Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

Jan 2, 2020

2019 டூ 2020


ஒரு புத்தாண்டைக் கொண்டாட என்ன இருக்கிறது? அன்றைக்கு முக்கியமாகச் செய்ய வேண்டியவை இரண்டுதான் ஒன்று நாட்காட்டியை மாற்றுவோம், அடுத்து தேதி குறிப்பிடும்போது கவனமாக புதிய ஆண்டை குறிப்போம்.

சரி, நினைவுகள் அற்ற ஒரு ஆண்டினை எப்படி நினைவு வைத்துக்கொள்வீர்கள்?

ஆச்சரியமாக இருக்கின்றது. இரண்டு நாட்களாக மார்கழி மத்திக்கே உண்டான குளிர் இல்லை. ஆனால் 2019 ஆண்டின் பிறப்பு என்பது கடும் குளிர் சூழ்ந்ததாக இருந்தது. கூடவே ஆண்டின் துவக்கம் வேட்கையோடு விளையாடு புத்தகத்தை அச்சிற்கு அனுப்பிவிட்டு வெளியீட்டு விழா திட்டமிடலுக்கு காத்திருந்த நேரத்தில் அமைந்தது. இந்த இரண்டு நாட்களாக வேட்கையோடு விளையாடு முதல் ஆண்டு நிறைவு குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

உண்மையில் கடந்த ஒரு வருடத்தைத் திரும்பிப் பார்த்தால் பெரிய நினைவுகள் ஏதுமில்லை. நினைவுகளே இல்லையா எனும் ஆச்சரியமும்,  நினைவுகள் ஏன் இல்லையெனும் கேள்வியும் எழுகிறது. எதன் அடிப்படையில் நினைவுகள் தங்குகின்றன? பொருளீட்டுவதை வைத்தா? புகழ் சேர்ப்பதிலா? நிறைய திட்டங்கள் நிகழ்த்தியா? ஆம் என்றால் இவை யாவற்றிலும் குறையேதும் இல்லை. எனினும் நினைவுகள் கனக்காத எடையற்ற ஆண்டாகவே நான் 2019ஐ வழியனுப்பி வைத்தேன்.

எதனால் அப்படி ஆனது என யோசித்துக் களைத்ததில் ஒன்றைப் புரிந்து கொண்டேன், 2019 குடும்பம் சார்ந்த மற்றும் நண்பர்கள் சூழ்ந்த பயணங்கள் ஏதுமில்லாத ஆண்டாக அமைந்து போனது. அதுவே நினைவு வறட்சிக்குக் காரணமாக இருக்கலாம். பயணங்கள் இல்லை என்பதைவிடவும் மிக முக்கியமானது, 2019ல் நான் எதுவுமே எழுதவில்லை. இந்த தசாப்தத்தில் எதுவும் எழுதாமல் ஏமாற்றிய ஆண்டு இதுவாகத்தான் இருக்கும். தொடந்து கட்டுரைகளே எழுதியதில் ஏற்பட்ட சலிப்பு மனநிலை, முற்றிலுமாக முடக்கியிருக்கலாம். அலச வேண்டிய தருணத்தில் இருக்கிறேன். ஆக பயணங்களும், எழுத்தும் இல்லாததே இதற்கான காரணமாகத் தீர்ப்பெழுதிக்கொண்டு...



மற்றபடி 2019 மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை. மிகுந்த வாஞ்சையே மிளிர்கிறது. அற்புதமான நட்புகளை இனங் கண்டிருக்கிறேன். திட்டமிடல்களை தெளிவாக மேற்கொண்டிருக்கிறேன். உரை மற்றும் பயிலரங்குகளில் மிகுதியான உணர்வுப்பூர்வமாக மனம் திறந்த மனிதர்களை குறிப்பாக பிள்ளைகளைச் சந்தித்திருக்கிறேன்.

2019ல் மனம் திருப்தியடையும் அளவிற்கு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருந்திருக்கிறேன். சுமாராக 220 மணி நேரம் பேசியிருப்பதாக என் நிகழ்ச்சிப் பட்டியல் சொல்கிறது. தமிழகத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, தென்காசி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் இலங்கையில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வவுனியா என்று உரை மற்றும் பயிலரங்குகளில் கலந்து கொண்ட சுமார் 38000 பேரில் சுமார் 26000 பேர் மாணவ, மாணவிகள் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. நிகழ்ச்சிகளின் நிறைவில் பிள்ளைகள் நெகிழ்ந்து, மனம் திறந்து சிந்திய கண்ணீரெல்லாம் உணர்வில் கலந்து உயிரோடு பிணைந்ததாகவே கருதிக் கடக்கிறேன்.

நட்புகளின் புத்தகங்களை வெளிக்கொண்டுவர வாசல் படைப்பகம் துவங்கப்பட்டது. முதல் வெளியீடாக பொன்னி, ஆதலினால் தேடல் செய்வீர் வெளியிட்டது மற்றும் புதிய எழுத்தாளர்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருப்பதும் மகிழ்ச்சிக்குரியது.

இந்து தமிழ் திசை அரைப்பக்கத்திற்கு வெளியிட்ட, மாற்றத்தை ஏற்படுத்திய மந்திரம் எனும் அறிமுகக் கட்டுரை பெரும் கவனத்திற்குள் என்னை நிறுத்தியது.

எல்லாவற்றிற்கும் மேலாக #வேட்கையோடு_விளையாடு மிகப்பெரியதொரு மாயம் செய்தது. கட்டுரைகள் எழுதி முடித்து ஏறத்தாழ நான்கு மாதங்கள் கிடப்பில் போட்டு, அப்படியே தேங்கிவிடுமோ என்ற அச்சத்தில் தொகுத்து, வடிவமைத்து, சொந்தமாக வெளியிட்டிருந்தேன். ஓராண்டு நிறைவடையும் தருணத்தில் இரண்டாம் பதிப்பும் தீர்ந்து போகும் நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது.

விரும்பி வாங்கியதோ, பரிசாக வழங்கப்பட்டதோ, எப்படி ஒருவரைச் சேர்ந்திருந்தாலும், அவர்களில் 80% பேர் அதை வாசித்திருக்கின்றனர் என்பத மனதார அறிவேன். அப்படி வாசித்தவர்களில் பல நூறு பேர் என்னைத் தொடர்பு கொண்டு தம் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர், தொடர்ந்து தற்போதும் வெளிப்படுத்தி வருகின்றனர். எழுத்து என்னவெல்லாம் செய்யும் என்பதை வேட்டைகோடு விளையாடு வாசித்துவிட்டு உணர்வுப்பூர்வமாக உரையாடியவர்களின் வாயிலாக அறிந்து பிரமித்திருக்கிறேன். உண்மையில் எழுதும் காலத்தில் ஒவ்வொரு வாரமும் எழுதவேண்டும், ஒரே கோட்டினை மையமாக வைத்து எழுத வேண்டும் என்ற நிலையில் நான் சுணங்கியதும்கூட உண்டு. ஆனால் ஒவ்வொருவரின் உணர்வுப் பகிர்வும், இன்னும் கவனம் கொடுத்து முழு உத்வேகத்தோடு எழுதியிருக்கலாமோ என்று பலமுறை யோசிக்க வைத்திருக்கிறது.

புத்தாண்டை கவனத்தில் கொள்ள வேண்டுமா, கொண்டாட வேண்டுமா? இது வெறும் காலண்டர் மாற்றும் தினம் மட்டும்தானா எனும் கேள்வி வரும்போது, நான் சொல்ல விரும்புவது, நமக்கு எல்லாமே காலம்தான். நாம் எதையும் காலத்தின் அடிப்படையில், இன்னும் நேரடியாகச் சொல்ல வேண்டுமெனில் ஆண்டின் கணக்கிலேயே கவனத்தில் எடுக்கிறோம். எப்போது பிறப்பு, எப்போது பத்தாம் வகுப்பு, எப்போது கல்லூரி, எப்போது திருமணம், எப்போது குழந்தை, எப்போது, எப்போது, எப்போது எனக் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும், 1989, 1994, 2002 என்பது மாதிரி முதலில் நாம் ஆண்டின் எண்ணிக்கையையே கணக்கில் வைத்துக் கொள்கிறோம், அதற்கு அடுத்ததுதான் வயது உள்ளிட்ட மற்ற எந்த ஒப்பீடு, உதாரணங்களுமே. ஆகவே, 2019 என்றால் அது வேட்கையோடு விளையாடு-வின் ஆண்டு. வேட்கையோடு விளையாடு-வின் காலம் எதுவென்றால் அது 2019 என்பதாகவே இனி எனக்கு எப்போதும் அழுந்தப் பதிந்திருக்கும்.

2019 அழுத்தம் திருத்தமாக பயணிக்க வேண்டும், எழுத வேண்டும் என்பதை எனக்கு விட்டுச் சென்றிருப்பதாக கருதி 2020ல் நுழைந்திருக்கிறேன். இந்த வருடத்திற்கென்று பட்டியலிருக்கும் ஆசைகளை காலத்தின் வேகத்தில் மறந்து போய்விடாமல் கனவுகளாக்கி எட்டிவிட வேண்டுமென உறுதியாக விரும்புகிறேன்.

இந்த ஆண்டு நிறைய மனிதர்களைச் சந்திக்க வேண்டும். சந்தித்தவர்களோடு, இணைந்தவர்களோடு அன்பும் நட்பும் இன்னும் கூடுதலாக உணர வேண்டும். அனைவருடனும் இணைந்து பயணித்து, நிறைய நினைவுகளைச் சேகரிக்க வேண்டும்.

வாழ்தல் அறம்.

May 13, 2016

வேடிக்கைகள் சூழ்ந்திருந்த காலம்



மனித சமூகம் கண்டுபிடித்த மிக எளிய, அழகிய பொழுதுபோக்கு வேடிக்கை பார்த்தலாகத்தான் இருக்க வேண்டும். முன்பின் காணாததைக் கண்டாலும் சரி, ஏற்கனவே கண்டதையே மீண்டும் காண நேரிட்டாலும் சரி, அதனை சுவாரஸ்யமாய் மிகமிக சுவாரஸ்யமாய் ரசிப்பதென்பது ஒரு வரம். காலம் காலமாய் நிகழாத ஒன்று நம்மிடையே நிகழும்போது, அதை ஆச்சரியமாய் வேடிக்கை பார்த்தலென்பது மிகப் பிடித்தமானதாகிறது.

வேடிக்கை பார்த்தலின் பொற்காலம் என்றால், அது என் பால்யம் தொடங்கி சுமார் பதினைந்து ஆண்டுகள் வரை எனச் சொல்லலாம். அன்றைக்கு வீட்டிலும், பள்ளிலும் வழமையாய் நிகழும் காரியம் தவித்த எல்லாமே வேடிக்கைதான்.

கிராமத்தில் இருக்கும் வரை வேடிக்கை பார்த்தல் என்பது எப்போதும் சலிப்பூட்டாத ஒன்று. அணையிலிருந்து வாய்க்காலில் பாசனத்திற்காகத் திறந்துவிடப்படும் தண்ணீர் நம் பகுதியைக் கடக்கையில், அதுநாள் வரைக் கிடந்த கழிவுகளையெல்லாம் கரைத்து அடித்துக் கொண்டு வருமே… அதில் துவங்கி, இரவுகளில் கரைகளில் குழாய் போட்டு தண்ணீர் திருடுவதைத் தடுக்க, ஆய்வு செய்ய வரும் பொதுப்பணித் துறையினரின் ஜீப் வெளிச்சம் கண்டு, அவசர அவசரமாய்க் குழாயை இழுத்துக்கொண்டு வயற்காட்டிற்குள் பயிர்களுக்கு இடையே ஓடி ஒளிவது வரை எல்லாமே வெளியிலிருந்து பார்க்கையில் வேடிக்கைதான்.

கிராமங்களில் சினிமா போஸ்டர் ஒட்டும் நிகழ்வு தனித்துவமானது. அருகில் இருக்கும் ஊரிலிருந்த சினிமா தியேட்டருக்காக போஸ்டர் ஒட்ட வரும் ஆட்களிடம் தனித்த ஒரு கர்வம் இருக்கும். இத்தனைக்கும் போஸ்டர் ஒட்டப்படும் படங்கள் ஒன்றும் அப்போதைய வெளியாகும் படமொன்றும் கிடையாது. எப்போதோ வெளியாகி ஒவ்வொரு படிநிலைகளாய் இறங்கி, படச்சுருள் தேய்ந்து போயிருக்கும் நிலையில், அந்த மாதிரியான திரையரங்கை எட்டியிருக்கும். போஸ்டர் ஒட்ட வேண்டிய இடத்திற்கு அவர் வந்து சைக்கிள் நிறுத்தியதுமே, “யேய்… படம் மாத்துறாங்கடோய்….” என திக்கெட்டிலுமிருந்து கூடுவோம். முன் பக்கம் மாட்டியிருக்கும் பசையை அள்ளி ஏற்கனவே இருந்த போஸ்டர் மேல் தடவி முடிக்கும் வரை ”என்ன படம்… என்ன படம்..!?” என நச்சரிப்போம். எதுவும் பேசாமல் இறுக்கமான முகத்தோடு பசையைப் பூசிவிட்டு, சிக்கிள் பின்பக்கம் இருக்கும் மடித்த போஸ்டரை எடுத்து அருகாமைச் சுவற்றின் மேல் வைத்து பின்பக்கம் பசை தடவுவார். ஒருவழியாக அதைத் திருப்பி ஏற்கனவே பசை தேய்த்த இடத்தில் ஒட்டுவார். பல நேரங்களில் அது மேல் பாதி அல்லது கீழ் பாதி போஸ்டராகத்தான் இருக்கும், மீதிப் பாதி போஸ்டரும் ஒட்டி முடிக்கும் வரை இருக்கும், ‘அது என்ன படமாக இருக்கும்’ எனும் பரபரப்பு வார்த்தைகளுக்குள் அடங்காதது.

பகலில் பூம்பூம் மாட்டோடு குறிசொல்ல வந்து அரிசியோ, நெல்லோ வாங்கிப்போக வரும் நபரை எளிதில் கையாண்டுவிடும் நாங்கள், இரவுகளில் குடுகுடுப்பையோடு வரும் சாமக்கோடங்கியை கதவிடுக்கு வழியாக பயந்துகொண்டே ரகசியமாகத்தான் அணுகுவோம். அந்த பயம் தோய்ந்த வேடிக்கைகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. சுடுகாட்டிலிருந்து நேராக வருவதாக சாமக்கோடங்கிகள் குறித்துச் சொல்லப்படும் கதைகளும் திகில் நிறைந்தவையாகவே இருக்கும். இரவுகளில் அவர் சொல்லும் குறிகளுக்காக பெரியவர்கள் காதுகளைத் தீட்டி வைத்துக் காத்திருக்க, இருளில் நாங்கள் கண்களைத் தீட்டிக் காத்திருப்போம்.

எங்கிருந்தோ மூட்டை முடிச்சுகளோடு கணவன்-மனைவியாய் சைக்கிளில் வந்து, மாரியம்மன் கோவில் வாசலில் தொழிலை ஆரம்பிக்கும் ஈயம் பூசுபவர்களும் மிகுந்த சுவாரசியம் கொண்டவர்களே! மரத்தின் நிழலைத் தேர்ந்தெடுத்து, ஓரமாய் கொஞ்சம் குழி தோண்டி அடுப்பு அமைத்து, அதில் துருத்தியைப் பொருத்தி, கரி போட்டு நெருப்பு மூட்டி துருத்தியால் இயக்கி ஈயம் பூசுபவர்கள் காட்டும் வேடிக்கையும் அலாதியானதுதான். தீய்ந்து எரியும் கரியும் வாசனையும், அந்த அனலும், உருகிய ஈயத்தையை பாத்திரத்தில் பூசும் லாகவமும் பிரமிக்கச் செய்யும். அவர்கள் எல்லாம் முடித்துவிட்டு மூட்டை முடிச்சுகளைக் கட்டும் வரை சோறு தண்ணியின்றி அங்கேயே தவம் கிடப்போம்.

ஐஸ்காரர்களுக்கென்று சில யுக்திகள் இருக்கும். எங்கெல்லாம் அந்த ”ப்பூம்ம்ந்ந்த்த்” ஒலிப்பானை ஒலிக்க வேண்டும் எனும் வித்தை தெரியும். காடு கரையெல்லாம் கடந்து வரும் அந்த சைக்கிளின் முன்பக்கம் ஒரு சாக்குப்பை இருக்கும். பழைய இரும்புக்கு ஐஸ் கொடுக்கும் காலம் அது. விவசாயக் குடும்பத்துப் பிள்ளைகளின் ஐஸ் ஆசைக்கு, கட்டை வண்டியின் கடையாணி வரை களவு போன விவகாரங்களும் உண்டு. அப்படியான முக்கியமான பொருட்கள் ஐஸ் வண்டிக்காரரிடம் போகும்போது, அதனருமை தெரிந்தும், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் புரிந்தும், அவரே வீடு தேடி வந்து கொடுத்து சிக்கல் உண்டாக்கிய கதைகளும் நடந்ததுண்டு. ஐஸ்பெட்டிக்குள் அவர் கை விட்டு எடுக்கும்போது வரும் ஐஸ் நிறத்தையொட்டி எனக்கு, உனக்கு என அடிதடியே நடப்பதுமுண்டு.



ஊருக்குள் இல்லாமம் வயல் வெளிகளுக்குள் முடங்கிப் போகின்றவர்களுக்கு பெரிதாய் எதும் வேடிக்கை பார்க்கக் கிட்டிவிடாது. அதனால் உழுவதும், விதைப்பதும், களையெடுப்பும், அறுவடையும் கூட வேடிக்கைகள்தான். கிணறு வெட்டுவதும், ஆழ்துளைக் கிணறு துளையிடுவதும் சொல்லொணா வேடிக்கைகள். இதில் பரிதாபமான ஒரு காரியத்தை வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு அமையும். சேற்று வயலென்பதே ஒரு ஆகச்சிறந்த விளையாடற்களம்தான். சேற்று வயலில் உழும் டிராக்டர் இன்னும் இதம். கரும்பு ஆலைகளுக்கோ, மஞ்சள் வேக வைக்கவோ அடுப்புக் குழி தோண்டப்பட்டிருக்கும் நிலத்தில் நெல் நடவு செய்ய சேற்று உழவு நடக்கும். அந்த நிலத்தில் தெரியாத்தனமாய் எப்போதாவது சிக்கிக்கொள்ளும் டிராக்டர்கள் மீள்வது எளிதல்ல. புதைகுழியில் சிக்கிய ஒரு யானையை ஒத்த ஒரு ஓலத்தோடு ட்ராக்டர் போராடும். சக்கரத்தின் அடியில் பெரிய கற்களைப் போட்டு, மரக்கட்டைகளைப் போட்டு என பிரயத்தங்கள் நிகழும். அது முடியாமல் தூரத்தில் கடப்பாரையை முன்னோக்கி சாய்வாக ஊன்றி கயிறு கட்டி, அதை சக்கரத்தில் சுற்றி, இறுக்கமாக்கி அதன் வழியே மீட்கும் முயற்சிகளில் கயிறு தெறித்துப்போகும். அம்முயற்சி பெரும்பாலும் தோற்றும் போகும். அங்கு வரும் ஒவ்வொருவரும் புதிய புதிய யோசனைகளை வழங்குவார்கள். அதை ஒவ்வொன்றாய்ச் செயல்படுத்தி சிக்கல்கள் மேலும் சேர்ந்து போகும். இறுதியாய் வேறு வழியின்றி, மற்றொரு ட்ராக்டர் அழைத்து வரப்பட்டு அத்தோடு கயிறு இணைத்துக் கட்டி இழுக்கும் பெரும் போராட்டம் துவங்கும். மீட்கப்படும் வரைக்கும் அதுவொரு தவிர்க்கவியலாத வேடிக்கைதான்.

கரும்பு ஏற்றிச் செல்லும் லாரி, ட்ராக்டர்களின் சக்கரங்கள் சாலைகளில் சிக்கிக் கொள்வது, பொது ஆழ்துளைக் குழாய் கிணறு அமைப்பது, மாட்டிற்கு லாடம் கட்டுவது, எருமை கன்று ஈனுவது, எப்போதாவது நிகழும் வாய்க்கால்-வரப்பு சண்டைகள், லோன் கட்டாதவர்கள் வீட்டுக்கு வரும் வெள்ளைக் கார், அவ்வப்போது நடக்கும் ஊர் நியாயம் (பஞ்சாயத்து) என மனிதர்களையொட்டிய வேடிக்கைகள்தான் அப்போதைய பொழுதுபோக்கு.

ஊருக்கு ஒரேயொரு தொலைக்காட்சிப் பெட்டி மட்டும் இருந்த - அதிலும் கூடஒரு ஒரு தமிழ் ஒளிபரப்புதான் வரும் அந்தக் காலத்தில், பார்வையில் சிக்கியதில் எல்லாம் ஒரு வேடிக்கை இருந்தது. காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டிருக்கிறது. வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிகள் வந்தபிறகு, ஜன்னல்கள் வழியே பார்க்க எந்த விழிகளுக்கும் மனமில்லை. சேனல்கள் பெருகி வந்து நம்மை ஆக்கிரமித்த பிறகு, எல்லாவற்றையும் தொலைக்காட்சிக்குள்ளேயே தேடவேண்டி வந்துவிட்டது. இதுவரை ஜன்னல்கள் வழியே பார்த்த உலகம் வீதிகளாகவும் அக்கம்பக்கமாகவும் இருந்தது. தொலைக்காட்சி மூலம் உலகின் எட்டாத மூலைகளையும் காணத் துவங்கிய பிறகு, ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கும் வழக்கமே முற்றிலும் அழிந்து விட்டது.

எல்லா வேடிக்கைகளிலும் ஏதோ ஒரு கொண்டாட்டத்தை உணர்ந்தோம், கற்றுக்கொண்டோம், உணர்வுகளைத் தட்டியெழுப்பினோம், மகிழ்ச்சியை உணர்ந்தோம், அதனோடு பயணித்தோம் என பல கூறுகள் உண்டு. மழையைக் கூட ரசிக்கும் மனப்பாங்கு மறைந்துபோய் எதையும் படமாகவும், காணொளியாகவுமே பார்க்கும் மனநிலை வாய்த்தவர்களாகிப் போனதில் காலத்தின் பங்கும், நம் மனதின் பங்கும் சம அளவிலானது. மலை முகடு, அடர் வனம், நீலக் கடல், நெடும்பாதை என எல்லாமே இணையத்தில் தத்ரூபக் காட்சிகளாய் வர, அதில் மூழ்கி, அவையே விளையாட்டின், தேடலின் களமாய் மிஞ்சியிருக்கின்றன.

காலம் காலமாய் திருவிழாக்களும், ரயில்களும் தான் வேடிக்கைகளின் உச்சபட்சக் களமாய் இருந்ததனெவும் சொல்லலாம். ரயில் பயணத்திலிருக்கும் சுவாரசியமே அத்தனை அந்நியர்களோடு ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிதும், அதில் அழகிய சிநேகிதம் ஈட்டுவதும்தான். இதோ… இப்போதும் ரயில் பயணங்கள் அமைந்து கொண்டேயிருக்கின்றன. சமீபத்தில் சராசரியாக முன்னூறு, நானூறு கி.மீ தொலைவு பயணித்த ஒவ்வொரு பயணத்திலும் சன்னல் வழியே வேடிக்கை பார்க்கவோ, அக்கம் பக்கம் பேசவோ, அங்கு நிகழும் எதையும் எந்த வகையிலும் கவனிக்கவோ பெரும்பாலானோருக்கு அவசியம் ஏற்படவேயில்லை. எல்லா வேடிக்கைகளையும் வண்ண வண்ணமாய் காட்டும், உள்ளங்கை அளவிலிருக்கும், ஒரு கை பேசிக்குள் இந்த சமூகம் மூழ்கித் தேடிக்கொண்டிருப்பதும் கூட ஒருவித வேடிக்கைதான்!

-

நன்றி நம்தோழி

*

Jul 11, 2014

சிரம் கரம் புறம் நீட்டாதீர்கள்!

காலை 9 மணிக்கு துறையூருக்கும் பெரம்பலூருக்கும் மத்தியில் இருக்கும் அந்தக் கிராமத்தில் இருக்க வேண்டும். காலை 5 மணிக்கு ஈரோடு பேருந்து நிலையத்தில் நாமக்கல் பெயர் தாங்கிய இரண்டு அரசுப் பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. இரண்டின் கண்ணாடியிலும் சாதாரணக் கட்டணம் என எழுதப்பட்டிருந்தது. ஆச்சரியமாக இருந்தது. 2011ல் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டபோது அரசு ஒரு பெரிய தில்லாலங்கடித்தனம் செய்தது. அதற்கு முன்பு வரையில் புறநகர் பேருந்துகளில் கிலோமீட்டருக்கு 28 பைசாவும், எக்ஸ்பிரஸ் என ஒன்றையணா ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டால் 32 பைசாவும் கட்டணம் என்றிருந்தது. அதிரடியாக கிலோமீட்டருக்கு 45 பைசா எனக் கட்டணத்தை உயர்த்தியது அரசு. தமிழகம் முழுக்க தனியார் புறநகர் பேருந்துகள் எங்கு இயக்கப்பட்டாலும் கி.மீக்கு 45 பைசாதான். இதில் தனியார் ட்ராவல்ஸ்கள் பொருந்தாது. ஆனால் அரசுப்பேருந்துகளில் சாதாரணக் கட்டணம் எனப் பெயர் பொறிக்கப்பட்ட பேருந்துகள் தவிர்த்து மற்ற பேருந்துகளில் எக்ஸ்பிரஸ் எனப் பெயரிடப்படாவிட்டாலும் கூட கி.மீக்கு 59 பைசா என வெகுஜோராக கொள்ளை தொடர்கிறது. இதில்லாமல் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், சொகுசுப்பேருந்து, தாழ்தளப் பேருந்து, அல்ட்ரா டீலெக்ஸ் எல்லாம் தனி வகை.

கோவையிலிருந்து 100 கி.மீ தூரத்திற்கு 59 ரூபாய் கொடுத்து அரசுப்பேருந்தில் ஏறினால் இரண்டு மணி நாற்பது நிமிடங்கள் ஆகின்றன. அதுவே தனியார் பேருந்துகளில் 45 ரூபாய் மற்றும் பயண நேரம் 2 மணி 10 நிமிடம் மட்டுமே. ஈரோடு கோவைக்கு தனியார் பேருந்துகள் சொற்பமே என்பதனால் சாதாரணக் கட்டண அரசுப்பேருந்துகளும் மிக மிகச் சொற்பமே. எதில் ஏறினாலும் 59 ரூபாய் பிடுங்குவார்கள்.

எப்படி நாமக்கல்லுக்கு மட்டும் மனமிறங்கி சாதாரணக்கட்டணம் என 26 ரூபாய் மட்டும் வாங்குகிறார்கள் என யோசித்தபோது. ஈரோடு நாமக்கல் இடையே தனியார் பேருந்துகளின்போட்டி அதிகம். எக்ஸ்பிரஸ் என முறுக்கிக்கொண்டு நின்றால் போய்யா வெண்ணை எனச் சொல்லிவிட்டு தனியார் பேருந்துகளில் மக்கள் ஏறிவிடுவார்கள்.
காலை 5.15க்கு ஈரோட்டில் வண்டியைக் கிளப்பினார் ஓட்டுனர். இளைஞராகத்தான் தெரிந்தார். 56 கிமீ தானே முன்னப்பின்ன போனாக்கூட 6.30க்கு போய்டலாம் என நினைத்துக் கொண்டேன். மெல்ல மெல்ல பள்ளிபாளையம் தாண்டவே 20 நிமிடங்களைத் தின்றுவிட்டார். சரி இருட்டாக இருப்பதால் ஓட்ட சிரமப்படுகிறார் போல என நானாக நினைத்துக்கொண்டேன். பள்ளிபாளையம் தாண்டும்போடு ஓரமாக நிறுத்தி நடத்துனர் வீட்டிலிருந்து வந்திருந்த காலை உணவை வாங்கிக்கொண்டார். திருச்செங்கோட்டில் பத்து நிமிடம் நிறுத்தினார்கள். வேலகவுண்டம்பட்டிக்கு முன்பாக ஒரு கிராமத்தில் பெண்கள் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்கள். பேருந்தை நிறுத்திவிட்டு நடத்துனர் இறங்கிப்போய் மூன்று பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக்கொண்டார்.

பேருந்தில் இடது, வலது என இரு பக்கத்திலும் டிவி பெட்டி காலியாக இருந்தது. அதில் ஒன்றில் தண்ணீர் பாட்டில்களைப் போட்டுக்கொண்டார். ஒரு வழியாக நாமக்கல் பேருந்து நிலைத்திற்குள் நுழையும் போது மணி 6.58. ஈரோடு - நாமக்கல்லுக்குமான 56 கி.மீ தொலைவை, அதுவும் அதிகாலை நேரத்தில் இளைஞராக இருந்த அந்த ஓட்டுனர் பயணிக்க எடுத்துக்கொண்ட நேரம் 103 நிமிடங்கள். இளைஞர்களிடம் அநியாயத்துக்கு வேகம்(!) குறைந்து வருவது ஆபத்தானதோ எனவும் தோன்றுயது.

தமிழகச் சாலைகளில் நான் இதுவரை பயணித்ததில் மிக மிகக் கடுப்பான சாலை எதுவென்றால் நாமக்கல் துறையூர் சாலையைத்தான் சொல்வேன். அத்தனை வளைவுகளும், அத்தனை இக்கட்டான ஊர்களும், அத்தனை வேகத்தடைகளும் வேறெங்கும் இருக்க முடியாதென்றே நினைக்கிறேன். அங்கிருந்து துறையூருக்கு 7.10க்குப் புறப்பட்ட அரசுப்பேருந்து 55 கி.மீ தூரத்தை 110 நிமிடங்களைத் தின்று வெற்றிகரமாக காலை 9 மணிக்கு சென்றடைந்தது.
துறையூரிலிருந்து பெரம்பலூர் வழியில் இருக்கும் அந்த கிராமத்திற்குச் செல்ல பேருந்துகள் எதுவும் தென்படவில்லை. காஞ்சிபுரம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் பேருந்து மட்டும் இருந்தது. தயக்கத்தோடு நடத்துனரை அணுகி நிறுத்துவீர்களா எனக்கேட்டேன். ”ம்ம்ம், கண்டிப்பா 7 ரூபா சில்லறை வேணும்என்றார்.

இரண்டு பேர் அமரும் இருக்கையில் உள்பக்கம் அமர்ந்திருந்தேன். அதற்குப் பக்கத்து மூவர் இருக்கையின் உள்பக்கம் ஒரு பெண் வந்து அமர்ந்தார். காலை 5 மணிக்குத் தொடங்கிய பயணத்தில் முதன்முதலாகக் கண்ணில்படும் பெண். பயணங்களில் கண்களில் பதியும் பெண்கள் குறித்துமட்டுமே ஒரு கத்தை அளவிற்கு எழுதலாம். அநிச்சையாய் கண்கள் வலப்பக்கம் இழுத்தன. நடத்துனர் வந்தார். ஏழு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டேன். அந்தப் பெண் டிக்கெட்டுக்கு 500 ரூபாய்த் தாளை நீட்டினார். நடத்துடனர் கொந்தளிப்பார் என நினைத்த கணத்தில் மெல்ல புன்னகைத்தவாறு ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தார். அந்தபெண் அதில் ஒரு நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார். ”அடுத்தமுறை தாங்க!” என வாங்க மறுத்து கடந்துபோனார். அதன்பின் அந்தப் பெண்ணைப் பார்க்கவே மிரட்சியாக இருந்ததாலோ என்னவோ அந்தப்பக்கமே திரும்பவில்லை.



அங்கு வேலைகளை முடித்து துறையூரை அடையும்போது இரவு 10.20. துறையூரில் இறக்கிவிட வந்த கார் ஓட்டுனர்நாமக்கல்லுக்கு உறுதியா பஸ் இருக்கும் சார், முசிறி திருச்சி ரவுண்டானா போய், பஸ் ஸ்டேண்ட் போலாம்எனச்சொன்னார். பேருந்து நிலையத்தில் துறையூர்உதகை அரசுப்பேருந்து நின்றது. இங்கிருந்து இந்நேரத்துல யாரு ஊட்டிக்கு போவாங்க என்ற நினைப்போடு ஏறினேன். கடைசி இருக்கைதான் கிடைத்தது. துறையூரிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையை நினைத்தால் முதுகெலும்பு வலித்தது. வேறு வழியில்லை என்ற எண்ணத்தோடு ஏறி அமர்ந்து கொண்டேன். பேருந்து கிளம்பும் சமயத்தில் இருவர் ஓடி வந்து சீட் இருக்கா என்றார்கள். ”அய்யாஎல்லாமே மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி, கீழ உட்கார்றதுனா ஏறிக்குங்கஎன்றார் நெற்றியில் பளிச்சென விபூதி பூசியிருந்த புன்னகை முகம் கொண்ட நடத்துனர்.

என் அருகில் இருந்த அனைவருமே ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம், அன்னூர் என்றே டிக்கெட் வாங்கினார்கள். இந்த நேரத்தில் இங்கிருந்து ஊட்டிக்கு பேருந்து இயக்குவதில் எதோ அர்த்தம் இருக்கும்போல எனத்தோன்றியது. திருச்சி முசிறி ரவுண்டான கடக்கும்போது விளக்குகள் அணைக்கப்பட சப்தமாக....

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா.”

பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. காலையிலிருந்து சேர்ந்திருந்த அத்தனை அலுப்பும் பேருந்துகள் குறித்த கடுப்பும் நொடிப்பொழுதில் கரையத் தொடங்கின. அந்த ராத்திரியின் மென்மையும் சீறும் பேருந்தின் வேகமும் ஒலிக்கும் பாடலின் சுவையும் இனம்புரியா ஒரு இதத்திற்குள் என்னை முக்கியது. பாடலில் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டிருந்தவன் வேகமாகக் கடந்த காலத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தேன்.

எப்படியும் 30 வருடங்கள் இருக்கும். ஆரம்பப் பள்ளி வயது. பவானியிலிருந்து அந்தியூர் செல்லும் வழியில் எங்களுக்கு டவுன் பஸ் என் முருகன் ட்ரான்ஸ்போர்ட்டின் ”பி3” மட்டுமே இருந்த காலம். பவானி பேருந்து நிலையம் அப்போது பவானி ஆற்றங்கரையில் இருந்தது. ஆற்றை ஒட்டிய பகுதியில்தான் அந்தியூர் பேருந்துகள் நிற்கும். பேருந்துக்கும் ஆற்றுக்கும் இடையிலான பத்திருபது அடி தூரம் மூத்திரத்தில் முங்கிக் கிடக்கும். எப்போது அந்த பி3 பஸ்ஸில் ஏறினாலும், பிச்சை எடுக்கும் ஒரு பார்வையற்றவர் “உச்சி வகுந்தெடுத்து” பாடலைத்தான் பாடுவார். பச்சை மலப் பக்கத்துல என அவர் இழுக்கும்போது என்க்கு இரட்டைக்கரடு நினைவுக்கு வந்துவிடும். அப்போது பார்த்த மலை அது மட்டுமே. நீளமாக அந்தப் பாட்டைப் பாடி பிச்சையெடுத்து இறங்குவார். பல வருடங்கள் கழித்து ஜம்பை சாந்தி தியேட்டரில் ”ரோசாப்பு ரவிக்கைக்காரி” படம் பார்த்தபோது அந்தப் பாடல் வந்தபோது அதிர்ந்து போனேன். வேறுவழியின்றி சிவக்குமார் முகத்தில் அந்த பார்வையற்ற பிச்சைக்காரரைக் கண்டேன். சினிமாக்காரர்கள் அந்தத் பார்வையற்றவரிடமிருந்து திருடி உச்சி வகுந்தெடுத்து பாட்டை அதில் உடுக்கைச் சத்தமெல்லாம் சேர்த்துக் கொண்டார்கள் என ரொம்ப நாட்கள் நினைத்திருந்தேன். இப்போது இன்னார் பாடியது, இன்னார் எழுதியதென்றெல்லாம் இணையத்தில் தேடி மனதில் நிரப்பினாலும்கூட ஒட்ட மறுக்கிறது.

எப்போது தூங்கினேன் என்றுகூடத் தெரியவில்லை. கண் விழித்தபோது மூலப்பட்டறையைக் கடப்பது தெரிந்தது. நேரத்தைப் பார்த்தேன் இரவு 1.05 எனக்காட்டியது. 3 மணி சுமாருக்குத்தான் வீடு வந்து சேருவேன் எனச் சொல்லியிருந்தேன். நிஜமாகவே ஈரோடு வந்துவிட்டேனா என வெளியில் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டேன். உச்சி வகுந்தெடுத்துப் பாடலும், பி3 குருட்டு பிச்சைக்காரரும் மனதில் புரண்டு கொண்டிருந்தன. சிலர் சில அறிமுகங்களைச் செய்யும் சூழலும், விதமும் அது அவர்களுடையதென்றே ஆக்கி விடுகிறார்கள். அவர்கள் ஆக்குகிறார்களோ இல்லையோ நாம் நமக்குள் அப்படியாவே வடித்துக் கொள்கிறோம்.


-


வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...