பழமைபேசியும் கும்க்கியும் பின்னே நாங்களும்!


வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பூத்துக்கொண்டுதான் இருக்கின்றது நட்’பூ’!  பதிவர்களால் பூத்த நட்பின் வாசனை அலாதியானது. அன்பு நண்பர் பழமைபேசியின் இந்த முறை இந்திய வருகையையொட்டி பதிவர்களோடு ஆசனூர் இரண்டு நாள் சென்றுவரலாம் என திட்டமிட்டோம், எங்களோடு பதிவர் கும்க்கி அவர்களும் வந்து கலந்துகொள்வதாக உறுதியளித்தார். 

ஏப்ரல் 1ம் தேதி மாலை ஈரோட்டிலிருந்து நான், அண்ணன் தாமோதர் சந்துரு, ஆரூரன், ஜாபர், அண்ணன் விஸ்வம், மகேந்திரன், சரவணன், ராஜாசேதுபதி ஆகியோர் புறப்பட்டோம். சத்தியை அடைந்த போது கோவையிலிருந்து வந்த பழமைபேசி சத்தி பேருந்து நிலையத்தில் எங்களோடு இணைந்துகொண்டார். கிருஷ்ணகிரியிலிருந்து நீண்ட பயணத்திற்குப் பிறகு கும்க்கி தனது சகோதரர் பாலு அவர்களுடன் சத்தியமங்களத்தில் இணைந்தார். இரவு அரேபாளையத்தில் இருக்கும் தங்குமிடத்தை அடைந்தோம்.



விடுதியின் முன்பக்கம் படுக்கை விரிப்புகளை விரித்து அமர, ஏதோ ஒரு புள்ளியில் ஆரம்பித்த பேச்சு, எதனெதன் வழியாகவோ பயணப்பட்டு பின்னிரவு தாண்டியும் சுறுசுறுப்பாக நகர்ந்து கொண்டேயிருந்தது. பேச்சுக்குத்துணையாக இரவு 2 மணிக்கு மேல் இடைவிடாமல் கொட்டத் துவங்கியது பெருமழையொன்று.



எப்போது உறங்கினோம் எனத்தெரியவில்லை, எழுந்து பார்க்கும் போது, இரவு பேச்சு ஏற்படுத்திய களைப்பு அனைவர் முகத்திலும் தேங்கிக் கிடந்தது. தமிழக எல்லை தாண்டினால் அருந்த அருமையான தென்ன மரத்துக் கள் கிடைக்கும் என்ற செய்தி அதன் திசை நோக்கி ஈர்க்க ஆரம்பித்தது.


சாம்ராஜ்நகர் நோக்கிய சாலையில் தமிழக எல்லை தாண்டிய சிறிது தூரத்தில் ஒரு தென்னந்தோப்பு மடியில் கட்டிய கள் கலையங்களோடு வரவேற்றது. அப்போதுதான் இறக்கிய கள்ளோடு அந்தத் தம்பதி (சிவமணி-பேபி) வெள்ளையுள்ளத்தோடு வியாபாரத்தை துவங்கினர்.

கள் ஏந்திய பாண்டத்தை உதடுகளில் பொருத்த சின்னதாய் ஒரு மின்சார வெட்டு நாக்கு வழியே ஊர்ந்து, நரம்பு கடந்து சிறுமூளையை சில்லென்று கடித்தது.

ஐந்து வருடம், பத்து வருடம், இருபது வருடம் என இதற்கு முன் கள் குடித்த ஆண்டுகளைக் கணக்கிட்டவாறு எல்லோரும் திருப்தியாக தங்கிருந்த இல்லம் நோக்கி புறப்பட்டோம். வரும்வழியெங்கும் பகடி, பேச்சு எனப் பொழுது இனிமையாய் நகர்ந்தது. அரேபாளையத்தில் அருமையான காலைச் சிற்றுண்டி கறியோடு தயாராக இருந்தது. 
 
இளம் மதிய நேரத்து வெயிலோடு புரண்டடிக்கும் காற்று என வெளிப்பக்கம் படுக்கைவிரித்து அன்றைய மதியம் அழகாய்க் கடக்க, அதன் பின்னான பொழுதை கிரிக்கெட் ராட்சனின் மென்று தின்னத் துவங்கினான். ஒரு பக்கம் விசிறிகள் கிரிக்கெட்டை இமை துடிக்காமல் பார்க்க, வெளியே ஒரு வட்டமேசை மாநாடு துவங்கியது. கண்கட்டி வித்தையும், இடையில் ஆங்கிலம் கலக்காமல் பத்துவரிகளாவது தமிழில் பேசவேண்டிய போட்டியும், விடைகாண முடியா விடுகதையும் அந்த நேரத்தை அர்த்தமுள்ளதாக்கியது. இரவு உணவு, துவண்டு போயிருந்த ரசிகர்களை மெல்ல மெல்ல மேடேற்றி உற்சாகத்தை ஊட்டிக்கொண்டிருந்த கிரிக்கெட்டுக்கே உரித்தான உற்சாகக்குரல் என நண்பர்களோடு நள்ளிரவு வந்து சேர்ந்தது.





இரண்டாம் விடியல் இன்னும் உற்சாகமாய் வந்து விழுந்தது. உற்சாகம் வடியும் முன் கர்நாடக மாநிலத்தில் உடையார்பாளையா நோக்கிய பயணம் துவங்கியது. இனிவரும் நாட்களில் உடையார்பாளையா பயணம் குறித்து எழுத நிறைய இருக்கிறது….  
 



-0-

மேலதிகப் படங்களைப் பார்க்க.....

18 comments:

க.பாலாசி said...

//கள் ஏந்திய பாண்டத்தை உதடுகளில் பொருத்த சின்னதாய் ஒரு மின்சார வெட்டு நாக்கு வழியே ஊர்ந்து, நரம்பு கடந்து சிறுமூளையை சில்லென்று கடித்தது.//

ஆஹா...ஏண்ணே... இது ‘கள்’ளடிச்சப்பவே கஸிஞ்சதா!!!!

க.பாலாசி said...

//நரம்பு கடந்து சிறுமூளையை சில்லென்று கடித்தது.//

போதை ஏறிடுச்சிங்கறத எவ்ளோ நாசூக்கா சொல்றாங்கப்பா... இலக்கியவாதின்னா இப்டித்தான்போல...

CS. Mohan Kumar said...

என்ன கதிர்.. கவர்ச்சி படமெல்லாம் போட்டுருக்கீங்க. :))

பா.ராஜாராம் said...

ஆஹா!.. கலக்க(ள்)ல்!

தோழர், (கும்க்கி) வெயிட் போட்டுருக்கீங்க. கள் காரணமாக இருக்கலாமோ?

பகிர்விற்கு நன்றி கதிர்!

ஓலை said...

ஆமா! தார் ரோட்ல உட்கார்ந்துக்கிட்டு ரெண்டு பேரும் மாறி மாறி என்னத்த தேடி போட்டோ எடுக்கப் பார்க்கறீங்க. காலை மயக்கம்(உள்ளிறக்கம்) ரொம்பவே வேலை செய்துதோ?

Chitra said...

looks like a nice get together... :-)

அமர பாரதி said...

கதிர், அருமையான சுற்றுலா. படங்களும் அருமை.

vasu balaji said...

ஸ்ஸ்ஸ்ஸப்பா. பிகாசால கமெண்ட் போட்டே நான் கேராயிட்டேன். நல்லாருங்க மக்கா:)))

யூர்கன் க்ருகியர் said...

படித்தவுடன் கள் குடிக்கணும் போல இருக்கு ..ஹ்ம்ம் ... !!

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - ஏறத்தாழ ஒரே வயதும் ஒத்த கருத்துமுடைய பதிவுலக நண்பர்கள் இன்பச் சுற்றுலா சென்று கள்ளுண்டு களித்து புகைப்படங்களுடன் பொதுவில் பகிர்ந்து மகிழ்ந்ததை நினைக்கும் போதெல்லாம் நீங்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என்ற எண்ணம் வருகிறது. தொடர்க சுற்றுலாவினை - நட்புடன் சீனா

vasu balaji said...

ங்கொய்யால. அந்த ராத்திரியில ஃபோன் பண்ணி கலாய்ச்சிப்புட்டு எம்பேர போடாம எப்புடி உடலாம்.

நசரேயன் said...

//ங்கொய்யால. அந்த ராத்திரியில ஃபோன் பண்ணி கலாய்ச்சிப்புட்டு எம்பேர போடாம எப்புடி உடலாம்.//

அண்ணனுக்கு ஆதரவா நானும் வெளிநடப்பு செய்யுறேன்

நேசமித்ரன் said...

கொண்டாட்டங்கள் நிரம்பிய பொழுதுகள் நீளட்டும் !:)

செ.சரவணக்குமார் said...

ஆஹா.. வாசிக்கும்போது எனக்கும் கொண்டாட்டமாகத்தான் இருக்கிறது. புகைப்படங்கள் அழகு..

சுற்றுலாக்களும் கொண்டாட்டங்களும் தொடரட்டும் கதிர் அண்ணா.

வாழ்த்து‘கள்’

தாராபுரத்தான் said...

வாய்ப்பை தவறவிட்டுட்டோமே..

Unknown said...

படிக்கும்போதே இவ்வளவு சந்தோசமா இருக்கு... கூட இருந்திருந்தா???

தமிழ் அமுதன் said...

//கள் ஏந்திய பாண்டத்தை உதடுகளில் பொருத்த சின்னதாய் ஒரு மின்சார வெட்டு நாக்கு வழியே ஊர்ந்து, நரம்பு கடந்து சிறுமூளையை சில்லென்று கடித்தது.///

அருமை...!

பனங் கள் சீசன் ஆரம்பம் ஆகுது..!
ஊர்பக்கம் கள் இறக்கவில்லை..!

சென்னையில் சுத்தமான ஒரிஜினல் கள் கிடைக்குது..!;;))

ராஜ நடராஜன் said...

நல்லசாமி படிச்சா சந்தோசப்படுவாரு:)