நான் ரசித்த…. நந்தலாலா

தாயைத் தேடும் இரு வேறுபட்ட மனம் கொண்ட இருவரின் தேடுதலில் ஆரம்பித்து ஒருவழியாய் தேடுதல் தீரும் போது படமும் நிறைகிறது. படம் அதன் போக்கில் போகிறது, மனம் தான் கனத்துப்போய் திரும்புகிறது.

பள்ளி நுழைவாயிலில் தலையைக் குனிந்து வெறுமையோடு நிற்கும் சிறுவனின் பின்னணியில், பெற்றவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு மற்ற பிள்ளைகள் நகரும் காட்சியில் சிறுவனின் வெறுமையை இசையால் ஊடறுத்து மனதுக்குள் திணிக்கும் காட்சியோடு தொடங்கும் படம், இறுதிக்காட்சி வரை இசையைப் பிசைந்தே மனதிற்குள் ஊட்டுகிறது.

முதற்கண் இப்படியொரு கதையை தமிழ் சமூகத்தில் இயக்கத் துணிந்த இயக்குனருக்கு மனதார வாழ்த்துச் சொல்வோம். படம் முழுதும் தேடித்தேடிப் பார்த்தாலும் இதுவரை திரையில் பார்த்த முகங்களாக இல்லாமல் இருப்பதே பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. வெறும் பனிரெண்டு நொடிகள் மட்டும் வரும் நாசரும், குளோசப் முகம் காட்டாத ரோகிணி மட்டுமே இதுவரை பார்த்த முகங்களாய்.


முரட்டுத்தணம், கோழைத்தனம், குழந்தைத்தனம் என பலபரிமாணம் காட்டும் மிஷ்கினை ஒரு விநாடிகூட அந்தப் பாத்திரத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியவில்லை. லேசாய் கறுத்த, மெலிந்த உருவமாய், கொஞ்சம் தூக்கிக்கட்டிய புடவையுமாய் மிகச் சாமனியப் பெண்ணாய் வரும் சாலையோரத்து விபச்சாரி ஸ்னித்தாவும், போட்டோவில் மட்டும் பார்த்த அம்மா தரும் முத்தத்திற்காக, யார் முத்தமிடவ ந்தாலும் கவனமாய் ஒதுங்கிப்போகும் சிறுவன் அஸ்வத்தும் படத்தில் நடிக்காமல் வாழ்ந்ததாகவே மனது உள்வாங்குகிறது.

”பொளிச், பொளிச்”சென்று குளோசப் வைத்து  வெறுப்பேற்றாமல், காட்சிகளை அதன் இயல்பில், அது சில சமயம் கூடுதல் நீளமாய் இருந்தாலும் கூட ரசிக்கும் வகையில், உறுத்தாமல் வைத்தது சிறப்பான ஒன்று. திரையரங்கை விட்டு வெளியேறும் போது வளைந்தோடும் சாலைகள், விரிந்து கிடக்கும் பச்சை என ஈரோடு சேலம் மாவட்டங்களின் கிராமத்துச் சாலைகளின் அழகை அப்படியே கண்களுக்குள் தேக்கி வரலாம். இரண்டு ஊரிலும் அம்மாக்களை தேடும் காட்சியில், பலகாலம் ஓடி, பழகித்திரிந்த நம்மூர் கிராமத்து வீதிகளின் பரிட்சயம், நம்மையும் அவர்களோடு கூடவே ஓடியோடி ஒவ்வொரு வீடாய் தட்டுவதாக உணர்த்துகிறது.

மிஷ்கின் அகியின் அம்மாவைச் சந்திக்கும் காட்சியில், ஒரே ஒரு டாப் ஆங்கிள் காட்சியில், ஒரு கதையை ஒற்றை வசனம் கூட இல்லாமல் நமக்கு புரியவைப்பது இசை மட்டுமே! 


மிஷ்கின் அஸ்வத் இருவரும் பயணித்தினூடாக சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்களைக் கடக்கும் போது, அவர்களுக்கு பின்னால் புகுத்தப்பட்டிருக்கும் சுவாரசியங்களை மனசு தேட முனைவதைத் தவிர்க்க முடிவதில்லை.

உருவங்களை, முகங்களைக் காட்டி கதையை மனதிற்குள் ஊட்டுவதைவிட்டு, கால்களைக் காட்டி, அதன் மொழியில் பல இடங்களில் காட்சியை நகர்த்திய விதம் ரசிப்புக்குரிய ஒன்று. கிழவன், ஆட்களிடம் அடிவாங்கித் துவண்டு, பின் பைக் நண்பர்கள் வந்த பின், குண்டாய் இருக்கும் ஓட்டுநரின் தோளைப் பற்றிக்கொண்டு மிஷ்கின் துள்ளும் காளையாய் குதிக்கும் காட்சி சான்சே இல்லை! 



படம் முழுதும் குட்டிக்குட்டி வசனங்கள் மட்டுமே. பாலத்துக்கு அடியில் ஸ்னித்தா பேசும் வசனம் ஒன்றே படத்தின் நீளமான வசனம் என்று சொல்லலாம். ”கிழவன், குடிகாரன், சீக்காளி” என்று ஆரம்பிக்கும் அந்த நீள வசனத்தின் முதல் மூன்று வார்த்தைகள் விபசாரிப் பெண்ணின் வலியை மனதிற்குள் திணிப்பதை தவிர்க்க முடியவில்லை.

அகி ”போடா மெண்டல்” என்றபோது கோவத்தோடும், இயலாமையோடும் குதிக்கும் மிஷ்கினும், ”இவங்களையாவது (ஸ்னித்தா) அம்மான்னு சொல்லியிருக்கலாம்ல, முத்தம் கொடுத்திருப்பேன்ல” எனக்கதறும் அஸ்வத்தும் அப்படியே மனதில் ஒட்டிக்கொள்கிறார்கள்.

தழுவப்பட்ட கதையாக புகார் இருந்தாலும், இந்தக் கதையை மிக அழகாய் இழைத்து தமிழில் தந்த துணிச்சலுக்கு இயக்குனரையும், தயாரிப்பாளரையும் பாராட்டியே தீரவேண்டும்.



படத்தில் குறைகளே இல்லையென்று சொல்லமுடியாது, ஆனாலும் மனதிற்கு மிக நெருக்கமாய், காட்சிக்கு காட்சி மனதிற்குள் அடுக்கடுக்காய் படியும் விதமாய் படம் அமைந்திருப்பதில் குறைகளை மனதே புறந்தள்ளி, சிறப்பை மட்டுமே நினைக்க பேசவைக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

திறந்த மனதோடு படம் பார்க்கச் சென்றால், மனம் நிறைய கனமாய், நாம் அதிகம் பழக்கப்படாத மனிதர்களின் பக்கங்களை மனதில் சேமித்து வந்து, அசைபோட்டுக் கொண்டிருக்கலாம்.

கட்டாயம் திரையரங்கில் பார்க்கவேண்டிய படம்

0000000000000000000
திரையரங்கில் சென்று படம் பார்க்கும் வழக்கமற்ற ஒரு பதிவரை வற்புறுத்தி அழைத்துப் போனேன். படம் பார்த்துவிட்டு இந்தப் பாரத்தை இறக்கி வைக்க சில நாள் ஆகும் என்றார்.

மதிய காட்சிக்கு ஈரோடு ஆனூர் திரையரங்கில் மொத்தம் 50 பேர் கூட இல்லை. இரண்டே இரண்டு பெண்கள் மட்டும். அதில் ஒன்று காதல் ஜோடி போல் தெரிந்தது

படம் ஆரம்பித்த சிறிது நேரம் வரை படம், மிஷ்கின் பாத்திரம் குறித்து கிண்டலடித்துக் கொண்டிருந்த பின்வரிசை இளைஞர் குழு, நேரம் கடக்க கடக்க கனத்த மௌனத்தோடு துளியும் சத்தமின்றி அமைதியாய் படம் பார்த்தனர்.

ஃபேஸ் புக்கில் என்னுடைய் திரிக்கு ”நானும் கௌதமச் சித்தார்த்தனும் வருகிறோம்” எனச் சொன்ன காலச்சுவடு பொறுப்பாசிரியர் தேவிபாரதியும்,  ”உடனே பாருங்கள்.. தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படைப்பு...” எனச் சொன்ன ”அவள் பெயர் தமிழரசி” இயக்குனர் மீரா கதிரவனும் படம் பார்க்கும் ஆவலை வெகுவாக தூண்டியவர்கள்.

வருடத்திற்கு ஐந்து படம்கூட திரையரங்கு சென்று பார்க்காத என்னை, படம் வெளியாகி அடுத்த நாளே பரபரப்பாய் படம் பார்க்க வைத்தது ஒட்டு மொத்த பதிவுலக விமர்சனமே!.
000000000000000

26 comments:

KANA VARO said...

நல்ல படம்ம இருக்கும் எண்டு நினைக்கிறேன்.

vasu balaji said...

//திரையரங்கில் சென்று படம் பார்க்கும் வழக்கமற்ற ஒரு பதிவரை வற்புறுத்தி அழைத்துப் போனேன்.//

எனக்குத் தெரியுமே:)

/படம் பார்த்துவிட்டு இந்தப் பாரத்தை இறக்கி வைக்க சில நாள் ஆகும் என்றார்./

ம்கும். வந்ததும் விட்ட கமெண்ட் பார்த்தீங்கல்ல.

/ஈரோடு ஆனூர் திரையரங்கில் மொத்தம் 50 பேர் கூட இல்லை. இரண்டே இரண்டு பெண்கள் மட்டும். அதில் ஒன்று காதல் ஜோடி போல் தெரிந்தது/

படம் பாக்க போனா படத்த மட்ட்ட்ட்டும்தானே பாக்கணும். மேயர் பண்ற வேலையா இது.

/அடுத்த நாளே பரபரப்பாய் படம் பார்க்க வைத்தது ஒட்டு மொத்த பதிவுலக விமர்சனம்/

கொஞ்சம் மார்க்கமா இருந்திருந்திச்சோ எல்லாரும் ‘நொந்தலாலா’ன்னு எழுதியிருப்பாங்க.

நானு இது வரைக்கும் ஒரு விமரிசனம் கூட எழுதலையே. ஒரு வேளை பதிவனில்லன்னு சொல்லீருவாய்ங்களோ?

Mahi_Granny said...

ஆஹா சூப்பரா விமர்சனமும் எழுதுகீறீர்கள் . படம் பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள்.

Unknown said...

படம் பார்க்க சொன்ன மணிஜிக்கு என் வந்தனங்கள்...

Unknown said...

பதிவுலக விமர்சனங்கள் அனைத்தும் ஒரே குரலில் படம் நல்லா இருக்குன்னு சொல்லுது. ஆனா என்ன செய்ய, இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக யாராவது போட்டால்தான் படம் பார்க்க முடியும்.

dheva said...

ஆர்வம் அதிகரித்து இருக்கிறது.. கதிர்...!!!!!

நேர்த்தியான பகிர்வுக்கு நன்றிகள்!

கலகலப்ரியா said...

ம்ம்... எனக்கு மிஷ்கின் புடிக்கும்... பார்க்கலாம்...

பகிர்வுக்கு நன்றி கதிர்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

விமர்சனம் ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கதிர் சார். நந்தலாலாவை இன்னும் நான் பார்க்கவில்லை. படம் பார்க்க ரொம்ப ஆவலா இருக்கு.. கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.

Cable சங்கர் said...

நந்தலாலா ஒரு வாழ்வியல் அனுபவம்..

Unknown said...

நன்றி கதிர். பார்த்திடுவோம்!

பழமைபேசி said...

ஏன்யா வயித்தெரிச்சலைக் கிளப்புறீங்க? இங்க இந்த மாதிரிப் படம் எல்லாம் கொண்டு வந்து காமிக்கிறது இல்லியே?! :-0(

பழமைபேசி said...

//Sethu said...
நன்றி கதிர். பார்த்திடுவோம்!
//

சும்மானாச்சிக்கும் சொல்லப்படாது... எங்கீங்க போய்ப் பாக்குறது?!

Unknown said...

"சும்மானாச்சிக்கும் சொல்லப்படாது... எங்கீங்க போய்ப் பாக்குறது?!"

எங்க ஊரில ஒரு மாசத்துக்குள் எல்லாப் படத்தோட DVD வந்துடுங்க. எப்பிடின்னு தெரியாதுங்க. தியேட்டரில் வரும் போது தகவல் அனுப்பறேங்க. சேர்ந்து போவோம்.

ராமலக்ஷ்மி said...

// படம் பார்க்க வைத்தது ஒட்டு மொத்த பதிவுலக விமர்சனமே//

உங்கள் விமர்சனமும் அத்துடன் சேர்ந்து கொள்கிறது. பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

காமராஜ் said...

என்ன கதிர்,ஆளாளுக்கு இப்படி கேந்தியக்கிளப்புறீங்க.சென்னை ஈரோடுன்னு பெருநகரங்கள்ள இருக்குற நீங்க புசுக்குனு ப்போய்ப்பத்துருவீங்ணா.நாங்க எங்க போறது. சிவகாசி,கோவில்பட்டின்னு மூட்டையக்கட்டனும். மழைவேற மதமதப்பு கேக்கு.

கதிர் மிக நிதானமான விமர்சனம். ஒவ்வொரு எழுத்தும் ஆசையைக்கிளப்புகிறது.

மரண மொக்கை said...

படத்தை விட பதிவு அருமை...

'பரிவை' சே.குமார் said...

// படம் பார்க்க வைத்தது ஒட்டு மொத்த பதிவுலக விமர்சனமே//

உங்கள் விமர்சனமும் அத்துடன் சேர்ந்து கொள்கிறது.

தாராபுரத்தான் said...

கண்டிப்பாய் நானும் திரை அரங்குக்கு சென்று படம் பார்த்தே விடுவது...என முடிவு செய்துவிட்டேன்,

விக்னேஷ்வரி said...

இங்கே ரிலீசாகல :(

Thenammai Lakshmanan said...

நானு இது வரைக்கும் ஒரு விமரிசனம் கூட எழுதலையே. ஒரு வேளை பதிவனில்லன்னு சொல்லீருவாய்ங்களோ?//

பாலா சா..:-)))

கதிர் விமர்சனம் அ்ருமை..

பனித்துளி சங்கர் said...

சிறப்பான விமர்சனம் உங்களின் பார்வையில் நண்பரே . இன்னும் படம் பார்க்கவில்லை . இன்றே பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரித்து இருக்கிறது தங்களின் விமர்சனம் . பகிர்வுக்கு நன்றி

Kumky said...

அப்போ டவுன்லோட வேணாம்கறீங்க..

சரி.

பார்த்துட்டு ஒரு பதிவு போட்ருவோம்(!)

ஷர்புதீன் said...

வருடத்திற்கு 25 (?!!) படம்கூட திரையரங்கு சென்று பார்க்காத என்னை, படம் வெளியாகி அடுத்த நாளே பரபரப்பாய் படம் பார்க்க வைத்தது ஒட்டு மொத்த பதிவுலக விமர்சனமே!.

shammi's blog said...

It turned out to be a wonderful movie which i had seen in the recent past,

Unknown said...

//திறந்த மனதோடு படம் பார்க்கச் சென்றால், மனம் நிறைய கனமாய், நாம் அதிகம் பழக்கப்படாத மனிதர்களின் பக்கங்களை மனதில் சேமித்து வந்து, அசைபோட்டுக் கொண்டிருக்கலாம்//
:-)

arasan said...

நீங்கள் கூறியது முற்றிலும் சரியே...
படம் பார்த்த எனக்கு வெளிய வரும்போது நான் எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை..
உண்மையில் பாராட்டியே ஆகவேண்டும், இளையராஜா அவர்களையும், இயக்குனர் மிஸ்கின் அவர்களையும்.. நீங்கள் பார்க்கும் போது அம்பது பேர் இருந்தார்கள் என்று சொன்னிர்கள், நான் சென்னையில் உள்ள ஒரு திரை அரங்கில் இரவு காட்சி பார்த்தேன் வெறும் இருபது பேர் மட்டுமே..
நல்லா படத்தை திரையில் பார்க்க யாரும் விரும்பவில்லை போலும்..