விபத்துகள் எனப்படும் படுகொலைகள்



புதுக்கோட்டை விபத்தில் இறந்த குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிப்பவர்கள். நடந்துபோகும் வழியில் வந்த பால் வண்டியில் ’லிப்ட்’ கேட்டு ஏறி, பேருந்துமோதி இறந்திருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. 

குங்குமம் இதழில் வெளியான கட்டுரை




இந்த நிலையில்….


விபத்தின் காரணமாய் அரசு வழக்கம்போல் விழித்துக்கொண்டு(!) இதைக் ‘கடுமையாகத்
தடுக்கும் வண்ணம், இப்படி வண்டிகளில் ஏற்றிச் செல்வது கடும் தண்டனைக்குரியது என எச்சரிக்கை விடலாம்.

இலவச பஸ் பாஸ் வைத்துக்கொண்டு அந்த வழித்தடத்தில் வரும் ஒரே ஒரு பேருந்தில், மற்ற பயணிகளோடு கசங்கி, படியில் தொங்கிக்கொண்டு நடத்துனரிடமும், ஓட்டுனரிடமும் திட்டுவாங்கிக்கொண்டு செல்லும் மாணவர்களின் புலம்பல் அரசின் செவிகளில் வழக்கம்போலவே விழாமல் போகலாம்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்காக எல்லா வழித்தடங்களிலும் பயணிக்க பேருந்து வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறோமா என்பதை அலச வழக்கம்போலவே மறந்து  போகலாம்.

வேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் சிலவற்றை மட்டும் பிடித்து நடவடிக்கை எடுத்து, செய்தித்தாள்களில் படங்களை வெளியிட்டுக் கொள்ளலாம்.

மூன்று-நான்கு மடங்காக பேருந்து நிறுத்தங்கள் கூடிவிட்ட நிலையிலும், போக்குவரத்து நெரிசல் பலமடங்கு மிகுந்துவிட்ட சூழலிலும், 30 வருடங்களுக்கு முன்பு பேருந்துகளுக்கு அளித்திருந்த அதே பயண நேரத்தை, தொடர்ந்து வைத்திருப்பது குறித்து கள்ளமௌனம் சாதிக்கலாம்.

பேருந்து ஓட்டுனர்கள் செல்போன் பேசுவதை பயணிகள்கூட எவரும் குறைந்தபட்சம் கண்டிக்காததுபோலவே, போக்குவரத்துக் காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருந்துகொண்டே, செல்போன் பேசும் இருசக்கர வாகன ஓட்டிகளை மட்டுமே பிடித்துப்பிடித்து அபராதம் விதிக்கலாம்.

குடித்துவிட்டு ஓட்டுவதில் 99% இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமே தொடர்ந்து சிக்கும் நிலையும் தொடர்ந்து கொண்டேயிருக்கலாம்.

தேசிய, மாநில மற்றும் நகரச் சாலையோரங்களில் தொடர்ந்து இயங்கும் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து தொய்வின்றி இயங்கிக் கொண்டேயிருக்கலாம்.

மரணக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்ப்பவர்கள் உடனடியாகவும், செய்தித்தாளில் பார்ப்பவர்கள் தாமதாமாகவும் பதைபதைக்கலாம்.

இழந்தது ஒரு உயிர் மட்டுமில்லை, ஒரு தலைமுறையின் வேர் வீழ்த்தப்பட்டதாக இழந்த குடும்பங்கள் வாழ்நாள் முழுதும் சோகத்தைச் சுமக்கலாம்.

அரசும், அமைப்புகளும் இறப்பிற்கான இழப்பென்று ஒரு தொகையை காசோலையாய் நீட்டிவிட்டு கடந்துபோகலாம்.

40 வரி எழுதத்தெரிந்தவர்கள் இதோ என்னைப் போல் கிறுக்கிக் கொண்டிருக்கலாம். நாலுவரியில் மடக்கி சுருக்கமாய் எழுத்தத் தெரிந்தவர்கள் கவிதையாய் எழுதலாம். மூன்றாந்தர பத்திரிக்கைகள் “ஆட்டோ அப்பளமாய் நொறுங்கியது” என தலைப்புச்செய்தி எழுதிவிட்டு, மதியச் சோத்தில் இரசத்தில் அப்பளத்தை நொறுக்கிப்போட்டு உண்ணலாம்.

விபத்துகள் என்பது கட்டுப்பாட்டை மீறி கண நேரத்தில் நிகழ்வதுதான். தடுக்க முடிவதில்லைதான். பல நேரங்களில் தவிர்க்க முடிவதில்லைதான். ஆனால், விபத்துக்கு ஏதுவான எல்லாக் காரணிகளையும் நாமே தயாராக உருவாக்கி வைத்துக்கொண்டு ”படுகொலைகளை, தற்கொலைகளை” விபத்துதானேயென நாளைய பரபரப்பில் மறந்துபோகும் கொடுமையும் வாடிக்கையாகிப் போகலாம்.

வல்லரசுக் கனவு வளர்ந்து கொண்டேயிருக்கலாம்!

-


8 comments:

manjoorraja said...

இதை படித்து உச் கொட்டிவிட்டு அடுத்த மடலுக்கு தாவலாம்.

Prapavi said...

:-( :-(

சமுத்ரா said...
This comment has been removed by the author.
சமுத்ரா said...

விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு ஆழ்ந்த இரங்கலை இங்கே பதிவு செய்வோம் தோழர்களே...!
http://samuthranews.blogspot.in/

Unknown said...

ரூ.549 மட்டும் செலுத்தி, உங்களுக்கு பிடித்த சொந்த டொமைனில் உங்கள் பிளாக் இயங்க வேண்டுமா..?

உதா. ( www.mydomain.blogspot.in ----> www.mydomain.in )

Fill up the survey and get free domain activation charge

ராஜி said...

இழந்தது ஒரு உயிர் மட்டுமில்லை, ஒரு தலைமுறையின் வேர் வீழ்த்தப்பட்டதாக இழந்த குடும்பங்கள் வாழ்நாள் முழுதும் சோகத்தைச் சுமக்கலாம்
>>
நிஜம்தான்.., அந்த பெற்றோரின் நினலயை என்ன சொல்ல?!

Avargal Unmaigal said...

இதை படித்தும் அச்சச்சோ என்று கமெண்ட் போட்டுவிட்டு போய் கொண்டே இருக்கலாம்

avainaayagan said...

We know the causes of accidents and we do not bother to take any action! When we will start taking action?