பிடித்ததில்…. ஒரு மனுசி, ஒரு படம், ஒரு புத்தகம்



அணையா தீபம் அவள்:
--------------------------------------------
கிராமத்து மண்ணில் பூத்த மலர் மலர்க்கொடிநிறைய படிக்க வேண்டும், மேற்படிப்புக்கு ரஷ்யா செல்ல வேண்டும் என தேதோ கனவுகளோடு பள்ளி மேல்நிலைப்படிப்பை முடித்தவள், ஏனோ அதோடு நின்று கொண்டாள்.

தொலைதூரக்கல்வியில் ஏதோ ஒரு சாதாரண பட்டப்படிப்பு, ஏதேதோ கணினி பயிற்சி என பயணப்பட்டுக் கொண்டிருந்தவளுக்கு, திருமணம் நடத்திவைக்கப்பட்டது. அடுத்த ஆண்டே ஒரு பெண்மகள் பிறந்தாள். கணவன் வீட்டில் கணவனின் சகோதரர்களுக்கிடையே ஏதோ சிக்கல், எப்போதும் அண்ணன் தம்பிக்குள் ஒற்றுமை மட்டும் நீடித்திருக்கவில்லை. யாரும் எதிர்பாராத தருணத்தில், தந்தை வீட்டில் குழந்தையோடு இருந்த மலர்கொடிக்கு போன் வருகிறது, அவள் கணவன் விஷமருந்தி நீண்ட நேரத்திற்கு முன் தற்கொலை செய்துகொண்டதாக.

அலறியடித்து ஓடியவளுக்கு அரசுமருத்துவமனை பிணவறையில் கிடத்தப்பட்டிருந்த உடலை எட்ட நின்று பார்க்க மட்டுமே வாய்ப்புக் கிட்டியது. மண்டைக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் துளைத்தெடுக்கிறது,  மயங்கிச் சரிகிறாள்.. வேறு வழியின்றி அவள் தந்தை வழி உறவுகள் அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள், அவள் கணவன் வீட்டு உறவுகளின் அழுத்தத்தில்(!) உடல் வெகுவேகமாக எரியூட்டப்படுகிறது. வழக்கு தற்கொலையென்று நிற்கிறது. சில நாட்களில் மீண்டு வந்த மலர்க்கொடி பலவருடங்கள் பல முனைகளிலிருந்து சலிக்காமல் போராடுகிறாள் அது கொலை என்று நிரூபிக்கவும், அந்தக் குடும்பத்திற்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவும்.



நீண்ட வருட இடைவெளிக்குப்பிறகு மலர்கொடி என் பெயரை இணையத்தில் பார்த்துவிட்டு எண் தேடி அழைத்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தாள். 

தனக்கான நீதி கிடைக்கவேண்டும் என்பதில் இன்னும் உறுதியாக இருக்கின்றாள். ஒவ்வொரு இடத்திலும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மெல்ல மென்றுதின்று கடந்ததைச் சொல்கிறாள். 

சட்டம் குறித்து, ஒரு பெண்ணின் சுய முன்னேற்றம் குறித்து மிகத்தெளிவாகப் பேசுகின்றாள். மகளை சென்னையின் உயர்தரமான ஒரு கல்விச்சாலையில் அமர்த்திவிட்டு, பல அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தெளிந்த ஒரு பெண்ணாக நிமிந்து நின்றுகொண்டிருக்கிறாள். தன் சகோதரியின் குடும்பச் சிக்கல் குறித்துக் ஆலோசனை கேட்ட நண்பனுக்கு அவளின் தொடர்பு எண்ணைக் கொடுத்து, எதுவானாலும் மலர்கொடியிடம் கேள், உனக்குத்தேவையான எல்லாம் கிட்டும் எனத் தெளிவாகச் சொன்னேன்.


தி பை சைக்கிள் தீஃப்
---------------------------

ஆண்டுகள் எத்தனை ஆனாலும் சிலவை மட்டும் பழைமை அடைவதேயில்லை. 
இரண்டாயிரம் வருடங்கள் கடந்தும்கூட திருக்குறள் இன்றும் அதே புதுமையோடுதானே இருக்கின்றது. 

அப்படிப்பட்டததுதான் இத்திரைப்படமும் 62 வருடங்கள் கடந்தும்கூட அதே உயிர்ப்போடுதான் இருக்கிறது 1948ல் வெளி வந்த இத்தாலியத் திரைப்படம் “The Bicycle Thief".

 

இத்தனை காலம் கழித்து பார்க்கும்போதும் அந்தப் படத்தில் இருக்கும் உயிர்ப்பும் காட்சிகள் அமைப்பும், பாத்திரங்களின் மிகச்சிறப்பான பங்களிப்பும்... அப்படியே மனதில் அப்பிக்கொள்கின்றன.

இரண்டாம் உலகப்போரின் நிறைவில், ஏழ்மையில் வாடும் ஒரு சாமானியன், தனக்கு கிடைக்கும் போஸ்டர் ஒட்டும் வேலைக்கு சைக்கிள் வேண்டுமென்று நிர்பந்தம் வர, அடகுக்கடையில் இருந்த சைக்கிளை, (வீட்டில் இருந்த படுக்கை விரிப்புகளை அடகு வைத்து) மீட்டு, முதல் நாள் பணியில் அதைத் திருட்டுக் கொடுத்துவிட்டு இறுதிவரை தேடியலைவதுதான் மொத்தப் படமுமே!

சைக்கிள் திருடுபோன கணத்தில் குமைந்துபோவதும், வீடு திரும்பும்போது தனது குழந்தையிடம் சைக்கிள் உடைந்துபோனதாக பொய் சொல்வதும், நகர் முழுதும் மகனை அழைத்துக்கொண்டு, நண்பர்களோடு தேடித்திரிவதும் என தந்தையும், மகனும் ஓடும் ஓட்டத்தில் நமக்குத் தொண்டை வறண்டு போகிறது.

பழைய சைக்கிளின் பாகங்களை விற்கும் இடத்தில், தங்களின் திருட்டுப்போன சைக்கிளைத் தேடுவதில் இருக்கும் கடினம், அயர்ச்சி, நம்பிக்கை, நம்பிக்கையின்மை என ஒரு சாமானியனின் இயலாமைப் போராட்டத்தை வெகு அழகாக பதிவு செய்கின்றது படம்.

சைக்கிளைத் தேடி குறி கேட்கச் செல்வதும் அதற்கு காசு அழுவதும் என காலம் காலமாக சாமானியன் மாறாமலேதான் தொடர்ந்து வருகிறான் என்பதை நினைக்க அலுப்பாகவே இருக்கின்றது.

மழைக்கு நனைந்து கொண்டு ஒதுங்க ஓடும் இடத்தில் கீழே விழுந்த சிறுவனைக் கவனிக்காத தந்தை, ஏன் உடை அழுக்கடைந்தது எனக் கேட்கும் அப்பாவிடம்விழுந்துட்டேன்எனச் சீறும் மகன். சர்ச் ஒன்றில் தேடுகையில் பசியில் சூப் குடிக்க விரும்பும் மகனை, தேடும் பதற்றத்தில் கோபத்தோடு அழைத்துச் செல்லும் தந்தை, அந்தக் கோபத்தை வெறுப்பை பசியை தந்தையோடு நடக்கும் போது காட்டும் இடைவெளியில் வெளிப்படுத்தும் மகன்.... என ஒவ்வொரு காட்சியும் நேர்த்தியாக வடிக்கப்பட்ட சிற்பம் போன்ற அற்புதம் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை.


நாயிவாயிச்சீல
-----------------------
மக்களின் மிகப்பெரிய பிரிவினைவாதி என ஆற்றைச் சொல்லலாம் போல. எங்கள் பகுதியில் மேட்டூரிலிருந்து தொடங்கும் காவிரி ஈரோடு கரூர் மாவட்டங்களிலிருந்து சேலம் ,நாமக்கல் மாவட்டத்தைத் தனியே பிரித்தேதான் காட்டுகிறது. 

இந்த மாவட்டங்கள் கொங்கு மண்டலம் என்றே அழைக்கப்பட்டாலும் கூட, ஆற்றுக்கு அக்கரையிலும் இக்கரையிலும் இருக்கும் மனிதர்களின் குறிப்பிட்ட சில பழக்க வழக்கங்கள், வாழ்க்கை நடைமுறைகள் மாறுபட்டேயிருப்பது ஆச்சரியமாகவே இருக்கின்றது. என் பிறப்பும், உறவுகளும் அமைந்தது சேலம் / நாமக்கல் மாவட்டப் பகுதிகளில், வளர்ந்தது வாழ்வது முழுக்க முழுக்க ஈரோடு மாவட்டப்பகுதி என்பதனால், இரண்டு வட்டார வழக்குகளிலும் இருக்கும் மெல்லிய வித்தியாசங்களை என்னால் ரசித்து ரசித்து திளைக்க முடியும்.



கொங்கு வட்டார வழக்கை மையப்படுத்திய பெருமாள் முருகனின் கங்கணம், மாதொருபாகன், மு.ஹரிகிருஷ்ணனின் நாயிவாயிச்சீல, வாமுகோமுவின் கள்ளி ஆகிய புத்தகங்களில் படிந்து கிடக்கும் வட்டார மொழியை வாசிக்கும் பொழுதில் என் உறவுகளோடு சேர்ந்து வெயிலில் நனைந்து, தண்ணீரில் மூழ்கி, புளுதியில் புரண்டெழுவது போல் ஒவ்வொருமுறையும் தோன்றும்.


சமீபத்தில் வாசித்த நாயிவாயிச்சீல, சிறுகதைகள் குறித்த கட்டமைப்புகளை உடைத்த சிறுகதைகளென்றே சொல்லலாம். கொங்கு வட்டார வழக்கில் பின்னப்பட்ட சிறுகதைகள். 


கொங்கு வட்டார வழக்கிலும் காவிரி ஆற்றுக்கு மேற்கும், காவிரி ஆற்றுக்கு கிழக்கும் வேறு வேறு வழக்குகள் உண்டென நினைக்கிறேன். நான் பிறந்தது ஆற்றுக்கு கிழக்குப் பகுதியிலுள்ள கிராமம். வளர்ந்து வாழ்ந்ததெல்லாம் மேற்குப் பகுதியிலிருக்கும் கிராமம். உற்றார் உறவுகள் கிழக்குப் பகுதியிலே இருப்பதால், அங்கு பேசும் மொழியோடு மிகுந்த பரிச்சயமுண்டு. சங்கிகிரி, தேவூர், செட்டிபட்டி, எடப்பாடி என அப்பகுதி மக்கள் பேசும் மொழியிலே வடிக்கப்பட்ட தேர்ந்த சிறுகதைகள்.

குடிநாசுவன் தவிர்த்து, மற்ற எல்லாமே கூத்துக் கலைஞர்கள் சார்ந்த கதைகள். விஞ்ஞான உலகத்தின் வழியே ஒரு மாய உலகுக்குள் ஒளிந்துகொள்ள முயலும் நம்மை இழுத்து வந்து, கிராமத்துக் கலை சார்ந்த மனிதர்களிடம் ஒப்புவிக்கும் அருமையான, அவ்வப்போது சவுக்கைச் சுழற்றும் கதைகள்.

ஒரு நண்பராக ஹரிகிருஷ்ணனைச் சந்தித்திருக்கிறேன். பேசியிருக்கின்றேன். கதைகளை வாசித்தபிறகு ஹரிகிருஷ்ணனின் ஆளுமை கண்டு அசந்து நிற்கின்றேன்.


-
நன்றி: ஃபேஸ்புக் பரண் சாளரம் பகுதிக்காக எழுதியது!

~



3 comments:

vasu balaji said...

மூன்று நட்சத்திரங்கள்.

க.பாலாசி said...

நல்ல பகிர்வுகள்..

VANGAPESALAM said...

மண்வாசனை