கனவை நோக்கிய நெடும்பயணம்





கற்பனை செய்ய முடியாததொரு வேகத்தில் காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. காலம் என்று எதைச் சொல்ல? இதோ இப்போது லாவகமாய் நழுவும் இந்த நொடியா, தத்தித் தாவும் நிமிடமா, கடக்கும் மணிப்பொழுதா, தன் போக்கில் கரையும் இரவும் பகலுமா? இவை எவற்றையும் கணக்கில் கொள்ள முடியாதபடி, ஆண்டுகளே அவசரமாய்த் தீர்கின்றன. சமீபத்தில் நடந்தது என நாம் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் யோசித்துப் பார்த்தால் இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இப்பொழுதுதான் நிகழ்ந்ததுபோல் இருப்பவையெல்லாம் எப்பொழுதோ நடந்து முடிந்து போனதாக இருக்கின்றன.

நாள், வாரம், மாதம், வருடம் என்பதில் எதுவும் மாறிவிடாத போதும், காலம் மட்டும் எப்படி விரைந்து ஓடுகின்றது!? இன்றைய நாட்களில் ஆக்கிரமிப்புகள் கூடிப்போய்விட்டதுதான் நாட்கள் வேகமாக ஓடுவதான தோற்றத்தைத் தருகிறதோ எனத் தோன்றுகிறது. நாள் துவங்கும்போதே ஏதோ ஒன்று ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்து இன்னொன்று, அதிலிருந்து மற்றொன்று எனக் களைத்து நிமிர்கையில், நாள் தீர்ந்து போய்விடுகின்றது.

எப்போதும் இதுபோல் இருந்ததில்லையே. வாழ்ந்த காலம் வேறாகவும் வாழும் காலம் வேறாகவும்தான் இருக்கின்றன. வாழப்போகும் காலம் இன்னும் வேறானதாக, ’இப்படித்தான் இருக்கும்’ எனக் கற்பனை செய்யமுடியாததாக இருக்கலாம். இப்படியாக யோசிப்பதும், பேசுவதும் நிகழ்காலத்தின் மீது எப்போதும் புகார் வாசிக்கும் ஒருவித மனநிலையா!? அப்படியாகவே இருப்பினும்,  நிகழ்காலம் குறைகளற்றதாக எப்படி இருக்க முடியும்.

கால் நூற்றாண்டு காலம் பின்னோக்கி எந்த ஒரு தினத்திற்குச் சென்று பார்த்தாலும், அப்படியான நாட்களை ஆக்கிரமிக்க ஒன்றுமே இல்லையென்பதுதான் உண்மை. வாழ்க்கையில் ’இது வேண்டும், இப்படியாக இருக்க வேண்டும்’ எனும் கனவுகள் இல்லை. பெரிய தேவைகளற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். கனவுகள் இரவுகளொடும், உறத்தோடும் மட்டுமே தொடர்புடையதாக இருந்தன.

இன்றைய நாட்களை எந்நேரமும் எதுவோ ஒன்று ஆக்கிரமித்திருக்கின்றது. புதிய உருவாக்கங்கள் வாழ்வின் அங்கங்களாக மாறத்தொடங்கிவிட்டன. நேற்று அடைந்தது இன்றும், இன்று அடைவது நாளையும் பழையதாகிவிடுகின்றன. புதிதாய், மிகப் புதிதாய்த் தேவை எனும் வேட்கையோடு பயணம் நீள்கிறது. புதிது புதிதாய் வேண்டும் எனும் தேடலை, ஆசையை, இவை தேவையில்லாத ஆசை / பேராசை எனும் வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது.

ஆக்கிரமிப்பு மிகுந்த நாட்களை இலகுவானதாய்க் கடந்திட மிகுந்த திட்டமிடலும், ’எதிர்காலத்தில் இப்படியாக வேண்டும்’ எனும் தீர்க்கமான கனவும் அவசியமாக இருக்கின்றது. திட்டமிடாத அன்றாடங்கள் நெருக்கடி மிகுந்ததாக இருக்கின்றன. எதிர்காலத்தில் இது வேண்டும், இப்படி இருக்க வேண்டும் எனும் தெளிவற்ற வாழ்க்கை குழப்பம் சூழ்ந்ததாகவே அமைகின்றது.

ஒவ்வொரு நாளும் நம் முன் புதிய வாய்ப்புகளை முன்னிறுத்துக்கின்றன. சில நாட்கள் சிலவற்றை முற்றிலும் புறந்தள்ளி ’இவை பயன்பாட்டுக்கு உகந்ததன்று’ என முடக்குகின்றன. இவை இரண்டையும் சமன் செய்து வாழ்க்கையை நகர்த்திட, எதிர்காலம் குறித்த நம்பிக்கை மிகுந்த கூரிய பார்வையும், அந்த பார்வைக்கான கற்றலும், அதைச் செயல்படுத்துவதற்கான உழைப்பும் அவசியம்.

எதிர்காலத்தில் நமக்கு எது தேவை என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். கிடைக்கும், கிடைக்காது என்பது குறித்து இப்போது கவலைப்பட வேண்டியதில்லை. அப்படியான கவலைகளற்ற கனவுதான் பாரதிக்கு இருந்திருக்க வேண்டும். பாரதியின் துணிச்சல்மிகு கனவுகளில் என்னை எப்போதும் உலுக்கிக் கொண்டிருப்பவை இரண்டு

”காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்ற கவிதை வரிகள் நினைக்கும் கணந்தோறும் வியப்பேற்படுத்துவது ஏறத்தாழ நூறு வருடங்களுக்கு முன்பு எப்படி பாரதியால் அப்படியொன்றை தன் விருப்பமாக, கனவாகக் கொண்டிருக்க முடிந்தது என்பதுதான்.

தனக்கு வேண்டுவதைக்கூட ஏற்கனவே புழக்கத்தில் இருப்பதிலிருந்து எளிதாகத் தேடி எடுத்துக்கொள்ளவே தயங்கும் மனிதர்களுக்கு மத்தியில் ’காசியில் பேசும் உரையை காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி வேண்டும்’ என நினைக்க எத்தனை துணிச்சலும் பேராவலும் இருந்திருக்க வேண்டும். ’அப்படியான கருவி எப்படியிருக்கும், எத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும், எதன் மூலம் இயங்கும்’ என எதையுமே கற்பனை செய்திட முடியாத காலத்தில், தான் விரும்பும் காரியத்தைச் செய்ய ஒரு கருவி வேண்டும் எனக் கற்பனை செய்வது அல்லது கனவு காண்பது நிகழ்ந்திருக்கின்றது.

இக்கருவி செய்யும் கனவை விடவும், கூடுதலான வேட்கை நிறைந்த கனவொன்றும் பாரதியிடமிருந்து தெறித்ததை மறந்துவிட முடியாது. அடிமை விலங்கொடிக்க தேசம் முழுதும் வேள்வி நடந்த காலகட்டத்தில் விடுதலையை அடைந்தே விட்டதாகவே கனவு கண்டிட்ட துணிச்சல்தான் அது.

”ஆடுவோமே -- பள்ளுப் பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று”
எனும் கனவோ, தீர்க்கதரிசனமோ பாரதிக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.

பின்வருவதை முன் உணர்வதே தீர்க்கதரிசனம் எனில், பாரதியிடம் தீர்க்கதரிசனம் எனும் வல்லமை இருந்தது; பின்னால் வருமா வராதா என்று தெரியாதபோதும், அது தனக்கு வேண்டுமெனும் தீராத கனவு இருந்தது. கனவு அவரால் அடையக்கூடியதாகவோ, அவர் காலத்திற்குள்ளேனும் அடைக்கூடியதாகவோ இல்லாவிடினும், அவர் கண்ட கனவை காலம் மெய்யாக்கியது.

தீவிரமும், வேட்கையும், தேடலும் நிறைந்தவொரு கனவுதான் நமக்கும் மிக முக்கியமான தேவையாக இருக்கின்றது. ஒரு கனவை தீர்மானிப்பது மட்டுமே போதுமானதாக இல்லை. தீர்மானித்த கனவின் பாதையில் தெளிவு கொள்ளுதல் முதல் தேவை. கனவை நோக்கிச் செல்வதென்பது ஒரு நெடும்பயணம். அந்த நெடும்பயணத்தை எங்கு துவக்குகிறோம் என்பதிலிருந்து, கடக்கும் தொலைவின் ஒவ்வொரு படிநிலையையும் உணர்ந்து, தெளிந்து, மகிழ்ந்து பயணித்தல் அவசியம்.

கனவை நோக்கிய நெடும்பயணத்தில் ஒவ்வொரு நிலையை எட்டுவதையும் ”வெற்றி” என்கிறோம். அப்படியான எட்டல்களும், கருதும் வெற்றிகளும் இணைந்த தொகுப்புதான் அந்தப் பயணப்பாதை. கிட்டும் ஒவ்வொரு வெற்றியும் பயணத்திற்கான உந்து சக்தி. அடையும் ஒவ்வொரு தோல்வியும் அனுபவச் சேர்க்கை.

ஒட்டுமொத்தக் கனவை நோக்கிய பயணமோ, அதிலிருக்கும் இலக்குகளை நோக்கிய பயணமோ, அது முதலில் கோருவது நேர்மையான, அர்ப்பணிப்பு மிகுந்த பங்கேற்பை மட்டுமே. அதில் பிறழ்ச்சி ஏற்பட்டால் பயணம் மிகப்பெரிய தொய்வைச் சந்திப்பதை தவிர்க்கமுடியாது. கோரும் உழைப்பை பொய்யின்றி, சமரசமின்றி, வெற்றுச் சமாதானங்களின்றி முழுத்திறனோடு அளிக்கவேண்டும்

உதாரணத்திற்கு உழைப்பு கோரப்படும்போது அளிக்கப்படும் பதில்கள்….. ”நான் செய்கிறேன் / செய்வேன்” (I will do) அல்லது ”செய்ய முயற்சிக்கிறேன்” (I will try to do”)  என்பதுதான். ஒரு காரியத்தில் ”நான் செய்கிறேன்” என்பதை முழு ஒப்புக்கொள்ளலாகக் கருதலாம். ”செய்ய முயற்சி செய்கிறேன்” என்பதில் உண்மை முயற்சிகள் இருக்கலாம்; அல்லது மகிழ்வூட்டும் பதிலாகவோ, கேட்பவரை திருப்தி செய்வதற்கான பதிலாகவோ இருக்கலாம்.

“நாளை வருகிறாயா!?” எனக் கேட்கப்படுவதில், ”ஆமாம் வருகிறேன்” எனப் பதில் சொல்பவர்களில் 80% பேர் அவ்விதமே வருகிறார்கள். ”ஐ வில் ட்ரை” எனச் சொல்பவர்களில் 80% பேர் வருவதே இல்லை. முயற்சி செய்தலை நிகழ்த்தாமல், முயற்சி செய்கிறேன் என்பதை ஒரு தப்பித்தலுக்கான பதிலாக மட்டும் பிரகடனப்படுத்துகிறார்கள்

பயிலரங்கு ஒன்றில் ”Try” குறித்து உரையாடுகையில் நான்கு பேரைச் சுட்டி, ”எழுந்து நிற்க முயற்சி செய்யுங்கள்” என்றேன். நால்வரும் எழுந்து நின்றனர். ”ஏன் எழுந்து நிற்கிறீகள்?” எனக் கேட்டேன். சற்று குழம்பியபடி ”நீங்க தானே எழுந்திருக்கச் சொன்னீர்கள்!?” என்றனர். நான் ”எழுந்து நில்லுங்கள் என்றா!?” சொன்னேன் என அழுத்தமாகக் கேட்டேன். தங்களுக்குள் கிசுகிசுப்பாய் பேசிவிட்டு “இல்லை…. எழுந்திரிக்க ட்ரை பண்ணச் சொன்னீங்க!”

“எழுந்திருக்க ட்ரை பண்ணுங்கனுதானே சொன்னேன். எழுந்திரிக்கச் சொல்லலையே….!”

“ட்ரை பண்ணினாலே எழுந்து நிற்க வேண்டியதாகி விடுகிறது”

உண்மையில் முயற்சித்தல் என்பது எழுந்து நிற்பதல்ல, எழுந்து நிற்க முயற்சி செய்தல் மட்டுமே. அதாவது கால்களை சற்று வலுப்படுத்தி, உடலை இருக்கையிலிருந்து மேல் நோக்கி பெயர்த்துதல். முயற்சி என்பது வெறும் ஒரு அங்குலம் மட்டும் உடலை உயர்த்திவிடுதல் எனில், அதை மட்டுமே செய்துவிட்டால் போதும். இருக்கையிலிருந்து ஒரு அங்குலம் மட்டும் உடலை உயர்த்திவிட்டு அதோடு நின்றுவிட முடியுமா!? அப்படி நிற்பதை உடல் ஏற்றுக்கொள்ளாது. அந்த ஒரு அங்குல உயரத்தில் எவ்வளவு நேரம் சமநிலை பாவித்துத் தொடரமுடியும். இங்குதான் ’செய் அல்லது செத்துமடி’ எனும் பாடத்தை உணர்த்துகிறது முயற்சி.

எழுந்து நிற்க முயற்சி செய்ததில் நாற்காலியிருந்து சுமார் ஒரு அங்குலம் உயரத்தில் கால்களின் பலத்தில் மட்டுமே நிற்கிறோம். அச்சூழலில் வலி தவிர்க்க, சமநிலை காப்பாற்ற இருக்கும் வழிகள் ஒன்று வீழ்ந்துவிட வேண்டும் அல்லது எழுந்து நின்று விடவேண்டும். வீழ்வதற்காக முயற்சி செய்யவில்லை, எழுவதற்காகத்தான் அந்த முயற்சியினை மேற்கொண்டோம் என்பதால் அது நம்மையுமறியாமல் நிகழ்ந்து விடுகின்றது.

செயல்களில் காட்டும் அர்ப்பணிப்பும், நேர்மையான உழைப்பும், தீவிரமும் வெற்றிகளைக் கையகப்படுத்தும். வெற்றிகளின்  தொகுப்பு தானாகவே கனவினை வசப்படுத்தும்.

-

நம் தோழி பிப்ரவரி இதழில் வெளியான கட்டுரை

-

1 comment:

'பரிவை' சே.குமார் said...

நல்ல கட்டுரை அண்ணா...