பலியாடு


கசகசவெனக் கூட்டம் கோவில் பந்தல் முழுதும். தெற்கு மூலையில் இளங்குட்டிகளாகப் பார்த்து வாங்கிய ஐந்து ஆட்டுக் குட்டிகள் திமுதிமுவென நகரும் மக்களை வெறிக்கவெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தன. நீண்ட நாட்களுக்குப் பிறகு திருவிழாவில் மட்டும் சந்தித்துக்கொள்ளும் வெளியூர் சிநேகிதர்கள் கண்கள் விரிய கை பிடித்துப் பேசிக் கொண்டார்கள், கூடவே நண்பர்களின் வசதிகளை நடையுடை பாவனைகளை வைத்து எடைபோடவும் முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

வாய்க்கட்டுக் கட்டிய பூசாரி பொட்டுச்சாமிக்கு மணியடித்து பூசை செய்து கொண்டிருந்தார். முன்பெல்லாம் வெள்ளை வேட்டிதான் கட்டுவார்கள். என்ன நாகரிகமோ தெரியவில்லை சில ஆண்டுகளாக காவி உடுப்பு உடுத்துகிறார்கள்.

பறைமேளம் முழங்கிக் கொண்டிருந்தது. பொட்டுச்சாமிக்கு பூசை முடிந்தவுடன் மாரியம்மனுக்கு அக்னிச்சட்டி எடுக்கும்முன் ஊர்க்காரர்கள் ஆடுவது வழக்கம். ஆட்டம் சூடுபிடிக்கிற மாதிரி அடி இருக்கவேண்டும் என பறையடிப்பவரிடம் ஒரு இளவட்டம் சொல்லிக்கொண்டிருந்தார். பறையடிப்பவர் தலைசொறிய, வேட்டியைத் தூக்கி உள்ளாடைப் பையில் இருந்த இரண்டு குவாட்டர் பாட்டில்களை எடுத்து அவர் கையில் திணித்தார். பறைச் சத்தம் கூடிக்கொண்டே போனது.

”இதப்பாருங்க, பாட்ல குடுத்துப்புட்டு போன வருசமாட்ட தப்ப கிழிச்சுப்புட்டீங்னா, தோலுக்கு ஒரு எருமக்கண்ணு குடுத்துறனும் ஆமா” என்றதைக் கேட்ட அருகிலிருந்தவர்கள் சிரித்தனர்.

இதேபோல் போனவருடம் சரக்கு வாங்கிக்குடுத்து, குடிக்கப் போன நேரத்தில் சரக்கின் மிதப்பில் இருந்த சில இளவட்டங்கள் பறையை எடுத்து அடித்ததில் பறை கிழிந்துபோய்விட, பண்டிகை முடிந்து நடக்கும் பஞ்சாயத்தில் அதுகுறித்தும் முறையிட, பறையை வெச்சுட்டு நீங்க எங்கே போனீங்க என ஊர்த்தலைவர் கேட்டதற்கு அவர்கள் தலையை நட்டுக்கொண்டு நின்றதாகக் கேள்வி. அதன் பின்னர் கிழிந்த பறைக்கு என்று கெஞ்சிக்கூத்தாடி உடைத்தவர்களிடம் பிறிதொருநாளில் கொஞ்சம் கூடுதலாகவே காசும் வாங்கிவிட்டனர். என்னதான் காசு வாங்கினாலும் பறை கிழிந்துபோனது ஒரு ஆறாத வலியாகவே அவர்களுக்குள் இருந்திருக்கிறது.

பொட்டுச்சாமிக்கு பூசை முடிய, ”ம்ம்ம்…. கெடாக்குட்டிய கொண்டாங்க” என்ற குரலுக்கு தயாராக நின்றுகொண்டிருந்தது ஒரு ஆட்டுக்குட்டி மருண்ட விழிகளோடு.

ஐந்து பேராக நின்ற இடத்தில் தன்னை மட்டும் தனியே அழைத்து வந்ததை அந்த ஆட்டுக்குட்டி பெருமையாக நினைத்ததாலோ என்னவோ எந்தத் தயக்கமும் இன்றி கூட்டத்தினூடாக கயிறு செல்லும் திசை நோக்கி இலகுவாக வந்து கொண்டிருந்தது. கூட்டத்தின் மையத்தில் இருந்த காலி இடத்தில் நின்று சுற்றிலும் நோட்டம் விட்ட ஆட்டுக்குட்டியின் கயிறு கொஞ்சம் கூடுதலாய் நெருக்கிப் பிடிக்கப்பட்டது. 

மணியையும் தட்டையும் கீழே வைத்துவிட்டு தீர்த்தச் சொம்போடு, கையில் கொஞ்சம் அரளிப்பூ மாலையோடு வந்த பூசாரி, மாலையை ஒருவாறு ஆட்டின் கழுத்தில் சுற்றிவிட்டு சொம்போடு கை உயர்த்தி சாமியை கும்பிட்டு, தீர்த்தத்தை கையில் சரித்துத் தெளித்தார். சுற்றிலும் இருந்தவர்கள் கையெடுத்துக் கும்பிட ஆரம்பித்தனர்.

மாலையும் சுற்றிலும் நிற்கும் மனிதர்களின் கும்பிடுகளையும் தனக்கான மரியாதையாக நினைத்த ஆடு கூடுதல் கர்வத்தோடு நிற்க, தலையில் விழுந்த தீர்த்த தண்ணீர் பொடனி வழியே புறப்பட்டு குறுகுறுத்து முதுகு தொட, குறுகுறுப்புத் தாங்க முடியாமால் உடல் சிலுக்க…. ”ஹேகேய்” என உற்சாகக் குரலெழும்ப, பறைச்சத்தம் காதைப்பிளந்தது. திடீர் சத்தத்தில் நிதானத்தை இழந்த ஆடு சுற்றிலுமுள்ள கும்பலை நிமிர்ந்து பார்க்க நினைத்த விநாடி ’க்ளக்’கென விழுந்தது கழுத்தில் பளபளத்த கத்தி, துண்டான தலை தெறித்து விழ, தலையில்லா முக்கால் அடி தூரம் துள்ளிக்குதித்து விழுந்து, கால்களை உதைத்து துடித்து அடங்கியது.

சிதறியடிக்கும் இரத்தத்துளி கண்ட கூட்டம் அப்படியே பின்பக்கமாய் நகர, அவனின் இடது ஆட்காட்டி விரலில் ஒரு துளி வெதுவெதுப்பாய் மோதியது. கையை நிமிர்த்த, உயர்ந்த விரலில் நகத்திற்கு அருகே விழுந்த இரத்தத் துளி பாதி தோலிலும் பாதி நகத்திலும் மொட்டாய் நின்றது.

அவன் வெறித்த விரலை எட்டிப்பார்த்த நண்பன், அந்த விரலை இறுகப்பிடித்துக் கொண்டு “அட, இங்க பார்றா, ஓட்டு போடறதுக்கு மை வெச்ச மாதிரி வெரல்ல. எப்டியோ இருபது லிட்டர் பெட்ரோலும், இரண்டாயிரம் ரூவா பணமும் உனக்கு இல்லீடா” என்றான் கிண்டலும் கேலியுமாக!!!!

நாடகத்தனமான கற்பனையாக இருந்தாலும், ஒருகணம் அவனுக்கு ஏனோ அந்த துடிதுடித்து அடங்கிய ஆட்டுக்குட்டியோடு தன்னை பொருத்திப் பார்க்கத் தோன்றியது.

-0-

8 comments:

ப.கந்தசாமி said...

மனது வலிக்கிறது.

ராமலக்ஷ்மி said...

பதிவின் வகை நிறைய யோசிக்க வைக்கிறது.

vasu balaji said...

அது ஒன்னுமில்ல மேயரே. வித்தியாசமே இல்ல பாத்துக்கிடுங்க. நாம என்ன பண்றோம்
1. ஆடு மாதிரியே வாக்குச் சாவடிக்கிப் போறோம். வாங்கண்ணேன்னு கூட்டிக்கிட்டு போறானுவோ.

2. ஆட்டுக்கு மாலை போட்டா மாதிரியே நமக்கும் ஸ்லிப்பு குடுக்குறானுவோ.

3. ஆட்ட வெட்டிட்டு குழம்பை வைக்கிறோம். அவனுவோ நம்மளுக்கு வெட்டிட்டு அப்புறம் ஏண்டா இவனுக்கு போட்டோம்னு குழம்ப வைக்குறானுவோ.

4. அது முண்டம் மட்டும் என்னமோ ஓடிப் போறா மாதிரி துடிக்குது. நாம என்னமோ கிழிச்சிர்ரா மாதிரி பதிவுல பொங்குறோம்.

சரி சரி. 13ம் தேதி தவறாம யாரு நல்லா கவனிச்சாங்களோ அவங்களுக்கு குத்துவோம்.

Chitra said...

மே மாதம், மட்டன் பிரியாணி ரெடி!

செ.சரவணக்குமார் said...

அருமை கதிர் அண்ணா.

@ பாலா சார்!... கொலக்குத்து குத்துறீங்களே.. சிரிச்சி முடியல சாமி.

cheena (சீனா) said...

தலய ஆட்டியாsசு - உடல் சிலுத்துச்சோ - சும்மா ஆட்டிச்சோ - கணக்கு இல்ல - வெட்டுடா ........ நல்ல சிந்தனை - பலியாடு உவமையாக வாக்களர்களுக்கு ...... ம்ம்ம் - நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா

Veera D said...

நாடகத்தனமான கற்பனையல்ல.அதுதானே நிஜம்.

உங்கள் எழுத்தாற்றல் படைப்பிலக்கியத்துக்கானது என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு படைப்பு “பலியாடு”.

உங்கள் பதிவுகளின் வகைகளில் சிறுகதைகள் ஐந்து மட்டுமே உள்ளது. அதிகமாக வாழ்த்துக்கள்....

அன்புடன்,
வீரா

Sivamjothi said...

கொள்ள நெறிக்கு வள்ளல் பெருமான் மிகவும் முக்கியதுவம் கொடுக்கிறார்.

கொல்லா நெறியே குவலயம் ஓங்குக
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ
நாட்டிலே பலபெயர் நாட்டிப் பளிதர ஆடு பன்றிக் ,குக்குடங்கள்(கோழி )
பலிகடா முதலிய உயிரைப் போலியுறக் கொண்டே போகவுங் கண்டே பந்தி நொந்து உளம நடுக் குற்றேன் கலியுறு சிறிய தெய்வ வேங்கோயில் கண்டகாலத்தும் பயந்தேன் .

அதை போலவே வள்ளுவ பெருந்தகையும் ஒரு அதிகாரமாக சொல்லி இருக்கிறார்.

தன் ஊன் பெருக்கற்கு பிருதூன்(பிறது ஊன் )உண்பான் எங்கணும் ஆளும் அருள் .

கொல்லான் புலால் மறுத்தானை எல்லா உயிர்களும் கை கூப்பி தொழும் .


திருமந்திரத்தில்
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை

கொல்லாமல் கொன்றதைத் தின்னாமல்
- பட்டினத்தார்