எங்கேயும் எப்போதும்

பெங்களூரு சாந்திநகர் பஸ் ஸ்டாண்டில் ஈரோடு போகும் அல்ட்ரா டீலக்ஸ் அரசுப்பேருந்தில் உட்கார்ந்திருந்தேன். ஓடாத டிவியை ஓடவைக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார் கண்டக்டர்.

ஓடவெச்சிங்கன்னாலும் அது ஒழுங்கா ஓடாது, விட்டுடுங்க சார்என்றார் ஒரு பயணி.

அழுக்கடைந்த இருக்கைத் துணிகள் பிசுபிசுத்தது. முன்னிருக்கையில் அமர்ந்திருந்த பெண்மணி மல்லிகைப்பூ வைத்திருக்க வேண்டும். அடர்த்தியான வாசம் அடித்துக்கொண்டிருந்தது. மல்லிகை வாசம் எங்கு வீசினாலும், அங்கே மனது ஒடுகின்றது. முன்னிருக்கை பெண் யாராய் இருப்பார் என மனது தேடத் துவங்கியது.

இதுபோல் எத்தனையோ பயணங்களைப் பார்த்தாகிவிட்டது. அத்தி பூத்தாற்போல் எப்போதாவது தெரிந்த முகம் அகப்பட்டாலே அதிசயம்தான். அந்த முன்னிருக்கையிலிருந்து எழுந்து நின்ற பெண் குழந்தை ஒன்று என்னையே பார்த்துக்கொண்டிருந்தது.

அந்தக் குழந்தையின் முகம் எங்கோ பார்த்த சாயலில் இருந்தது. புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்டேன். அதுவும் என்னை மாதிரியே புருவத்தை உயர்த்தி என்ன என்பதுபோல் என்னைக் கேட்டது.

பெரும்பாலும் குழந்தையின் முகங்கள் ஒரே சாயலில் இருப்பது போன்றே மனதிற்குள் தோன்றுகிறது. என் மகளின் நியாபகம் வந்தது. மணியைப் பார்த்தேன் 11 நெருங்கிக்கொண்டிருந்தது. இந்நேரம் தூங்கியிருக்கும் எனத் தோன்றியது. சனிக்கிழமை என்பதால் ஒருவேளை அம்மாவும் பொண்ணும் டிவி பார்ப்பாங்க எனவும் தோன்றியது.

நான் கொஞ்சம் முன்னே நகர்ந்துஎங்கடா கண்ணு போறேஎனக் கிசுகிசுப்பாக கேட்டேன்

பவானி போறோம்கிசுகிசுப்பாகவே பதில் சொல்லியது

பவானி என்றவுடன், கூடுதல் கவனம் வந்தது. லேசாக எழுந்து முன் இருக்கையைப் பார்த்தேன். கொஞ்சம் பெரிய குழந்தை ஒன்றும், அம்மாவும் உட்கார்ந்திருப்பதும், இந்தக்குழந்தை நடுவே நின்று கொண்டிருப்பதும் தெரிந்தது.

கிசுகிசுப்பாகஎன்ன பாக்குறீங்கஎன்றது. சைகையால் யார் அவங்க என்றேன்.

இது அம்மா, இது அக்காஎன்று கொஞ்சம் சத்தமாக சொல்லியவாறே இரு கைகளாலும் அவர்கள் தலையை தொட்டிருக்கவேண்டும்.

என்னஎன்று அவள் அம்மா கேட்டிருக்கவேண்டும்

இந்த மாமா, உங்களை யார்னு கேட்டாங்கஎன்றது

எனக்குத் தர்மசங்கடமாய்ப் போனது. பின்பக்கம் திரும்பியவாறு அந்தப் பெண்ணின் தலை விருக்கென உயர்ந்து உள்ளடங்கியது. தலை உயர்வதைப் பார்த்து அதிலிருந்து தப்பிக்க முயன்று தோற்று, என்னைப் பார்த்த பெண்ணின் முகத்தைப் பார்த்தபோது, திக்கென்றது.

ஆஹா, இந்த முகத்தை எங்கேயே பார்த்திருக்கேனேஎன்ற ஆச்சரியத்தோடு யோசிக்கும்போதே, மீண்டும் உயர்ந்தது அந்த முகம். மிகப்பெரிய யோசனையோடு அந்த முகம் என்னை சில விநாடிகள் உற்றுநோக்கி புன்னகைத்தது.

என் மூளைக்குள் கசமுசாவென நிறையக் கோடுகள் ஓடின.
எங்கேஎங்கேஎங்கே பார்த்திருக்கோம் எனக் குழப்பத்தில் தலையை உடைத்துக்கொண்டிருக்கும் போது,

மீண்டும் ஒருமுறை தலையை உயர்த்தியவள்சார்…… நீங்ங்ங்ங்ங்க!!!!?”

நானும் நெற்றியைச் சுருக்கியவாறு என் பெயரைச் சொல்லிக்கொண்டே
ம்ம்ம்ம்பார்த்த முகமா இருக்கே…… நீங்ங்ங்ங்க

அவள் பெயரைச் சொன்னாள்.

மூளையில் மின்னல் வெட்டியதுபோல் இருந்தது.

எப்படியிருக்கீங்க, என்ன பண்றீங்கஎன ஆவலாக கேள்விகளை அடுக்க, எழுந்து நின்று கொண்டேன். திருமணம் ஆகி கணவரோடு பெங்களூரில் இருப்பதாகவும். இரண்டு பெண் குழந்தைகள், மூத்தவளுக்கு 12 வயசு இரண்டாவது பெண்ணுக்கு 4 வயசு என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

பேருந்து கிளம்பும் வரை ஏதேதோ பேசினோம். ஆனாலும்அவனைக் குறித்து நானும் பேசவில்லை, அவளும் ஏதும் கேட்கவில்லை. நான் வேண்டுமென்றே தவிர்த்தேன், அவளும் கவனமாக தவிர்த்ததாகவே தோன்றியது. பேருந்து சிறு குலுங்களோடு நகர்ந்தது. மனதிற்குள் நினைவுகள் குலுங்க ஆரம்பித்தது.நானும் அவனும் கல்லூரியில் வேறுவேறு பிரிவுகளில் படித்தோம். ஒரே பஸ்சில் சென்று வந்ததில் துளிர்த்த நட்பு சில நாட்களிலேயே அடர்த்தியாகிப் போனது. முழுக்க முழுக்க நகர்ப்புற வாழ்க்கைச் சூழலைச் சார்ந்தவன் அவன். எனக்கு முழுக்க முழுக்க கிராமச் சூழல். ஆனாலும் எங்களுக்குள் மிகச்சரியான புரிதலும் நட்பும் இருந்தது.

கல்லூரி முடிந்து பவானி திரும்பிய பிறகும் எங்களுக்குள் பேச்சு தீராமல் மிச்சமிருக்கும். புது பஸ் ஸ்டாண்டிலிருந்து அவனுடைய பழைய சைக்கிளை உருட்டிக்கொண்டு கூடுதுறைவரை இருவரும் நடப்பது, அங்கிருந்து வீதிவீதியாகச் சுற்றி திருமொஅ பஸ் ஸ்டாண்டை வந்து என் வீட்டிற்குப்போக பஸ் பிடிப்பேன். என்ன பேசுவோம் என்று தெரியாது, ஆனாலும் பேசுவோம் பேசுவோம் பேசிக்கொண்டேயிருப்போம்.

மூன்று வருடக் கல்லூரிப் படிப்பு முடியும் தருவாயில் ஒருநாள், அவளைக் காதலித்துக் கொண்டிருப்பதாக அறிமுகப்படுத்தி வைத்தான். ’அவள்அவன் வீட்டுக்கு நான்கு வீடு தள்ளியிருக்கும் ஒரு பள்ளி மாணவி அவள். காதல் குறித்த ஆயிரமாயிரம் ஆசைகள் இருந்தாலும், காதலிக்க ஆள் கிடைக்காத வறட்சியான காலக்கட்டம் அது. பெண்கள் குறித்து மனதிற்குள் அதிசயம் பூக்கத் துவங்கிய காலத்திலிருந்து, சில நிமிடங்கள் நம்மை உற்றுப்பார்த்த, திருவிழாக்களில், திருமணங்களில் சிலமுறை நம்மைத் திரும்பிப் பார்த்த பெண்களையெல்லாம் காதலிகளாக நினைத்துருகியதும், சிலமணி நேரம் அல்லது சிலபொழுதுகள் காதலித்ததாக நினைத்துக் கொண்டதுமான ரெண்டுங்கெட்டான் பருவம் அது.

ஆனால் அவன் மட்டும், காதலிக்கிறேன் என ஒருத்தியை அறிமுகப் படுத்தியதில் ஆச்சரியம் அடங்கவில்லை. நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அவன் காதல் வளர்ந்து கொண்டேயிருந்தது. அருகருகில் வீடு என்பதால் தினமும் பேசுவது குறித்தும், சமிக்ஞைகளில் பரிமாறிக்கொண்ட அன்றைய தினத்து காதல் குறித்து கதைகளாய் சொல்லிக் கொண்டேயிருப்பான்.

அவர்கள் இருவர் குடும்பமும் நட்பு என்பதால், அவள் அவன் வீட்டுக்கு வரும்போது அங்கே நடைபெறும் கிளுகிளுப்புகள் என அவன் கதை சொல்ல, அப்பாவியாய் கேட்கும் நிலையில் மட்டுமே நானிருப்பேன்.

திடீரென ஒருநாள் இருவரும் கிளம்பி ஈரோடு - திருச்செங்கோடு - நாமக்கல்சேலம்மேச்சேரி - மேட்டூர்பவானி என நாள் முழுக்க பேருந்திலேயே சென்று வந்த கதையைச் சொன்னான். அப்பொழுதெல்லாம் எது சொன்னாலும் கேட்கும் பொறுமையிருந்தது. அந்த சாகசங்களெல்லாம் ஆச்சரியங்கள் நிறைந்தனவாகவும் இருந்தன.

ஒவ்வொரு முறையும் அவர்களின் ஊர் சுத்தும் பயணங்கள் முடிந்ததும், ”டேய் மச்சி, வீட்ல உங்கூடத்தான் வெளியே ஒரு வேலையாப் போனேன்னு சொல்லிருக்கேன், எங்க வீட்ல எதும் கேட்டா சமாளிச்சுக்கோஎனச் சொல்லிவிடுவான்.

அவர்கள் வீட்டுக்கு நான் போகும்பொழுதெல்லாம் அவன் அப்பாவோ, அம்மாவோஎன்னடா கண்ணா? போன வேலையெல்லாம் நல்லா முடிஞ்சுதாஎன பொதுவாய்க்கேட்க நானும்முடிஞ்சுதுங்கஎனச் சொல்லும்போதேஎன்ன வேலை, எங்க போனீங்கனு கேட்டா என்ன சொல்றதுனு மண்டைக்குள் குடைந்து கொண்டேயிருக்கும்.

பொய்களைத் தயாரிப்பது ஒரு கலை. அந்தக் கலை ஒருபோதும் எனக்கு கை வந்ததேயில்லை. பொய்களைத் தயாரிக்க எப்போது முற்பட்டாலும் முகம் வர்ணங்களையும், உணர்வுகளையும் இழந்து வெளுத்து சவக்களையோடு இருப்பதை மனக்கண் அழுத்தமாக அறியும்.

இப்படியே நகர்ந்து கொண்டிருந்த அவன் காதல் பயணத்தில் ஒரு நாள் ஒரு திருப்புமுனையைக் கொண்டுவந்தான்.

மச்சி, நாளைக்கு நாங்க சினிமாவுக்கு போறோம், நீயும் கம்பெனிக்கு வர்றே

நான் வரலடா, நானென்னத்துக்கு

நாங்க ரெண்டு பேரும் தனியா போவமுடியாது, அவ அக்காவும் வர்றா, அதனால நீயும் வர்றேஎன்றான்

அவளின் அக்காவும் வருவதாகச் சொன்னது என்னைக் கிளர்ந்துவிட்டிருக்க வேண்டும். அவள் அக்கா எனப்பட்டவளை முன்பே பார்த்திருக்கின்றேன், அவளின் தூரத்துச் சொந்தம்தான் அந்த அக்கா.

சரி எப்படியும் அவங்க ரெண்டுபேரும் ஜோடியாகப் படம் பார்க்கும்போது, அந்த அக்கா நம்மகிட்ட பேசாமலா போய்டுவா என மனது முழுக்க ஏதேதோ வழிய நானும் மெனக்கெட்டுப் உடன் போனேன். மெனக்கெட்டு வந்திருப்பது, முத்துக்குமார் தியேட்டரை அடைந்தபோதுதான் தெரிந்தது. அவள் அக்காவின் தோழனான, ஏற்கனவே திருமணமான ஒருவர் வெள்ளை வேட்டி சட்டையில் ஐந்து டிக்கெட்டுகளோடு எங்களுக்காகக் காத்திருந்தார். என்னிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

தியேட்டரில் உள்ளே நுழைந்து, இடது பக்க வரிசையில் சுவற்று ஓரமாக அவர் அமர, அடுத்து அவள் அக்கா, அடுத்து அவள், அடுத்து அவன். அடுத்து நான், எனக்கடுத்து எவனோ, எவரோஎவளோ என யார் யாரோ.

இப்படி ஒரு கேனத்தனமான நிலமை எதிரிக்கும் ஏற்படக்கூடாது என அப்போது தோன்றியது. என் இடப்பக்க இருக்கையில் அவன் அமர்ந்திருந்தாலும், மருந்துக்கும்கூட நேராக அமரவோ, என் பக்கம் திரும்பவோ இல்லை. ஒரு பக்கமாய் சாய்ந்த, பாரமேற்றிய லாரி போல், இடது பக்கமாய் சரிந்தே கிடந்தான்,. பேசினார்கள் பேசினார்கள் பேசிக்கொண்டேயிருந்தார்கள். இடைவேளைக்கு விளக்குகள் விழித்த நேரத்தில் நேராய் நிமிர்ந்தவன்,

அப்புறண்டா மச்சி, படம் எப்படியிருக்கு?” என என் தொடை மேல் அடித்தான். அது தொடைமேல் விழுந்த அடியாகத் தெரியவில்லை. என் ஏமாளித்தனத்தின் மேல் சூட்டிய கிரீடமாகவே தெரிந்தது.

இனிமேல் எப்போதும், எவனும் ஜோடியா சுத்தப்போறப்ப துணைக்கு போகக் கூடாதென தீர்மானம் போட்டேன். தீர்மானம் எல்லாம் பிரசவ வைராக்கியம் போல்தான்.

மீண்டும் ஒரு சுபயோக சுபதினத்தில் எங்கள் வீட்டுக்கு ஒரு சனிக் கிழமையில் மதியம் வந்து தங்கினான்.

மச்சி நாளைக்கு காலையில நாம அந்தியூர் சினிமாவுக்குப் போலாம்டா, உங்க வீட்ல சொல்லிடு

என்னது அந்தியூருக்கா, இங்கிருந்து அங்க எவனாது சினிமாவுக்கு போவானா? வீட்ல விடமாட்டாங்கடா

ப்ளீஸ்டா, குமாரபாளையம், ஈரோடு எல்லாம் ரிஸ்க்குடா, இங்கதான் யாருக்கும் தெரியாது

நான் வரல, அன்னிக்கு முத்துக்குமார் தியேட்டர்ல நான் பட்டபாடே போதும்டா

டேய் எனக்கு உன்னைய விட்டா யார்டா இருக்கா, ப்ளீஸ்டா இந்த வாட்டி அந்த ஆள் வரமாட்டார், அவங்க ரெண்டு பேரு, நாம ரெண்டு பேருதான்

எனக்குள் ஏதோ கெமிஸ்ட்ரி நிகழ்ந்து தொலைத்திருக்கவேண்டும். அரை மனதாக சரி என ஒப்புக்கொண்டேன். காலையில் வீட்டில் ஏதோ பொய் சொல்லிவிட்டு சைக்கிள் மிதித்து, பஸ் ஸ்டாப்பில் சைக்கிளை போடும்போது அந்தியூர் பஸ் வந்தது.

டேய் அடுத்த பஸ்ல போலாண்டாஎன்றான்

ஏண்டா

அந்த பஸ்லதான் அவங்க ரெண்டுபேரும் வர்றாங்க

பேருந்து வந்தது, பேருந்தில் வரவேண்டியவர்களும் வந்தார்கள். உட்கார இடமில்லை. அக்கா எழுந்து அவனுக்கு இடம் கொடுத்துவிட்டு பஸ்ஸின் முன்பக்கம் நின்றுகொள்ள, நான் பஸ்ஸின் பின் படிக்கட்டு அருகே நின்றிருந்தேன். அன்றைக்கு 12 கி.மீ பயணம் பலநூறு மைல் பயணம் போல் தோன்றியது.

செல்லக்குமார் தியேட்டருக்கு அழைத்துப்போனான் என்பதைவிட இழுத்துப் போனான் என்றே சொல்லவேண்டும். தெலுங்கு டப்பிங் படம். இருக்கையின் வரிசையில் வலது ஓரம் அக்கா அமர, அக்காவுக்கு இடது அவள், அவளுக்கு இடது அவன், அவனுக்கு இடது…. ம்ம்ம்ம் வேற யாரு நானேதான். அன்றைக்கு முத்துக்குமார் தியேட்டரில் இடது பக்கம் வளைந்து கிடந்ததை நேர் செய்ய, இந்த முறை வலதுப்பக்கமே சரிந்து கிடந்தான்.

படம் சொதப்பலோ சொதப்பல். இவன் பிசியோ பிசி. சொதப்பலில் சோர்ந்துபோய்க் கிடந்த நான், அவனை மெல்லத் தட்டி என்னவோ கேட்டேன். கேட்ட மாத்திரத்தில் பொளிச்சென என் மூஞ்சியில் குத்தினான். இருட்டில் கை வந்தது தெரியவில்லை. குத்து என் தாடைக்கு மேல் கீழுதட்டில் விழுந்தது. விழுந்த குத்தில், மடக்கிய கையும், அதில் அணிந்திருந்த இரும்புக்காப்பும் தெரிந்தது. வலி ஒரு கணம் உயிரைப்பிடித்து உலுக்கியதில் எழுந்து வெளியே ஓடிவந்தேன். வெளிச்சம் கண்ணைக்கூசியது. வாய்க்குள் உப்புக் கரித்தது.

ஓரமாய் இருந்த தண்ணீர்த்தொட்டி அருகே சென்று எச்சில் உழிந்தேன். இரத்தமாய் விழுந்து. தண்ணீரை அள்ளி வாய் கொப்பளிக்கும்போது, பின்னால் ஓடி வந்தவன் அப்படியே கட்டிக்கொண்டான். கீழே கிடந்த இரத்தத்தைப் பார்த்திருக்கவேண்டும்.

அய்யோ சாரிடாசாரிடா, சும்மா விளையாட்டாக் குத்தினேன், தெரியாம பட்டுடுச்சு, ரொம்ப சாரிடானு ஏதேதோ சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான்.

பல்லில் பட்டு உள்உதடு நன்றாக கிழிந்திருப்பது நாக்கில் அழுந்தியது.

மகராசா நீ படம் பாரு, என்ன வேணாப் பாரு, ஆளை விடுறா சாமிஎன நான் கிளம்ப யத்தனித்தேன்.

டேய்.... ஒரு நிமிசம்டா, ப்ளீஸ்டா,” என உள்ளே ஓடியவன், சில நிமிடங்களில் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு வந்தான். வெளிச்சத்தில் கண்களைச் சுருக்கியவாறு வந்த அவர்கள் இருவர் முகத்திலும் அதிர்ச்சி. என்னென்னவோ சமாதானம் சொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.

வெளியே வந்தோம், பஸ் பிடித்தோம், அமைதியாகவே பயணித்தோம். என் நிறுத்தத்தில் நான் இறங்கிக்கொண்டேன். அவர்கள் பவானி போய்க்கொண்டிருந்தார்கள்.

அன்றைக்கு தீர்மானம் எடுத்தேன்மவனே வாழ்க்கையில காதல் பண்ணக்கூடாது, அப்படியே காதலிச்சாலும், சினிமாவுக்குப் போகக்கூடாது, அப்படியே சினிமாவுக்குப் போனாலும், கூட எந்த அப்பாவியையும் கூட்டிட்டுப் போகக்கூடாது. அப்படியே கூட்டிட்டுப் போனாலும் அவனை மூஞ்சியில குத்தக்கூடாது”.

ஆண்டுகள் ஓடித் தீர்ந்தது, தீர்மானங்கள் நீர்த்துப் போனது. அவனும் நானும் வேறு வேறு பக்கம் பயணப்பட்டோம். சில ஆண்டுகள் சந்தித்துக் கொள்ளவேயில்லை. நீண்ட நாட்கள் சென்னையில் இருந்தான். திடீரென ஒரு முறை மலேசியாவில் இருப்பதாக அழைத்தான். நிறைப் பேசினோம். ’அவள்எப்படியிருக்கா, கல்யாணம் எப்படா என்றேன். அவளுக்கு கல்யாணம் ஆயிருச்சுடா என மிக எளிதாகச் சொன்னான். நானும் எந்த வித அதிர்ச்சியுமின்றி, அதை எளிதாக கேட்டுக்கடந்து போகும் பக்குவத்தில் இருந்தேன்.

என் திருமணத்திற்கு அவன், அப்பாவோடு வந்திருந்தான். சில ஆண்டுகள் கழித்து விழுப்புரத்தில் நடக்கும் அவன் திருமணத்திற்கு அழைப்பு அனுப்பியிருந்தான். சூழலின் பொருட்டு போகமுடியவில்லை. சில ஆண்டுகள் கழித்து பையன் பிறந்திருப்பதாகவும், அப்பாவும் அம்மாவும் அவனோடே சென்னையில் இருப்பதாகவும் சொன்னான். சில ஆண்டுகளுக்கு முன் அழைத்தவன் அப்பா இறந்துவிட்டதாகச் சொன்னான், அன்று மட்டும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.


டதடக்கும் பஸ்சும், மூட்டைப்பூச்சி அரிப்பும் என அரைத்தூக்கத்தில், நினைவும் கனவுமாய் பழைய நினைவுகள் ஓடிக்கொண்டிருந்தன. ஈரோட்டுக்கான தடம் தீர்ந்து கொண்டிருப்பதை உணரும் போதே அசந்து தூங்கிப்போனேன். பஸ் எங்கோ நிற்பதையும், விளக்கு வெளிச்சம் கண்களை உறுத்துவதையும் உணரும்போது, முன்னிருக்கை அருகே, அவள் பைகளை சுமந்துகொண்டு, சின்ன பாப்பாவை தோளில் சுமந்து கொண்டு என்னைப்பார்த்து புன்னகைத்தாள்.

சரிங்க, வர்றேன், இன்னொரு நாள் பார்ப்போம்

முன்பக்க படிக்கட்டை நோக்கி நகர்ந்தவளின் தலையிலிருந்த மல்லிக்கைச் சரம் காய்ந்து உதிர்ந்துகொண்டிருந்தது.

பவானி புது பஸ் ஸ்டேண்டிலிருந்து மெல்ல பஸ் ஊர்ந்து கொண்டிருந்தது. ஓட்டுனர் விளக்குகளை அணைத்தார்.

தூக்க கலக்கத்தோடு, என் மொபைலில் அவன் நெம்பர் இருக்கிறதா என தேடிப் பார்த்தேன்.

இல்லை.

-

7 comments:

ppage said...

ம்.... எளிமையான எதார்த்தமான கதை.... யெஸ்... நிஜத்தில் இப்படித்தான் நடக்கும்...

தடாலடி திருப்பங்களோ, ட்விஸ்ட்டு எனும் பெயரில் அபத்தங்களோ இல்லாது, நிதர்சனத்தை பிரதிபலித்த கதை....

வாசித்து முடிந்த பிறகும் காட்சிகள் அகலாமல், நெஞ்சுக்குள் தங்கி விட்டது தங்களின் நேர்த்தியான நடை தந்த பலம்... வாழ்த்துக்கள்....

http://www.edakumadaku.blogspot.in/2012/02/blog-post.html

இது போன்ற எனது, ஒரு எளிமையான குளுகுளு கதை ஒன்றை படியுங்களேன்...

இப்னு ஹம்துன் said...

காதல் என்ற பெயரில் வரும் பருவக் கிளர்ச்சியின் இயல்பை, மிக யதார்த்தமான நடையில் சொல்லியிருக்கிறீர்கள்.
நன்று.

சனாதனன் said...

nice story...
ipdi oru kathaiyathan nan valai pottu theditu irunthen....
vaazhthukkal

க.பாலாசி said...

ம்ம்ம்... குட் டச்சிங் கதை... துணை போறதவிட கொடுமை தூதுபோற வேலைதான்.. நான்லாம் பட்டிருக்கேன்..

ashokha said...

வாழ்க்கையில் நம் அனுபவங்கள் பின்னே போய்க் கொண்டே இருக்கின்றன. எப்போதாவது பழைய பக்கங்களை புரட்டும்போது மனம் அழும். அதனால் அது ஒன்றுதான் முடியும்.

lakshmi indiran said...

அப்படியே நிதர்சனமான நகைசுவை கதை..கதையின் நடை மிக சுவாரஸ்யம்..சூப்பர்

mathi Logu said...

காதல் குறித்த ஆயிரமாயிரம் ஆசைகள் இருந்தாலும், காதலிக்க ஆள் கிடைக்காத வறட்சியான காலக்கட்டம் அது... Crazy