மகத்தான சாதனைக்கு மகிழ்வான பாராட்டு

எதனோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு ஒரு கிராமப் பள்ளி தன்னை உயர்த்திக் கொண்டிருப்பதை ஏற்கனவே கல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி இடுகை வாயிலாக அறிந்திருக்க வாய்ப்புண்டு.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் இருக்கும் இராமம்பாளையம் பள்ளி இன்றைக்கு தமிழகத்தின் பெரும்பாலான கல்வி அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. சரஸ்வதி மற்றும் ஆசிரியர் திரு.பிராங்கிளின் ஆகியோரின் முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது. எந்தப் பிரதிபலனையும் எதிர்நோக்காமல், கல்வியை வெகு சிறப்பாக அளிக்க நினைத்த இந்த நல்லுல்லங்களை கோவை மாவட்ட நிர்வாகம் சரியான அளவில் அங்கீகரித்திருப்பதை அறியும் போது பெருமகிழ்வாக இருக்கின்றது. பள்ளி குறித்து ஒரு ஆவணப்படம் தயாராகவுள்ளது.

இந்தப் பள்ளியில் உள்ள வகுப்பறைகள் போல், மாவட்டத்தில் பல பள்ளிகளில் வகுப்பறைகளின் தரம் உயர்த்தப்படவேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருப்பதும் இதற்குச் சான்றாகும். அதையொட்டி ஆனைகட்டி மற்றும் பொள்ளாச்சியில் இரண்டு பள்ளிகளை மேம்படுத்த ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. 

”அனைவருக்கும் கல்வி இயக்கம்” இராமம்பாளையம் பள்ளிக்கு கூடுதலாக  கட்டிடம் கட்டவும், சுற்றுச்சுவர் அமைக்கவும் நிதி 11 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மகிழ்ச்சியான செய்திகள். சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.ப்ராங்கிளின் அவர்களிடம் வகுப்பறையை சிறப்பாக அமைத்தது குறித்த ஒட்டுமொத்தத் திட்டத்தையும் பெற்று மாநில அரசிடம் அளித்துள்ளார். சிறப்பாகச் செய்திட்ட பணி, மிகச் சரியான நேரத்தில் அதற்கான அங்கீகாரம் பெறுவது மிகுந்த சிறப்புக்குரியது.

இந்நிலையில் எப்போதும் சிறப்பானவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நான் சார்ந்திருக்கும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் பள்ளி குறித்த கட்டுரையை சில மாதங்களுக்கு முன் சங்க இதழில் வெளியிட்டிருந்தது. அதையொட்டி கடந்த இயக்குனர்கள் குழுக்கூட்டத்தில் அந்த ஆசிரியப்பெருமக்களை அழைத்து பாராட்டிட முடிவெடுக்கப்பட்டு  15.12.2011 அன்று பாராட்டுவிழா நடத்தப்பட்டது.பாராட்டுக் கூட்டத்தில் இராமம்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. சரஸ்வதி அவர்களும், ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை அரிமா சங்கத்தலைவர் அரிமா. S.மகேஸ்வரன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். அன்றைய சிறப்பு விருந்தினரான முனைவர் சாரோன் செந்தில்குமார் அவர்கள் ஆசிரியர்கள் இருவரையும் பாராட்டிப்பேசி நினைவுப் பரிசினை வழங்கினார்.தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதி அவர்கள் ஏற்புரை நிகழ்த்தும்போது, கல்விக்கூடம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டதின் பெருமை முழுக்க முழுக்க திரு. பிராங்கிளின் அவர்களையே சாரும் என அகமகிழப் பாராட்டினார். மேலும் இதுதான் முதல் பாராட்டு என்றும், அது மகிழ்ச்சி தருவதாகவும், அதே சமயம் இது போன்ற பாராட்டுகளை எதிர்நோக்கி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை என்றும் கூறினார்.உண்மையில் திரு.பிராங்கிளின் மற்றும் திருமதி. சரஸ்வதி ஆகியோரின் உழைப்பிற்கு, செய்த அரிய சாதனைகளுக்கு முன் எங்கள் சங்கம் நடத்திய பாராட்டுவிழா என்பது என்பது மிகமிகச் சாதாரணமே. அதே சமயம் அவர்களை ஈரோட்டில் இருக்கும் நூற்றுக்கணக்கான நபர்களிடம் அடையாளப்படுத்தியிருக்கின்றோம் என்பது மிகுந்த மனநிறைவைத் தருகின்றது.

தன்னலம் சிறிதும் பாராது அவர்கள் ஆற்றிய சேவை உண்மையில் போற்றுதலுக்குரியது. மீண்டும் ஒருமுறை என் மனம் கனிந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

திரு.பிராங்ளின் அவர்களைத் தொடர்புகொள்ள... 99424-72672       franklinmtp@gmail.com,  pupsramampalayam@gmail.com 


பள்ளி தொடர்பான சுட்டிகள்:-

11 comments:

வானம்பாடிகள் said...

Well Done Sir!!

Anonymous said...

தகுதியானவர்களுக்கு பாராட்டி சிறப்பித்த ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்திற்கு மனதார நன்றிகள்..மற்றும் பாராட்டுகள்...

ராமலக்ஷ்மி said...

// எந்தப் பிரதிபலனையும் எதிர்நோக்காமல், கல்வியை வெகு சிறப்பாக அளிக்க நினைத்த இந்த நல்லுல்லங்களை கோவை மாவட்ட நிர்வாகம் சரியான அளவில் அங்கீகரித்திருப்பதை அறியும் போது பெருமகிழ்வாக இருக்கின்றது.//

எங்களுக்கும். பகிர்வுக்கு நன்றி.

தீபா நாகராணி said...

மகத்தான சாதனைக்கு மகிழ்வான பாராட்டு //
தேவையான நேரத்தில் சரியான நபர்களுக்கு அளிக்கப்படும் பாராட்டு, பலருக்கும் உத்வேகம் அளிக்கும்...
இப்படி ஒரு பாராட்டு விழா நடத்திய உங்களை... நான் பாராட்டுகிறேன்... :)

Selvakumar selvu said...

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏற்கெனவே அந்தப் பள்ளியைப் பற்றியும், அவர்களின் சிறப்பான பணியைப் பற்றியும் அறிந்துள்ளேன். அவர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்களே!

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - நல்லதொரு சேவையினை அமைதியாகச் செய்து வருபவர்களை - தேடிக் கண்டு பிடித்து அங்கீகாரம் கொடுத்துப் பாராட்டியது நன்று. மாவட்ட நிர்வாகம் அங்கீகரிப்பதும் பராட்டுவதும் தங்களின் முதல் கட்டுரைகளாலும் இருக்கலாம். நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

க.பாலாசி said...

மகிழ்ச்சியான செய்தி..

Muthu Rathinam said...

இது போன்ற பாராட்டுகள் ,மற்றவரையும் நற்பணி செய்ய தூண்டு கோலாக

அமையும். அரிமா சங்கத்திற்கு என் பாராட்டுக்கள் .

நன்றி.

முத்து ரத்தினம், சவுதி அரேபியா.

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

நல்ல வேலையெல்லாம் செய்றீங்க...எங்களை சேர்த்துக்க மாட்டேங்கறீங்க..

சீனி மோகன் said...

அன்பு கதிர்,
மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. திருமதி சரஸ்வதியையும், திரு ஃபிராங்ளினையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். கல்வி வியாபாரமாகிய இன்றைய சூழலில் தன்னலம் கருதாது பணியாற்றும் அவ்விருவருக்கும் எனது தாழ்மையான வணக்கங்கள். நானும் ஒரு ஆசிரியன் என்பது மேலும் எனக்கு மகிழ்வைத் தருகிறது. அந்தப் பள்ளிக்கு விரைவில் சென்று அவர்களை நேரில் பாராட்டிவிட்டு வர வேண்டும் என்ற உணர்வை உங்கள் பதிவு ஏற்படுத்துகிறது.
அன்புடன்,
சீனி. மோகன்

சீனி மோகன் said...

என் முகநூலில் இந்தப் பதிவின் இணைப்பு கொடுத்திருக்கிறேன்.