ஃபாரன்ஹீட் 9/11

படத்தை இயக்கிய இயக்குனர் மைக்கேல் மூர் ஒரு அருமையான கலகக்காரர் என்பதை இந்தப்படத்தின் மூலமும் நிரூபித்திருக்கிறார். பாராட்டப்பட வேண்டிய, பார்க்க வேண்டிய, பார்த்து பயம்கொள்ள வேண்டியதொரு படம்.



இது ஒரு ஆவணப்படம் மட்டுமே, ஆனால் இதில் இருக்கும் அதிர்ச்சியும், சுவாரசியமும், உண்மை குறித்த வீரியமான முழக்கமும் வேறு எந்தப்படத்திலும் இருக்கின்றதா எனத்தெரியவில்லை. பார்த்து முடிக்கும்போது அமெரிக்க வல்லரசு, ஏகாதிபத்தியம் குறித்து வரும் கோபங்களைக் கொட்ட உதிர்த்த கெட்ட வார்த்தைகளை எங்கு துப்புவது என்றுதான் தெரியவில்லை. அதே சமயம் அமெரிக்காவில் இருக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு பெரிய வணக்கம் வைத்தே ஆகவேண்டும். இதுவே இந்தியாவாக இருந்திருந்தால் இறையாண்மையின் விரைக்கொட்டைகள் நசுக்கப்பட்டதாக எத்தனையோ தேசிய பாதுகாப்புச் சட்டங்களை பீச்சியடித்திருந்திருப்பார்கள்.

அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் தேர்ந்தெடுக்கப்பட்ட கோமாளித்தனத்தோடு துவங்குகின்றது படம். 9/11 இரட்டைக்கோபுரத் தாக்குதலும் அதற்கு முந்தைய, பிந்தைய நிகழ்வுகளுமே படம். ஆவணப்படம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது போல் ஒவ்வொன்றும் கோர்க்கப்பட்டிருக்கின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்து, அதிகமான மாதங்களை ஓய்விலேயே கழிக்கின்றார் அதிபர். இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட செய்திவரும்போது, ஜார்ஜ் புஷ் மிகச்சரியாக ஃபுளோரிடாவில் இருக்கும் ஒரு பள்ளியில் குழந்தைகளோடு உரையாடிக் கொண்டிருக்கிறார். முதல் கோபுரம் தகர்க்கப்பட்ட செய்திவந்தபின்பும் எந்தவித அலட்டல், அதிர்ச்சியுமின்றி செவ்வனேயிருக்கின்றார். அடுத்த சில நிமிடங்களில் அடுத்த கோபுரம் தாக்கப்பட்ட செய்தியை ஒரு அதிகாரி அருகில் வந்து ரகசியமாய்ச் சொல்லிச் செல்கிறார். என்னசெய்வது என்பது குறித்து எந்தப் பதட்டமுமின்றி, அமைதியாக ஒரு புத்தகத்தை புரட்டிக்கொண்டிருக்கிறார் (நல்ல வேளை புத்தகத்தை தலைகீழாகப் புரட்டவில்லை). உலகில் இப்படி ஒரு கோமாளி இருக்க முடியுமா என்று எண்ணத்தோன்றுகின்றது. படம் முடியும் போதுதான் புரிகின்றது புஷ் கோமாளி அல்ல, மிகப்ப்ப்ப் பெரிய்ய்ய்ய்ய தில்லாலங்கடி என்பது. 

விமானங்களைக் கொண்டு உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டதால் அமெரிக்கா முழுதும் அடுத்த சில நாட்களுக்கு விமானம் ரத்து செய்யப்படுகின்றது. ஆனால் அதே சமயம் ஒசாமா பின்லேடனின் குடும்ப உறுப்பினர்கள் பலர் அமெரிக்காவிலிருந்து சவுதிக்கு விமானத்தில் அனுப்பிவைக்கப்படுகின்றனர். அதன்பின்னர் தெரியவரும் அமெரிக்க அதிபர் புஷ் குடும்பத்தின் வியாபார நட்புகள் பீதியூட்டுவதாக இருக்கின்றன.

ஒரு சுபயோக சுபதினத்தில் அமெரிக்கா ஆப்கானைத் தாக்குகின்றது. தாலிபான்கள் அகற்றப்பட்டு, புஷ்-க்கு நெருக்கமான எண்ணைக் கம்பெனியின் ஆலோசகராக இருந்த ஹமீர்கர்சாய் அதிபராக அமர்த்தப்படுகிறார். அதில் இன்னொன்று என்னவென்றால் தாலிபான் அமைப்பைச் சார்ந்த தலைவர் ஒருவர் அதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் அரசு விருந்தாளியாக அமெரிக்காவில் வலம் வருகிறார். நம்ம ஊர் அரசியலில் மட்டும்தான் இப்படிப்பட்ட அல்பத்தனம் என்று நினைத்திருந்த பொதுபுத்தியில் “என்னடா நடக்குது அமெரிக்காவுல?” என்றும் தோன்றுகிறது. 

”அமெரிக்காவில் எப்போது வேண்டுமானாலும் என்ன மாதிரி வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம்” என்பதொரு மாயை அமெரிக்க முழுதும் விதவிதமாகப் பரப்பப்படுகிறது. ”அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதலுக்கு உள்ளாகும்” என ஒருவர் மிரட்டும்போதே, ”மிகப்பாதுகாப்பாக இருக்கின்றோம் ஒன்றும் நடவாது” என்பான் மற்றொருவன். ”தாக்குதல் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் நடக்கும்” என மிரட்டல் இன்னொருவன். ஒட்டுமொத்தத்தில் உலக வல்லரசின் குடிமக்களை வெகு ஆழமாக குழப்பி, ”எதாச்சும் செய்யனும்” எனும் மனப்போக்குக்கு தள்ளப்படுகின்ற யுக்தியாகப் பயன்படுத்துகின்றனர்.

இத்தனை மாயப் பயம் ஏன் விதைக்கப்பட்டது என்பதிற்கான காரணம் இப்போது புரிகின்றது. அமெரிக்காவின் அடுத்த இலக்கு ஈராக். நாட்டுமக்களுக்கு உரையாற்ற அமெரிக்க அதிபர் புஷ் வெகுவான ஒப்பனைகளோடு தயாராகி, தயாரிக்கப்பட்ட வார்த்தைகளை வெளியிட, அதே நேரத்தில் அமெரிக்காவைத் தாக்காத, தாக்க நினைக்காத, ஒரு அமெரிக்கனைக்கூட கொல்லாதா ஈராக்கில் அமெரிக்க படை தன் முழு சக்தியை பிரயோகித்து தாக்குகின்றது. 

படையை அனுப்பிவிட்டு அது ஈராக்குச் சென்று சேரும்போதுதான் எதற்கு அனுப்புகிறோம் என்ற காரணத்தை புதிதாய் உருவாக்குகிறார்கள் போலவும் தோன்றுகிறது. ஒருவன் அணு குண்டு என்கிறான், மற்றொருவன் அணு ஆயுதம் என்கின்றான், இன்னொருவன் வேதியல் குண்டு என்கின்றான். புஷ் நிர்வாகம் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தில், தாக்குதல் அச்சத்தில் சூழ்ந்திருந்த, குழம்பிய அமெரிக்கா தயாராக இருக்கின்றது. ஆனால் ஈராக்கை தாக்குவதற்கான காரணம் எண்ணெய்வளம் என்பதன்றி வேறேது. அணு குண்டு, வேதியல் குண்டு எனத் தேடிப்போனவர்கள் ஒரு கோலிக் குண்டைக்கூட எடுக்கவில்லையென்றே நினைக்கின்றேன்.

ஈராக் மீது ஏற்படுத்தப்பட்ட அநியாயமான போர், உலகத்தின் மீது ஒட்டுமொத்தமாகத் தொடுக்கப்பட்ட போர் என்பதை எவருமே ஏன் உணரவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கின்றது. எதையோ தேடுவதாகச் சொல்லி எண்ணெய் வளத்துக்கு ஏற்றப்பட்ட போர் நெருப்பில் குழந்தைகளும் அப்பாவிகளும் அளவில்லாமல் கருகிப்போக, எதிர்பார்த்ததைவிட அமெரிக்கப் படைகளுக்கும் பேரிழப்பு. 

9/11 தாக்குதலுக்குப் பிறகு, ஆப்கான், ஈராக் போர்களுக்கு ஆயுதம், அங்கே நடக்கும் எண்ணெய் வர்த்தக பேர விளையாட்டு என எல்லாவற்றிலும் புஷ் மற்றும் குழுமத்தின் குடும்பம் மிகப்பெரிய அளவில் பலனடைந்திருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட வகை மக்கள் மட்டுமே ராணுவம் உட்பட படைகளில் சேர்ந்து தங்களை தியாகம் செய்வதும், பெரிய பதவிகளை அனுபவிக்கும் எவரின் பிள்ளைகளும் அந்தப்பக்கம் எட்டிப்பார்ப்பதில்லையென்பதும் உலகம் முழுமைக்கும் பொதுவானதே போல. 

காங்கிரஸ் உறுப்பினர்களின் பிள்ளைகளை ஈராக்குக்கு அனுப்புங்கள் என மைக்கேல் மூர் துரத்த, அவர்கள் தப்பி ஓடும் இடங்கள் சித்தரிக்கப்பட்ட திரைப்படங்களில்கூட இவ்வளவு யதார்த்தமாக அமையாது. கப்பல் படைக்கு ஆள் சேர்க்க பொது இடங்களில் தேடியலைந்து அவர்களின் தொலைபேசி எண், முகவரி கேட்டு அலையும் அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, நம் ஊரில் பேருந்து நிலையங்களில் வாடிக்கையாளர்களைப் பிடிக்க முனையும் விலைமகள்கள் நினைவுக்கு வருகின்றனர். 

எல்லாவற்றையும் விட, சுதந்திரம் மிகுந்துள்ளதாகச் சொல்லப்படும் அமெரிக்காவில் எப்படி இத்தனை குளறுபடிகளை, அயோக்கியத் தனங்களை மக்கள் தாங்கிக்கொண்டார்கள் என்பதுதான் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது.

ஒரு ஈராக் தாய் அமெரிக்காவை நோக்கி “அவர்கள் வீடுகள் இடிந்து மண்ணாகப்போகட்டும்” என விடும் சாபம் கவிஞர். தாமரை எழுதிய ஈழத்தாய் இந்தியாவுக்கு எதிராக விட்ட கருஞ்சாபத்தை நினைவூட்டுகிறது.
ஈராக் போருக்கு தன் மகனை அனுப்பியது குறித்த அளவற்ற பெருமையோடு முழங்கும் அமெரிக்கத்தாய், சில காலத்திற்குப் பின், போரில் இறந்த மகனின் கடிதத்தை வைத்துக்கொண்டு கலங்கித் துடிப்பதும், கடைசியாக உடைந்து போவதும் மிக முக்கிய ஆவணங்கள்.


-


6 comments:

Anonymous said...

உலகின் பல நாடுகளிலும் தனக்கு ஆதரவாக பல்வேறு பயங்கரவாத குழுக்களை உருவாக்குவதிலும், அவர் களுக்கு உதவுவதிலும் கை தேர்ந்தது அமெரிக்கா.அமெரிக்காதான் தீவிரவாதம் மற்றும் உலக குற்றங்களின் தலைவனாக திகழ்கிறது என்று பயங்கரவாதி பின்லேடன் கூறிய பேட்டி எவ்வளவு சரியானது.

Mohamed Faaique said...

ரொம்ப நாளா பாக்கனும்’னு நினைச்சுடு இருக்கேன். இனிமேலும் தாமதிக்க முடியாது... அழகான விமர்சனத்துக்கு நன்றி..

சிராஜ் said...

மீடியாவ கையில வச்சி இருக்கானுங்க சகோ... எந்த உண்மையையும் வெளில விடமாட்டானுங்க.... கோயபல்ஸ் பிரச்சாரம் மாதிரி
சொன்னதே சொல்லி முஸ்லிம்களை தீவிரவாதியா காட்டியே எண்ணெய் வளத்தை நல்லா கொள்ளை அடிப்பானுங்க. அதற்காக போராடாட்டியும் பரவா இல்லை, ஆனால் போராடுபவனையும் தீவிரவாதின்னு முத்திரை குத்துதே உலகம். என்ன செய்ய????

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ஈரோடு கதிர்,

மிகுந்த ஏமாற்றம்...
ஏகத்துக்கும் அயற்சி...
பதிவில்...
உங்கள் ஆச்சர்ய புருவங்களை கண்டுதான்..!

எல்லாரும் சொல்லி சொல்லி எழுதி எழுதி வீடியோவாகவே காட்டி காட்டி அலுத்த விஷயத்தை எப்படி உங்களால் இப்படி புத்துணர்வோடு ஏதோ நேற்று வெளியான உண்மைகள் போல அதிசயப்பட்டு எழுத முடிகிறது..?

தான் செய்த அக்கிரமத்தை எல்லாம் ஜார்ஜ் புஷ்ஷே நேரே வந்து என்னிடம் சொன்னால்தான் நம்புவேன்... என்றும் சிலர் உள்ளனர். இவர்களுக்கு மத்தியில் நீங்கள் எவ்வளவோ சிறந்தவர்.

வேற என்ன சொல்ல...

ஐந்தாறு ஆண்டுகள் கோமாவில் கிடந்தவர் மீண்டு வந்து உடனடியாக பதிவு எழுதியது போல உள்ளது..!

உங்களுக்கு ஒன்று தெரியுமா சகோ.கதிர்..?

புஷ்ஷும் ஒபாமாவும் எதிர் எதிர் கட்சிகள். புஷ் பற்றி கேவலமான படம் வந்தால் இன்னும் நாலு வருஷம் கொள்ளையடிக்க ஒபாமாவுக்கு அது வெற்றி வாய்ப்பு. அவ்ளோதான் மேட்டர்.

ஒபாமாவின் SOPA பற்றி தெரியுமா..?
SOPA(Stop Online Piracy Act) is the new bill will introduce in US for online piracy. As per this new rule American can not visit all websites like Facebook, Google+, Yahoo, LinkedIn, Twitter, You Tube...

அமெரிக்காவில் கருத்து சுதந்திரமாம்... மண்ணாங்கட்டி.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
This comment has been removed by the author.
~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.கதிர்,
இங்கே உள்ள மேட்டரை படிங்க அப்புறம் அங்கே உள்ள வீடியோஸ் பாருங்க...

http://en.wikipedia.org/wiki/Loose_Change_%28film%29

Loose Change is a series of films released between 2005 and 2009 which argue that the September 11, 2001 attacks were planned and conducted by elements within the United States government, and base the claims on perceived anomalies in the historical record of the attacks. The films were written and directed by Dylan Avery, and produced by Korey Rowe, Jason Bermas and Matthew Brown.

சரி,
இந்த புஷ்- இராக்- ஒசாமா- 9/11 -எல்லாம்.... இனி சிந்து சமவெளி நாகரிக காலம் போல....

நிகழ்காலத்துக்கு வாங்க சகோ.கதிர்...

லிபியா-ஒபாமா-கதாபி-கலவரம்- நேசப்படை பத்தி பத்தி கூகுளில் நிறைய படிங்க...யு ட்யூபில் ஆயிரம் வீடியோ இருக்கு... பாருங்க...

இல்லாட்டி... அஞ்சு வருஷம் கழிச்சு... ஒபாமா போயி வேற ஒருத்தன் அமெரிக்காவின் பிரசிடண்டா இருக்கும்போது...

இதைவிட ஒரு சூப்பர் படம் லிபியா பத்தின உண்மைகள் என்று ரிலீசாகும்... அத நீங்க அதிசயமாக வாய்பிளந்து பார்ப்பீங்க...

அப்போ உங்கள் பதிவு இப்படி இருக்கலாம்...

///அமெரிக்காவில் இருக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு பெரிய வணக்கம்

///அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்ட கோமாளித்தனத்தோடு துவங்குகின்றது படம்.

///அதே நேரத்தில் அமெரிக்காவைத் தாக்காத, தாக்க நினைக்காத, ஒரு அமெரிக்கனைக்கூட கொல்லாதா லிபியாவில் அமெரிக்க படை தன் முழு சக்தியை பிரயோகித்து தாக்குகின்றது.

///சுதந்திரம் மிகுந்துள்ளதாகச் சொல்லப்படும் அமெரிக்காவில் எப்படி இத்தனை குளறுபடிகளை, அயோக்கியத் தனங்களை மக்கள் தாங்கிக்கொண்டார்கள் என்பதுதான் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது.