விளையாட்டும் வேடிக்கையுமாய்
சாலை கடக்கமுயலும் பிள்ளையை
வெடுக்கென கொத்தாய் உச்சிமுடி
பற்றியிழுத்துப்போகும் அம்மா!
சராசரிக்கும் குறைவான புத்தியோடு
சளசளவெனப்பேசும் ஒற்றை மகனுக்கு
படிப்பு பணி தொழிலென எதையும்
பதியனிடமுடியாமல் தவிக்கும் அப்பா!
இல்லற வெம்மையில் வாசமிழந்த மலரில்
நெருப்புத்துண்டங்களை தூண்டில்முள்ளாய் வீசும்
குறைந்த வயதுடைய சகஊழியனின்
சல்லாபமோகத்தில் வெதும்பும் தோழி!
வரும் மாதவாடகை கரண்ட்பில்
அக்கம்பக்கம் புரட்டிய கைமாத்துக்கு
கை பிசையும் வாழ்ந்துகெட்டோர் வாரிசான
மத்திம வயதையெட்டும் தோழன்!
ஆயிரம் ரூபா முதியோர் பென்சனில்
ஆறுக்கு எட்டு ஒண்டுக்குடித்தனத்து
கக்கூஸ் வரிசையில் காத்துக்கிடக்கும்
”காரையூட்டாயா” கிழவி!
மனைவி மரித்த பொழுதோடு
மரியாதையை சோத்துக்குத் தொலைத்து
விரிசல்விட்ட மூக்குக்கண்ணாடியை
பிசுபிசுத்த நூலில் கோர்த்துக்கட்டிய கிழவன்!
எல்லாம் எளிதாய்க் கரைந்துபோகிறது
இயலாமையில் இயல்பு எனவும்
என்னை நான் எதிலும் பொருத்தியும்
பொருத்தாமலும் கடந்து போவதிலும்!
~
நன்றி திண்ணை
5 comments:
//கக்கூஸ் வரிசையில் காத்துக்கிடக்கும்
”காரையூட்டாயா” கிழவி!// அருமை அண்ணா... அருமை!!!
நல்லாருக்கு
கவிதையும் எளிமையாகவும் ஆழமாகவும் இருக்கு
அருமைங்க கதிர்!!
கதிர் எழுதினா அருமையாக தான் இருக்கும்.., இருக்கிறது
Post a Comment