அவ்வப்போது பார்த்த சில (பிறமொழிப்) படங்கள் குறித்த உணர்வுகளை சில வரிகளில் பதிக்கும் முயற்சி இது. முழுமையான ஒரு பார்வையை, விமர்சனத்தை வைப்பதைவிட அது குறித்து மேலெழும்பும் உச்சபட்ச உணர்வுகளை மட்டும் பதியனிடும் முயற்சி.
===================================================
சூழல் வீழ்த்தியதில் சிறைக்குள் ஆட்படும் மனிதர்களின் கதை! சிறை எவ்வளவு கொடுமையானது என்பதை குலை நடுங்கப் பார்க்கலாம். தனக்குள் வருவோரை அவ்வளவு எளிதில் வெளிவிடாத கொடும் சிறை அது! கதை 1947 ல் தொடங்கி 1966ல் நிறைவடைகிறது.
சிறையிலேயே 50 வருடங்கள் கழித்து தள்ளாத வயதில் வெளிவந்து வாழமுடியாமல் போகும் ”ப்ரூக்ஸ்”, ஒவ்வொரு 10 ஆண்டின் போதும் வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு 40 ஆண்டுகள் சிறையிலேயே வாழ்க்கையைத் தொலைக்கும் “ரெட்”. இவர்களுக்கு மத்தியில் ஒரு ஆறு அங்குல அளவுள்ள சிறிய ஜாக்ஹேமர் மூலம் 19 வருடத்தில் தனக்கு விடுதலையைத் தேடிக்கொண்ட ”ஆண்டி டூப்ரேன்”. (ஆறு அங்குல “ஹேமர்” மூலம் ஒருவன் சுரங்கம் தோண்டிட 600 ஆண்டுகள் தேவைப்படும் என ரெட் நினைத்ததை ஆண்டி 19 வருடங்களில் நிகழ்த்தியிருப்பார்)
Get busy living or Get busy dying.
Every man has his breaking point.
கடிதத்தில் வரும் “Hope is the good thing, may be the best things, and no good thing ever dies” ஆழப்பதியும் வரிகள்.
”ரெட்” பாத்திரத்தில் நடித்திருக்கும் Morgan Freenman மேல் அளவுகடந்த பிரியம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
இது ஒரு சினிமாதான். ஆனால் வாழ்க்கையில் ஒரு மனிதன் தன் மரணத்திற்குள் பார்த்தே தீர வேண்டிய சினிமா என்றே நானும் நினைக்கின்றேன்.
(மூன்று முறை பார்த்துவிட்டேன். இன்னும் எத்தனை முறை பார்ப்பேன் எனத் தெரியவில்லை!)
===================================================
வலிமை பெற்றிருக்கும் மனித இனம், சக மனித இனம் மீது செலுத்தும் வன்முறையை பச்சை ரத்தத்தோடு காட்டும் படம். மெக்சிகோ காடுகளில் வாழ்ந்த மாயன் பழங்குடி இன மக்களின் குழுச் சண்டைதான் படம். சகமனிதன் மேல் இவ்வளவு வன்முறையை ஏவிவிட முடியுமா என்பது கலங்கடிக்கிறது. ஏலம் விடப்பட்டு அடிமைகளாக்கப்படும் பெண்கள், மிக எளிதாக கழுத்து துண்டிக்கப்படு பலியிடப்படும் ஆண்கள் என காலம்காலமாய் நிகழ்த்தப்படும் அநீதியை அப்பட்டமாகக் காட்டுகிறது படம்.
கர்ப்பிணி மனைவி, அந்தச் சிறுகுழந்தை, அவர்களுக்கு கொடுத்த வாக்கு - என படம் நெடுகிலும் உயிருக்காகவும், உறவுகளைக் காக்கவும் ஓடும் கதாநாயகன் ஜாகுவார்பா-வின் ஓட்டம் நம்மையும் மூச்சு வாங்கச்செய்கின்றது. அந்தக் குழந்தையின் நடிப்பு அபாரம். பார்வைகளால் மட்டுமே பேசிக்கொள்ளும் காட்சிகளும், ஏதுவான இசையும், காடுகளில் சுழன்றுசுழன்று ஓடும் ஒளிப்பதிவும் வெகு அருமை!
”பயம் தான் மிகப்பெரிய எதிரி” எனும் அந்த வசனமே படம்.
நிறைவில், அந்த இனம் இன்னொரு இடத்தை நோக்கி நகரவேண்டிய சூழல் மிகக்கனமானது.
===================================================
கால் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் துவங்கும் கதை. போரினால் உருவாக்கப்படும் அகதிகளின் வாழ்வு குறித்தும், பாதிப்படையும் பகுதிகள் குறித்தும் லண்டனில் வாழும் அமெரிக்கப் பெண்ணுக்குள் ஏற்படும் எண்ணத்தையொட்டிய பயணம்தான் படம்.
எத்தியோப்பியாவில் வறுமை, கம்போடியாவில் சண்டை, செஷன்யாவில் போர் என, அதன் எச்சங்களாய் மனிதர்கள் படும் வேதனையை கண்கொண்டு பார்க்கமுடிவதில்லை. போர் என்று வந்துவிட்டால் வரைமுறைகள் இல்லாமல் எல்லா வகைகளிலும் ஒடுக்கப்படுவது சாமான்ய மக்கள்தான்.
மக்கள் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு ஓடிக்கொண்டேயிருக்கும் அந்த மருத்துவரான நாயகனும் (Clive Owen), அவர் பின்னே ஓடும் நாயகியும் (Angelina Jolie), அவர்களோடு நம்மையும் இழுத்துச் செல்கின்றனர். அவர்களுக்கிடையே துளிர்க்கும் காதலும், அந்த உறவும் அழுத்தமான ஒரு கவிதையாய் படிகிறது. முடிவு மட்டும் கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தாலும். நிச்சயமாக பார்க்க வேண்டியதொரு படம்.
===================================================
குறும்புகளோடு குழந்தையாகத் தொடங்கி முதிர்ச்சியடையும் ஒரு புத்த துறவியின் வாழ்க்கையின் பல நிலைகளைப் பொருத்தி நான்கு விதமான பருவ நிலையை ஒரு குறியீடாகச் சித்தரிக்கும் படம்.
காடுகளுக்கிடையே உள்ள ஒரு அழகிய ஏரியின் மையத்தில் இருக்கும் வீட்டில் இருக்கும் புத்த துறவியிடம் வளரும் சின்னக் குழந்தை, வளர வளர வாழ்க்கையிலிருந்தும், அந்த புத்த துறவியிடமிருந்தும் கற்றுக்கொண்டு, பருவநிலைகளைப்போல் மாறி மாறி பக்குவமடைவதுதான் கதை.
குழந்தையாக இருந்தபோது குறும்பாக மீன், தவளை, பாம்பு என எல்லாவற்றிலும் கல்லைக் கட்டிவிட்டு ரசித்த விளையாட்டுக் குரூரம், வயது முதிர்ந்து துறைவியானபின்பு அவரிடம் தஞ்சம் புகும் மற்றொரு குழந்தையிடமும் மீன், தவளை, பாம்பு ஆகியவற்றில் வாயில் கல்லைத் திணிப்பது எனத் தொடருகிறது. உச்சியில் வைக்கப்பட்ட புத்தர் அமைதியாக கவனித்துக்கொண்டிருக்கிறார் இன்னொரு துறவியை எதிர்நோக்கி என்பது போல் நிறைவடைகிறது படம்.
சிறுவயதில் குறும்பாகச் செய்யும் பாவங்களை வயது கூடக் கூட வக்கிரமாக மாற்றிச் செய்கிறோம் என்பதையும், வாழ்க்கை போதிக்கும் அனுபவம் அபரிதமானது என்பதையும் வெகு ஆழமாகக் காட்டுகிறது.
இயக்குனர் கிம்-கி-டுக்கின் மற்றுமொரு அருமையான படைப்பு. படத்தின் மிகப்பெரிய பலம் பின்னனி இசையும், படம் எடுத்த சூழலுமே. இறுதிக்காட்சியில் வரும் பாடலும், இசையும் மொழிகளை புறந்தள்ளி ரசிக்க வைக்க, அதிலிருக்கும் சூழலோடு இயைந்த உயிர்ப்பே காரணம்.
===================================================
இவ்வளவு யதார்த்தமாய் விறுவிறுப்பாய் தமிழ் சினிமாவில் படம் வருவது மிகுந்த ஆச்சரியத்துக்குரிய ஒன்றே! எந்த ஒரு பாத்திரமும், வசனமும், காட்சியும்... இதை ஏன் வைத்தார்கள் என்ற எந்த வித யோசிப்பிற்கும் இடமளிக்காத படம்.
தந்தை இல்லாத சற்றே வித்தியாசமான ஒரு கல்லூரி மாணவனின் வாழ்வில் விதியின் விளையாட்டால் சுழன்றடிக்கும் சூறாவளிதான் கதை. காவல்துறையின் யதார்த்தமான ஒரு பக்க முகம் வெகுநேர்த்தியாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றது.
அருள்நிதி நடிக்கும் ’மௌனகுரு’ என்றே மிகைப் படுத்தி விளம்பரப்படுத்தினாலும், அருள்நிதி அந்தப் பாத்திரத்துக்கு மிகச் சரியாகவே பொருந்துகிறார். அருள்நிதி – இனியா காட்சிகள் சிறுசிறு கவிதைகள். அதுவும் அருள்நிதி ”தொட்டுப்பாருங்களேன்…… நீங்க தொட்டுப்பார்க்கும்போது உள்ளுக்குள்ளே ஜில்லுனு நல்லாருந்துச்சு” எனச் சொல்லுமிடத்தில் இனியா இரு கைகளால் பாந்தமாய் பிடித்துவிட்டு நகர்வது வெகு அழகு.
காவல் அதிகாரியாக வரும் ஜான்விஜய் நடிப்பில் மிரட்டுகிறார். இறுதிக் காட்சியில் காட்டும் தொனி, குறிப்பாக “ப்ப்பெருமாள், அவனப் புடிச்சு அப்படி ஓரமா ஒக்காரவைங்க / என்ன பெருமாள் நின்னு வேடிக்க பாக்றீங்க…. புடிச்சு ஒக்காரவைங்க” எனும் காட்சியில் வெளிப்படுத்தும் வார்த்தைத் தொனியும், உடல்மொழியும் அபாரம்.
குற்றப்பிரிவு ஆய்வாளராக, கர்ப்பிணியாக வரும் உமாரியாஸ்கான் நடிப்பை, உடல்மொழியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எப்படி, ஏன் இவரை தமிழ்த் திரையுலகம் சரிவரப் பயன்படுத்தாமல் தவிர்த்து வருகிறதென்று புரியவில்லை.
எங்கோ ஆரம்பித்து, எங்கெங்கோ பயணித்து பல முடிச்சுகளில் திரும்பித் திரும்பி கதை பயணிக்கும் விதம் வெகு சுவாரசியம். ஒரு காட்சியைத் தவறவிட்டாலும் அடுத்த காட்சி புரியாது என நிலைத்திருக்க வைத்துப் பார்க்க வைக்கும் இயக்குனர் சாந்தகுமாரைப் பாராட்டியே தீரவேண்டும்.
-0-
7 comments:
மெளனகுரு பார்க்குறனுங்க மாப்பு... நன்றி!
பரவாயில்லையே ...நேரம் கிடைக்கும்போது படமும் பாக்றீங்க போலிருக்கு..
sir facebook post லாம் சேத்து ஒரு blog post ஆகுகிட்டீங்க . ஹ்ம்ம்ம்ம்....
sir facebook post லாம் சேத்து ஒரு blog post ஆகுகிட்டீங்க . ஹ்ம்ம்ம்ம்....
nice article!
உண்மையாகவே அனைவரும் பாராட்ட வேண்டிய ஒரு திரைப்படம். இதுபோன்ற முயற்சிகள் இன்னும் பல வெற்றிப்படங்களை தமிழ் திரையுலகிற்கு தர வேண்டும் !!.
kasiyum mounam
padithen
rasithen
sinthithen
manathil
sirithalavu
athigamanathu ganam
Post a Comment