குட்டிம்மா.... சாப்பாடு எங்கிருந்து வருது?
ம்ம்ம் இதுகூடத் தெரியாதாப்பா!?.... அரிசிய குக்கர்ல போட்டா சாப்பாடு வரும்.
செரி.... அப்போ அரிசி எங்கிருந்து வருது...!!??
அய்யோ... கடையில் இருந்து அரிசி வருதுப்ப்பா...!!!???
அட, செரி.... கடைக்கு எங்கிருந்து வருது...!!!???
அடப் போங்கப்பா... போர் அடிக்குது...
என்று ஓடும் மகளிடம் நான் சொல்ல, அவள் கேட்க பொறுமையில்லாத ஒரு கதை கண்ணாடியில் படியும் ஈரப்பதமாய் படிந்து கிடக்கிறது.
_________________________________
மண் வாசனை மனதும் முழுதும் படிய, இழந்து போன சின்னச் சின்ன சந்தோசங்களை, எப்போதாவது நினைவு படுத்திப் பார்ப்பது சந்தோசத்தை கொடுக்கும் அளவிற்கு, ஏக்கத்தையும் விதைத்து விட்டுத்தான் போகின்றது. எனக்கு வாய்த்தது, இன்றிருக்கும் எத்தனை பேருக்கு பரிட்சயம் என்பது தெரியவில்லை...
வசதிகள் அதிகம் இல்லாத கிராமத்து வாழ்க்கை, தொலைக்காட்சி மனிதனை கொள்ளையடிக்காத காலம், சிறகுகளை சிறையிலடைக்காத பருவம்... விளையாடுவதற்கு விவசாய நிலமே களமாய் இருந்த நாட்கள் அவை.
விவசாயத்தில் அதிகம் ஆர்வம் ஊட்டுவது நெல் நடவுதான். நெல் நடவுக்கான தயாரிப்பே நயமானதொரு அனுபவம். மேட்டூர் அணையில் அந்த வருடம் தண்ணீர் திறப்பை உறுதி செய்த பிறகே, அதற்கான ஆயத்தங்கள் தயாராகும்.
நடவு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த நிலத்தில், வசதியான ஒரு வயல் நாற்று விடுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும். நாற்று வயலின் (நாத்து பட்டறை) வரப்புகள் முதலில் மேம்படுத்துப்படும். உறுதியான வரப்புகளை உருவாக்கிய பிறகு, தண்ணீர் நிரப்பப்படும், தண்ணீர் நிரப்ப ஆரம்பிக்கும் போதுதான் அந்த வயலுக்குள் எங்கெங்கு எலி பொந்துகள் (வங்கு) இருக்கிறதென்பது தெரியும். தண்ணீர் உள்ளே புக அங்கங்கேயிருந்து எலிகள் தத்தித் தாவி ஓடும், அப்படி ஓடும் எலிகளை துரத்தித் துரத்தி அடிப்பதும், நாய்கள் ஓடிப்பிடிப்பதும் இயல்பாக நடக்கும்.
வயலில் நன்றாக நீர் ஊறிய பிறகு, வயல் முழுதும் நீர் தேக்கி ஏர் கொண்டு இரண்டு மூன்று முறை சேறு குழையக் குழைய சேற்று உழவு ஓட்டப்படும். அதன் பின் பனைமரத்து பட்டை கொண்டு மிக நேர்த்தியாக சிறிதும் மேடு பள்ளம் இல்லாமல் சேற்று வயல் சமன் (நிரவுதல்) படுத்தப்படும்.
அதன் பின் தண்ணீரைத் தேக்கி, சேறு முழுதும் படிந்த பின், வயலில் தண்ணீர் தெளிந்து கண்ணாடி போல் தெளிவாக இருக்கும் நிலையில், அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப, சாணியில் பிள்ளையார் வைத்து, பூஜை செய்து ஏற்கனவே மூட்டையோடு தண்ணீரில் நனைத்து வைக்கப்பட்ட (ஊறல்) பதமாக இருக்கும் விதை நெல்லை ஒரு நேர்த்தியோடு மிகச் சமமாக பட்டறை முழுதும் படியும் வண்ணம் தூவப்படும். விதை நெல் சேற்றில் படிந்து மூழ்கியபின், அடுத்த நாள் தேக்கி வைத்த நீர் முழுதும் வடிக்கப்படும்.
ஈரத்தில் உறங்கும் நெல் சுள்ளென சூரிய ஒளி பட விழித்தெழுந்து தன் இதழ் உடைத்து புதிதாய் ஒரு உயிராய் பிறப்பெடுக்கும். அதன் பின்வரும் நாட்களில் திட்டுத்திட்டாய் இளம் பச்சையாய் முளைக்கும் பயிர், அடுத்த வாரங்களில் அடர்த்தியாய், மிக நெருக்கமாய் பச்சைபசேலென ஆடையுடுத்தி மிக அழகாய் வளர ஆரம்பிக்கும்.
குறிப்பிட்ட காலத்திற்குப் பின், நாற்று நடுவதற்காக மற்ற வயல்களில் நீர் நிரப்பி, எலிகளை விரட்டி அடித்து, ஏர் (அ) ட்ராக்டர் கொண்டு சேற்று வயலாடி, அதை நிரவி, வரப்புகளை செதுக்கி, சேறு பூசி வயல்கள் தயார்படுத்தப்படும். இந்தக் காலகட்டத்தில் சேற்றில் விளையாடும் சுகம் இருக்கே, அடடா, அதை விவரிக்க வார்த்தைகளை யாரிடமிருந்து கடன் வாங்குவதெனத் தெரியவில்லை.
நாற்றங்காலில் (பட்டறை) நீர் நிரப்பி, வேர் அறுந்து போகாமல் பிடுங்கி, கத்தைகளாகக் கட்டி (புடுங்கி கத்தை கட்டறான்னு கிராமச் சொலவாடை உண்டு). வரப்பு வழியே கைகளுக்கு பத்து பதினைந்து என எடுத்துச் சென்று ஆங்காங்கே குறிப்பிட்ட இடைவெளிகளில் சமன் படுத்தப்பட்ட சேற்று வயலில் வீசி எறிய, நடவு ஆட்கள் ஒரு ஓரமாக பின்பக்கமாக நகரும் வகையில் பயிர்களை நடத் துவங்குவர். பெரும்பாலும் நடவு ஆட்கள் என்பது அக்கம் பக்கம் வயலுக்கு சொந்தகாரர்களாகவே இருப்பார்கள். பத்து இருபது தோட்டக்காரர்கள் சேர்ந்து ஒவ்வொருத்தர் வயலாக தினம் நடவு என ஒன்றிணைந்து மிக எளிதாக நடவு செய்வதாக நினைவு.
காலையில் சேற்று வயலாகக் கிடந்த பூமி, மாலையில் நடவு ஆட்கள் மேலே ஏறும் போது, குறிப்பிட்ட இடைவெளியில் பயிர்கள் என இளம்பச்சை நிறத்தில் கனத்த மௌனத்தோடு புகுந்த வீட்டு மருகளாய் தன் வேர் ஊன்ற மண்ணோடு உறவு கொண்டிருக்கும் அழகான தருணம் அது.
அடுத்த ஓரிரு நாட்களில் வயலில் இருந்த நீர் வற்ற சூரிய ஒளியின் காதலில் வேர் ஆழப் பிடித்து, கொஞ்சமாக கரும்பச்சைக்கு மாற ஆரம்பிக்கும். அதன் பின் சீரான இடைவெளியில் நீர் பாய்ச்சுவதும், உரம் போடுவதும், களை பிடுங்குவதும் என சில மாதங்களில் நெல் கதிர் விட (இதை பூட்டை என்பர்) ஆரம்பிக்கும.
முதலில் கதிர் விடும் நெல்லுக்குள் இருக்கும் அரிசி (பால் பிடித்தல்) மிக மென்மையான பால் போன்று திடதிரவ வடிவில் இருக்கும். அப்படியே கதிர் பறித்து வாயில் மென்றால், மெலிதான ஒரு இனிப்பு வாசத்தோடு வாய் மணக்கும்.
ஒரு நெல்லில் பிறந்த ஒரு பயிர் பலநூறு நெல் மணிகளோடு, தன் வாழ்நாள் சாதனையாக தலையில் நெற்கதிரை கிரீடமாகச் சூடி காற்றுக்கேற்ப சரசரவென அழகாய் அசைந்தாடும். அடுத்த சில நாட்களில் பயிர்கள் தன் பச்சை நிறத்தைத் துறந்து, விளைந்ததற்கு அடையாளமாய் தங்க நிறமாக மாறும், கூடவே நெல் மணிகளும் தங்க நிறத்திற்கு மாறி தன்னை அறுத்தெடுக்க ஆணையிடும்.
நெல் நடவைவிட மிகச் சுவாரசியமானது அறுவடைக்காலம். அறுவடைக்கென சில பிரசித்தி பெற்ற குழுக்கள் இருக்கும். அவர்கள் குத்தகையா ஒரு தொகை பேசி, அநேகமாக (அது நெல்லாகத்தான் இருக்கும்) தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தி காயவைத்திருக்கும் வயலில் அறுவடையை ஆரம்பிப்பார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதி நெல் அடிக்க பயன்படுத்து களமாக தீர்மானிக்கப்பட்டு, பயிர்கள் நிலத்தோடு ஒட்ட அறுக்கப்பட்டு, தட்டுப் பலகை கொண்டு தட்டி, ஒரு களமாக மாற்றப்படும்.
வயல்களில் மாலை வரை நடக்கும் அறுவடையை முடித்து, அறுத்த பயிர்களை கத்தைகளாகக் கட்டி, பயிரை ஒட்ட அறுத்த அந்தக் களத்தின் ஒரு பகுதியில் அடுக்குவர். அப்படி அடுக்குவதை நெல் போர் எனச் சொல்வது வழக்கம். அடுக்கப்பட்ட நெல் கத்தைகளைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாய் மேலே ஏறி உச்சியில் உருண்டு பொரண்டு, கீழே குதிக்கும் போது அப்பாவோ, தாத்தாவோ குச்சியை வைத்துக் கொண்டு அடித்து விரட்ட தயாராக நிற்பார்கள். அப்போது ஏன் அடிக்கிறார்கள் எனத் தெரியாது. இரவு நெருங்க உடம்பில் ஆங்காங்கே அரிக்கத் துவங்கும், அரிப்புக்கு காரணம் நெல் போரில் விளையாடிய போது, உடம்பில் படிந்த முழங்குதான் காரணம் எனும் போது ஒரு தீர்மானம் வரும், அடுத்து முறை இது போல் விளையாடக்கூடாது என. ஆனால் அந்த தீர்மானம் அடுத்த சில நாட்களில் மறந்து போவதுதான் மிகப் பெரிய மாயவித்தை.
அடுத்தது, நெற்பயிரிலிருந்து நெல்லை உதிர்த்துவது. இது இரண்டு கட்டமாக நடக்கும். பயிர்களை அடிப்பதற்கு ஏற்ற கல் ஒன்றை சமமாக நிறுவி, நெல் போரைப் பிரித்து, கத்தைகளை களைத்து, நெல்பயிரில் திரித்த கயிற்றில் (பிரி) பிடித்து கல்லில் அடிக்க கிட்டத்தட்ட அத்தனை நெல்மணிகளும் சிதறிக் கொட்டும். களத்தின் மறுபகுதியில் அடித்தும் விழாமல் ஒட்டியிருக்கும் நெல்லை உதிர்த்துவதற்காக, தாம்பு கட்டப்படும். அடித்த பயிர்களை பெரிய வட்டமாக போட்டு அதன் மேல் மாடுகளை ஒன்றோடு ஒன்று பிணைத்து சுத்தி வரச் செய்வர். அடித்த போதும் உதிராத நெற்கள் மாடு மிதிக்கும் போது உதிரும் என்பதற்காக.
”மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று
ஆனை கட்டிப் போரடித்த கூட்டம்”
இப்படி மாடுகளை விட்டு ஓட்டுவதை தாம்பு கட்டுதல் என்பர், தாம்பு கட்ட உழவு, கறவைக்கான எருதுகள், மாடுகள் பயன் படுத்தப்படப் மாட்டது. இதெற்கென மலைகளில் மேயும் ஒரு வகையான மலை மாடுகளை அணிஅணியாக வைத்திருப்பர். இவைகள் பெரும்பாலும் நெல் அறுவடைக் காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும்.
ஒருவகையாக, அடித்து சேகரித்த நெல், தாம்புக்களத்தில் சேர்ந்த நெல் என அனைத்தையும் சேர்த்து, காற்று வீசும் திசையில் வீசி தூற்றி, குப்பைகளை நீக்கி மூட்டையில் அடைக்கப்படும்.
அதன் பின், நெல்லை ஊறவைத்து, வேக வைத்து (வேக வைக்காமல் அரைப்பது பச்சரிசி) காயவைத்து ஆலைகளில் கொண்டு அரைத்து, நெல்லின் புறத்தோலை தவிடாக்கி, தனியே சேரும் அரிசிதான் கடைக்கு வருகிறது என்ற கதையைக் கேட்கவும், சொல்லவும் தேவையான பொறுமையை நகர அவசரத்திலும், தொலைக்காட்சியிலும் தொலைத்துவிட்டோமா.
நடவும் அறுவடையும் சார்ந்த வாழ்வு, மிகப் பெரியதொரு வாழ்க்கைப் பாடம். சிறுவயதில் விளையாட்டாக கவனித்து ரசித்து அனுபவித்த அந்த விவசாய வாழ்க்கை, தட்டில் (வட்டிலில்) விழும் சாதத்தை (சோற்றை) பிசையும் போதெல்லாம் சுகமாய், ஒரு பழம் கனவாய் மார்கழி முன் இரவில் படியும் பனித்துளியாய் கொஞ்சம் ஈரத்தோடு கனத்துக் கொண்டிருக்கிறது.
____________________________________
41 comments:
:-) superyee....
மிக அருமை.........
உழவு பற்றி முழுசா தெரிஞ்சிக்க முடிஞ்சது. கொசுவத்தி சுத்தினாலும் விபரம் தெரியாது அப்ப. நன்றிங்ணா:)
கிராமத்து வாழ்க்கையை அசைபோட வைக்கிறது...
நெற்கதிரில் பால் அடைக்கும் சமயம், வயல் பக்கம் போனாலே ஒரு பசுமையான மணம் வருமே!.
சிறுவயதில் வரப்பில் ஓடி விளையாடியது, குளத்தில் குளித்தது, அத்தனையையும் உங்கள் பதிவு நினைவுபடுத்தியது.
நன்றி கதிர்.
நல்லா சொல்லிருக்கீங்கன்ன்னா.
அருமை! பச்சை வயல் பார்க்கும் போதெல்லாம் மனது குளிர்கிறது! :))
--
இன்னும் கொஞ்ச நாள் போனா
இதெல்லாம் ஃப்ரேம் பண்ணித்தான் மாட்டி வெக்கனும் போல!
வாங்ணா
எழுதுங்ணா
திருத்துங்ணா
படிங்ணா
கிளம்புங்ணா
//
ரைட்டுங்ணா..:))
வயலடிக்கிறது பத்தி நிறைய விட்டுப்போச்சுங்களே!
உங்கள் குழந்தை கேட்கத்தவறிய கதையொன்றை யாவருக்காகவும் இணைய வெளிகளில் பதிந்திருக்கிறீர்கள். எண்ணற்றோருக்காக காலம் கடந்தும் நிற்கும்.
90% அதே அனுபவத்தை நானும் டிட்டோ செய்யமுடியும். கொஞ்சம் வார்த்தைகளும், நிகழ்வுகளும் நெல்லைக்கேயுரிய மாற்றங்களுடனிருக்கலாம், அவ்வளவுதான். நிலம் நிரவுதலை 'மரமடித்தல்' என்று சொல்வார்கள்.
அழகிய விஷயம்.
(அப்புறம் அது ஆணை இல்லைங்க, ஆனை :-))
அண்ணே அருமையான பதிவு படிச்சதும் முதலில் ஓட்டுதான் போட்டேன் என்னைப்போல் நிறைய பேருக்கு தெரியாத நிறைய இருக்கு அண்ணே எனக்கும் என் சிறுவயது கிராமத்து வயல்வெளி கண்ணில் வந்த நிக்குது....பகிர்வுக்கு மிக்க நன்றி "நெர்"கதிர் அண்ணா...
அருமையான இடுகை கதிர்!
சிலு, சிலுன்னு முகத்துல பட்டது காத்து.
இப்பல்லாம் வெவசாயம் பண்றதில்லையோ??
//”மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்றுஆணை கட்டிப் போரடித்த கூட்டம்”//
எக்காலம்??
//நடவும் அறுவடையும் சார்ந்த வாழ்வு, மிகப் பெரியதொரு வாழ்க்கைப் பாடம்//
வாழ்க்கைப் போராட்டம்..
நடவும் அறுவடையும் சார்ந்த வாழ்வு, மிகப் பெரியதொரு வாழ்க்கைப் பாடம். சிறுவயதில் விளையாட்டாக கவனித்து ரசித்து அனுபவித்த அந்த விவசாய வாழ்க்கை, தட்டில் (வட்டிலில்) விழும் சாதத்தை (சோற்றை) பிசையும் போதெல்லாம் சுகமாய், ஒரு பழம் கனவாய் மார்கழி முன் இரவில் படியும் பனித்துளியாய் கொஞ்சம் ஈரத்தோடு கனத்துக் கொண்டிருக்கிறது.
........ விலை மதிப்பு இல்லாத ஒன்றை இழக்கிறோம் என்று தெரியாமலே இழந்து கொண்டு இருக்கிறோம் ....மனதில் ஒரு பாரம் ...ம்ம்ம்ம்.....
வயல் பார்த்திருக்கிறேனே தவிர நடுகை,அறுவடை எல்லாம் பார்த்ததில்லை.உங்கள் பதிவு அத்தனையையும் கண்முன் கொண்டு வந்து காட்டியது.நன்றி கதிர்.
ரொம்ப அற்புதமாக விவசாயத்தை பற்றி பகிர்ந்துள்ளீர்கள்...
பாராட்டுகள்..
நன்றி..
நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர், எதையும் மறக்காமல் படங்களுடன் விளக்கியிருக்கும் அற்புதமான பதிவு.
விவசாயம் இப்போது கேட்க பொறுமையில்லாத கதையாகி வருவது சோகமே:(!
//நடவும் அறுவடையும் சார்ந்த வாழ்வு, மிகப் பெரியதொரு வாழ்க்கைப் பாடம். சிறுவயதில் விளையாட்டாக கவனித்து ரசித்து அனுபவித்த அந்த விவசாய வாழ்க்கை, தட்டில் (வட்டிலில்) விழும் சாதத்தை (சோற்றை) பிசையும் போதெல்லாம் சுகமாய், ஒரு பழம் கனவாய் மார்கழி முன் இரவில் படியும் பனித்துளியாய் கொஞ்சம் ஈரத்தோடு கனத்துக் கொண்டிருக்கிறது.//
இந்த அனுபவத்தையே எனது 'வயலோடு உறவாடி' தினமணிக் கதிர் சிறுகதையில் நானும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
இதமான பதிவு கதிர்..
நெற்பயிரிடுவதில் உள்ள வெவ்வேறு நிலைகளையும் அழகாக விளக்கியுள்ளீர்கள்.
கை..காலெல்லாம் ஒரே சேறாகிக்கெடக்கு...
பம்பு செட்ட போட்டு விட்டு நல்லா குளிக்கனுமப்போவ்...
இந்தா சோத்துப்பான வர்ர நேரமாகிப்போச்சி....வெயிலு உச்சிக்கு வார நேரமாகிப்போச்சி...
மாடுகள கழட்டி அந்த வரப்பு ஓரமா காவாய்க்குள்ள எறங்காம பக்க வாட்டுல கட்டி விட்டா அதுகளையும் குளிப்பாட்ட வசதியா இருக்கும்...
(இன்னும் பதிவு படிக்கலீங் சாமி..படிச்சுபோட்டு அப்புறமா கருத்து ஏதுனா இருந்தாக்கா சொல்றனுங் சாமியோவ்)
பஸ்ஸில் போகும் போது வயல் வெளிகளைப் பார்த்ததோடு சரி. அடுத்த தலைமுறைக்கு, அரிசி என்பது விளைவது என்பதே தெரியாமல் போய்விடும்.
அந்த களத்துமேட்டு வாசனை தூக்குதுங்க,,
பள்ளிக்குழந்தைகளை அறுவடையைக் காட்ட மட்டுமாவது வயல் பக்கம் கூட்டிப்போனால் நல்லது. அரிசியை கடையிலிருந்து வாங்கிக் கொள்ளும் பொருளாகவே தெரிந்து வைத்திருக்ககூடும் .
அருமை
தொலைக்காட்சி மனிதனை கொள்ளையடிக்காத காலம், சிறகுகளை சிறையிலடைக்காத பருவம்... //
அருமையான பகிர்வு...
பத்தாயக் குதிரில் நிரப்பிய நெல் மணக்குது..
ம்ம்.. அருமையான பதிவு கதிர்..
||பூட்டை ||
கேள்விப்பட்டதில்ல..
விவசாய குடும்பத்துல பிறக்கல... இருந்தாலும் அக்கம்பக்கமெல்லாம் நெற்புழுதி வாசனையை அனுபவிச்சிருக்கேன்... இப்பவும் இந்த இடுகையின் மூலமாவும்....
ம்ம்ம்..
//.. பத்து இருபது தோட்டக்காரர்கள் சேர்ந்து ஒவ்வொருத்தர் வயலாக தினம் நடவு என ஒன்றிணைந்து மிக எளிதாக நடவு செய்வதாக நினைவு. ..//
'குரியாப்பு' தானுங்க..!!
வயில் நெரவுரத 'பரம்படிக்கரதுன்னு' நம்ப பக்கம் சொல்லுவாங்க..
///நெல் போரைப் பிரித்து, கத்தைகளை களைத்து, நெல்பயிரில் திரித்த கயிற்றில் (பிரி) பிடித்து கல்லில் அடிக்க கிட்டத்தட்ட அத்தனை நெல்மணிகளும் சிதறிக் கொட்டும்.//
ஒருவர் ஒருகொத்து நெல் கதிரை வீச அதை கதிர் அடிப்பவர் லாவகமாக , தன் இரண்டு கைககளில் கோர்த்திருக்கும் சிறு கயிறுக்கிடையில் பிடித்து, சுழற்றி அடிக்கும் அழகு இருக்கிறதே.....//
தல நான் தனிபதிவா போட நெனச்ச விசயத்த நீங்க போட்டுட்டீங்க, எனக்கு வட போச்சே?!!!
அருமையா எழுதி இருக்கீங்க தல.
//நிலம் நிரவுதலை 'மரமடித்தல்' என்று சொல்வார்கள்//
எங்க ஊருல பெரம்படிக்குறதுன்னு சொல்வாங்க சார்.
அது ஒரு கனாகாலமாக மாறுவதற்கு முன் விவசாயத்தை காக்க வேண்டிய கட்டாயத்தை உணர்வோம்!
கிராமத்து வாழ்க்கையை அசைபோட வைக்கிறது...
தொலைக்காட்சி மனிதனை கொள்ளையடிக்காத காலம், சிறகுகளை சிறையிலடைக்காத பருவம்... விளையாடுவதற்கு விவசாய நிலமே களமாய் இருந்த நாட்கள் அவை.
இளம்பச்சை நிறத்தில் கனத்த மௌனத்தோடு புகுந்த வீட்டு மருகளாய் தன் வேர் ஊன்ற மண்ணோடு உறவு கொண்டிருக்கும் அழகான தருணம் அது.
நானும் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து நீங்கள் சொன்ன எல்லா சுகத்தையும் அனுபவித்தவன் தான் ஆனால் என் பிள்ளைகளுக்கு(சந்ததி) இதில் எதுவும் கிடைக்காது என நினைக்கும் போது தான் மிகவும் வருத்தமாக உள்ளது.
//அடப் போங்கப்பா... போர் அடிக்குது...
என்று ஓடும் மகளிடம் நான் சொல்ல, அவள் கேட்க பொறுமையில்லாத ஒரு கதை கண்ணாடியில் படியும் ஈரப்பதமாய் படிந்து கிடக்கிறது.//
highlight words of the article kathir...
nelmanikul manitha vazhkaiyaiyum kondu vanthu erukinga....
மிக அருமை. எனது இளமைக்காலத்தை நினைவுபடுத்தினாலும், இவை எதையுமே அறியாத, அறிந்துகொள்ள விருப்பமும் இல்லாத என் இரண்டு குழந்தைகளையும் பார்க்கும் போது "ஓ" வென்று அழலாமா எனத்தோண்றுகிறது.
ஒரே வார்த்தை
பிரமாதம்
கிரி
மிக அருமை
வயல் வெளிகளில் விளையாடிய அந்த நாட்கள் உண்மையில் வசந்த காலங்கள்தான்,
சுகமாய்அல்ல வருத்தமாகவும் இருக்கிறது ! அந்த வாழ்க்கையை தொலைத்துவிட்டொமே என்று !
நகரத்து வாழ்க்கையில்
நசிந்து போன,
நாகரீக கூத்தில்
நாரி போன,
நாளும் தெரிந்தவனாய்
பிதற்றும்,
நாதாரியாகிய நான் !
இது தான் வாழ்க்கை என்று தெரிந்தும் ,
ஈடுபட தொடர்பு இல்லாமல்
எந்திர வாழ்க்கையில் சுழன்று கொண்டிருக்கிறேன்.
விவசாய மற்றும் கிராம சூழ்நிலையின் மிசை இருக்கும் மோகத்தை
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல உள்ளது .
நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
அருமையான பதிவு...எங்க ஊரு பக்கத்தில் தாம்பு கட்டுறத ஏர் கட்டுறது என்பாங்க..மேலும் நெல்மணிகளில் உள்ள தூசு,தும்மை நீக்க காற்றடிக்கும் திசைக்கு எதிர்திசையில் நின்று சுளவு (முறம்) வைத்து குப்பை நீக்குவதை சண்டுவிடுவது என்பார்கள்..கடைசியாக சாக்குகளில் கட்டுவதற்க்கு முன்பு களத்தில் நெல்லை பரவலாக வெயிலில் காயவைப்பாங்க...அப்போது பார்த்து மேகம் கறுத்து இருக்கும்..தூறல் விழும் முன்பு அத்தனை நெல்லையும் குடுப்பத்தோடு சேர்ந்து அள்ளி உள்ளே கொண்டுபோகும் பரபரப்பு இருக்கே...அப்பப்பா.வார்த்தைகளால் சொல்லமுடியாது அதை...சில சமயம் நெல்லை அள்ளி முடித்ததும் பார்த்தால் நல்ல வெயில் அடிக்கும்...அப்புறம் மறுபடியும் அத்தனை நெல்லும் களத்திற்க்கு வரும்..
இன்று ரொம்ப நாளுக்கு பிறகு பழையநினைவுகள் வந்தது இதை படித்ததும்...நன்றி
விவசாயிகள் வாழ்வு மிகுந்த சிரமத்திற்க்குள்ளானது...நகரத்திலுள்ளவர்களுக்கு அதை எவ்வளவு விளக்கினாலும் புரிஞ்சுக்க முடியாது
Post a Comment