பிலோ
தொட்டும்தொடாமலும் நீவிவிடுகிறான்

துளைத்தூடுருவும் கள்ள போதை
மெல்ல மெல்ல அவனை மேதையாக்கி
வன்மப் போர்வையை உதறிப்போட்டு
அன்புக் குடுவையின் மூடியை திறந்துவைத்து
வார்த்தைகளுக்கு பிரசவம் பார்க்கிறது

வெற்றிடத்தைக் குடித்த குடுவை சிரிக்க
போதையை ஊட்டிய திரவம் சிரிக்க
போதை தளும்பும் அக்கம்பக்கமும் சிரிக்க
ஓங்காரமாய் அவனும் சிரிக்கின்றான்
உலகமும் அவனைப் பார்த்து சிரிக்கின்றது!

போதையின் கனம் தாங்காத
பிறிதொரு குடுவை தன்னை
எவர் விடுவிப்பதென ஏக்கமாயிருக்கிறது
ஆனாலும் அது அறியும்,
இன்றோ, நாளையோ
இவனோ, இன்னொருவரோ
விடுவித்துவிடுவார்களென்று

-0-

நன்றி திண்ணை

7 comments:

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - ஒரு குடுவையையும் அதனைப் பயன்படுத்துபவன் பற்றியும் ஒரு அழகிய கவிதை. அனுபவம் பேசுகிறது. ஒரு குடுவையினை பயன் படுத்தும் விதம் அருமையாகக் கூறப்பட்டிருக்கிறது. மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா

vasu balaji said...

அண்ணே நேரா இருக்கிற பாட்டில் தலை கீழா இருக்கா தலைகீழா இருக்கிறது நேராத் தெரியுதா..மப்ப்ப்பா இருக்கேண்ணே:)

க.பாலாசி said...

//உலகமும் அவனைப் பார்த்து சிரிக்கின்றது!//

ரெண்டு ரவுண்ட் உள்ளாரப் நொழஞ்சாத்தான் மனுஷனுக்கு மனசுலேர்ந்து சிரிப்பே வருது.. இதுல அவனப்பாத்து எல்லாரும் சிரிக்கிறாங்க.. எ.கொ.சா..

அகல்விளக்கு said...

//நாவு கடக்கும் மதுவின் கடுமையைகாரக்கடலையிலோ ஊறுகாயிலோ,திட்டிய மனைவியின் வார்த்தைகளிலோ,தன்னை ஒதுக்கிய சகமனித நினைப்பிலோதொட்டும்தொடாமலும் நீவிவிடுகிறான்//

அருமை...

@பாலாசி அண்ணா... சூப்பர்...

ஓலை said...

Tasmac kadaiyilum foreign label pottaa thaan sellumaanga !

Unknown said...

கோவை இராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது இரத்ததானம் தர விரும்பும் கோவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் Cell : 9865191061

SUDHANDHIRAPARAVAI said...

என் வீட்டு குடுவை
என் எச்சில் முத்தத்திற்க்காக
ஏங்கி தவிக்கிறது