கருஞ்சிறுத்தை காட்டெருமை
கவரிமான் யானை பூனை
புணர்ந்து புள்ளகுட்டி போட்டு
தனதாய் வாழ்ந்த பூமியை
தகரத்தில் தப்பட்டையடித்து தீமூட்டி
ஓடவிரட்டி ஒருவழியாய்க் கைப்பற்றி
செடிகளைச் சிதைத்து
மரங்களை முறித்து
வெட்டித்தோண்டி பெயர்த்துப்புரட்டி
மேடுபள்ளம் நிரவி
எல்லைக்கல் நிறுத்தி
எங்களுக்கென்று பூமி சமைத்து
இத்தனைகாலம் பொழச்சாச்சு…
தாத்தன் காலத்தில் கூடாரம்போட்டு
அப்பன் காலத்தில் குடிசைகள்கட்டி
கடைசியாய் காசு சேர்த்து கடனோடு
கான்கிரீட்டில் வீடுகட்டி நிமிர்ந்தபோது
ஏதோ தாது இருக்குன்னு
இன்னொரு நாட்டு பல(ண)சாலிக்கு
இளிச்சிக்கிட்டே கொடுத்துச்சு அரசாங்கம்
எங்கள் நிலங்களை விட்டோட
ஓராயிரம் காரணங்கள் இல்லை
ஓடுன ஒரு சினை மானோ
கதறலோடு கருகிய காட்டெருமையோ
ஒரு சொல்லில் உதிர்த்த
ஒற்றைச் சாபமாகத்தான் இருக்கும்..
எல்லாச் சாபமும் இளைச்சவனுக்குத்தான்
என்பது மானுக்கும் பூனைக்கும் புரிய
அதுகளும் மனுசனாப் பொறக்கனுமே!
அடித்து விரட்ட கொஞ்சம் தகரங்களோடும்
கொளுத்திச் சிதைக்க தீப்பந்தங்களோடும்
இங்கிருந்து ஓடுகிறோம் உள்நாட்டு அகதிகளாய்
ஓடி நிற்கப்போவது பிறிதொரு காடா
இல்லை நாடான்னு முடிவு செய்றது யார்?
-0-
12 comments:
அருமை.
காடழித்து நாடு செய்யும் கேடுகெட்ட விலங்குகள் நாம்...
மனிதன் மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறான்...
என்ன வீடுகளில் வசிக்கிறோம்..
ஒரு காத்திரமான குட்டிக்கதை.
ஒரு ஈரமுள்ள மனசின் மண்பற்று.
இன்றைக்கென்ன சுந்தர்ஜீ நீங்கள்
அடித்து நொறுக்குகிறீர்கள் கதிர்.
என்ன சொல்ல, இது அழகிய கவிதானுபவம்.
/ஓடி நிற்கப்போவது பிறிதொரு காடா
இல்லை நாடான்னு முடிவு செய்றது யார்?/
வெரல்ல மை வச்சிக்கிட்டமுல்ல. அவிங்கதான்.
வேற யார்? தாது’தான்!
தின்னத்தின்னத் தீராதிந்த
மானுடப் பசி
தன்னையே தின்னாலும் தீராதிந்த
மானுடப் பசி!
உள்நாட்டு அகதியா...உங்களையும் துரத்திட்டாங்களா கதிர் !
ஆழமான சேதி சொல்லும் கவிதை. எல்லோருக்குமானதாய் படைக்கப்பட்ட பூமியைத் தனக்கானதாய் உரிமை கொண்டாடி அதற்காக அடித்தும் கொள்ளும் உலகத்தின் முன் வைக்கப்பட்டிருக்கும் கேள்வி.
பூங்கொத்து!
:(((
தொடரட்டும்
அடித்து விரட்ட கொஞ்சம் தகரங்களோடும்
கொளுத்திச் சிதைக்க தீப்பந்தங்களோடும்
இங்கிருந்து ஓடுகிறோம் உள்நாட்டு அகதிகளாய்
ஓடி நிற்கப்போவது பிறிதொரு காடா
இல்லை நாடான்னு முடிவு செய்றது யார்?
= நெகிழ வைக்கிறது. இப்போது படித்துக் கொண்டிருப்பது - "உலராக் கண்ணீர் (பழங்குடியினரின் வாழ்வியல் துயரம்) - ஜனகப்ரியா" - இந்த அவலங்கள் அனைத்தையும் எழுதியிருக்கிறார்கள்.
எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Erode Kathir.
Post a Comment