மறக்க முடியாத பெண்கள் - குங்குமம் தோழி



படம் : குங்குமம் தோழி ஃபேஸ்புக் பக்கம்


மிக வேகமாக வீங்கி வரும் இந்தப் பெருநகர விளிம்புகளில் நீங்கள் அது போன்ற பெண்மணியைப் பார்த்திருக்கலாம். 

கருத்துப்போய் இருப்பார்கள். புடவையின் வர்ணம் அழுக்கின் வர்ணமாக மாறியிருக்கும். ரவிக்கை உடலைவிட ரொம்பவும் தளர்ந்திருக்கும். நம்மிடமிருந்து தொலைதூரத்திற்கு அந்நியப்பட்டிருப்பார்கள். எனக்கும் அந்நியப்பட்டுத்தான் இருந்தார்கள், மாநகராட்சி குப்பைத்தொட்டி ஒன்றை மிக நேராக என் அலுவலக வாசலின் எதிர்புறத்தில் வைக்கும் வரை.

குப்பைத் தொட்டி வந்த சில நாட்களில் ஒவ்வொருவராய் அதனருகே எப்போது சுற்றிக்கொண்டே இருப்பதைக் கண்டேன். யாராவது ஒருவர் எந்நேரமும் குப்பைத்தொட்டியைக் குடைந்துகொண்டே இருப்பதைக் காணுகையில் என்னதான் நடக்கிறது அங்கே என்று அறியும் ஆவலும் எழுந்தது. 

காலையில் ஒரு ஆள், முன் மதியத்திலிருந்து முன் மாலை வரை ஒரு பெண், மாலையில் ஒரு வயதான நபர் என மாறி மாறி சில நேரம் தொட்டிக்குள்ளே, பலநேரம் தொட்டியருகே நின்று பாட்டில்கள், பிளாஸ்டிக் என விதவிதமாய் பொறுக்கிச் சேர்த்துக் கொண்டேயிருப்பதைக் காணுகையில், 

குப்பைத் தொட்டியும் ஒரு அமுத சுரபி, போதி மரமென புரிபட ஆரம்பித்தது.

அந்த நடுத்தர வயதைக் கடந்து, கூடுதல் முதுமையைத் தன்மேல் சுமந்துகொண்டேயிருக்கும் ஒற்றைக்கண் பெண்மணி யாரோ ஒருவரின் சாயலை எனக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தார். ஒருமுறை யாரோ ஒரு பெண்ணிடம் குடுமிப் பிடி சண்டை, ஒருமுறை அருகிலிருக்கும் தேநீர் கடையில் சிரிக்கச் சிரிக்க கிண்டல், ஒருமுறை பரபரப்பாய் ஓடிவந்து குப்பைத் தொட்டியோரம் மண்டிபோட்டு உட்கார்ந்து அப்படியே ஒரு ஹாஃப் பாட்டிலைத் திறந்து கடகடவெனக் குடித்தது என்று பல பரிமாணங்களைக் காட்டிக் கொண்டேயிருந்தார்.

அன்று ஒரு வழக்கமான நாள்தான், அந்தப் பெண்ணும் வழக்கம் போல் கிளறிக்கொண்டிருந்தார்.  நான் நிற்கும் இடம் கொஞ்சம் உயரமானது என்பதால் எதைக் கையில் எடுத்தாலும் தெரியவே செய்யும். எதையோ கிளறிக்கிளறி ஒரு எச்சில் வாழையிலையில் சேகரித்துக் கொண்டிருந்தார். அருகாமை உணவகங்களிலிருந்து கொட்டப்படும் எச்சில் இலைகளிலிருந்து உணவுகளைச் சேகரிக்கப்பது புரிந்தது. ஆனால் எதற்காக? சாப்பிடுவதற்காக இருக்குமோ என்றவொரு பதட்டம் என்னுள் சட்டென புகுந்தது. 

வயிற்றில் காற்றுப் பந்து, மனதில் திடீர் எடை என ஒரு சிரமத்தை உணர்ந்தேன்.

என்ன செய்யலாம்..?? ஒன்றும் பேசாமல் உள்ளே போயி உட்கார்ந்துக்கலாமா? 
ஒருவேளை அதை உண்ண ஆரம்பித்தால், சப்தம்போட்டு தடுத்து கொஞ்சம் காசு கொடுத்து பக்கத்து மெஸ்ஸில் சாப்பிடச் சொல்லலாமா என ஏதேதோ மனதில் ஓடிய கணத்தில், இருகைகளிலும் இலையை ஏந்தி குப்பைத்தொட்டி அருகே குனிந்து கீழே வைத்தார். உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சுட்டா என்ன பண்றது எனப் பதட்டத்தோடு போலாமா, வேணாமா எனத் தடுமாறிய கணத்தில் வாயைக் குவித்து ஏதோ ஒரு ஒலி எழுப்பினார், குப்பைத் தொட்டியின் இன்னொரு புறம் இருந்த ஒரு நாய் ஓடிவந்தது, அதற்குக் கை காட்டிவிட்டு மீண்டும் குப்பைத் தொட்டியைக் கிளற ஆரம்பித்தார், நாய் வேகமாய்த் தின்ன ஆரம்பித்தது.

எனக்குள் இனம்புரியா ஒரு
பதட்டமும்...
வெளிச்சமும்...
கலக்கமும்.... 
கனிவும்...
அன்பும்...
குற்ற உணர்வும் ...
கலந்து தோன்றி வித்தியாசமாக உருளத் தொடங்கியது. 

அவளை மானசீகமாக வணங்க ஆரம்பித்தேன்..

தெருப்புழுதிக்குள்.. 
ஒதுக்கப்பட்ட பதர்களுக்குள்.. 
எச்சில் ஒழுக்குகளுக்குள்..
ஊராரின் கசம் அனைத்திற்குள்.. 

ஒரு ஞான போதியாய் ஒளிர்ந்தாள் அவள்..




-0-
குங்குமம் தோழி “மறக்க முடியாத பெண்கள்” தொகுப்பிற்காக எழுதியது.

3 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை.

கிருத்திகாதரன் said...

அருமை..உண்மையான உணர்வுகள்.

Prapavi said...

அருமை