திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்

“பெருமழை நீரில் சாக்கடைகள் அடைத்து, வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டதென ஓங்காரமாய் புலம்பும் மனித சமூகத்திற்கு, ‘அடைத்துக்கொண்டிருப்பது தாங்கள் வீசியெறிந்த கேரி பேக்குகள்தான்என்பது ஏன் புரியவில்லை? “
 
கடந்த மாதத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தபோது வீடுகளில் தண்ணீர் புகுந்ததாக சபித்துக்கொண்டிருந்த சமூகத்தைப் பார்த்த என் குமுறல்தான் அது. ட்விட்டர், ஃபேஸ்புக், விகடன் வலைபாயுதே என மக்கள் ரசிக்கவும்(!) வாய்ப்பளித்த ஒரு குமுறல். வெறும் ரசிப்புக்கு மட்டுமே அந்தக் குமுறலை வார்த்தைகளாகத் துப்பவில்லையென்பதை நானறிவேன்.

ஏற்கனவே எழுதிப் பேசிய விசயங்கள்தான், என்னுடைய அறிவையோ, உங்களுடைய அறிவையோ மீறிய விசயம் அல்ல இது. ஆனாலும் அறிவு மழுங்கிப் போன இந்த மனிதச் சமூகம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் அடிமைத்தனத்திலிருந்து என்றுதான் விடுபடப் போகின்றது. அமிர்தமே கிடைத்தாலும் அதை பிளாஸ்டிக் பையில் போட்டு முடிச்சுப் போட்டுக் கொண்டு வருவதைப் பெருமையாக கருதும் சமூகம் இன்று தேநீர்க் கடைகள் தோறும் பார்சல் டீ என்பதை கொதிக்கும் சூட்டோடு வாங்கிக்கொண்டு சென்று ஊதி ஊதிக் குடித்துக் கொண்டிருப்பதை எளிமை என்று நினைக்கின்றது.

அப்படி ஊதி ஊதி குடிக்கும் தேநீரில் புற்றுநோயின் விதையும் ஊர்ந்து வருவதை யோசிக்கும் அளவுக்கு யாருக்கு அமைதி இருக்கின்றது. முப்பது ரூபாய் கொடுத்து கைகளில் தொட்டிலாட்டியபடி வாங்கிச் செல்லும் மதிய உணவுப் பொட்டலங்களில் குட்டி குட்டியாய் முடிச்சிட்ட குழம்பும், ரசமும், மோரும், பொறியலும் குட்டிச்சாத்தான்கள் போல் உருண்டுகொண்டு இருக்கின்றன. எல்லாவற்றையும் அவிழ்த்துப் பரப்பி உண்டு கழித்தபின் அந்த குட்டிச் சாத்தான்களைக் கழுவி, காயவைத்து, இஸ்திரி போட்டு இரும்புப் பெட்டிக்குள்ளாகவா வைத்துவிடப்போகிறோம்.

அடியில் இருக்கும் பழைய செய்தித்தாள், வதங்கிய இலையோடு அப்படியே சுருட்டி சன்னல் வழியாகவோ, அல்லது அதிகபட்சமோ அருகாமையில் இருக்கும் குப்பைத்தொட்டி ஓரமாகவோ வீசிடப்போகிறோம். அதைக் குப்பைத் தொட்டிக்குள் கூட வீசும் அளவுக்கு பொறுமையில்லாமல் அந்த நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு நம்மை தொந்தரவு செய்துக் கொண்டிருக்கலாம்.

இன்றைக்கு எதை வாங்கினாலும், அதை ஒரு பிளாஸ்டிக் பைக்குள் பதுக்கி எடுத்து வருவதை சமூக அந்தஸ்தாக கருதும் மனோபாவம் கூடி வந்துவிட்டது. பொருள் வாங்கச் செல்லும் போது தவறாமல் கைகளில் அலைபேசியைப் பிடித்துச் செல்லும் நமக்கு உடன் ஒரு பையை எடுத்துச் செல்வது என்பது இழுக்காக இருக்கின்றது.

திருமணங்களில் இலைக்கு ஒரு தண்ணீர் பாட்டில் என வைப்பது, அந்த திருமணத்தின் அழகியல் என நினைக்கின்றனர். எல்லாம் தின்றுமுடித்து வெளியே வரும் வேளையில் குதப்பிக்கொண்டு வரும் பீடா கூட தனக்கு ஒரு உறை போட்டுக் கொண்டுதான் இருக்கின்றது, என்னவோ பீடாவின் கற்பு களவு போய்விடும் என்பது போல.

வரலாறு எதுவென்று தெரியாத சமூகம் தொலைக்காட்சிகளின் தொடர் அழுகாச்சியின் இடைவேளையில் வெளியே தலைகாட்டி வெளிச்சம் பாயும் தொலைக்காட்சிக் கேமரா முன்பு மூக்குச் சிந்துகிறது “வரலாறு காணாத வெள்ளம்’ என்று. என்ன வெங்காய வரலாறு அறிந்துவிட்டோம் நாம். இன்றைக்கு வீடு கட்டிக் குடியிருக்கும் இடத்தில் சிலபல ஆண்டுகளுக்கு முன் ஏரியோ குளமோ, வெள்ளவடிகாலோ இருந்திருக்கும் எனும் வரலாறு தெரியாத புறநகருக்கு ஓடி வந்த தலைமுறைதான் புலம்புகிறது வரலாறு காணாத வெள்ளமென்று.

ஊரின் நடுவே ஒய்யாரமாய் ஓடிக்கொண்டிருந்த நொய்யலை சாகடித்த திருப்பூர் தொழில் துறைக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கைதான் சமீபத்திய ஒரு ராத்திரி வெள்ளம். அடுத்த நாள் காலை திருப்பூரிலிருந்து பல கல் தொலைவு தாண்டி முத்தூர் அருகே நான் நொய்யல் நதியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கலைந்த கர்ப்பம் போல் கருப்பான வெள்ளமொன்று கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அதில் அடித்துச் சென்றது வெளிநாட்டுக் காசை ஈட்டும் வெறியில் கொட்டிய காலத்தால் மன்னிக்க முடியாத கசடுகள் மட்டுமல்ல, பல விலை மதிக்க முடியா உயிர்களும் கால்நடைகளும், சாமானியனின் வீட்டுப் பொருட்களும் தான்.

ஆங்காங்கே இந்திய வல்லுனர்கள் கட்டி வைத்திருந்த பாலங்களையும், தரைப் பாலங்களையும் ஓங்காரமாய் ஓடியவெள்ளம் அடித்து இழுத்துச் சென்றது. கிட்டத்தட்ட ஓரிரு நாட்கள் ஈரோடு மாவட்டத்தின் தெற்கு, முழுக்க முழுக்கத் துண்டிக்கப்பட்டு அனாதையாய்க் கிடந்தது.

எதிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள முனையாத எம் சமூகம், வடிந்த வெள்ளத்தோடு தன் வாடிக்கையைத் துவங்கிவிட்டது. ஓடிவந்த நீர் தேங்கித் தேங்கி, அழுத்தம் கூடி உடைப்பெடுத்து, உத்வேகத்தோடு ஓடி அக்கம் பக்கம் இருப்பதை தன் கை நீட்டி கபளீகரம் பண்ணியதை எத்தனை பேர் கற்பனை செய்து பார்க்கத் தயாராக இருந்து விடப்போகின்றனர். கொட்டிய வெள்ளமெல்லாம் பள்ளம் கண்ட பக்கம் ஓடவிடாமல் தடுத்ததில் அவ்வப்போது வசதி என நினைத்து, எளிது என நினைத்து, அழகு என நினைத்துப் பயன்படுத்தித் தூக்கிப்போட்ட பிளாஸ்டிக் பைகள் தான் என்பதை எத்தனை பேர் உணரப்போகிறார்கள்.













உணர மறுக்கும் உணர்ச்சியற்ற சமூகத்திற்கு முகத்தில் அடிக்கும் சாட்சியாய் வடிந்துபோன நொய்யல் நதி தன் இரு பக்கமும் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறது. ஒரு முறை பாருங்கள் அந்த அவலத்தை உயிர் நடுங்கும். ஆம் அடித்து வந்த வெள்ளத்தில் ஓரம் பாரம் ஒதுங்கிய பிளாஸ்டிக் குப்பைகளின் கொத்துக் கொத்தாக குவிந்து கிடக்கின்றன.

அவையெல்லாம் நாம் ஒருபோதும் தவிர்க்க முயலாமல், சற்றும் கூச்சமின்றிப் பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறிந்த பிளாஸ்டிக் பைகள்தான். வாங்கிப் பயன்படுத்திவிட்டு மறுசுழற்சிக்கு அனுப்பும் யோக்கிதை இல்லாத சமூகத்தை, என்றாவது ஒரு நாள் வெகுண்டெழும் இயற்கையின் கூறுகள் மறுசுழற்சி செய்யத்தான் போகின்றன. மறுசுழற்சிக்கு ஆட்படும் போது, முன்பு இருந்தது போலவே மீளும் தகுதி சற்றும் இந்த மனிதச் சமூகத்திற்கு இல்லை என்பது இன்னொரு பெரிய இயற்கைப் பேரிடரின் பின்னால் வேண்டுமானால் புரியலாம்.

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்பதை இயற்கை ஆழமாய், வடுவாய் எழுதிவிட்டுச் செல்லும்போது அதை வாசிக்கும் வலிமை யாருக்கு இருந்துவிடப்போகிறது?

படங்கள் உதவி - யுவராஜ்

-0-


27 comments:

ராமலக்ஷ்மி said...

/ கொட்டிய வெள்ளமெல்லாம் பள்ளம் கண்ட பக்கம் ஓடவிடாமல் தடுத்ததில் அவ்வப்போது வசதி என நினைத்து, எளிது என நினைத்து, அழகு என நினைத்துப் பயன்படுத்தித் தூக்கிப்போட்ட பிளாஸ்டிக் பைகள் தான் என்பதை எத்தனை பேர் உணரப்போகிறார்கள்./

யோசிக்க வேண்டும் ஒவ்வொருவரும். படங்களைப் பார்க்கையில் பகீரென்றிருக்கிறது.

கோவி said...

எங்கோ கேட்ட நியாபகம்.. 20 நிமிட பயன்பாட்டிற்காக 1000 வருடம் மக்காத பிளாஸ்டிக்கை பயன்படுத்தவது நியாயமா?

நிகழ்காலத்தில்... said...

முள் வேலிகள் மற்றும் செடிகளின் ஊடே மழை வெள்ள நீர் ஊடுருவிச் செல்வதை இந்த கேரிபேக் சமாசாரங்கள் ஒன்று சேர்ந்து தடுத்து அணை போல் செயல்படுகிறது.
இதுவும் ஒரு முக்கிய காரணம் மழை நீர் ஆக்ரமிப்புகளுக்குள் உட்புக.,

நிதர்சனமான உண்மை..

இளங்கோ said...

இதற்கு ஒரே வழி, பாலிதீன் பைகளை தடை செய்வது தான். செய்யுமா நமது அரசுகள்?

வின்சென்ட். said...

கனத்த மனதுடன் பார்த்து தலைகுனிய வேண்டியுள்ளது. கிடைக்கின்ற நீரை சேமித்து சிக்கனமாக உபயோகிக்க வேண்டும். ம்... என்று நமது நிலையை புரிந்து கொண்டு செயல்பட போகிறோமோ?

CS. Mohan Kumar said...

:(((

தெய்வசுகந்தி said...

நம்மால் முடிந்த வரை பாலித்தீன் பைகள் உபயோகிக்காமல் இருக்கலாம். எதுவுமே ‘நம்’மிலிருந்து தொடங்க வேண்டும்.

vasu balaji said...

ப்ளாஸ்டிக் பை தயாரிப்பைத்தான் முடக்கவேண்டும். சென்னையில் தடை என்ற பெயரில், காசுக்கு விற்கிறார்கள்.

ILA (a) இளா said...

பிளாஸ்டிக் - தவிர்ப்பதுதான் சரி. உற்பத்தி பலமடங்கு அதிகமாகுதே, அதனை என்ன செய்ய?

ILA (a) இளா said...

பிளாஸ்டிக் - தவிர்ப்பதுதான் சரி. உற்பத்தி பலமடங்கு அதிகமாகுதே, அதனை என்ன செய்ய?

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - இயற்கையை நாம் அழிக்கத் துவங்கி பல ஆண்டுகளாகி விட்டது. இயற்கையைக் காக்க வேண்டிய நிலையில் இன்னும் விழிப்புணர்வு வராத நாம் என்ன செய்யப் போகிறோம். விளைநிலங்கள் வியாபாரமாகின்றன - நீராதாரங்கள் மணல் கொள்ளையினால் பாதிக்கப் படுகின்றன. மரங்கள் போக்கு வரத்திற்காக இதயத்தில் ஈரமின்றி வெட்டப்படுகின்ற்ன. அரசு நினைத்தால் பிளாஸ்டிக்கினை ஒழிக்க இயலாதா ? இரும்புக் கரம் கொண்டு அடக்க இயலாதா ? ம்ம்ம் - என்ன செய்வது .... மதுரையில் வைகை நதி என்ன கதியில் இருக்கிறது. கார்ப்பரேஷன் குப்பைத் தொட்டிகளை விட மோசமாக இருக்கிறது ..... எனன் செய்வது - உள்ளம் கொதித்து எழுதிய இடுக நன்று கதிர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ப.கந்தசாமி said...

காலத்தின் கட்டாயங்களை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல நண்பரே.

சத்ரியன் said...

கதிர்,

வரிகளைப் படித்துக் கொண்டு வரும்போதே ‘சொல்லடியால்’ உடம்பெல்லாம் வரிவரியாகத் தெரிகிறது.

உடல் சொரணையற்றுக் கிடப்பதால் வலி தெரியவில்லை.

காயத்ரி வைத்தியநாதன் said...

உண்மையில் மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது...படித்த முட்டாள்களாக இருக்கும் நாம் விழிப்பது எப்போது...? ப்ளாஸ்டிக் பைகள் மோகம் வருவதற்கு முன்னும் நாம் ஆரோக்கியமாகத்தானே உயிர் வாழ்ந்து கொண்டு இருந்தோம்..இப்பொழுது ப்ளாஸ்டிக் பைகள் இல்லாவிட்டால் கை ஒடிந்த மாதிரி மாயை ஏற்பட்டு அடிமையாகி விட்டோம்..காய்கறிவாங்க மஞ்சள் பை எடுத்துச் சென்ற காலம் திரும்புமா...?

Anonymous said...

Only solution to control this problem is totally banned the plastic carry bag production manufacturers .

தடம் மாறிய யாத்ரீகன் said...

தனிமனித சிந்தனை ஒன்றே இதனை தீர்க்கும் வழி. பிளாஸ்டிக் பைகளில் வாங்கும் பொருட்க்களுக்குதான் மதிப்பு என்று நினைக்கும் எண்ணத்தை மாற்றும் வரை இது ஓயாது. இப்போதாவது இந்த சிந்தனையை விதைக்க வேண்டும். இனிவரும் சந்ததிகளாவது கடைபிடிக்கடும் !!

babu said...

நல்ல செய்தி............

Saravanan TS said...

அசோக்குமார் சொன்னது போல் தனிமனித மாற்றம் ஒன்றே இந்த அவலங்களை மாற்ற முடியும். பருத்தி மற்றும் காகித பைகளை பயன் படுத்த முன் வர வேண்டும். பிளாஸ்டிக் பைகள் வாங்குவதை தவிற்தாலே போதும் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி எத்தனை மடங்கு பெருகினாலும் சில வருடங்களில் முடக்கப்பட்டு விடும். வாங்குவதை நிறுத்தினால் போதும். நாம் தான் தொடங்க வேண்டும்.

Saravanan TS said...

அசோக்குமார் சொன்னது போல் தனிமனித மாற்றம் ஒன்றே இந்த அவலங்களை மாற்ற முடியும். பருத்தி மற்றும் காகித பைகளை பயன் படுத்த முன் வர வேண்டும். பிளாஸ்டிக் பைகள் வாங்குவதை தவிற்தாலே போதும் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி எத்தனை மடங்கு பெருகினாலும் சில வருடங்களில் முடக்கப்பட்டு விடும். வாங்குவதை நிறுத்தினால் போதும். நாம் தான் தொடங்க வேண்டும்.

காமராஜ் said...

நல்ல விளாசுங்க ? ஆனாலும் எங்களுக்கு உறைக்காது. பட்டியலில் எத்தனை உபயோகப்படுத்தினோம் என்கிற குற்ற மதிப்பெண் போடவைக்கிறது இந்தப்பதிவு.

Anonymous said...

மிகச் சரியாய் சொல்லியிருகிறீர்கள். நானும் திருப்பூரில் தான் வசிக்கிறேன். எங்கள் வீட்டுக்கு அருகில் கூட வெள்ளம் வந்தது. நேரில் பார்த்தோம்.. எல்லோரும் சொல்கிறார்கள் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது என்று, மிகத் தவறு. அதன் போக்கிலே தண்ணீர் சென்றது அவர்கள் தான் நீரின் வழியில் வீட்டை கட்டியிறுகிறார்கள். அந்த பள்ளத்தில் ஒரு 50 வீடுகள் இருக்கும்.. இன்னும் யாருக்கும் பட்டா கூட இல்லை.. நாம் நீரின் வழியை அடைத்து விட்டு இன்று வீட்டுக்குள் தண்ணீர் வந்து விட்டது என்று கூப்பாடு எதற்கு? அங்கே கட்டியிருப்பவை அனைத்தும் சிறு பாலங்கள். நீர் வெளியே வரும் வழி அனைத்தும் பிளாஸ்டிக் கவர்களினால் அடைத்து நீர் வெளியே வர முடியாத படி அடைத்து இருந்தது.. வேகமாக வந்த நீர் துளை வழியாக வெளியேற முடியாமல் சீறி பாய்ந்தது.. ஆனால் அதன் பரப்பை தாண்டி (பள்ளத்தை தாண்டி ) வரவில்லை.. நம் தவறினால் தான் நமக்கு இழப்பே தவிர இயற்கையினால் அல்ல... இனியாவது பள்ளத்து வீடுகளை அப்புறப் படுத்த வேண்டும்.. தண்ணீர் செல்லும் வழிகளை ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க வேண்டும்..

பிளாஸ்டிக் உபயோகத்தை தெரிந்தோ தெரியாமலோ நாம் அனைவரும் கடை பிடிக்கிறோம்.. இனியாவது தவிர்ப்போம்...

ADMIN said...

சீனா ஐயா சொல்வதைப் போல உற்பத்தி இடம் எது என்று தெரிந்து, முழுதும் தடுத்தால் மட்டுமே தோன்றும் துன்பங்களையும் தடுக்க முடியும் அல்லவா? பிள்ளையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிக்கொண்டிருக்கும் இத்தகயை அரசின் மெத்தனப் போக்கால் மடிவது அப்பாவி மக்கள்தான்.

பிளாஸ்டி பைகளைப் பயன்படுத்துவதில் மட்டுமல்ல.. எத்தனையோ வகைகளில் மறைமுகமாக மக்களை கெடுத்துக்கொண்டிருக்கிறது அரசு.. மதுவகைகள், மது கடைகள் அறிமுகப்படுத்துவது, பாக்கு வகைகள், புகையிலை வகைகள் இப்படி.. கேட்டால் இது அரசின் குற்றம் அல்ல.. மக்களின் குற்றம் என்று சொல்கிறார்கள்..

'நான் விற்பது போல விற்பேன்.. ஆனால் நீ வாங்கக்கூடாது..'என்பதில் என்ன நியாயம்? இருக்கிறது.

எத்தனையோ படிப்பறிவு மிக்கவர்களே இத்தகைய செயல்களில் ஈடும்படும்போது பாமர மக்களிடம் நாம் ஒன்றையும் எதிர்பார்க்க முடியாதல்லவா?

தாங்கள் சொல்வதைப் போல் நமது சமுதாயத்தை நூறுசதவீதம் மாற்றுவது என்பது குதிரை கொம்புதான்..

இயற்கைக்கு எதிராக செய்யும் எந்த ஒரு செயலும் மனிதனுக்கு தீங்கு செய்யும் என்பது கண்கூடு.

தாங்கள் குறிப்பிட்ட மாதிரி இயற்கையின் மறுசுழற்சியை யாராலும் தடுக்க இயலாது. இப்படிச் செய்துதான் தன்னை புத்துணர்வு ஊட்டிக்கொள்ள முயல்கிறது பூமி. !!!

எண்ணங்களுக்கும், பகிர்வுக்கும் நன்றி.

Jebasingh said...
This comment has been removed by the author.
Sivamjothi said...

>>>>அறிவு மழுங்கிப் போன இந்த மனிதச் சமூகம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் அடிமைத்தனத்திலிருந்து என்றுதான் விடுபடப் போகின்றது. அமிர்தமே கிடைத்தாலும் அதை பிளாஸ்டிக் பையில் போட்டு முடிச்சுப் - LIKE THIS.

இது என்மன குமுறல். இந்த கொடுமையை படித்த மென் பொறியாளர்கள் செய்கிறார்கள்.எனது அலுவலகம்(பெங்களூர்) அருகே இந்த கொடுமை தான்.

பின்னோக்கி said...

Excellent and much needed article. I always avoid getting a carry bag. After reading this, i vow myself to strictly say no to plastic bags.

Anonymous said...

அவசர உலகத்தில், எத்தனை பேர்கள் இதனை உணரப் போகின்றனர். விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி!
http://atchaya-krishnalaya.blogspot.com
http://atchaya48.blogspot.com

aalunga said...

உண்மை...
அதனால் தானோ என்னவோ இப்போதெல்லாம் இயற்கையே திருந்தாத ஜென்மங்களை அழிக்க முடிவு செய்தது போல சீறுகிறது