தீண்டத்தகாத சொற்களா?

இட்டேரி
பிரவக்குட்டி
மூட்டுக்குட்டி
வட்டில்
சோறாக்குறது
சாறுகாய்ச்சறது
மொளசாறு...

இந்த சொற்கள் உங்களுக்கு பழக்கப்பட்டதா!!!???
இவை கொங்கு மண்டலத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளில் சில...

மேலே குறிப்பிட்ட வட்டார சொற்கள் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எங்கள் அரிமா சங்க கூட்டத்தில் பகிர்ந்து கொண்டவை.

இட்டேரி:
பட்டி அல்லது கட்டுத்தறையிலிருந்து விவசாய பூமி வழியாக ஆடு, மாடுகளை மற்றோரு நிலத்திற்கு ஓட்டிச் செல்வதற்கு பயன் படுத்தப்படும் பாதை. முக்கியமான செய்தி இந்தப் பாதையின் இரு பக்கமும் ஆடு, மாடுகள் விவசாய பூமியிலிருக்கும் பயிர்களை கடித்து விடாமல் இருக்க முள் செடி அல்லது கிளுவை மரம் கொண்டு வேலி அமைக்கப் பட்டிருக்கும்.

பிரவக்குட்டி, மூட்டுக்குட்டி:
ஆடுகளில் இரண்டு வகை உண்டு. செம்மறி(செம்புளி) ஆடு, வெள்ளாடு. பொதுவாக எல்லோரும் இரண்டு வகை ஆடுகளின் குட்டிகளையும் ஆட்டுக்குட்டியென்றே அழைப்பது வழக்கம். ஆனால் கொங்கு மண்டலத்தில் செம்மறி ஆட்டின் குட்டிகளை பிரவக்குட்டி எனவும், வெள்ளாட்டின் குட்டிகளை மூட்டுக்குட்டி எனவும் அழைப்பதுண்டு.

வட்டில்:
சாப்பிடப் பயன்படுத்தும் வட்டிலை இன்று தட்டு என்றோ அல்லது பிளேட் என்றோ அழைக்கிறோம். தட்டு என்பது முழுவதும் தட்டையாக இருப்பது. அதுவே பெரிதாக இருந்தால் அதன் பெயர் பராத்து. வட்டில் என்பது தட்டையாக இருந்து விழிம்பு வளைந்து உயரமாக இருக்கும். இன்று எங்கும் வட்டிலை வட்டில் என்று அழைப்பதில்லை.

சோறாக்குதல்:
நாம் வெகு இயல்பாக பயன்படுத்தும் சாதம் அல்லது ரைஸ் என்பதின் உண்மையான பெயர் சோறு. சோறாக்குதல் என்பது மிகப் பெரிய அர்த்தம் பொதிந்த வார்த்தை இது... அரிசியை சுடுதண்ணீரில் போட்டு கொதிக்க வக்கும் போது அரிசி சோறாக பெருகி வரும். சோறாக பெருகுவதைத்தான் சோறாக்குதல் என்பர்.

சாறுகாய்ச்சுதல்:
நாம் வெகு இயல்பாக பயன்படுத்தும் குழம்பு அல்லது சாம்பார் என்பதின் உண்மையான பெயர் சாறு. சாறுகாய்ச்சுதல் என்பது தேவையானவற்றை போட்டு காய்ச்சியெடுத்தால் வருவதுதான் சாறு.

மொளசாறு:
நாம் ரசம் என்றழைப்பது தான் மிளகு சாறு. மிளகு கொண்டு (மிளகாய் சிலி நாட்டிலிருந்து 15ம் நூற்றாண்டில் வந்தது) காய்ச்சுவது மிளகு சாறு, இது மருவி மொளசாறு என்றழைக்கப்பட்டது.
........................................................................................................................................
ந்த வார்த்தைகளை திரு. பெருமாள்முருகன் பகிர்ந்து கொண்டு விளக்கியபோது எனக்கு முழுக்க முழுக்க என் ஆயாவின் (இங்கு பாட்டியை ஆயா என்றுதான் அழைப்போம்) நினைவு வந்தது. நான் சிறுவனாக இருந்த காலத்தில் என் ஆயா மேலே குறிப்பிட்ட அனைத்து வார்த்தைகளையும் (வட்டாராச் சொற்கள்) மிக இயல்பாக பயன்படுத்தி வந்தார். கடந்த 25 வருட காலத்தில் என் ஆயாவும் கூட இந்த வார்த்தைகளை (கிராமத்தில் வசித்தாலும்) கட்டாயமாக புறந்தள்ளிவிட்டு கொஞ்சம் நெருடலோடு எங்களுக்காக சாப்பாடு எனவும், குழம்பு எனவும், ரசம் எனவும் உபயோகப்படுத்துவதை உணர்கிறேன். அதே ஆயா தன் வயதொத்த மற்ற பாட்டிகளுடன் பேசும்போது அந்த வட்டாரச் சொற்கள் உயிர் வாழ்வது மெலிதாக காதுகளிலும் விழத்தான் செய்கிறது.

இன்று மதியம் சாப்பிடும் போது வட்டிலில் சோறு போட்டு, சாறு ஊத்தி சாப்பிடுவோம் என்ற போது நேற்று என்னுடன் கூட்டத்திற்கு வந்த நண்பர் சேது மிக சத்தமாக சிரித்தார்.

வட்டாரச் சொற்கள் ஏன் இன்று தீண்டத்தகாத சொற்கள் போல் புறந்தள்ளப்பட்டுவிட்டன. நாகரீகம் என்ற நினைப்பில் நாம் பயன்படுத்தும் சொற்கள் எந்த வகையில் இவற்றை விட மேம்பட்டவை?

17 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அண்ணாச்சி.. நீங்க சொல்றது சரிதான். என்ன செய்ய இது தமிழின் சாபக்கேடு.நல்ல பதிவு.

எங்க ஆத்தா (பாட்டி), தாத்தா இந்தச் சொற்களைப் பயன்படுத்தினார்கள்.

இன்றும் எங்க வீட்டுல "வட்டல்" என்று கூறிவருகிறோம்.
இந்த சோறில் ஆரம்பித்து என்னென்ன பிறமொழிச் சொற்களைத் தமிழில் பயன்படுத்துகிறோம் என்பது "நமது பயன்பாட்டில் தமிழ்" என்ற தலைப்பில் தொடர்பதிவை எழுதிவருகிறேன். நேரமிருந்தால் படித்துப் பாருங்கள். ஞாயிறன்று கராமாப் பூங்காவில் சந்திப்போம்.

நாகரீகம் என்பதை நாகரிகம் என்று எழுதுவதே சரி.

காமராஜ் said...

கதிர் ரொம்ப அழகாகச்சொன்னீர்கள்.
வழக்கொழிந்து போவதில் என்னென்னமோ
நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
எங்கள் பக்கம் சோறு, வட்டில், சாறு உண்டு
எவ்வளவு காலம் ஆகிறது.

க.பாலாசி said...

நாகரீகம் என்ற நினைப்பில் நாம் பயன்படுத்தும் சொற்கள் எந்த வகையில் இவற்றை விட மேம்பட்டவை?


நாம் இப்போது பயன்படுத்தும் வார்த்தைகள் பழைய சொற்களிலிருந்து மேம்பட்டவை என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த வட்டார சொற்கள் எல்லாம் ஒரு வட்டத்துக்குள்ளேயே முடங்கிவிட்டன. இங்கே நாம் பயன்படுத்தும் வார்த்தை எங்கள் ஊரில் கிடையாது. அதனால் நாம் பொதுவான வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் என்று நினைக்கிறேன்.

எனக்கு சோறு என்ற சொல் மட்டும் தெரியும். மற்ற சொற்கள் எனக்கு தெரியாதவையே.

இப்ப நான் ஈரோடு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. நான் இன்னும் தாங்கள் கூறிய சொற்களை கேள்விப்படவில்லை. ஒருவேளை நகரத்தில் நான் இருப்பதாலோ என்னவோ. அதுதான் காரணமாக கூட இருக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து நாம் இன்னொரு இடத்திற்கு இடம்பெயரும் போது இந்த சொற்கள் எல்லாம் மாறி நாகரீகம் எனும் சாக்கடையில் விழுந்துவிடுகிறோம். நம் அழகும் வீணாகிவிடுகிறது.

நிகழ்காலத்தில்... said...

இன்றைய சூழலில் இந்த வார்த்தைகள்
மனதில் உற்சாகத்தை ஏற்படுத்துகின்றன.
கிராமத்து நினைவுகளை எழுப்புகின்றன.

மதி.இண்டியா said...

ன்னா , இன்னும் எங்கூர்ல கிராமம் பக்கம்லாம் இந்த வார்தைகள் பொழக்கத்துல இருக்குதுங்க

ப்ரியமுடன் வசந்த் said...

சிறப்பாக எடுத்துரைத்தீர்கள் கதிர் இன்னும் அப்பாவை ஐயான்னும் தாத்தாவை பாட்டைய்யா, பாட்டிய அம்மாச்சி,அப்பத்தான்னு கூறும் தமிழன்.......

sakthi said...

அருமையான பகிர்வு

ஈரோடு கதிர் said...

// ச.செந்தில்வேலன் said...
இன்றும் எங்க வீட்டுல "வட்டல்" என்று கூறிவருகிறோம்.//

வியப்பாக இருக்கிறது .மிக்க மகிழ்ச்சி.

//"நமது பயன்பாட்டில் தமிழ்" என்ற தலைப்பில் தொடர்பதிவை எழுதிவருகிறேன்.//

படிக்கிறேன்

/நாகரிகம் என்று எழுதுவதே சரி.//

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இனி திருத்திக்கொள்கிறேன்

வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி செந்தில்

//காமராஜ் said...
எவ்வளவு காலம் ஆகிறது.//

ஆமாம் கிட்டத்தட்ட மற(றை)ந்து போய்விட்டது

வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி காமராஜ்

//பாலாஜி said...
ஆனால் இந்த வட்டார சொற்கள் எல்லாம் ஒரு வட்டத்துக்குள்ளேயே முடங்கிவிட்டன. இங்கே நாம் பயன்படுத்தும் வார்த்தை எங்கள் ஊரில் கிடையாது. அதனால் நாம் பொதுவான வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் என்று நினைக்கிறேன்.//

ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து, ஆனாலும் சோறு என்ற சொல் கூட மேல்தட்டு, நடுத்தர தட்டு மக்களின் பயன்பாட்டில் இருந்து மறைந்து வருகிறது

//இப்ப நான் ஈரோடு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. நான் இன்னும் தாங்கள் கூறிய சொற்களை கேள்விப்படவில்லை. ஒருவேளை நகரத்தில் நான் இருப்பதாலோ என்னவோ.//

என் ஆயாகூட என்னிடம் மேற்கண்ட சொற்களை தவிர்த்து வருகிறார். நீங்கள் அறியாததில் ஆச்சரியம் இல்லை.

//நம் அழகும் வீணாகிவிடுகிறது.//

அழுத்தமான உண்மை

வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி பாலாஜி

//நிகழ்காலத்தில்... said...
கிராமத்து நினைவுகளை எழுப்புகின்றன.//

மகிழ்ச்சி.

வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி நிகழ்காலத்தில்


//மதி.இண்டியா said...
ன்னா , இன்னும் எங்கூர்ல கிராமம் பக்கம்லாம் இந்த வார்தைகள் பொழக்கத்துல இருக்குதுங்க//

மிக்க மகிழ்ச்சி மதி.

வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மதி.


//பிரியமுடன்.........வசந்த் said...
அப்பாவை ஐயான்னும் தாத்தாவை பாட்டைய்யா, பாட்டிய அம்மாச்சி,அப்பத்தான்னு கூறும் தமிழன்.......//

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பொறாமையாக உள்ளது வசந்த்
வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி வசந்த்.

//sakthi said...
அருமையான பகிர்வு//

வாங்க சக்தி. நன்றி

நாகா said...

எல்லா சொற்களையும் இன்னும் எங்கூருல யூஸ் பண்றாங்க கதிரண்ணா

ஈரோடு கதிர் said...

//நாகா said...
எல்லா சொற்களையும் இன்னும் எங்கூருல யூஸ் பண்றாங்க//

நல்லது நாகா...
வருகைக்கு நன்றி நாகா

ராமலக்ஷ்மி said...

அழகான விளக்கங்கள். முடிவில் சரியான கேள்வி.

காணமல் போன வட்டாரச் சொற்கள் என சிலகாலம் முன்னர் வலையில் தொடர்பதிவு பலரும் இட்டிருந்தார்கள். எவ்வளவு சொற்கள் நம்மை விட்டுப் போய் விட்டன என உணர்த்தின அப்பதிவுகள். உங்கள் பதிவும் அப்படியே. நன்று கதிர்!

ஈரோடு கதிர் said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

எனக்கு வட்டாரச்சொற்கள் பற்றிய கவனம் இதுவரை இல்லை. ஆனால் திரு.பெருமாள் முருகனின் பேச்சுக்குப் பின் மனதில் மிகப்பெரிய உறுத்தல் எனவே தான் இந்தப் பதிவு.

//காணமல் போன வட்டாரச் சொற்கள் என சிலகாலம் முன்னர் வலையில் தொடர்பதிவு பலரும் இட்டிருந்தார்கள்//

முடிந்தால் மேலே குறிப்பிட்ட வலை முகவரிகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளவும்

ராமலக்ஷ்மி said...

நேரம் வாய்க்கையில் முடிந்தவரை நான் படித்த பதிவுகளின் சுட்டிகளைத் தேடித் தருகிறேன் கதிர். அவகாசம் தாருங்கள்!

ராமலக்ஷ்மி said...

நான் முன்னர் படித்தவற்றோடு மேலும் சிலவும் தேடித் தந்துள்ளேன். இன்னும் கிடைக்கலாம் நீங்களும் தேடினால்...

http://67.59.186.119/CGI-BIN/py.cgi/000110A/http/anpudan-thikalmillr.blogspot.com/2009/02/blog-post_04.html

http://sirumuyarchi.blogspot.com/2009/02/blog-post.html

http://nandhu-yazh.blogspot.com/2009/02/blog-post.html

http://sollarasan.blogspot.com/2009/03/blog-post_04.html

http://jothibharathi.blogspot.com/2009/02/blog-post_14.html

http://sandanamullai.blogspot.com/2009/02/blog-post.html

http://govikannan.blogspot.com/2009/02/blog-post_15.html?showComment=1234743360000

http://tsivaram.blogspot.com/2009/03/blog-post_21.html

http://buafsar.blogspot.com/2009/02/blog-post_25.html

ஈரோடு கதிர் said...

//ராமலக்ஷ்மி said...
நான் முன்னர் படித்தவற்றோடு மேலும் சிலவும் தேடித் தந்துள்ளேன். இன்னும் கிடைக்கலாம் நீங்களும் தேடினால்...//

ராமலக்ஷ்மி ....
ஆயிரமாயிரம் நன்றிகள் உங்களுக்கு

பிரேமி said...

இது போன்று நம் மண்டலத்தில் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து இன்னும் பதிவிடுங்கள்... தெரியாத நாங்களும் தெரிந்து கொள்கின்றோம்....

Arun kumar.V said...

enga oorla piravakkutti na semmariyattu girl. Kedakutti na semmariyattu boy. moottukutti, not sure. but heard it many times.

Sorry for tanglish. I dont know how to type in tamil. Next time I will type in tamil for sure.