ஒரு கல்லூரி மாணவியின் குமுறல் எழுப்பும் பல கேள்விகள்!




அது கிராமப் பகுதியில் அமைந்திருக்கும் அரசு கலை, அறிவியல் கல்லூரி. பெரும்பாலானோர் வசதி குறைந்த ஏழ்மையான குடும்பத்திலிருந்து சார்ந்தவர்கள், தன்னம்பிக்கை குறைவாகவே இருப்பார்கள் என என்னை அழைத்தவர் சொல்லியிருந்தார். மற்ற கல்லூரி மாணவர்களிடையே பேசுவது போன்றேதான் இங்கேயும் பேசினேன்.

தற்போது அவர்களுக்கு கிடைத்திருக்கும் கல்வி வாய்ப்பு, இதற்காக சமூகமும், பெற்றோர்களும் செய்திருக்கும் தியாகங்கள் குறித்துத் துவங்கி, அவர்களின் இலக்கை இனங்காணுதல், அதை நோக்கிய பயணத்தில் தன்னம்பிக்கையோடு செயல்படுதல் குறித்துப் பேசினேன்.

நிகழ்ச்சி குறித்து பங்கேற்பாளர்களின் கருத்துக்கேட்பு நடந்தது. அப்போது கூட்டத்தின் கடைசி வரிசையிலிருந்து ஒரு மாணவி எழுந்து வந்தார். ஒருங்கிணைப்பாளர் ஒலிவாங்கியை அவரிடம் கொடுக்க முனைந்தார். அவர் மறுத்து முன்னோக்கி வந்தார். நிறுத்தி ஒலிவாங்கியைக் கொடுக்க முற்பட "நான் மைக்ல பேசல, தனியா பேசணும்" என்றபடி என்னை நோக்கி வந்தார்.

"நீங்க குடிகாரங்களப் பத்தி சொன்னீங்ல்ல… நெறய பிரச்சனைங் சார்… எங்கப்பா தெனமும் குடிக்கிறாரு… நான் சாவணும்… இல்லீனா கொல பண்ணனும் சார்" எனத் திக்கித்திணறி உடைந்த சொற்களாக உதிர்க்கும்போதே, கண்கள் நிரம்பிவிட்டன. மொத்தக் கூட்டத்தின் கவனமும் அங்கு திரும்பியது.

"மீட்டிங் முடியட்டும்மா… நாம பேசுவோம்… உறுதியா கூப்புட்டு பேசுவேன். இப்ப உக்காருங்க…" என்ற சமாதானத்தை ஏற்றுக்கொண்டவராய் தன் இடத்திற்குத் திரும்பினார். மேலும் மாணவ, மாணவிகள் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

*

ஈரோடு மாவட்டத்தில் ஒரு குடிகாரக் கணவர் வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களையும் விற்றுக் குடிக்கிறார். 5, 2 வயதுகளில் குழந்தைகள். மனைவி வேலைக்குச் செல்வதால் அடுப்பெரிகிறது. 2 வயது கைக்குழந்தை வேலைக்குச் செல்வதற்கு இடைஞ்சலாக இருக்கும் சூழலில், வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரையும் விற்று ஒருநாள் குடித்துவிட்டு வருகிறார். சண்டை முற்றுகிறது. சண்டையின் உச்சத்தில் ஏற்பட்ட கோபத்தில் வேலைக்குச் செல்வதற்கு இடைஞ்சலாக இருக்கிறதே என குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுகிறார் தாய். வழக்கு நடக்கிறது. ஏழு வருடங்கள் தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக செய்தி.

*

மதுரையில் கணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்கிறாள் மனைவி. கணவன் குடித்துவிட்டு வீட்டில் ரகளை செய்ததாகவும், மகளிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் ஏற்கனவே புகார் இருக்கின்றது. சம்பவத்தன்றும் குடி போதையில் மகளிடம் தகாத முறையில் நடக்க முற்பட கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொள்கிறார் மனைவி. நேரடியாக விசாரித்த மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அந்தப்பெண் மீது வழக்கு தொடுக்காமல் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்கிறார்.

*

மேற்கண்ட இரண்டு வழக்கு உதாரணங்களை உரையின் நடுவே நான் குறிப்பிட்டுப் பேசியிருந்ததுதான், அத்தனை பேர் மத்தியிலும் அந்தப் பெண்ணை என்னிடம் பேசத் தூண்டியிருக்கிறது என்பது புரிந்தது.

அடுத்த கூட்டத்துக்காக அருகில் உள்ள பள்ளியில் அரையாண்டுத் தேர்வு எழுதிய மாணவர்கள் காத்திருக்க, மேலும் தாமதம் செய்ய முடியாத சூழல். வாக்குறுதி கொடுத்ததுபோல் ஓரிரு நிமிடங்களேனும் பேசியாக வேண்டும் எனப் பேராசிரியரிடம் கூறி அந்த மாணவியை அழைக்கக் கோரினேன். அந்தப் பெண் வந்தார்.

"சார் லைஃப்ல ஏகப்பட்ட பிரச்சனைங் சார். கூட்டத்தில் நீங்க பேசின எதையுமே கேக்காமத்தான் ஒக்காந்திருந்தேன். குடிகாரங்க பத்தி நீங்க சொன்னப்புறம்தான் கவனிச்சேன். அதுதான் உங்ககிட்ட பேச வந்தேன் சார்" என்றார். கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது.

அருகில் பலர் நின்று கொண்டிருந்த சூழலும், பள்ளியில் மாணவர்கள் காத்திருப்பதும் தொடர்ந்து பேசும் மனநிலையைத் தரவில்லை.

"என்னம்மா படிக்கிறே!?"

"தேர்ட் இயர் சார். அம்மா செத்துட்டாங்க சார். அப்பா குடிகாரர். அசிங்கமா திட்டுவார். என் பிரச்சனைக்கு… நான் ஒண்ணு செத்துப் போகணும் சார்… இல்லீனா எப்படியாச்சும் கொலை பண்ணீறனும் சார்."

கதறி அழுதுவிடுவாரோ என்ற அச்சம் வந்தது.

"ம்ம்ம்ம்… புரியுதும்மா… உம் பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கும். என்னால முடிஞ்ச உதவி செய்றேன். இப்ப தப்பா நினைச்சுக்காதே. உண்மையாவே இப்ப நேரம் இல்ல. இந்தச் சூழலிலும் இதப் பேச வேணாம். எல்லாரும் உன்னையே பார்த்துட்டு இருக்காங்க. உங்கிட்ட செல்போன் இருக்குதானே? என்னோட நெம்பர் தர்றேன். நாளைக்கு எனக்கு ஒரே ஒரு போன் பண்ணு. இல்லைனா இங்க இருக்கிற மேடம்கிட்ட சொல்லி உன்கிட்ட பேசச் சொல்றேன்."

நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தவரிடம், "அந்தப் பொண்ணுக்கு என்னவோ பிரச்சனை இருக்கு. ஒரு எமோஷன்ல என்கிட்ட பேசியிருக்கு. அநேகமா நாளைக்கு என்கிட்ட பேசாமகூடப் போகலாம். நீங்க அந்தப் பொண்ணுகிட்டப் பேசி, என்னனு கேட்டு உதவமுடியுமானு பாருங்க" என அறிவுறுத்தினேன்.

*

சமீப நாட்களில் மாணவ, மாணவியர்களை மரணம் பெருந்தாகத்தோடு தீண்டத் துவங்கியுள்ளதை காண முடிகிறது. வகுப்பறையில் ஆசிரியையைக் கொலை செய்த மாணவர், ஒன்றாம் வகுப்பு மாணவரை அடித்துக் கொலை செய்த ஆறாம் வகுப்பு மாணவர் என மாணவர்களே கொலையில் நேரடியாகப் பங்கெடுப்பதையும் கண்டு வருகிறோம். அடுத்தடுத்துக் காண்கையில், இதுவும் சாதாரணம்தான் என பழகிப்போகும் ஆபத்துண்டு.

தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் தெளிவற்ற அடையாளங்களோடு நிகழ்ந்திருக்கும் மாணவிகளின் மரணங்கள் மிகப்பெரிய மிரட்டலை விடுத்திருக்கின்றன. அரசும், சமூகமும் இந்த அச்சுறுத்தலை எவ்விதம் கையாள்கிறது என்பதில் தெளிவில்லை. கையாள்கிறதா அல்லது அடுத்த பரபரப்பில் கை கழுவிக் கடந்து போகிறதா!? தன்னையே மாய்த்துக்கொள்ளும் தற்கொலைகளில், அதில் பலியாகும் பிள்ளைகள் மட்டுமே பொறுப்பாகிவிட முடியாது.

மாணவப் பருவமென்பது படிப்பதற்காக மட்டுமே என்பது எழுதப்படாத சட்டமாக நடைமுறைப் படுத்தப்படுகின்றது. போட்டியும் அழுத்தமும் மதிப்பெண்களைத் தாண்டி சிந்திக்க அனுமதிக்காமல் தொடர்ந்து சிக்கல்களை உருவாக்குகிறது. பெற்றோர், உற்றார், சேவையாற்றும் ஆசிரியர்கள், வணிகமாக நடத்தும் கல்விக்கூட முதலாளிகள் ஆகியோரில் பெரும்பாலானவர்கள் பள்ளி, கல்லூரிகளின் வாயிலாக தாம் விரும்பும் வகையில் அல்லது தனக்கு பயன்கிட்டும் வகையில் பிள்ளைகளை மாணவர்களாக, மாணவிகளாக தொடர்ந்து கட்டமைக்கிறார்கள். அந்த நோக்கம் மிகத் தெளிவானதாகவோ, நியமானதாகவோ இருக்கிறதா இல்லையா என்பதும் தெரியவில்லை. கல்வி தவிர்த்து பிள்ளைகளிடம் சொல்லவோ, கேட்கவோ ஒன்றுமேயில்லை என ஒட்டுமொத்தமாக அனைவருமே தீர்மானித்ததுபோல் தான் நடந்துகொள்கிறோம்.

மாணவ, மாணவிகளின் உலகம் ஒரு பிள்ளையின், ஒரு உயிரின், ரத்தமும் சதையுமான ஒரு மனிதப் பிறவியின் உலகமாகக் கருதப்படாமல், மாணவ உலகமாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. மாணவ மனதோடு அவர்கள் எடுக்கும் முடிவு மற்றும் செய்யும் செயல்பாடுகளுக்கும், ஒரு மனிதப் பிறவியாக அவர்கள் எடுக்கும் முடிவு, செய்யும் செயல்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும். அதை எங்கே, எப்படி, யார் அவர்களிடம் சேர்க்க அல்லது புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறோம்.

நினைத்தது போலவே அந்த மாணவி என்னைத் தொடர்புகொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து அந்தக் கல்லூரியில் அந்த மாணவியை அழைத்து பேச்சு கொடுக்கிறார்கள். அம்மா இல்லாத வீடு. அப்பா பயங்கர குடி. வீடு திரும்ப நடுநிசி ஆகிறது. வந்தாலும் வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் அசிங்கமான திட்டு. ஒரு நாள் இரவு தனியே வீட்டில் இருந்த பெண்ணிடம் தவறாக நடக்கும் நோக்கத்தோடு இரண்டு பேர் வீட்டுக்குள் புகுந்துவிட, அவள் கத்தியதில் ஓடிவிட்டனர். அப்பாவை திருத்தவே முடியவில்லை. நாளுக்கு நாள் சிக்கல் அதிகரிக்கிறது. இப்போதை மனநிலை ஒன்று அப்பாவைக் கொன்று விடவேண்டும் அல்லது தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்பதுபோல் அவளுக்கு இருக்கின்றது.

நான் பேசிய உரையில் இருந்த இரண்டு சம்பவங்கள்தான் அந்தப் பெண்ணை உடையச் செய்திருக்கிறது. அதன் மூலமே அவர் தன்னை வெளிப்படுத்தும் வாய்ப்பை அடைந்திருக்கிறார். அதன் வழியே இப்போதைக்கு தன் பிரச்சனையை பகிர்ந்து கொள்ள ஒருவரையும், அதோடு உதவிகளை எட்ட, பாதைகளை இனம் காணும் வாய்ப்பினை அடையும் சாத்தியம் நிகழ்த் துவங்கியிருக்கிறது. கடைசியாக கிடைத்த தகவல்படி, அந்தப் பெண்ணுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்களின் உரிய அரவணைப்பில் இருப்பதாகவும் அறிந்தேன்.

*

மேலே குறிப்பிட்ட அவ்விரு கொலைச் சம்பவ உதாரணங்களை நான் மூன்று நான்கு கூட்டங்களில் பகிர்ந்ததாக நினைவு. சுமார் ஆயிரம் பேர் வரை கேட்டிருக்கலாம். ஆயிரம் பேரில் ஒரே ஒரு பெண்ணின் ஓடு மட்டுமே அந்த உதாரணத்தால் உடைந்திருக்கிறது, அல்லது உடைந்ததை ஒருத்தி மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறார். பல நூறுபேருக்கு அதுபோன்ற பிரச்சனைகளே இல்லாமல் இருக்கலாம். சில நூறு பேருக்கு ஓடு உடையாமலோ, வெளிப்படுத்தும் மனம் இல்லாமலோ இருக்கலாம்.

நாம் பகிர்ந்திடாத சில உதாரணங்களையும், அவர்கள் பகிர்ந்துகொள்ளாத பல பிரச்சனைகளையும் எவ்வாறு ஒன்றிணைக்கப் போகிறோம். ஏதோ ஒரு தலைப்பில் பேசும்போது ஏதோ ஒரு சொல், சொற்றொடர், உதாரணம் அவர்களின் ஓட்டினை உடைக்குமென உத்திரவாதம் தரமுடியாது. அவ்வாறு ஓட்டினை உடைப்பது என் போன்றவர்களின் கூரிய நோக்கமாகவும் இருப்பதில்லை. சாத்தியமும் கிடையாது. பல நேரங்களில் காக்கை உட்கார பனம்பழம் விழும் கதைதான்.

மாணவர்களை கல்வி அல்லது மாணவ நிலை என்பதையும் தாண்டி அவர்களும் நம்மைப்போல் ரத்தமும் சதையுமாய், மகிழ்ச்சியும், சிக்கல்களும், பிரச்சனைகளும், உளைச்சல்களும் கொண்ட வாழ்வைத்தான் கடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் அதை எவ்விதம் கையாள வேண்டும் என்பதற்கான கண்டறிதல், ஆலோசனைகள் அளித்தல்கள்தான் அவர்களை தம் பிரச்சனைகளிலிருந்து சரிசெய்ய உதவும்.

பொதுவாக மாணவக் கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் பின்னால் அவரவர் நிலை, சூழல் மற்றும் தேவைக்கேற்ப அழுவது, கலங்குவது, பொங்குவது அல்லது அரசியலாக்குவதுதான் நிகழ்கிறது.

அது சரி… ஏன் நாம் "வரும் முன் காப்போம்" என்ற வரிகளை மறந்து போனோம்!?

-

நன்றி : தி இந்து

-

No comments: