தொலைவு அறிந்திடாப் பயணம்

பிறக்கும் வரை மரணம் குறித்த பேச்சுக்கு அவசியமிருப்பதில்லை. பிறந்த நொடியிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது மரணம் என்பதை நோக்கித்தான் இந்த வாழ்க்கை என்பது. மரணம் நோக்கிய பயணமே ஒருவரின் வாழ்க்கையின் நீளம். ஆனால் அந்த நீளம் என்னவென்று தெரியாததுதான் ஒரு வாழ்க்கையின் மாயவித்தை.

மிக நீண்டதாய், செம்மைப்படுத்தப்பட்ட பாதையாய் இருக்கும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் நகரும், ஓடும் பயணத்தின் அத்தனை கொண்டாட்டங்களையும் ஒரு மரணத்தின் வாயிலாக ஒரேயடியாய் தனக்குள்ளே சுழற்றிப்போட்டு மென்று தின்றுவிட்டு இறுமாப்போடு ஏப்பம் விட்டும் சிரித்திட விதிக்கும், விதியின் முகமாய்த் தெரியும் மரணத்திற்கும் மட்டுமே சாத்தியப்படுகின்றன.

இது நடந்தேதீரும் என நம்பும் எது ஒன்றும் நடக்காமல் போகலாம் அல்லது நடக்கவே நடக்காது என நினைத்தது மிக இயல்பாக நடந்தேறலாம். எதுவும் நிரந்தமில்லாத உலகில், சர்வநிச்சயமானது, நிரந்தரமானது மரணம் என்பது மட்டுமே. யாருக்குத்தான் தாம் ஒருநாள் மரணத்தை சந்திப்போம் என்பதில் சந்தேகம் இருந்துவிடப்போகின்றது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் ஒருவரும் தயாராக இல்லை. ஒருவேளை மரணத்தின் வாசமும், தெறிப்பும் எவ்வளவு கூர்மை மிகுந்ததாக இருப்பதால் அப்படியிருக்கலாம்.

சங்கிலியாய் பிணைந்திருக்கும் நட்புகளில், உறவுகளில் சொல்லாமல் கொள்ளாமல், ஏதோ ஒரு சூழலின் பொருட்டு, மெதுவாய் தனக்குள் குழைந்து, நெகிழ்ந்து, சிதைந்து, பட்டெனச் சிதறி தன்னை எல்லோரிடமிருந்தும் துண்டித்துக்கொண்டு, மண் துகள்களாய், சாம்பல்தூசுகளாய் மனிதர்கள் கரைந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். சட்டெனத் துண்டித்துப்போகும் போது அங்கே தோன்றிடும் வெற்றிடத்தில் நசநசக்கும் ஈரமும், மருளடிக்கும் இருளும், குலைநடுங்க வைக்கும் மௌனத்தின் ஓலமும், அனலாய் தகிக்கும் வெப்பமும், மூச்சை அமிழ்த்தும் வெறுமையுமென, புரட்டிப்போடும் உணர்வுகள் அதை அனுபவிப்பர்களுக்கு மட்டும்தானே தெரியும். ஏதோ சூழலில் எந்த முன்னறிவிப்புமின்றி விட்டு விடுதலையாகி மறைந்து, கரைந்து போகின்றவர்களுக்கு என்ன தெரிந்துவிடப்போகிறது.

கடந்துபோகும் கால நதியில் நம்மைவிட்டு நகர்ந்து போகும் மனித உறவுகளின் எண்ணிக்கையை எண்ணிவிட எத்தனை விரல்கள் இருந்தாலும் போதாது. ஆனால், உறவுகளை தனக்குள் ஊற்றிக்கரைத்த மரணத்தால், ஒருபோதும் அவர்களை மறக்கச்செய்துவிட முடிவதில்லை. மரணத்தில் தொலைத்த நெருக்கமான ஒரே ஒரு உறவை மனதுக்குள் மீட்டிப்பாருங்கள், இதுவரை நீங்கள் நேசித்து, மரணம் கொய்துபோனவர்கள் வரிசையாய் மனதிற்குள் வந்து படபடவென சிறகடிப்பார்கள். எப்படிப் பார்க்கினும் மரணம் வழங்கும் தண்டனையை வாழ்ந்து கொண்டிருப்பவன் மட்டுமே அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

உண்மையாக அமைகின்றதா அல்லது ஒரு மாயையான உணர்வா எனத் தெரிவதில்லை, மரணம் கொய்து நம்மைப் பிரிந்தவர்கள் குறித்து எப்படிக் கணக்கிட்டுப்பார்த்தாலும் நாம் அவர்களையோ அல்லது அவர்கள் நம்மையோ அதிகம் நேசித்திருப்பதுபோல் ஒரு உணர்வு மிகுந்திருக்கத்தான் செய்கின்றது.

எத்தனை மறுத்தாலும், தடுத்தாலும், தவிர்த்தாலும் நம்மேல் ஏதோ ஒரு ஓரத்தில் மரணத்தின் வீச்சமும், கருமையும், வெம்மையும், அதீதக்குளிரும், நசநசப்பும், வறட்சியும் நீண்டு படுத்துத்தான் இருக்கின்றது. எத்தனைதான் புதிதாய் பூக்கும் உறவுகள் அதை விரட்டிவிட முயன்றாலும் ஒரு போதும் முற்றிலும் விரட்டிவிட முடிவதில்லை!

மரணம் போதித்துவிட்டுச் செல்லும் பாடம் அவ்வளவு எளிதானதல்ல. போதித்த நொடியில் அப்பட்டமாய் புரிகிறது அதன் அடர்த்தி. போகப்போக எல்லாம் நீர்த்துப்போகிறது. நீர்த்துப்போன நிலையில் மீண்டும் இன்னொரு பாடத்தை எதிர்பாரா நொடியில் வெகுவேகமாய் திணித்து விட்டு கள்ளத்தனமாய் புன்னகைக்கவும் முடிகிறது மரணத்தால். இதையெல்லாம் யார் செய்கிறார்கள், ஏன் இப்படி நிகழ்கிறது எனும் எதற்கும் பதில்களற்ற வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

மரணத்தை  எதிரியென்று விரட்டிடவா, அரசன் என்று போற்றிடவா, அசுரன் என்று மருண்டிடவா, போதிக்கும் குருவென்று வணங்கிடவா, வள்ளல் என்று கையேந்திடவா, அழித்தொழிக்கும் அரக்கன் என்று தூற்றிடவா, விடுதலையளிக்கும் நீதிமான் என்று பணிந்திடவா, சிறையிலடைக்கும் காவலன் என்று மிரண்டிடவா என்ற குழப்பம் சிந்தனைச் சிலந்தியின் இழைகளாய் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. 

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் ஜெயிக்கிறோம், தோற்கிறோம், கொண்டாடுகிறோம், கூப்பாடு போடுகிறோம், எல்லாம் இறுதியாக ஒரு நாள் மரணத்திடம் தோற்றுப்போவதற்காவே. தோற்றுப்போனதை உணரும் போது, அதன் வலியறிய நாம் இருக்கப்போவதில்லை, அதைச் சுமக்கத்தான் அக்கம் பக்கமென அதீத அன்போடு தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம் சில உறவுகளை.

-0-

9 comments:

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

உண்மைதான் ...

தி.தமிழ் இளங்கோ said...

//மரணம் போதித்துவிட்டுச் செல்லும் பாடம் அவ்வளவு எளிதானதல்ல. போதித்த நொடியில் அப்பட்டமாய் புரிகிறது அதன் அடர்த்தி. போகப்போக எல்லாம் நீர்த்துப்போகிறது. நீர்த்துப்போன நிலையில் மீண்டும் இன்னொரு பாடத்தை எதிர்பாரா நொடியில் வெகுவேகமாய் திணித்து விட்டு கள்ளத்தனமாய் புன்னகைக்கவும் முடிகிறது மரணத்தால். இதையெல்லாம் யார் செய்கிறார்கள், ஏன் இப்படி நிகழ்கிறது எனும் எதற்கும் பதில்களற்ற வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்//

ஏதோ ஒரு மரணம் தங்களை ஆழ சிந்திக்க வைத்துள்ளது.அண்மையில் குளத்தில் மூழ்கி இறந்த எனது தங்கை மகனின் மரணம் ( 10 ஆம் வகுப்பு மாணவன்)இதனைத்தான் உணர்த்தியது.நல்ல கட்டுரை.

ராமலக்ஷ்மி said...

தொலைவு அறிந்திடாப் பயணம் பற்றி உணர்வுப்பூர்வமான குறிப்பு.

VELU.G said...

good posting

Anu said...

//எப்படிப் பார்க்கினும் மரணம் வழங்கும் தண்டனையை வாழ்ந்து கொண்டிருப்பவன் மட்டுமே அனுபவிக்க வேண்டியிருக்கிறது.//

கசப்பான உண்மை.

VELU.G said...

வாழ்க்கையை நிரந்தரமாய் நிணைக்கும் நமக்கு மரணம் கடினமாகவே உள்ளது.

Suresh Subramanian said...

unmai... maranam vali thaan....www.rishvan.com

Durga Karthik. said...

உண்மையான வலியின் பதிவு.மரணம் நமக்குள் ஒரு மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது.சில சமயங்களில் தன்மானம் இழத்தல் கூட மரண வலியை கொடுக்கும்.மற்றவருக்கு தன் பிரிவின் துயரத்தை தராத மரணம் உண்டு.அவர்கள் தன்மானம் உடையவர்கள்.

Unknown said...

நிலையாமையே நிஜம்

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு.

எல்லாம் சில காலம் தான்