கடையடைப்பு

எப்போதாவது அதிசயமாய் பூக்கும் விடுமுறைதினம்போல் நீண்டு படுத்திருக்கிறது கடையடைப்பு. மார்கழியின் பகல் நேரத்தில் வீசும் தென்றல் காற்றில் மூடிய கடைகள் முழிக்கத் தயாரில்லை.

இன்றைக்கு முடிக்கவேண்டிய முக்கிய வேலைகளை முந்தைய இரவே அவசரமாய், கொஞ்சம் கடினத்தோடு முடித்துக்கொண்டு வெகு சாவகாசமாய் உறங்குகின்றன சிறுதொழிற்கூடங்கள்.”பஸ் ஓடுமா” என்ற கேள்விகளுக்கு, ”ஓடும்னு நினைக்கிறேன்” என்ற பதிலளிப்பவர்கள், ஓடும் பேருந்துகளைக் காணும்போது தன் பதிலுக்கு தானே மதிப்பெண் வழங்கிக்கொள்கின்றனர். பள்ளித்தேர்வுகளெல்லாம் முடிந்த தினங்களென்பதால் பெற்றோர்களிடம் எத்தகைய குழப்பமும் பதட்டமும் கடுகளவும் இல்லை.

எப்போதும் மூச்சையடைக்கும் முக்கியச் சாலைகள் முதல் பந்திக்கு விரித்த மாத்துத்துணி போல் ஒருவித அழகோடு வீற்றிருக்கின்றது. வரிசையாய் மூடப்பட்டிருக்கும் கடைகளின் வண்ண வண்ணக் கதவுகள் ஏதோ சுவாரசியங்களை கண்ணுக்கு எட்டாத தொலைவில் கடைபரப்பி வைத்திருக்கின்றன. இடையிடையே திறந்து வைக்கப்பட்டிருக்கும் ”அடைப்பில் விலக்கு” அளிக்கப்பட்ட மருந்துக் கடைகளைக் காணும் போதுதான் தெரிகின்றது மனிதர்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாய்க் குடிகொண்டிருக்கும் நோய்களின் எண்ணிக்கை.

அடைப்புக்கு அழைப்பு விடுத்த அமைப்புகளின் முக்கியத்தலைகளும், சங்கப் பிரதிநிகளும் ஒரு பொதுமைதானத்தில் கூடுகின்றனர். சம்பிரதாயமாகயா கூடுதல் புன்னகை சிரிப்போடு அளவளாவிக் கொள்கின்றனர். அமர்ந்திருக்கும் பெரும்பாலனோரின் விரல்கள் அலைபேசி பொத்தான்களை எந்நேரமும் ஒத்திக்கொண்டிருக்கின்றன. ஒலிவாங்கி கிடைத்ததும் உதடுகளின் அருகாமையின் வார்த்தைகளைத் தோற்றுவித்து உடனுக்குடன் உதிர்த்துவிடுகின்றனர். சில நேரங்களில் வெகுண்டெழும் முழக்கமாயும் கூட வந்து விழுகின்றன வார்த்தைகள். முழங்கியவர் அடங்கியமரும்போது அருகாமையில் இருப்பவர், அவசரத்தில் கிடைத்த புறங்கையைப்பற்றி ஒருவாராக குலுக்கிவிட்டுச் சொல்கிறார்… ”சூப்பருங்க, கலக்கிப்புட்டீங்க”

சந்தடி குறைந்த குறுக்குச் சாலைகளின் சிவப்பு விளக்குகளுக்கு நின்று நிதானிப்பவன் மற்றவர்களுக்குள் ஒரு பைத்தியகாரனை நினைவூட்டுகிறான். விறுவிறுவென ஓடிக்கொண்டிருக்கும் உலகம் சந்தடியற்ற தனத்தை தனக்கான சுதந்திரமாக்கொண்டு இடவலம் மட்டும் கடனேயெனப் பார்த்துவிட்டு சில நொடிகள் முன்னாதாக கடக்க எத்தனிக்கிறது. அதுவரை பனிப்போர்வை போல் பைத்தியகாரத்தனத்தை தன் மேல் போர்த்திக்கொண்டிருந்த சாமானியனும் பொறுத்ததுபோதுமென சிவப்பு எண்கள் தீரும்முன்னே விருட்டெனக் கடக்கிறான். கடந்தவுடனே கடந்ததற்கான நிம்மதி எல்லோருக்குள்ளும் பூக்கத்தான் செய்கின்றது.

இருபத்திநாலு மணி நேரமும் மூடப்படாத தேநீர்க் கடைகளும் அதிகாரப்பூர்வமாய் மூடப்பட்டதாய்ச் சொல்லிக்கொள்கின்றன. ஆனாலும், சுருள்கதவை அரைவாசி மட்டும் திறந்துகொண்டு ஏற்கனவே வடித்து வைத்த தேநீரை வழக்கத்திற்குமாறாக கொஞ்சம் குறைந்த அளவில் கொடுத்துச் சேவையாற்றிக் கொண்டிகின்றன.

மதிய உணவு எடுத்துவராத நண்பன் அங்கிங்கென அலைந்து, யாரோ சொன்னதாய் ரயில் நிலையத்திற்குள் சென்று பொட்டலம் வாங்கி வந்ததாய் புது அனுபவம் ஒன்றினைச் சொல்கிறான்.

மாலை நெருங்கும் வேளையில் அதிசயமான பகல் உறக்கத்திலிருக்கும், நகரம் மெல்ல புரண்டுபடுக்கிறது. பின் மதிய நேரத்தில் கொஞ்சமாய்ப் போக்குவரத்துக் கூடுகிறது. ஐந்து மணி வாக்கில் ஆங்காங்கே சுருள்கதவுகள் மேலெழும்பும் கர்ணகொடூர ஓசை வந்துவிழுகின்றது. கடையடைப்பு மெல்ல தீர்ந்துபோகின்றது.

இதுபோல் எத்தனை கடையடைப்புகளைக் கடந்துவிட்டோம் என மனதிற்குள் அயர்ச்சி நிரம்புகின்றது. கடையடைப்பு, போராட்டங்கள் கூட காலத்தின் மாற்றத்தில் ஒரு நிறுவனத்தன்மையை தன்மேல் பூசிக்கொண்டிருக்கின்றன. பிரச்சனைகளை உருவாக்குபவனும், கட்டுப்படுத்த வேண்டியவனும், எதிர்கொள்ளும் வல்லமை கொண்டவனும், நேர்மையாய் தீர்த்துவைக்க வேண்டியவனும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் வரையில், சாமானியன் இப்படி அடைத்துக்கொண்டுதான் இருக்க வேண்டியிருக்கிறது, வாயையும் அவ்வப்போது கடைகளையும்.

-

8 comments:

அகல்விளக்கு said...

நச்சென்று இருக்கிறது...

இன்றைய சாலையில் வரும்போது மிகப்பெரிய வெறுமையை உணர்ந்தேன்...

என்ன சாதித்துவிட்டோம்... மாலை நாளிதழ்களுக்கு தலைப்புச்செய்தி கொடுத்ததைத்தவிர... :-(

வானம்பாடிகள் said...

இண்ணைக்கு கடையடைப்போ?

பழமைபேசி said...

//இண்ணைக்கு //

???

நீச்சல்காரன் said...

உண்மைதான் கடையடைப்பு என்பது விவசாயத்திலிருந்து வணிகம் வரை உற்பத்தி பாதிப்பை ஏற்படுத்துவதுதான். ஒரு சாமானியராய், பயனாலராய் வரும் சிரமத்தை பொறுத்துக் கொண்டு நமது கோரிக்கையை வைப்பதுதான் அறப்போராட்டம். பிரச்சனைகளை உருவாக்குபவனும், கட்டுப்படுத்த வேண்டியவனும், எதிர்கொள்ளும் வல்லமை கொண்டவனும், நேர்மையாய் தீர்த்துவைக்க வேண்டியவனும் எதுவும் செய்ய முடியாது, பாதிக்கப்பட்டவன் வாய்திறக்காவிட்டால்!

க.பாலாசி said...

செம...

பிரயோஜனம் இல்லாத ஒன்று.. ஒருநாள் விடுமுறையைத்தவிர... செவிடங்காதுல தங்கத்தாலயே சங்கு செஞ்சி ஊதினாலும் கேக்காது...

sasikala said...

பிரச்சனைகளை உருவாக்குபவனும், கட்டுப்படுத்த வேண்டியவனும், எதிர்கொள்ளும் வல்லமை கொண்டவனும், நேர்மையாய் தீர்த்துவைக்க வேண்டியவனும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் வரையில், சாமானியன் இப்படி அடைத்துக்கொண்டுதான் இருக்க வேண்டியிருக்கிறது, வாயையும் அவ்வப்போது கடைகளையும்.
உண்மையான வரிகள் .

Saravanan TS said...

நல்ல பதிவு

நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை

இருந்தும் இல்லாமலும் இருக்கிறது.

பார்ப்போம் நம்பிக்கையுடன்.

ஸ்ரீராம். said...

மொத்தத்தில் மனிதம் மறைந்து கொண்டே வருகிறது.