போர்க்குற்ற நிரூபணத்தின் பின்னே…

ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வு அடுத்த நிமிடங்களில் மறுமுனைக்கு எட்டும் தொடர்புமிகு விஞ்ஞான உலகத்தில்தான் ஒரு பெரும் இனத்தை அழித்தொழித்த அவலம், போர்க்குற்றமாக அறிவிக்க கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளின் நாட்களை வலியோடு தின்று தீர்க்கவேண்டியிருக்கிறது. ஐ.நா. நிபுணர்குழு புதிதாய் ஒன்றையும் சொல்லவில்லை, நடந்தேறிய அகோரத்தனத்தின் கொஞ்சம் பகுதிகளை ஆம் என ஒப்புகை அளித்திருக்கிறது.

எந்த ஒரு மனிதனும், எந்த ஒரு தலைவனும், எந்த ஒரு நாடும் செய்யத்துணியாத இன அழிப்புப் போரை தம் மக்கள் மீதே தொடுத்த இலங்கை அரசின் கயமைத்தனத்தை பல கள்ள மௌனங்களுக்குப் பிறகு உலகம் காதில் வாங்கியிருக்கிறது. நடந்தேறிய கயமைத்தனமே கடைசியாக இருக்கும் வண்ணம், இலங்கை அரசு மேல் உலகம் எடுக்கும் நடவடிக்கை அமையவேண்டும்.

கண்ணுக்குகண், பல்லுக்குப்பல் கேட்கும் நிலையில் யாரும்மில்லை. இலங்கை அரசாங்கம் இழைத்த போற்குற்றத்தில் எம் இனம் இழந்தது கொஞ்சநஞ்சமல்ல. அதைவிட மிக முக்கியமானது இன்னும் தொடரும் இழப்பு உடனடியாக இத்தோடு நிறுத்தப்படவேண்டும். பாதுகாப்பு வளையத்திற்குள் வந்தவர்களை, உலகின் மிகக்கொடூரமானதொரு முகாமிற்குள் அடைத்து வைத்து சிறுகச் சிறுக உடல்ரீதியாக, உளவியல்ரீதியாக சிதைக்கும் அவலம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

இன்னும் முகாம்களில் எஞ்சி நிற்கும் மனித இனத்தை மீட்டெடுத்துக் காப்பாற்றவேண்டியது மிக மிக அவசரத்தேவையென்பதை மனிதாபிமானம் கொண்ட உலக நாடுகள் உணரவேண்டும்.

பயன்படுத்தக்கூடாத நச்சுக்குண்டுகளை வீசிய ஒரு அரசாங்கம், சரண் அடைந்தவர்களை உடைகளைந்து கண்களைக் கட்டி, கைகளைக் கட்டி, மண்டியிட பணித்து, காலால் உதைத்து பின்பக்கமாய் இருந்து சுட்டுக் கொன்ற ஒரு அரசாங்கம், ஆயுதம் தரிக்காத பெண் பிள்ளைகளை வன்புணர்ந்து உறுப்புகளைச் சிதைத்து வீசிய ஒரு அரசாங்கம், அதே மனிதர்களில் மிஞ்சியவர்களை எப்படி பாதுகாக்கும், நல்வாழ்வை அமைத்துக்கொடுக்கும் என நம்பமுடியும். 

ஆறு மாதங்களுக்கு முன்பு வவுனியா, ஓமந்தை முகாம்களை சாலைவழியே கடக்கும்போது கண்டபோதே உடலும் உயிரும் நடுங்கியது. நிழலற்ற மைதானத்தில் ஒரு மனிதன் குனிந்து செல்லும் அளவே இருக்கும் கூடாரத்திற்குள்ளே மழை, வெயில், குளிர் எல்லாவற்றையும் தாங்கி, கொஞ்சம் கொஞ்சமாய் சிதைந்து தங்களைத் தொலைத்து ஒரு பித்துப்பிடித்த மனோநிலையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இருக்கும் மனிதர்களை சமகாலத்தில் காண நேர்ந்தது. சில நாட்களுக்கு முன் கேட்டபோதும் அந்த முகாம்கள் அகற்றப்படாமல் அப்படியே இருக்கின்றன என்பதை அறியும் போது, மீள் குடியேற்றம் என்பது எந்தவிதமான அக்கறையோடும் நடைபெறுவதில்லை என்பதும் தெரிகிறது.

இதுவரை இலங்கை அரசாங்கம் காட்டிக்கொண்டிருந்த கண்ணாம்மூச்சி ஆட்டத்தின் கண்கட்டு அவிழ்க்கப்பட்டிருக்கிறது. அது  மிகப்பெரிய கயமைத்தனம் நிறைந்த வக்கிர ஆட்டம் என்ற உண்மை சற்றே காலம் தாழ்ந்து நிரூபணமாகியிருக்கிறது, இந்த நேரத்தை, இந்தச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உலக நாடுகள் உடனடியாக எஞ்சியிருக்கும் பாவப்பட்ட, பாரம் சுமத்தப்பட்ட அந்த மனித உயிர்களை மீட்டெடுக்க வேண்டும். தடைவிதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டவர் குழுக்களை அனுமதித்து, இன்னும் புதைந்து கிடக்கும் உண்மைகளை மீட்டெடுக்க வேண்டும்.

இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்ட மக்கள் இனியாவது சுதந்திரக்காற்றை சுவாசிக்கவேண்டும், அத்தோடு இனப்படுகொலை செய்த இராஜபக்‌ஷே (எ) ”இலங்கையின் குடும்ப அரசாங்க நிறுவனம்” அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். காலம் எல்லாவற்றினும் வலிமையானது….. பார்ப்போம்… நல்லதே நடக்க(னு)ம்.
-0-
பொறுப்பி: உலக தமிழ்ச் செய்திகள் வலைப்பக்கத்திற்காக எழுதியது.
-0-

10 comments:

Santhappan சாந்தப்பன் said...

நண்பர்களே, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை போர் குற்றங்கள் பற்றிய அறிக்கை வெளியாகியிருக்கும் இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்று படவேண்டியது அவசியம். பின்வரும் FaceBook பக்கத்தில் இலங்கை இனப் படுகொலை பற்றிய தகவல்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டு வருகிறது. உங்களை இணைத்துக் கொள்ளாவும்("Like" / "விருப்பம்”) .. உங்கள் நண்பர்களையும் இந்த முயற்சியில் பங்கு பெற அழைக்கவும்.

இப்போது விட்டால் இனி எப்போதும் இல்லை!!

Tamil Genocide/WarCrimes by Sri Lanka

பிரபாகர் said...

பற்றிக்கொண்டு வருகிறது கதிர்... கண்டிப்பாய் குற்றம் புரிந்த ஈன நாய்கள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்...

பிரபாகர்...

ஊர்சுற்றி said...

போரின் போது உலக அளவில் எதிப்பு வந்த போதெல்லாம் இந்தியாவின் கண்மூடித்தனமான ஆதரவும், பண உதவியும், ஆயுத உதவியுமே இத்தனை இழப்புகளுக்கும் அடிப்படை காரணம்,

அதற்கேற்ப மஞ்சத்துண்டு மகாதேவன் தமிழர்களை தந்தி அடிக்க சொல்லியும் , மனித சங்கிலி நடத்தவும், இத்தாலி அன்னைக்கு கடிதம் போடவும், கடற்கரையில் படுத்து காற்று வாங்கிகொண்டு உண்ணாவிரத நாடகம் போட்டும், இலவசங்களை அள்ளி இறைத்தும்... மக்களை திசைதிருப்பிகொண்டு இருந்தார்... சோத்துக்கும், இலவசத்துக்கும் அலையும் நமது கூட்டமும் இனப்படுகொலையை மறந்து இன்பமாய் வாழ்கிறது...

காத்திருந்த மலையாளிகள் கூட்டம் திட்டமிட்டு வஞ்சம் தீர்த்துக்கொண்டது, இன்னும் தீர்த்துகொண்டிருக்கிறது...

சொந்த நாட்டு மீனவர்களை கொல்லும் போதே கண்டுகொள்ளாத இந்த அரசு, அழிக்கப்பட்ட இனத்தை பற்றியா கவலை பட போகிறது

ஒரு இனத்தையே அழித்தாயிற்று, இந்த கண்டனத்தை எப்படி சமாளிக்கவேண்டும் என்று தெரியாதவர்களா அவர்கள்...அமெரிக்கா, இந்தியா , சீனா, ரஷ்யா , ஜப்பான் , ஈரான் , பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உதவியுடன் ஐ நா சபையில் இந்த விவகாரம் முறியடிக்கபடும்....அதையும் தாங்கிக்கொள்ள இப்பொழுதே தயாராக வேண்டியது அவசியம்....

வானம்பாடிகள் said...

அதான் சொல்லீட்டாரே மங்கிமூன். அவனா முன்வந்து சரி விசாரிச்சிக்கோன்னு சொல்லோணும்னு. ஆயுதம் குடுத்த சைனா,ரஷ்யா,சொக்கு எல்லாம் விட்ருவாய்ங்களா:(

*இயற்கை ராஜி* said...

ஹ்ம்ம்.. இழந்தவை பலப் பல....இனிமேல், இருப்பவர்களுக்காவது விடிவு காலம் பிறக்கவேண்டும்..:-(

க.பாலாசி said...

எவ்வளவு ஆதாரங்கள் இருந்தாலும் தாங்கள் போர்க்குற்றவாளின்னு ராஜபக்ஷேவே ஒத்துகிட்டாதான் அதுசம்பந்தமா மேற்கொண்டு விசாரிக்க முடியுமாம்... உண்மையிலேயே இவனுங்க மனுஷங்களான்னு யோசிக்கத்தோணுது.. என்ன கொடுமை பாருங்க..

ஹேமா said...

இதில்தான் நமது ஒற்றுமையும் சிங்களவர்களின் ஒற்றுமையும்.குற்றப்பத்திரிகை பிழையானது என்று ஒன்றுகூடி கையெழுத்துப் போடத் தொடங்கிவிட்டார்கள் !

Yoga.s.FR said...

மூடிய அறைக்குள் பாதுகாப்புச் சபைக் கூட்டம் சற்று நேரத்துக்கு முன் நடைபெற்றதாகத் தெரிகிறது! ஐ.நா செயலர் நாடி பிடித்துப் பார்த்திருப்பார் போலிருக்கிறது,இது ஒன்றும் குற்றப் பத்திரிகை அல்ல!ஐ.நா செயலருக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் மூவரடங்கிய நிபுணர் குழுவின் பரிந்துரை மட்டுமே!அதனால்,ஐ.நா செயலரே என்ன செய்ய வேண்டுமென்று முடிவு செய்ய வேண்டும்.பார்க்கலாம்!!!

தெய்வசுகந்தி said...

:(((

Anonymous said...

@ ஹேமா,
//இதில்தான் நமது ஒற்றுமையும் சிங்களவர்களின் ஒற்றுமையும்.குற்றப்பத்திரிகை பிழையானது என்று ஒன்றுகூடி கையெழுத்துப் போடத் தொடங்கிவிட்டார்கள் !//
எங்களவர்கள் இயக்கம் செய்த பிழை என்ன, தலைவர் எப்படி இயக்கத்தை நடத்தி இருக்க வேண்டும் என்று எழுதித்தள்ளுவதில் பிசி. ஒரு நாளும் எங்களுக்கு விடிவு கிடைக்காது. சிங்களவர்களிடம் படிக்க வேண்டிய ஒன்று - ஒற்றுமை.