சிறகசைப்பு


மனிதர்களுக்கு ஏன் இந்த உளச்சிக்கல் என்பதுதான் புரியவில்லை! ஒரு மனோநிலையைப் எழுத்தில் சில வார்த்தைகளில் பகிர்ந்துகொள்வது என்பது ஒருவித விடுபடல். அதேசமயம் அதை ஒத்த மனோநிலை கொண்டோரின் மனதையும் சற்றே மீட்டிப்பார்க்கவும், அதை நெகிழ்ச்சியாய் அனுபவிப்பதற்குமான ஒரு வாய்ப்பு மட்டுமே. உதாரணத்திற்கு எழுதுபவரின் மனோநிலையை பிரதிபலிக்கும் எழுத்து வாசிக்கும் யாரோ ஒருவருக்கு, அதே போன்ற மனநிலை, சூழலை நினைவூட்டலாம் என்பது போல்..



ஒவ்வொரு இருவரிச் செய்திக்குள்ளும், துணுக்கிற்குள்ளும், கவிதை வரிகளுக்குள்ளும் ஒளிந்து கிடப்பது,  யார் யார் என ஆவேசமாகத் தேடுவது ஒருவித நோய்மை மனோபாவம் என்றே தோன்றுகிறது. அப்படியே தேடி ஒரு ஆளின் பெயர் தெரிந்தால் மட்டும், அதில் என்னவித உணர்வு கிட்டிவிடப்போகிறது. ஒருவேளை அப்படி எவர் ஒருவரும் இடம்பெறாமல், ஒரு சூழலை வைத்து அந்த மனோநிலை சார்ந்த எழுத்து வந்திருந்தால், அப்போது எதைக்கொண்டு நிரப்பப்போகின்றோம்!

இதையெல்லாம் உற்று நோக்கும்போது அழுத்தமாக ஒன்று சொல்லத் தோன்றுகிறது… பெரிசா ஒன்னும் இல்ல “போங்கப்பா, போங்க போயி புள்ளகுட்டியைப் படிக்க வைங்க” என்றுதான்.

-0-

சமீபத்தில் ஒரு கிடா விருந்துக்கு அழைப்பு. பந்தியில் என் பக்கத்தில் ஒரு இளவட்டம் அநியாயத்துக்கு ஒல்லியாய். வந்து அமர்ந்ததிலிருந்து வலது பக்கக் காதில் அணைத்த போனோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். பேசியதில் இவர் எதோ காதலுக்கு பஞ்சாயத்து செய்கிறார் என்று மட்டும் புலப்பட்டது. 

ஆட்டுக்கறி, கோழிக்கறி, தலைக்கறி, பிரியாணி எனப் பரிமாறப்பட்டிருந்தது. என்னையொத்த எல்லோரும் சுவாரசியமாய் சாப்பிடுவது தெரிந்தது. அவர் மட்டும் சுவாரசியமாய் பஞ்சாயத்து செய்துகொண்டு நுனி விரல்களால் பிரியாணியைக் கொத்திக்கொண்டிருந்தார். இடையில் ஒருவர் ஒவ்வொரு இலைக்கும் வந்து ”என்னங்க வேணும், என்னங்க வேணும், கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க” எனக் கேட்டுக்கேட்டு பரிமாறச் செய்தார். என்னைக் கேட்டபோது பந்தி நாகரீகம்(!) கருதி, ”வேண்டாங்க” எனப் புன்னகையால் அவரை நகர்த்தினேன். இளவட்டத்திடம் கேட்டதற்கு தலைக்கறி இருந்த இடத்தை மட்டும் தொட்டுத்தொட்டு காட்டினார். யாரையோ அழைத்து ”தம்பி, இந்த இலைக்கு தலைக்கறி வை” என ஆணையிட்டார்.

நான் இடைவிடாது தீவிரமாக என் கடமையை ஆற்றிக் கொண்டிருந்தேன். திடீரென என் இலையில் தலைக்கறி ஒரு கரண்டி அளவுக்கு விழுந்தது. நிமிர்ந்து பார்த்தபோது, கறி வைத்த பையன் வாளியோடு மேசை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். சுற்றும்முற்றும் பார்த்தேன், ஒல்லி இளவட்டம் பஞ்சாயத்து செய்துகொண்டு எச்சில் கை விரலை தலைக்கறி தீர்ந்த இடத்தில் இன்னும் தட்டிகொண்டுடிருந்தது. பிரியாணிக்குப் பிறகு சாதம், குழம்பு, ரசம், தயிர் என எல்லாம் நிறையும் நேரத்தில், ஒருவழியாய் ”ஒரு நிமிசம் மச்சி” என்று விட்டு, தயிர் ஊற்றிக்கொண்டிருந்தவரிடம் ”தலைக்கறி கேட்டேனே?” என்றது. எல்லோரும் இலையை மடக்கிக்கொண்டிருந்தனர். அந்த இலையில் பாதி பிரியாணி அப்படியே இருந்தது. பயபுள்ள ஏன் அநியாயத்துக்கு ஒல்லியா இருக்குதுனு அப்போத்தான் எனக்கு புரிஞ்சுது. நான் எழுந்து, கை கழுவ நகரும் போது, கூடுதலாய் ஒரு கரண்டி தலைக்கறியும் இருந்த என் வயிறு அவரின் முதுகுமேல் உரசி வேறு தொலைத்தது.

--0--

8 comments:

உண்மைத்தமிழன் said...

முதல் விஷயம் சுத்தமா புரியலைண்ணே..!

vasu balaji said...

சிறகசைப்புன்னா ட்வீட்டுங்களாண்ணா:)). முதல் ஜூப்பர். ரண்டாவது ஜூப்பரோ ஜூப்பர்.

Anonymous said...

முத ஒண்ணு நறுக்குன்னு கொட்டின மாதிரி இருக்கும் அந்த மாதிரி காரணம் தேடும் மனங்களுக்கு..

ரெண்டாவது இப்படிப்பட்ட சொம்புகள் நிறைய இருக்குங்க நாட்டில்..ஆனால் சும்மா சொல்லக்கூடாது பேசிட்டே இருந்தாலும் காரியத்தில் கண்ணா தலைக்கறி வாங்கி தின்ன வெயிட் பண்ணியிருக்கு..

உம்ம அதிர்ஷ்டம் பாருங்க ஒரு கரண்டி அதிகமா கிடைச்சிருக்கு விடாம தின்னு இருப்பீருன்னு தெரியும்..

ILA (a) இளா said...

ஒரு கதாநாயகன் சண்டை போடும்போது நம்மை அவரிடத்தில் பொருத்திப்பார்க்கிறோமே. அது மாதிரிதான் இதுவும்

வால்பையன் said...

தலக்கறி சாப்பிட்டா ஒல்லியா இருப்போமா தல?

நமக்கு மேல ஒரு பஞ்சயாத்து பார்ட்டி வேற தல, சொல்லவே இல்ல, இனி கட்சி மாறிடவேண்டியது தான் போல.

//இப்படிப்பட்ட சொம்புகள் நிறைய இருக்குங்க நாட்டில்.//

இருந்துச்சு, சரவணா ஸ்டோர் மூடிட்டாங்களாம், இப்போ விரல் விட்டு எண்ணி விடலாம், எனக்கு தெரிந்து கோவையில் ஒரு சொம்பு இருக்கு தமிழரசி, நான் இப்போ சென்னையில் இருப்பதால் யூஸ் பண்றதில்ல

:)

ஸ்மைலி போட்டிருக்கேன், சண்டைக்கு வந்தா கால்ல விழுந்துருவேன். :)

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - //ஒரு மனோநிலையைப் எழுத்தில் சில வார்த்தைகளில் பகிர்ந்துகொள்வது என்பது ஒருவித விடுபடல். // உண்மையிலும் சிறந்த உண்மை.

எழுத்தின் நட்வே யாரைப்பற்றி என ஆராய்வது தேவையற்ற ஒன்று.

கிடா விருந்து பரிச்சயமில்லாதது - பழகாதது - சரி ஒரு கரண்டி தலக்கறி எக்ஸ்ட்ரா சாப்டாச்சுல்ல - நன்றி சொல்லலேன்னாலும் தொப்பையால ஒல்லி முதுகுல இடிக்காமப் போயிருக்கலாம்ல .....

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

Anonymous said...

some how you had a delicious food know??