நல்லா இருக்கீங்களா? - என் விகடன் கட்டுரை

இத்தனை நாட்களில் எத்தனை எத்தனைப்பேரைச் சந்தித்தாகிவிட்டது. ஒவ்வொரு முகமும் ஒரு புத்தகம்போல். ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக எதையோ உணர்த்திக்கொண்டேதான் இருக்கின்றது. பெரும்பாலும் மனதின் முகப்பாக முகமே இருந்துகொண்டிருக்கிறது.

கண்டவுடனோ, தொடர்பில் அகப்பட்டவுடனோ தவறாமல் ஒரு கேள்வி முளைத்துவிடுகிறது 'அப்புறம் எப்படி இருக்கீங்க...?’ பல நேரங்களில் உடன் தோன்றவும் செய்கின்றது இதுபோன்ற ஓர் அபத்தமான கேள்வி எதும்உண்டா? ஆனாலும் அதை எதிர்கொள்பவருக்கு ஏன்தான் இந்தக் கேள்வி இத்தனை பிடித்துத்தொலைக்கிறதோ என்ற ஆச்சரியமும் நிகழத்தான் செய்கின்றது.

'ஓ.. நல்லாருக்கேங்க’ என்ற பதிலோடு இலவச இணைப்பாக 'நீங்க சௌக்கியமா?’ எனும் கேள்வி வருவதை, வேறு வழியில்லாமல் பெற்றுக்கொண்டு விடை அளிப்பதும் சடங்காகிவிட்டது.



இரண்டு நாட்களுக்குமுன் என்மேல் பெரும் பிரியமும், அதீத அன்பும்கொண்ட சகோதரி மின் அரட்டைப்பெட்டியில் மின்னினாள். பிரியம்மிகும் பொழுதுகளில், அந்தப் பிரியத்தை ஒவ்வொரு முறையும் கிண்டலாக மட்டுமே என்மேல் தெளிப்பவள்.

'அண்ணா எப்படி இருக்கீங்க?’

'நல்லாருக்கேன்மா... நீ எப்படி இருக்கே?’

'ம். இருக்கேன்’ என்று பதிலளித்தாள்

வேறு ஏதோ ஒன்றில் கவனம் செலுத்திக்கொண்டிருந்ததால் அந்த 'ம். இருக்கேன்’ என்ற பதிலில் இருக்கும்(!) அலுப்பு சட்டென மூளையை எட்டவில்லை.

சிறிது நேரம் கழித்து 'ஏன் ம். இருக்கேனு சொல்றே?’ என்றேன்.

//யாரையாவது 'எப்படி இருக்கீங்க’ எனக் கேட்க 'நல்லாருக்கேன்’ எனும் பொய்(!)கூடப் பிடிக்கிறது 'ம்.. இருக்கேன்’ என அலுப்பாக வரும் உண்மை பிடிப்பதில்லை.//

சமீபத்தில் நான் ட்விட்டரில் எழுதிய மேற்கண்ட வரியை ஒத்தியெடுத்து அரட்டைப்பெட்டியில் போட்டுவிட்டு சிரிப்பான் மூலம் குறும்பாய் ஒரு பெரும் சிரிப்பு சிரித்தாள். நேரம் நகர்ந்தாலும் மனது அதற்குள்ளே நின்றுவிட்டது. விதவிதமான நலம் விசாரிப்புக்குள் குறித்த சிந்தனை மனதுக்குள் சுழலத் தொடங்கியது. சிலர் 'எப்படி இருக்கே’ எனக் கேட்பதோடு, வெகு அரிதாக வீட்டிலுள்ள தாத்தா பாட்டிவரை நலம் விசாரிக்கும்போது மனது மிக நெகிழ்வாக உணர்ந்ததும் உண்டு. நலம் விசாரிப்பு அவசியமா அவசியமற்றதா என்பது குறித்து சில நேரங்களில் புத்தியிலிருந்து யோசிப்பதும், சில நேரங்களில் மனதிலிருந்து யோசிப்பதும் என ஊசலாடிக்கொண்டேதான் இருக்கின்றது.

உரையாடல்களில் நலம் விசாரிப்பு என்பது சடங்கு என்பதையும் தாண்டி ஒருவித மௌன உடைப்பாக அமைந்துவிடுகின்றது. வெற்றுச் சடங்காய் நம் தோளில் சுமத்தப்படும் நலம் விசாரிப்புகள் ஏனோ ஒருவித நனைந்த துணிச்சுமையாகவே இருக்கின்றது. தங்கள் பாரத்தை நம்மில் கரைத்துக்கொள்ள முனைபவர்கள் அவ்வப்போது வந்து போகத்தான் செய்கின்றார்கள். நம்மேல் நாமே வைக்காத நம்பிக்கையை நம்மேல் வைத்ததுபோல் மனதில்வந்து அமர்வார்கள். மெள்ளமெள்ள தன்னை அழுத்திக்கொண்டிருக்கும் சுமை, தன் இலக்குக்கான போராட்ட வெறி, தன்னை உழலச் செய்துகொண்டிருக்கும் சூழல், தன்னை வருத்திக்கொண்டிருக்கும் உறவு, தன்னை உயர்த்திக்கொண்டிருக்கும் ஒரு செயல் என வரிசையாக ஒருவித அழகியலோடு பகிர்ந்துகொண்டே இருப்பார்கள். அந்தப் பகிர்வு ஒரு வித கலைத் தன்மையைத் தன்னகத்தே கொண்டிருக்கும்.

சோகத்தை, துக்கத்தை, தோல்வியைப் பகிரும்போது மட்டும், பகிரும்விதம் அழகியலோடு இருந்தாலும், அந்த அழகியல் நீர்த்துப்போய், அதில் அப்பியிருக்கும் வலி மட்டுமே மனதின் சந்து பொந்துக்குள்ளும் மெல்லப் பரவிப்படரும். அப்படி நம்மிடம் தம் மனதைக் கொட்டித் தீர்ப்பவர்களுக்கு, கரைப்பவர்களுக்கு நிரப்புபவர்களுக்கு, பெரும்பாலும் நம் ஆலோசனையோ, ஆறுதலோ, தேறுதலோ, நம்பிக்கையூட்டும் வார்த்தைகளோ பெரிதாக அவசியப்படுவதில்லை. அமைதியாகக் கூர்ந்துகேட்பது மட்டுமே போதுமானதாக இருக்கின்றது. தான் பகிர்வதைப் பத்திரமாய் காப்பார்கள் எனும் நம்பிக்கை மட்டுமே அவசியப்படுகிறது. காப்பார்கள் என்பதைவிட அந்த வலியை, சோகத்தை, ஆர்வத்தை, நோக்கத்தை, இயலாமயை, வலியை மலினப்படுத்திவிடமாட்டார்கள் எனும் நம்பிக்கைதான் மிகச் சரியாகத் தேவைப்படுகிறது.

ஒரு கடினமான தருணத்தில் மனது குழைந்த ஒருவர் எதையோ எதிர்நோக்கிக் காத்திருக்கும்போது, ஒருவரின் நம்பிக்கை தளர்ந்த தருணத்தில், ஒருவர் துவண்டு சரியும் நேரத்தில், கையறு நிலையில், கனவுகள் பொதிந்த மனதோடு என எப்படியோ இருக்கும்போது 'எனக்காகக் கொஞ்சம் வேண்டிக்குங்களேன்’ எனக் கனிவாகக் கேட்கும்போது அதுவரை பெரிதாக நம்பாத இறைவன்மீது மேலும் ஏதோ ஒரு சிறப்பு நம்பிக்கையும், வேண்டுதலும் என்னையும் அறியாமல் வந்துவிடுகிறது!

-


-

3 comments:

ஆரூரன் விசுவநாதன் said...


தொலைபேசியை எடுத்தவுடனே அல்லோவ்? யாரு பேசரீங்கன்னு சொல்வது போலத்தான்னு நினைக்கிறேன். ஆங்கிலேயர்களைப் பார்த்து பழகிக் கொண்டது....hai...how r u? ன்னு பேச்சைத் துவங்கும் உத்தியைச் சார்ந்ததே.....

நாங்களெல்லாம் அப்போல்லருந்தே டமிளருங்க.......அதுனால how r u ங்கறத அப்புடியே மொழி பெயர்த்துகிட்டமில்ல...

கிராமப்புறங்களில் இன்றும் பலரைச் சந்திக்கும் போது, முதலில் கேட்கும் கேள்வி, வூட்ல எல்லாம் எப்படி இருக்காங்க.....மழையா உங்கூருல....இப்படி இயல்பாய் துவங்குகிறார்கள்...

டவுனுக்கு வந்தபொறவு இப்புடியெல்லாம் கேக்கமுடியுமுங்களா?
என்ன உங்கூருல மழையான்னு கேட்டா, சிரிக்கமாட்டாங்க......

கெவருமெண்டு ஆசுபத்திரிகிட்ட மழை கொட்டுது....நால் ரோட்டுல வெய்யக் கொளுத்துது.....

எனத்தச் சொல்லறது போங்க///

கிருத்திகாதரன் said...

Ahaa.....Nallaa irukeengalaa?

Rathnavel Natarajan said...

நம்மிடம் தம் மனதைக் கொட்டித் தீர்ப்பவர்களுக்கு, கரைப்பவர்களுக்கு நிரப்புபவர்களுக்கு, பெரும்பாலும் நம் ஆலோசனையோ, ஆறுதலோ, தேறுதலோ, நம்பிக்கையூட்டும் வார்த்தைகளோ பெரிதாக அவசியப் படுவதில்லை. அமைதியாகக் கூர்ந்து கேட்பது மட்டுமே போதுமானதாக இருக்கின்றது. தான் பகிர்வதைப் பத்திரமாய் காப்பார்கள் எனும் நம்பிக்கை மட்டுமே அவசியப்படுகிறது.= நிஜம் தான். அருமை சார்.