கண்ணீர் சூழ் உலகு

சில சூழல்களில் கண்ணீர் என்பது அரியதொரு பொருளாக மாறிப் போய்விட்டதோ எனத் தோன்றுவதுண்டு. கண்ணீர் வந்திருக்க வேண்டிய தருணங்களில் வராமல் போவதின் ஒரே சிக்கல், கண்ணீராய் வெளியேறியிருக்க வேண்டிய வலி அப்படியே உள்ளே தங்கிவிடுவதுதான். ஒரு ஆண் அழுதால்இதென்ன பொம்பள மாதிரி அழுகாச்சிஎன்பதுதான் முட்டாள்தனத்தின் உச்சமென்றே நினைக்கின்றேன். பிறப்பின் முதல் அறிவிப்பே அழுகையென்றபோதிலும் அழுகை என்பது ஒரு இயலாமையின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது.

சமீபத்தில் குடும்பத்தில் நிகழ்ந்த இரு மரணங்களிலும் எனக்கு கண்ணீர் துளிர்க்கவேயில்லை. அந்த மரணங்களை நான் ஒருவகையில் எதிர்பார்த்திருந்தேன். அது விடுதலை என்று நானே எனக்குள் கற்பிதம் செய்து கொண்டிருந்தேன். அதே நேரம் அதிக நெருக்கமில்லாதபோதும், இடையில் அன்பு நெய்யப்பட்டிருந்த ஒரு சகோதரியின் மரணம் குறித்து செய்தியறிந்து அதிர்ந்தபின், எனக்கும் அவருக்குமிடையே நிகழ்ந்திருந்த ஒரு அற்புத உரையாடலை மீட்டிப் பார்க்கும் தருணத்தில் கண்கள் முழுதும் நீர் நிறைந்துகிடந்தது. இமைக்கரை தாண்டி பாய்ந்திட முனைப்பின்றி உள்ளே தேங்கி நிற்கும் கண்ணீரின் கதகதப்புக்கு கவிதையின் தொனியும், வாசனையுமுண்டு.

அழுகை என்பதும் கண்ணீர் என்பதும் மரணங்களையொட்டி மட்டுமே நிகழ்ந்துவிடுவதில்லை. உறுதியானவராய் திடமானவராய் கண்டுவரும் ஒரு நெருங்கிய நண்பர் அவர். மிகத் தெளிவாக, மிக யதார்த்தமாகச் சிந்திக்கும் அவர்ஒன்பது ரூபாய் நோட்டு” சினிமாப் படத்தை சமீபத்தில் பார்த்தபோது கதறி அழுததாய்ச் சொன்னபோது அதை உடனே நம்பிவிட்டேன். கூடுதலாய் அவர் சொன்னது, அவர் அழுதுகொண்டே அருகில் இருக்கும் மனைவியைப் பார்க்க அவரும் அழுதுகொண்டிருந்திருக்கிறார். அப்படி ஒரு அறைக்குள் தம்பதிகளாய் அழுதுகொண்டிருந்த அந்தத் தருணம்தான் எத்தனை அழகானதும் இயல்பானதும்.

அவருக்கு நேர்ந்ததுபோல் எனக்கும் வெகு அரிதான தருணங்கள் வாய்த்ததுண்டு. சினிமாக்களைக் கண்டு எப்பொழுதெல்லாம் கண் கலங்கினேனென நினைவிலில்லை.. ஆனாலும் எங்கேயும் எப்போதும் படம் பார்க்கையில் மட்டும், அடக்கமுடியாதவொரு அழுகை பொங்கிப் பொங்கி வழியப்பார்த்தது.

காணும் ஒவ்வொருமுறையும் உயிரைச் சுண்டியிழுக்கும் என் மகளின் ஒரு அழுகைப் படம் ஒன்று நினைவிற்கு வருகிறது. இரண்டு மூன்று வயதுக் குழந்தையாக இருக்கும்போது என் மனைவிடம் எதையோ கேட்கிறாள், அவர் அதைத் தர மறுக்கும் தருணத்தில் உதட்டைப் பிளுக்கி ஒரு வித அழுகை அழுகிறாள். விளையாட்டுத்தனமாய் படமாக எடுத்த அவை எல்லாம் நிழற்படங்களாக என் கணினியில் சேர்ந்து கிடக்கின்றன. எதேச்சையாகப் பார்த்தாலும் கூட உயிர் வரை சுண்டியிழுக்க வைக்கும் அந்த அழுகையின் அழகு சொல்லொணாக் கவிதையின் சாயலும் நிரம்பியதுதான்.

வாசிப்பு தூர்ந்துபோய் எனக்குள் குற்ற உணர்வு சுரந்துகொண்டிருந்த நாட்களின் மத்தியில் ஒரு விமானப் பயணம். கையில் பாரதி கிருஷ்ணக்குமாரின்அப்பத்தா” சிறுகதைத் தொகுப்பு வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதில் கோடி என்றொரு கதை. முப்பது வருடத்திற்கு முன் வேறொரு சாதிப்பையனோடு ஓடிப்போன அத்தை தனது மகளின் திருமணத்தையொட்டி தனது தந்தை, அண்ணன் குடும்பத்தை அழைக்க வருகிறாள். அந்த அத்தையின் கணவரான மாமா நாற்காலியின் நுனியில் அமர்ந்துகொண்டிருக்க அத்தை தனது அப்பா, அண்ணன் கால்களில் விழுந்து திருமணத்திற்கு அழைக்கிறாள். அந்தத் தருணத்தில்தான் அம்மாவின் மூலம் அப்படியொரு அத்தை இருந்த கதையே தெரியவருகிறது. அத்தை செய்துகொண்ட திருமணத்தால் பாட்டி இறந்தது முதல், தாத்தா சிரமப்பட்டது வரை தெரியவருகிறது. ஆனாலும் அண்ணன் மகளுக்கும், மகனுக்கும் அவளை நிரம்ப பிடித்துவிடுகிறது. திருமணத்திற்கு யாரும் போகவில்லை. சிறிது நாட்களில் அந்த மாமா இறந்த தகவல் வருகிறது. அந்த நிகழ்விற்கு பொறந்த வீட்டுக் கோடி போட பிறந்த வீட்டிலிருந்து யாரும் போகாத சூழலில் ஒரு கோடித்துணியோடு அத்தை வீட்டுக்கு அண்ணன் மகன் நண்பருடன் செல்கிறான். இறந்த உடலுக்கு சீர் செனத்தி நடக்குமிடத்தில் பொறந்தவீட்டுக் கோடி இருக்கிறதா என சம்பிரதாயத்தோடு அழைத்துவிட்டு கடக்க முற்படும் போது, உடன் வந்த நண்பர் அவன் கோடித்துணியோடு வந்திருப்பதாகச் சொல்கிறார். அத்தை நிமிர்ந்து தனது அண்ணன் மகனை அடையாளம் கண்டு பார்க்கிறார். அத்தையை நோக்கி நகர்பவன் அப்படியே அந்தக் கோடித்துணியை அத்தைமேல் போர்த்தி அணைத்துக்கொள்கிறான். அத்தைஅண்ணாஎனக் கதறுகிறாள்.  

கதையின் போக்கில் அப்படியே எனக்குள் காட்சிப்படுத்திக்கொண்டு வருகிறேன். எல்லா இடங்களும் சூழல்களும் மனதில் காட்சிகளாய் விரிகின்றன. அத்தை அமந்திருக்குமிடம், கூட்டத்தில் அவன் நிற்கும் இடம், அங்கிருக்கும் ஒரு சிவப்புக் கலர் தூண், அதற்குப் பக்கத்தில் இருக்கும் திண்ணை என எல்லாமே எனக்குள் காட்சியாய் நகர்ந்து கொண்டிருக்கிறது. அத்தை அவனைப் பார்ப்பதும், அவன் அத்தையை நோக்கி நகர்வதும், இரு கைகளால் கோடித்துணியை பிடித்திருப்பதும், அப்படியே கைகளை விரித்து அந்த கோடித்துணியால் போர்த்தி அணைக்கும் வாஞ்சை மனதில் ஓடும் கணமும் அவள் அண்ணா எனக் கதறும் குரலும் உணர்ந்தபொழுதில் அப்படியே புத்தகத்தை மூடுகிறேன். கண்கள் மங்களாய் தெரிவதுபோல் உணர்கையில், ஒரு பொட்டு கண்ணீர் அந்த புத்தக அட்டையின் மேல் விழுகிறது. யதேத்தையாய் பக்கத்து இருக்கையில் இருக்கும் அந்த வெள்ளைக்காரப் பெண் என்னைப் பார்க்கவும் அந்தச் சொட்டு விழுகவும் சரியாய் இருக்க, அந்தக் கண்ணீரை அவர் பார்த்துவிட்டாரா என அவரைப் பார்க்கையில் அவர் கண்ணீரில் மிதக்கும் என் கண்ணை உற்றுப் பார்க்கிறார். புத்தகத்தைப் பார்க்கிறார். உதடுகளை இறுக்க மூடியபடி கண்களில் மலர்ச்சியாய் மேலும் கீழும் தலையை ஆட்டுகிறார். அது ஒருவித ஆமோதிப்பு. கண்களை இறுக்க மூடுகிறேன். இன்னொரு சொட்டு பிதுங்கி வெளியேறுகிறது. அது சொட்டவில்லை. வழிந்திறங்குகிறது. விழி திறக்கையில் அவர் அதே மலர்ச்சியான முகத்தோடு பார்த்துக்கொண்டு கட்டைவிரலை உயர்த்திக் காட்டுகிறார்.

அந்தக் கண்ணீர் அத்தைக்கான ஆறுதலாக, அண்ணன் மகனுக்கான அங்கீகாரமாவும் இருக்கலாம், அதையெல்லாம் விட அதை எழுதிய பாரதி கிருஷ்ணகுமாருக்காக பாராட்டும், பிரியமாகவும் இருக்கலாம்.கடற்கரையில் நின்று கொண்டிருக்கிறேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் விரிந்து பரந்து கிடக்கிறது. தண்ணீர் அதுவரை காணாத வகையில் கண்ணாடிபோல் பளபளக்கிறது. காலருகில் வந்து உரசும் தண்ணீருக்குள் என் பாதங்கள் பளீரெனத் தெரிகின்றன. அந்தப் பளிங்கு நிறம் அதை நல்ல தண்ணீரென எனக்குள் நினைக்க வைக்கின்றது. என்னை அறியாமல் ஒரு விரலைச் சுட்டி நீட்டி தண்ணீரைத் தொடுகிறேன். அதில் ஒட்டி வந்த நீரை அப்படியே நாக்கில் வைக்கிறேன். அந்த உவர்ப்பு அதைக் கடல் நீர்தான் எனச் சொல்கிறது. விரிந்த கடலைப் பார்க்கிறேன். சற்றே சிநேகம் குறைந்துபோகிறது, கண்ணுக்கெட்டிய வரை விரிந்துகிடக்கும் நீரின் கனமும் தூரமும் எவ்வளவாய் இருக்கும். அந்தக் கடலின் கனத்தை நீளத்தை உவர்ப்பை விட கடினமானதாய் தென்பட்ட ஒரு கண்ணீர்த் துளி நினைவுக்கு வருகிறது.

எதிர்பாராத யதேச்சையானதொரு உரையாடலில் அவரோடு இயல்பானதொரு உரையாடல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு கண்களை உற்றுப் பார்த்தபடி பேசுவதில் பிடித்தமுண்டு. உரையாடலின் மத்தியில் மூன்று முறை அவர் கண்களில் யதேச்சையாக நீர் கோர்ப்பதைக் உணர்கிறேன்.  ஏனென்று புரியவில்லை. அதைக் காணும் கணந்தோறும் வேறொரு எல்லைக்குப் பேச்சை முழுக்க மாற்றுகிறேன். அந்த றையின் அப்போதை சூழல் என்னவோ இறுக்கத்தைத் தந்துகொண்டிருப்பதை உணர்கிறேன். சற்றே மொட்டை மாடியில் காற்றாடப் பேசலாம் என்பவரோடு நகர்கிறேன். எந்த மழுப்பலுமின்றி அந்த நீர்த்த இருளில் அவரைப் பார்த்து எதனால் மூன்றுமுறை கண்ணில் நீர் கோர்த்தென்கிறேன். அவர் குடும்பத்தில் நிகழ்ந்த கொடூர மரணங்களின் நினைவுகள் மெல்ல விழி வழி நீரால் கசிந்திடத் துணிகிறது. அந்தக் கண்ணீரில் அன்றைக்குத் தொட்ட, உணர்ந்த, மிரண்ட ஒரு கடலின் உப்பு, வேகம், கனம், அழுத்தம் எல்லாவற்றையும் விட கூடுதலான கசப்பு, கனம், அழுத்தம், வலியைக் காண்கிறேன்.

மனைவியோடு பிணக்கு, வியாபாரத் துரோகம், மீளாக் குடி, வட்டி, ஸ்கூல் ஃபீஸ், அம்மாவின் நோய், கணவனின் பிற காதல், சைல்ட் அப்யூஸ் வலி, தாம்பத்யத் துறவு, விவாகரத்து கிட்டாமை, நட்பின் உதாசீனம், காதல் தோல்வி, மாமியார் கொடுமை, காதல் டார்ச்சர், பாலியல் துன்புறுத்தல், உளச்சிக்கல், உடற்சிக்கல் என எத்தனையெத்தனை கண்ணீராறு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தக்கண்ணீர் மட்டும் இல்லாவிடில் அவற்றில் பாதி உயிர் உதிர்ந்தும்கூடப் போயிருக்கலாம். நாள்தோறும் எத்தனை எத்தனையோ பேரின் சிரிப்பைக் கண்டாலும் அவைகளைவிட அவ்வப்போது நம் மனதின் வழியே ஓடும் கண்ணீர்தான் காயாமல் ஈரமாகவே இருந்து கொண்டிருக்கின்றது.

அழத்தைரியமற்ற யாரோ ஒருவர்தான் சொல்லியிருக்க முடியும் அழுகை கோழைத்தனமென.

அழுகை இனிது

-

4 comments:

mohamed salim abdullahhussaini said...

அழுகை மன அழுத்தத்தை குறைக்கும் மிக சிறந்த மருந்து !!

Vasu Balaji said...

beautiful:)

sathiyananthan subramaniyan said...

உணர்வுகளின் உச்சம்தானே அண்ணா !

lakshmi indiran said...

பல நேரங்களில் கடலின் அடர்த்தியை விட கண்ணீருக்கு அதிக அடர்த்தியை காணமுடியும்...கண்ணீர் திடமான உணர்ச்சியின் திரவமொழி...
உங்க பதிவு மிக அருமை