பொதிகைக்குப் போயிருந்தேன்

நான் கவியரங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நீண்ட வருடங்களாகிவிட்டது. கலந்துகொண்ட என்றால் வேடிக்கை பார்த்து என மட்டுமே பொருள் கொள்ளவேண்டும். அந்த நிலையில் கடந்த ஆண்டு ஈரோடு CKK அறக்கட்டளை நடத்திய கவியரங்கத்தில் கவிஞர் சக்திஜோதி கலந்துகொள்ள வந்திருந்தார். நிகழ்ச்சிக்கு முந்தையநாள் இரவு சிவரஞ்சனி ஓட்டலில் தங்கியிருந்த அவரைச் சந்திக்கச் சென்றபோதுதான்மரபின்மைந்தன்” முத்தையாவையும், ”இசைக்கவி” ரமணன் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்புக்கிட்டியது. சில நிமிட சந்திப்புதான்.

 
பார்த்தவுடன் முத்தையா கேட்டார்உங்களை எங்கேயே பார்த்திருக்கேனே!?”
சிரித்துக்கொண்டேஃபேஸ்புக்லங்க. உங்க ஃப்ரெண்ட் லிஸ்ட்ல நானும் இருக்கேன்என்றேன்

அருகில் இருந்த ரமணன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிய சில நொடிகளில் உணர்த்திய உற்சாகத்தினை நான் கவனிக்கத் தவறவில்லை. அடுத்த நாள் கவியரங்கத்தில்வெளிப்படும் வேளை’ என்றும் தலைப்பில் வேவ்வேறு நிலைகளை உணர்த்தி எல்லோரும் கவிதைகள் வாசித்தார்கள். ரமணன் அவர்கள் கவிதை வாசிக்கும் முன் பாடியகூடு செதஞ்சிருச்சே, குருவி பறந்துடுச்சேபாடல் ஒட்டுமொத்த கூட்டத்தையும் உறைய வைத்தது.
நீண்ட நாட்கள் அந்த அழுத்தமான பாடலின் உருக்கும் சூழல் மனதில் உலவிக்கொண்டேயிருந்து. மாதங்கள் நகர்ந்தன. ஒருநாள் இசைக்கவி ரமணன் அவர்களையும் ஃபேஸ்புக்கில் இனம் கண்டேன். நானும் ஒரு நட்பாக இணைந்துகொண்டேன். எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

சமீபத்தில் போட்டிருந்த ஒரு சிறு கவிதைக்கு பின்னூட்டமாகவிரைவில் சந்திப்போம் தயாராக இருங்கள்எனப் பின்னூட்டமிட்டிருந்தார். எதற்காக அந்தப் பின்னூட்டம் எனப் புரியவில்லை. நானும் வழக்கம்போல்(!) அந்தப் பின்னூட்டத்திற்கும் ஒரு like போட்டுவிட்டு கடந்துவிட்டேன்.

சிலநாட்கள் கழித்து, பொதிகை தொலைக்காட்சியில் நடக்கும்கொஞ்சம் கவிதை, கொஞ்சம் தேநீர்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டார். விபரக் குறிப்புகளையும் அனுப்பக் கேட்டார். பின்னர் நிகழ்ச்சி தேதி சொல்வதாகவும் சொன்னார். Youtubeல் ஏற்கனவேகொஞ்சம் கவிதை, கொஞ்சம் தேநீர்நிகழ்ச்சியைக் கண்டிருந்தாலும், அவர்கள் அனைவருமே ஓரளவு அறிந்த கவிஞர்களாக இருந்தார்கள். புத்தகம் வெளியிட்டவர்களாகவும் இருந்தார்கள். சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேச அழைத்தபோதுகூட அங்கு சந்தித்த நண்பர் ஒருவர்எத்தனை புத்தகங்கள் போட்டிருக்கீங்க?எனக் கேட்டார். “”புத்தகம் எதுவும் போடலைங்கஎன நான் சொன்னது ஏமாற்றத்தையோ, ஆச்சரியத்தையோ உருவாக்கியிருந்ததை அவர் உடல்மொழியில் கண்டுணர்ந்தேன். அதனால் புத்தகங்கள் வெளியிட்டுள்ளதாகச் சொல்லும் படைப்பாளர்களுடன் இருக்கையில், புத்தகங்கள் போடாத ஒரு ஆளாக இருப்பதில் பொதுவாகவே சிறிய ஒவ்வாமையாக நிலவுவதை உணர்ந்திருக்கிறேன்.

”26ம் தேதி பொதிகையில் ஒளிப்பதிவு நடைபெறவுள்ளது, நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்”, என்னென்ன கொண்டு வரவேண்டும் எனும் விபரங்களையும் தெளிவாக தெரிவித்தார் ரமணன்.

நிகழ்ச்சிக்காக பொதிகை நிலையத்திற்குள் நுழையும்போதுதான் தெரிந்தது. என்னோடு இன்னும் சில கவிஞர்களும் கலந்துகொள்கிறார்கள் என்று. நுழைவில் இருந்த பட்டியலில் பார்த்தால் உமாநாத் செல்வன் பெயர் மட்டும் தெரிந்த பெயராக இருந்தது. ஒரு மாதத்திற்கான நான்கு நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

ஒளிப்பதிவு துவங்கும் முன் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது, ஈரோடு CKK அறக்கட்டளை நிகழ்வில் ரமணன் அவர்கள் பாடியது குறித்து நான் பேசிய நொடியில் அவர் பாடலை மீண்டும் பாடிக் காட்டியது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது.



எனக்கு முதல் அமர்வில் விழியன்() உமாநாத் உடனும், மூன்றாவது அமர்வில் முத்துக்குமார் உடனும், நான்காவது அமர்வில் கலைவாணி தாசன் அவர்களுடன் பங்கேற்கும் வாய்ப்பும் அமைந்தது. இரண்டாம் அமர்வில் முத்துக்குமரனும், அருள்நிதியும் பங்கேற்றார்கள்.

வாழ்க்கையில் முதன்முறையாக ஒளிப்பதிவிற்காக மெலிதாக ஒப்பனை செய்யவேண்டிய நொடிகளில் புதிதாய் வெட்கம் வந்துபோனது.

ஒவ்வொரு அமர்விலும் மிக அழகான பாடலுடன் துவங்கும் ரமணன், மிக எளிதாக கவிதை வாசிப்பவர்களுடன் ஊடுருவுகிறார். அந்த ஊடுருவல் ஒரு கலை போல் நிகழ்கிறது. உற்சாகமாய் புன்னைகையோடு கவிதை சொல்ல அழைக்கிறார். கவிதை குறித்த சிறு விளக்கங்களோடு கவிதைகளை வாசிக்க வாய்பளிக்கப் படுகிறது. மூன்று பேரையும் கேமாராக்கள் குறிவைத்திருப்பதை மறந்து, நிமிடங்கள் கரைவதை மறந்து நிகழ்ச்சியில் எளிதாக ஆழ்ந்துவிட இட்டுச் செல்கிறார். இடையில் தேவைப்படும் இடங்களில் தனது கவிதையாலும், பாடல் வரிகளாலும், மேற்கோள்களாலும் மிக அழகாக சமன் படுத்துகிறார். எந்த சூழலில் மிக எளிதாக கவிதையைப் பாடலாக பாடும் அவரின் வல்லமையும், நிகழ்ச்சியை மிகமிக இயல்பாக நடத்தும் திறனும் போற்றுதலுக்குரியது.

30 நிமிடங்கள் நிகழ்ச்சி என்பது கிட்டத்தட்ட ஒரு நேரலை போன்றே தீவிரமாக ஒளிப்பதிவு செய்யப்படுகிறது. தொடங்கிய நொடியிலிருந்து 30 நிமிடங்களுக்கு இடைவெளியின்றி நகர்கிறது. ஏற்கனவே எனக்கு ஜெயா தொலைக்காட்சி காலை மலர் நிகழ்ச்சியிலும், சன் நியூஸ் நேரலை விவாதமேடையிலும் கலந்துகொண்ட அனுபவம் உண்டு. அவ்விரு நிகழ்ச்சிகளிலும் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வரும் இடைவேளை நம்மை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவும். இங்கு 30 நிமிடங்களும் தொடர்ந்து நிகழ்ச்சியில் இருக்க வேண்டும் என்பது எப்படியென மலைப்பாக இருந்தது, சில நிமிடங்களியே மறந்து போய், எப்போது 30 நிமிடங்கள் தீர்ந்தன என்ற உணர்வைத் தந்தது.
என்னோடு அடுத்தடுத்த அமர்வுகளில் கவிதைகள் பகிர்ந்த விழியனும், முத்துக்குமாரும் சிறிய கவிதைகளால் தங்கள் பங்களிப்பை இயல்பாகச் செய்துவிட நான் நீள் கவிதைகளால் நேரத்தை நிரப்பிக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு கவிதையில் தொடங்கி ஏதேதோ கவிதைகளில் பயணப்பட்டு, ஏதோ கவிதையில் நிறைவு செய்யும் போக்கும் ஒரு வித்தியாசமான அனுபவமே!

எல்லோரும் மதிய உணவினை அவரவர் வீட்டிலிருந்து கொண்டுவந்திருக்க, சந்தித்த சிலமணி நேரத்தில் மிகுந்த நட்புணர்வோடு எல்லோர் உணவையும் கலந்து உண்டு மகிழ்ந்தது ஒரு வித்தியாசமான அனுபவம்.
நிகழ்ச்சியின் முதலில் இருந்து இறுதிவரை எங்களோடு, உடன் இருந்த பொதிகை செய்திவாசிப்பாளர் தோழி. திருமதி. அருள்மொழி அவர்களின் வருகை பெருமகிழ்வைத் தந்தது.

எனக்கு நினைவு தெரிந்து 10 வகுப்பு முடித்தபோதே கவிதை என்ற பெயரில் எழுதத் தொடங்கியிருந்தேன். கல்லூரி முடியும் வரை ஏதேதோ கிறுக்கிக்கொண்டிருந்த எல்லா எழுத்துகளும் அடுத்த 15 ஆண்டுகள் எதுவுமே எழுத மறந்து, மறுத்துப் போயிருந்த சூழலில் ஒட்டுமொத்தமாய் காணாமல் போய்விட்டன. 

கல்லூரி நாட்களில் கவிதைக்கென்று சில பரிசுகள் வாங்கியதாக மங்கிய நினைவு சொல்கிறது. 2008ன் இறுதியில் ஒரு விபத்துபோல் வலைப்பக்கம் துவங்கிய பின்தான் ’எதாச்சும் எழுதனுமே’ எனும் மனப்போக்கில் எழுதியதில் கொஞ்சம் கவிதைகளும் சேர்ந்திருக்கின்றன. என்னிடம் நீங்கள் கவிஞரா? எனக்கேட்டாலோ அல்லது யாராவது கவிஞர் எனக்சொன்னாலோ ஒரு வெட்கம் பூத்துவிடும் எனக்குள். 

நிகழ்ச்சி முடிந்து மகிழ்வோடு, புதிய உற்சாகத்தோடு, தொலைக்காட்சி நிலையத்தை விட்டு வெளியே வருகையில் எனக்குள் ஒரு குரல் சூழ்ந்தது “வாழ்க்கையில மொத மொத இன்னிக்குத்தானே நீ கவிதை படிச்சிருக்கே!?”
”அட ஆமாம்ல…. வேற எங்கையாச்சும் கவிதை படிச்சிருக்கமா?” என என் நினைவுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கத் துவங்கினேன்.

பற்பல மேடைகளில் உரையாற்றிய அனுபவமும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வேறு வேறுவிதமாய் பங்கேற்ற அனுபவமும் ஆகியவை இருந்தபோதிலும், இதுதான் முதன் முதலாய் கவிதையை வாசித்தது என என் நினைவு அடுக்கு சொன்னது.
அப்படித்தான் போலும்.


-
குறிப்பு : நான் பங்கெடுத்த நிகழ்ச்சி ஜூலை மாதம் 7,21,28 ஆகிய தேதிகளில் (ஞாயிறு) ஒளிபரப்பு ஆகுமென நம்புகிறேன்!


-

14 comments:

goma said...

Paarthuttaa pOchu....
I hope you didn't read each line twice....

everestdurai said...

அருமையான நிகழ்வு வாழ்த்துக்கள்

Rathnavel Natarajan said...

மிக்க மகிழ்ச்சி.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
வாழ்த்துகள்.

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

நட்பே வாழ்த்துக்கள் மேலும் உயர

விழியன் said...

நல்வாழ்த்துக்கள்,மேலும் பல சரித்திரம் படைத்திடுங்கள்

செந்தில்குமார் said...
This comment has been removed by the author.
செந்தில்குமார் said...

எழுத்துப்பணி சிறப்படைய வாழ்த்துக்கள்.

Prapavi said...
This comment has been removed by the author.
Prapavi said...

வாழ்த்துக்கள் மேலும் பிரகாசிக்க கதிர் போல!

Dr. Hariharan said...

this commentary is making the reader's heart glow

அகல்விளக்கு said...

வாவ்...

வாழ்த்துக்கள் அண்ணா...

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி:)! வாழ்த்துகள்!

க.பாலாசி said...

நிறைந்த மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்..

Franklin said...

புதுப்புது கோணங்கள் தான் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளங்கள்.
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.