கடந்த இரண்டு ஆண்டுகளாக சங்கமம் நிகழ்ச்சி நடந்தவுடன், உடனுக்குடன் பரபரப்பாக அதுகுறித்து இடுகையெழுதுவது வழக்கம். இந்த முறை மிகமிக குறுகிய காலத்தில் கொஞ்சம் வித்தியாசமான திட்டமிடல், அதற்கான மிகக்கடின உழைப்பு, எப்படி செய்யவேண்டும் என நினைத்தோமோ, கிட்டத்தட்ட அப்படியே செய்ததாக ஒரு மனநிறைவு என்று நிறைவடைந்ததில்ல், பலதரப்பட்ட மனோநிலைகளில் மாறிமாறி உழன்றுகொண்டிருந்த என்னால், எனக்குள் வேறு வேறு திசைகளில் பரபரப்பாய் பறக்கும் வார்த்தைகளை எட்டிப் பிடித்து உடனே வரிகளுக்குள் கோர்க்க முடியாமல் போனது.
நிகழ்ச்சி நிறைவடைந்த பின்மதிய நேரத்தில் இரண்டு நாட்களாகத் தொலைத்த உறக்கத்தைச் சரிசெய்ய விழுந்தாலும், எள்ளவும் தூக்கம் எட்டவில்லை. மாலை 6 மணிக்கு விஸ்வம் அண்ணன் வீட்டில் குழும நண்பர்கள் சந்திப்போம் என முடிவெடுத்திருந்ததால், அப்படியே ஒரு அரை மயக்கத்தில் அங்கு வந்து எல்லோரும் கூடிப் பேசிப்பேசி சிரித்து சிரித்து சிரித்து சிரித்து, வலித்த வயிற்றுக்கு இதமாய உணவு உண்டு பின்னரவில் பிரிந்தபோதும் என் கைகளுக்குள் வார்த்தைகள் வந்து சிக்கவில்லை
.
எங்களின் மகிழ்ச்சி, எங்களுக்குள் அலையடிக்கும் நெகிழ்ச்சியை அப்படியே எடுத்துக்கொட்டிட இப்போது நான் முயற்சிக்கும் இந்த வார்த்தைகள் சரியானவைதானா என்ற சந்தேகமும் இருக்கின்றது.
முதலில் இந்த ஆண்டு சங்கமம் தேவையா இல்லையா என்ற ஒரு நிலைப்பாடு எங்களுக்குள் சில மாதங்களாவே இருந்துகொண்டுதான் இருந்தது. அதற்கு ஒரே காரணம் வலைப்பதிவுலகம் சற்றே தொய்வாக இருந்தது மட்டுமே. ஆனாலும் தனிமனிதனாகப் போராடி எங்களை ஊக்குவித்து, இதை நடத்த வைத்தது சந்துரு அண்ணன் மட்டுமே. எனவே இந்த முறை வலைப்பதிவுகள் பக்கம் அதிகம் பரிட்சயம் இல்லாதிருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் நண்பர்களையும் அழைப்போம் என்று முடிவானது
நடத்தலாம் என முடிவெடுத்த பிறகு பெரிய அரங்கு வேண்டும் எனத்தேடியதில், நாங்கள் விரும்பியவண்ணம் கிடைத்தது இந்த ரோட்டரி அரங்கு. டிசம்பர் 6ம் தேதி இரவு ஏழு மணிக்கு ஆரூரன், அரங்கிற்கு முன்பணம் கொடுத்த ரசீதை என்னிடம் அளித்தபோது அதில் 18ம்தேதி எனக்குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு, அதிர்ந்து கேட்டேன் “என்ன மாம்ஸ், வெறும் 11 நாள்தான் இருக்கு, எப்படி?” என்றேன் “என்ன பண்ணுவீங்களோ தெரியாது, நடத்துறோம், அதுவும் சூப்பரா” என்று சொல்ல சந்துரு அண்ணன் அழைத்து “சாப்பாடு விசயத்தை (திட்டமிடல்) முழுக்க முழுக்க பார்த்துக்குறேன். நிகழ்ச்சிக்கு திட்டமிடவேண்டியது உங்க பொறுப்பு” எனச் சொல்லிவிட, அடுத்த நாள் மிக அவசரமாக குழும உறுப்பினர்களை அழைத்தோம். பேசினோம் பேசினோம் என்ன பேசினோம் என்று தெரியவில்லை. எந்த முடிவுக்கு வரவும் முடியவில்லை. ஆனால் சமூக வலை தளங்களில் இயங்கும் சிலரை அழைத்துப் பாராட்டுவது என்று மட்டும் ஒருவரி முடிவு எட்டப்பட்டது. யாரை எப்படித் தேர்வு செய்வது என்பது ஒரு குழுவின் பொறுப்பில் விடப்பட்டது. சிறப்புவிருந்தினராக மக்கள் சிந்தனைப் பேரவையின் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களை அழைப்பதாக முடிவு செய்யப்பட்டது.
பட்டியல் தயாரானவுடன், நான், ஜாபர், ஆரூரன், பாலாசி, சந்துரு அண்ணன், கார்த்திக் என ஆளாளுக்கு ஒவ்வொருவரை அழைத்தும், மின் மடல் வாயிலாகவும் விழாவுக்கு வரவேண்டும் என ஒப்புதல் பெறத் துவங்கினோம். ஒப்புதல் கிடைத்தபிறகு டிசம்பர் 9ம் தேதி முறைப்படியாக அவர்களுக்கு மின்மடல் வாயிலாக அவர்களை பாராட்ட விரும்புவதையும், அதற்காக அவர்களின் சுயவிபரங்கள், குறிப்பிட்ட பல தகவல்கள், புகைப்படங்கள் என கேட்டோம்.
அடுத்த நாள் டிசம்பர் 10ம் தேதிதான் குழுமம் சார்பில் சங்கமம் குறித்து முறைப்படியான அழைப்பு என் வலைப்பக்கத்தில் விடுக்கப்பட்டது. ஃபேஸ்புக், ட்விட்டர் உட்பட வேறு தளங்களிலிருந்தும் அழைத்ததால், பங்கேற்பாளர்களின் வருகை மின்மடல் வாயிலாக உறுதிசெய்யுமாறு கேட்டிருந்தோம். அதில் தொடந்து வந்த பதிவுகள் எங்களை மேலும் வேகம்கொண்டு இயக்கத்துவங்கியது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நபர்களைப் பற்றிய விபரங்கள், படங்கள் சேகரிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்தது. ஒருவாராக அனைத்தையும் சேகரித்து ஒட்டுமொத்தமாக தயாரிப்பு பணி துவங்கியது டிசம்பர் 16ம் தேதி காலையில் தான். மே
இதை எப்படி மேடையில் வழங்குவது என்பது குறித்து மூளைக்குள் ஒரு போராட்டம் நடந்துகொண்டேயிருந்தது. எப்போதும் மண்டைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஒரு பூச்சி ஓடுவதுபோல் சிந்தனை ஓடிக்கொண்டேயிருக்கும். தேநீர் அருந்த செல்லும் வேளைகளில் கார்த்தியிடம் நகைச்சுவையாக புலம்புவதும் உண்டு, ”எப்படியாச்சும் திடீர்னு 18ம் தேதி மதியம் இரண்டு மணி வந்துடக்கூடாதா?, எப்படியோ எல்லாத்தையும் முடிச்சுட்டோம்னு இருந்திட மாட்டோமா?” என்று.
மின்மடல் வாயிலாக பதிவு செய்பவர்களுக்கு பதில் அளிப்பது, உதவி செய்வது என அனைத்து வேலைகளையும் பாலாசி எடுத்துக்கொண்டார். வெளியூரிலிருந்து வருகின்றவர்களுக்கான அறைகள், வாகனவசதிகள் ஏற்பாடு செய்வதை ஜாபர் எடுத்துக்கொண்டார். சிறப்பு விருந்தினருக்கான கவனத்தை ஆரூரன் எடுத்துக்கொண்டார்.
ஃபேஸ்புக் நண்பர் நந்தகுமாரிடம் பாராட்டு பெறுவோரை மேடைக்கு அழைக்கும் நிகழ்ச்சிக்கு என்னோடு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டேன். இருவர் போதாது என்பதால் இன்னும் சிலரை மனதிற்குள் குறித்து அணுக அவர்களின் சூழல் அதற்கு அனுமதிக்கவில்லை. இந்த நேரத்தில் பொதிகை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ”தென்காசி தமிழ்ப்பைங்கிளி” அருள்மொழி மீரா அவர்கள் ஈரோடு சங்கமத்திற்கு வருவதாகத் தெரிவித்தையொட்டி இதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாமே என்று அணுகினேன். ஈரோட்டில் இருக்கும் தமது மாமியார் வீட்டுக்கு சனிக்கிழமை வருவதாகச் சொன்னார். சென்னையிலிருந்து வந்தவர் நேராக என்னைச் சந்தித்து, எப்படி நிகழ்ச்சியை வழங்கலாம் என ஆலோசித்துவிட்டு அன்று மாலையே நிகழ்ச்சியை ஒருமுறை ஒத்திகை பார்ப்பது என முடிவெடுக்கப்பட்டது.
பாராட்டுப் பெறுவோரிடம் சேகரித்து வைத்திருந்த நிழற்படங்களைக் காட்சிப்படுத்தும் பணியை அகல்விளக்கு ராஜா எடுத்துக்கொண்டார். ஒருநாள் முழுக்க உணவையும் மறந்து அதற்காக உழைத்த ராஜாவின் பணி அளப்பரியது.
பாராட்டுப்பெறுபவர்களை அரங்கின் கடைசி வரிசையில் அமர்த்தி, அவர்கள் குறித்த விபரங்களை வாசிக்கும்போது, திரையில் அவர்கள் குறித்த காட்சிகள் ஓடும், அதன்பின் அவர்களை மேடைக்கு அழைத்து பாராட்டி ஒரு கேடயமும், நினைவுப் பரிசும் வழங்குவதாக ஏற்பாடு. மேடையில் சிறப்பு விருந்தினரின் கையில் அவைகளைக்கொண்டு வந்து சேர்ப்பிக்க குழந்தைகளைப் பயன்படுத்துவது என்று முடிவெடுத்தோம். கடைசி இருக்கையில் இருந்து மேடைக்கு பாராட்டுப் பெறுவோர் நடந்துவரும் வரையில் இருக்கும் இடைவெளியை நிரப்பிட இசைக்குழுவை ஏற்பாடு செய்யலாமா, இசைக்கோப்புகளை வைத்து சமாளிக்கலாம என யோசிப்பின் கடைசி நுனியில் சந்துரு அண்ணன் தெரிவித்த மேளதாளம் ஒருமனதாக மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
காலையிலிருந்து சந்துரு அண்ணனும் விஸ்வம் அண்ணனும் சமையல் பணிகளை மேற்பார்வை பார்த்துக்கொள்ள, பதாகைகள் பரிசுப் பொருட்கள் என ஜாபரும் ஆரூரனும் ஓட, அடையாள அட்டைகள், கேடயங்கள் என லவ்டேல்மேடி ஒரு பக்கம் ஓட என எல்லோரும் திசைகள் தோறும் ஓடிக்கொண்டிருந்தோம்
ஒருவாராக கிட்டதட்ட தயாரான மனோநிலையோடு சனிக்கிழமை மாலை அரங்கிற்குச் சென்று மேடையில் பதாகை பொருத்தி, நாற்காலிகள் போட்டு, ஒலிவாங்கி, காட்சிக் கருவி என எல்லாம் எங்கள் வசதிக்குப் பொருத்தி, மேளதாளக்காரர்களையும் அழைத்து ஒத்திக்கைக்குத் தயாரானோம். அருள்மொழி மீரா, நந்தகுமார் ஆகியோருடன் மீண்டும் மீண்டும் வாசிப்பு என ஒருவழியாய் ஒத்திகையை நிறைவுசெய்து பின்னிரவில் அங்கேயே உணவு உண்டு கலைந்தோம்.
அப்போதே சென்னை, மதுரைப் பதிவர்கள் என சங்கமம் களைகட்டத்துவங்கியது. அவர்களுக்கான கவனிப்பு அறைகள் என ஜாபரும், சங்கவியும் சுழன்றடித்து வேலை செய்ததைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
இரவு பத்துமணிக்கு மேல், திடீரென நந்தகுமாரை தவிர்க்க இயலாது அடுத்தநாளைய ஒரு பணி அழைக்க, அவர் என்னை அழைத்தார். அப்படி அழைத்தவர் எந்தவிதப்பதட்டத்தையும் என் மேல் திணிக்காமல் மிக நேர்த்தியாக தன் சூழலைச் சொல்லி, தனக்குப் பதிலாக எங்கள் நண்பர் மகேஷ்வரன் அவர்களை தன் இடத்தில் நிரப்பலாமா எனக் கேட்டு, அவரை அழைத்து, தன்னிடம் இருந்த கோப்புகளைக் கொடுத்து, அவரை தயார்படுத்திக்கொள்ளப் பணித்தார். இக்கட்டான சூழலை மிக நேர்த்தியாக் கடக்கச் செய்த நந்தகுமாரை நான் பாராட்டியே தீரவேண்டும்.
இரவு கலைந்த பிறகும் இருவருக்கான விபரங்கள் தயாரிப்பு பணி நிறைவடையாமல் கிடந்தது. எல்லாம் முட்த்து உறங்க செல்லும்போது இரவு இரண்டு மணி. காலை ஐந்து மணிக்கு எழுந்து, அலுவலகம் ஓடி ஒட்டுப் மொத்த தயாரிப்புகளை தொகுத்து அச்சிலெடுத்துக்கொண்டு, தொடர்வண்டியில் வந்த சில நண்பர்களை அழைத்துக்கொண்டு, ஒரு வழியாக கிளம்பி அரங்குக்குச் செல்லும்போது காலை உணவு தயாராக இருந்தது. இரவே வந்திருந்த நண்பர்கள பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஒன்பது மணிக்கு அரங்கில் மக்கள் மெல்லமாய்க் கூடத்தொடங்கினர். 9.30ஐக் கடக்கும் போது முக்கால்வாசி அரங்கு நிறைந்திருந்தது. பாராட்டு பெறுவதற்காக அழைத்திருந்த நண்பர்கள் அரங்கை அடைய, பத்துமணிக்கு அரங்கு நிரம்பி வழியத்துவங்கியது. போக்குவரத்து காரணங்கள் ஓரிருவரின் தாமதைத்தையடுத்து 10.20 மணிக்கு நிகழ்ச்சியைத் துவங்கினோம்
ஆரூரன் அவர்களின் பிள்ளைகள் அருட்சுடர், அமர்நீதி தமிழ்வணக்கம் பாட, சந்துரு அண்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினருக்கான அறிமுகத்தை ஆரூரன் அவர்கள் அற்புதமாக வழங்கினார். அதையடுத்து வெறும் 3 வரியில் துவங்கிய சங்கமம், இன்று எட்டியிருக்கும் இடம் குறித்த விளக்கத்தோடு, இந்த ஆண்டு சங்கமத்தின் நோக்கம் என்ன, எதற்காக இந்த அங்கீகாரம், பாரட்டுகள் எனும் உரையோடு நான், அருள்மொழிமீரா, மகேஸ்வரன் என பாராட்டுப் பெறுவோரின் விபரங்களை தொகுத்து வழங்க ஆரம்பித்தோம். அருள்மொழி மீரா மற்றும் மகேஷ்வரன் அவர்கள் வழங்கியவிதம் மிக அருமை. பாராட்டுகளும் நன்றிகளும்.
உண்மைத் தமிழன், ஜாக்கி சேகர், ஜீவ்ஸ், அதிஷா, தேனம்மை, வெயிலான், சீனா, கேஆர்பி செந்தில், சுரேஷ்பாபு, யுவகிருஷ்ணா, ரவிக்குமார், பாலபாரதி, இளங்கோவன், மகேந்திரன், ஓவியர் ஜீவா என ஒவ்வொருவரராய் மேடைக்கு வந்து நினைவுப்பரிசு மற்றும் பாராட்டுக் கேடயத்தினைப் பெற்று மேடையில் அமர்ந்தனர்.
மிக எழுச்சியான நிகழ்ச்சிக்குப் பிறகு, திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் அந்த மேடைக்கு மிகப்பொருத்தமானதொரு உரையை வெகுஅற்புதமாக வழங்கினார். எத்தனையோ மேடைகளில் நான் அவரின் சிறப்பான உரையை கேட்டிருந்தாலும், நேற்றைய மேடை அவருக்கு ஒரு புதிய களம், அதில் மிக வெற்றிகரமான உரையை அவர் வழங்கிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருக்கான நினைவுப் பரிசினை விஸ்வம் அண்ணன் வழங்கினார்.
இயக்குனர் செல்வக்குமார் அவர்களின் மனசு குறும்படத்தை ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் வெளியிட்டார்.
அடுத்து, பாராட்டுப் பெற்றவர்களை ஓரிரு வார்த்தைகளில், ஏற்புரை வழங்குமாறு ஒலிவாங்கியைக் கொடுத்தோம். ஒவ்வொருவரும் உணர்வுப் பூர்வமாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதீத மகிழ்ச்சியும் கண்கலங்க வைக்கும் என்பதை மேடையில் கண்டேன். சிலருக்கு நா தழுதழுத்தது. அவர்கள் அடிமனதிலிருந்து அவர்களை அறியாமல் வந்த வார்த்தைகளைக் கண்டபோது, சங்கமத்திற்காக நாங்கள் உழைத்த உழைப்பு சரியானாதுதான் பொருத்தமானதுதான் எனத் தோன்றியது. பாராட்டுப் பெற்றவர்களில் ஒரு சிலர் நெகிழ்ந்து கலங்குவது இயல்புதான். ஆனால், மேடையில் ஒரு மூத்த பதிவர் ஏற்புரை வழங்கும்போது, அரங்கில் இருந்த ஓரிருவர் கண் கலங்கியதைப் பார்த்தபோது, உண்மையில் அதிர்ந்து போனேன். எதையோ செய்ய முயன்று எப்படியோ சரியாகத்தான் செய்திருக்கின்றோம் எனப் பெருமகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக இளங்கோவன், பாலபாரதி ஆகியோரின் ஏற்புரைகள், நிகழ்ச்சி குறித்த முக்கியத்துவத்தின் அடர்த்தியைக் காட்டியது.
நிறைவுக்கு சற்றுமுன் எங்கள் குழுமத்தின் தூண்களை ஒருமுறை மேடையேற்றி அழகு பார்த்துக்கொண்டோம். நம் முகத்தை கண்ணாடியில் பார்ப்பது போன்று இதுவும் ஒரு சுய தட்டிக்கொடுத்தலுக்குத் தேவையாகத்தான் இருக்கின்றது. செயலர் பாலாசி நன்றியுரை வழங்க நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தபோது மதியம் 12.30 மணி. அடுத்த ஒரு மணி நேரத்தை பதிவர்கள் யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக மேடையைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கபட்டது. என்னுடைய கணக்குப்படி 220க்கும் மேற்பட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர். ஃபேஸ்புக் சார்ந்த நிறையப் பெண்கள் கலந்துகொண்டனர். ஒரு மணியிலிருந்து மதிய விருந்து துவங்கியது.
நினைவுப் பரிசுக்குப் பதிலாக புத்தகம் அளித்திருக்கலாம் என்ற கருத்து நிலவியது. 15 பேர்களுக்கு ஒரே மாதிரி புத்தகத்தை தேர்ந்தெடுப்பது எளிதாக இருக்காது என்பதாலும், எங்கள் பகுதியின் பெருமை பேசும் துணி வகையை அளிக்கவேண்டும் என்றும் சென்னிமலையிலிருந்து சிறப்பாக வரவழைக்கப்பட்ட நினைவுப் பரிசை அளித்தோம்.
பாராட்டுப்பெற்ற ஒரு பதிவர் தன்னைவிட சில மூத்த பதிவர்களைப் பாராட்டியிருக்கலாம் எனக்கூறினார். இது பதிவர்களுக்கான வெறும் பாராட்டுவிழா மட்டுமல்ல. வலைதளத்தில் இல்லாமல் ஃபேஸ்புக்கில் மட்டுமே இயங்குபவரையும் நேற்று மேடையேற்றியிருக்கின்றோம். சமூகவலை தளங்களில் இயங்குவதோடு வேறுவேறு தளங்களிலும் சிறப்பாகப் பணியாற்றும் பலரைப் பட்டியலிட்டு அதிலிருந்து வடித்தெடுத்து, ஒரு முயற்சியாக இதை நிறைவேற்றியிருக்கின்றோம். இதற்காக ஒரு குழு பெரும் உழைப்பை செயல்படுத்தியிருக்கின்றது. நாங்கள் இந்த நிகழ்ச்சிக்காக் இறுதிசெய்த பட்டியல் மட்டுமே இறுதியானது அல்ல. தமிழ்தேசமெங்கும் இது போன்ற அங்கீகார நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்பதற்கான ஒரு உதாரணம் மட்டுமே! இதுபோன்று அங்கீகரிக்கத் தகுதியான இணைய நண்பர்கள் நிறைய உள்ளனர் என்பதையும் அறிவேன். மிகக்குறுகிய காலத்திட்டம் என்பதாலும் சிலரைத் தவறவிட்டிருக்கிறோம் என்பதாகவும் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். அதே சமயம் எங்கள் குழு தேர்ந்தெடுத்த இந்த 15 பேர் பட்டியல் மிக மிகப்பொருத்தமான பட்டியல் என்பதில் பெருமகிழ்வுகொள்கின்றேன். மேடையில் சிறப்பிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்களை இங்கே காணலாம்
அன்போடு கை பற்றி குலுக்கி அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டவர்கள் சிலரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. நன்றியுரையோடு விழா நிறைவுபெரும் வரை, உண்மையிலே என் சிந்தனைகள் எதும் என் கட்டுப்பாட்டில் இல்லை. அதுவரையில் நான் சந்தித்த நண்பர்களிடம் சரியாகப் பேசவோ, பழகிடவோ எனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அப்படியேதேனும், யாரையாவது நான் சங்கடப்படுத்தியிருந்தால் தயைகூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன்.
நிகழ்ச்சியை நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மிக நேர்த்தியாகவே நாங்கள் நடத்தியதாக நம்புகிறோம். ஒரு நடத்துனராக எங்களிடம் சிறுசிறு பிசிறுகள் இருந்திருக்கலாம். அதே சமயம் இதுபோன்ற ஒரு ஒத்துழைப்பு மிகுந்த பங்கேற்பாளர்களை நான் பார்த்ததில்லை என்றுதான் சொல்லவேண்டும். 9 மணிக்கு அரங்கில் அமரத் துவங்கியதிலிருந்து மிகச் சிறப்பாக நிகழ்ச்சியைக் கண்டு களித்துப் பாராட்டிய அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். நிகழ்ச்சியை பதிவர்களிடம் எடுத்துச்செல்ல உதவிய சங்கமம், யுடான்ஸ் திரட்டிகளுக்கு நன்றிகள்.
நிகழ்ச்சியின் நேர்த்திக்கு பல வகைகளில் பெரும் உழைப்பை விதைத்த சந்துரு அண்ணன், ஆரூரன், பாலாசி, ஜாபர் (இங்கிவரை யான்பெறவே என்ன தவம் செய்தேனோ?), கார்த்திக், அகல்விளக்கு ராஜா, சங்கவி, மேடி, விஸ்வம்அண்ணன், வேலு, அருள்மொழிமீரா, மகேஷ்வரன், நந்தகுமார், வால்பையன், பவளசங்கரி, ரோகிணி, நந்து மற்றும் எங்கள் குழந்தைகள் என எல்லோருக்கும் பணிவான பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பங்கெடுத்த குழும உறுப்பினர்கள் இளா, அமரபாரதி, ராஜி, சரவணமூர்த்தி என அனைவருக்கும் நன்றிகள். சிறப்பு விருந்தினருக்கு பெரு நன்றி. பாராட்டுப் பெற்றவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
இந்த சங்கமத்தை நடத்தியே தீரவேண்டும் என எங்களை பலவாறு ஊக்குவித்து வெற்றிகரமாக நடத்தச்செய்த சந்துரு அண்ணன் அவர்களுக்கு இந்த சங்கமத்தின் வெற்றியை சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.
நிறைவுக்குப் பின் நெகிழ்ச்சியோடு கைகளை இதமாய்பற்றி தங்கள் மகிழ்ச்சியை எங்களுக்குள் ஊடுருவசெய்த உள்ளங்களின் அன்பை அப்படியே சிந்தாமல் சிதறாமல் எங்களுக்குள் பதுக்கிக்கொள்கிறோம், நாங்கள் சந்திக்கும் நபர்களிடம் பகிர்ந்துகொள்கிறோம். கைகளை விரித்துப் பெருமகிழ்வோடு நெஞ்சோடு நெஞ்சணைத்து மென்மையான அணைப்பில் அன்பைப் பகிரும்போது தாயின் கருவறை சுகத்தை உணரமுடிந்தது.
மேலதிகப் படங்களுக்கு:
நன்றி
-0-
51 comments:
நன்றியும் வாழ்த்துக்களும். :)
விழாவிற்கு பின் இருக்கும் உழைப்பை சரியாக எழுத்தில் கொண்டு வந்துள்ளீர்கள். வருடா வருடம் இந்நிகழ்ச்சியை தொடருங்கள். பிறருக்கு முன் மாதிரியாக இருக்கும் இந்நிகழ்வு தொடர வேண்டியது அவசியம்
விழாவை திறம்பட நடத்திய அனைவருக்கும், பரிசு பெற்றோருக்கும் வாழ்த்துகள் !
நேரில் நிகழ்வைப் பார்த்த நிறைவைத் தருகிற பகிர்வு. ஈரோடு குழுவினருக்கு மனப்பூர்வமான பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
எனது பேரன்பும், பெருமகிழ்ச்சியும், நெகிழ்வான நன்றிகளும்...
அன்பு கதிர்,
வாழ்த்துக்கள் கதிர்... விழாவுக்கும், இப்படி ஒரு சந்திப்பிற்கும்... எனக்கு கொடுத்து வைக்கவில்லை... இந்தியா வரும்போது அவசியம் வந்து பார்க்க வேண்டும் உங்களை.
ரொம்ப அழகான பதிவும்...
அன்புடன்
ராகவன்
கதிர்! உங்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து செயல் படுங்கள்.
சங்கமத்தின் நேர்த்தி பதிவிலும் மேலோங்கியுள்ளது..உழைப்பும் அதன் பலனாய் கிடைத்த வெற்றியும் நன்றியும் நன்றே வெளிப்பட்டிருக்கிறது நேரில் கண்டதால் மேலும் ஆத்மபூர்வமாக உணர்கிறேன்..இப்படிப்பட்ட சிறப்பான நிகழ்ச்சியினை வழங்கியமைக்கு நன்றி கலந்துக் கொண்டதில் பெருமையும் அடைகிறேன்....
அனைவருக்கும் வாழ்த்துகள்!
படிக்கவே மூச்சு முட்டுது.. எவ்வளவு பெரிய உழைப்பு. க்ரேட்.
ஈரோடு வலைப்பதிவு குழும நண்பர்களுக்கும், பரிசு பெற்றவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
சங்கமத்தில் சங்கமிக்க வாய்ப்பு என்றமையுமோ என்ற எதிர்ப்பார்ப்புடன் ...
வாழ்த்துகள்! சிறப்புற எடுத்து சென்றமைக்கு ...
அன்பின் கதிர்,
இதைவிட அழகாக பதிவிடஒருவராலும் இயலாது. மிக நெகிழ்வான பதிவு. சொன்னது அத்தனையும் நிதர்சனம்! அருமை.. வாழ்த்துகள் கதிர்.
வாழ்த்துகள் !!!
அன்பு கதிர் வாழ்த்துக்கள்.
விழா மிக சிறப்பாக அமைந்திருந்தது.
அதன் பின்ன உள்ள உஙகள் எல்லோரின் கடின உழைப்பும் புரிகிறது.
நன்றியுடன் வாழ்த்துகிறேன்.
மேள சத்தம் கேட்டு நான் மண்டபம் மாறி வந்துட்டனோன்னு யோசிச்சேன் :)
சிறப்பானதொரு நிகழ்வு. திறம்பட அழகாக நடத்தியுள்ளீர்கள். அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
கதிர்....மிக அற்புதமான நிகழ்ச்சி ஏற்பாடுகள்....அருமையான திட்டமிடல்....அற்புதமாக தொகுக்கப்பட்ட விதம்....அருமை....இது போல ஒரு நிகழ்ச்சியை கோவையிலும் நடத்த முயன்றால் உங்கள் ஒத்துழைப்பும்...அறிவுரையும்....ஆலோசனைகளையும் கொடுத்து உதவுங்கள்.....பொன்னாடை என்கிற பெயரில் போர்த்தப்படும் பன்னாடைகளை வைத்து தலை துவட்டக்கூட முடியாது....போர்த்திக்கொள்ளவும் பயன்படாத ஜிகிபிகி துணியை கொடுக்காமல் பயனுள்ள போர்வையை கொடுத்தது மிகுந்த பாராட்டுக்குரியது....அதுவும் காரில் வரும்போது யாரும் கவனிக்கவில்லை....ஜீவா சார் வீட்டிலிருந்து இரவு போன் செய்து சொன்ன பிறகு தான் தெரியும்...இந்த குழு முயற்ச்சிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்....பாராட்டுக்களும்.....
அதீத மகிழ்ச்சியும் கண்கலங்க வைக்கும் என்பதை மேடையில் கண்டேன். சிலருக்கு நா தழுதழுத்தது.))) அதில் ஜாக்கியின் தழுதழுப்பு உச்சம்.. நிகழ்ச்சி மிக சிறப்பாக அமைந்தது .. வாழ்த்துக்கள்
உங்களுக்கும், ஈரோடு குழுவுக்கும் வாழ்த்துகள் கதிர்!.
தொடர்ந்து செயல் படுங்கள்.
என் சிரம் தாழ்ந்த நன்றிகளை பகிர்கிறேன், ஈரோடு வலைபதிவர்கள் குழுமத்திற்கு...
ரொம்ப அற்புதமான பணியை நிறைவேற்றியுள்ளீர்கள்..நீங்கள் எழுதிய இந்த பதிவை படிக்க மூச்சு வாங்குகிறது எங்களுக்கு..வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்..
அன்பின் கதிர்,
வாழ்த்துகள்.
அற்புதமாக எழுதி இருக்கின்றீர்கள். நேரில் வந்து பார்த்தது போல உள்ளது.
நன்றி.
அடடா! எவ்வ்ளோ உழைப்பு....அவ்வளவு பேருக்கும் பெரிய பூங்கொத்து!
இடையே தக தகவென ஒரு பொறாமை எல்லோர் மீதும்!
மிக அருமை கதிர்.. அபாரமான உழைப்பு..
எழுத்தில் பேச முடிவதுபோல நேரில் பேச முடியவில்லை.. மன்னிக்கவும்..
மிக்க நன்றிகள்.. வேறென்ன சொல்ல..
வாழ்த்துக்கள்.. இன்னும் விரிந்து பெருகட்டும் வருடந்தோறும் சங்கமம்..:)
பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி.
Arputham.....NanRi!
அன்புள்ள கதிருக்கு கோவை குப்புசாமி (மூலிகைவளம்)யின் வணக்கங்கள். உங்கள் சங்கமம் 2011 சிறப்பாக நடைபெற்றமைக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். கோவையிலிருந்து நானும் நண்பர் வின்சென்ட்டும் காலை 9-30 மணிக்கே வந்து விட்டோம். விழாவின் இடம் வந்த போது நண்பர்கள் சிறுசிறு குழுவாக மிக மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தே தெறிந்து கொண்டோம். உள்ளே வந்ததும் தேநீர் அளிக்கப்பட்டது. காலை உணவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் சிலர். அங்கு ஒவ்வொருவரும் அவரவர் வேலையில் மும்மரமாக இருந்தனர். மற்ற நிகழ்வுகள் அனைத்தும் நீங்கள் விவரித்தவையே. 15 பாராட்டாளர்கள் கடைசியில் இருந்து மேடைக்கு வரும் வரை படக்காட்சியும் ஒருவர் மாற்றி ஒருவர் அளித்த வர்ணனை, மேளம், நாதசுர இசை மிகவும் அற்புதமாக இருந்தது. இதற்கு எனது சிறப்பான வாழ்த்தும் நன்றியும்.
உங்கள் குழுவால் ஒன்று முடியும் அது என்னவென்றால் விழா முன்பும் இறுதியிலும் ஈரோடு பெருமைகளைச் சேர்த்து இந்த விழாவை ஒரு குரும்படமாகத் தயாறித்தால் மிகவும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
உங்கள் விருந்தோம்பலுக்கு மிக்க நன்றி...நன்றி...
சிறப்பான திட்டமிடல், குழுமப் பங்கேற்பு, ரத்தத்தில் கலந்த கொங்கு மண்ணின் விருந்தோம்பல், எல்லாவற்றுக்கும் மேலாக பொறுமை..பிறகு நிகழ்ச்சி சிறப்பாக அமையாமல் எப்படி இருக்கும்? பாராட்டுகள் குழும நண்பர்களுக்கு.
மீண்டும் ஒரு நல்ல சங்கமம். வாழ்த்துகளும் நன்றிகளும்
மனதிற்கு நிறைவாக இருந்தது நண்பரே..
தங்கள் குழுவின் பணிக்கு என் மனம் நிறைவான பாராட்டுக்கள்..
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டமை எண்ணி பெரு மகிழ்ச்சியடைகிறேன்..
நன்றிகள் பல..
தொடரட்டும் தங்கள் பணி.
நன்றி,,,,, வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்,,,,,
மிக்க நன்றி.....
மிகப் பிரமாண்டமாய் நடத்திய சங்கமத்திற்கு மட்டுமில்லை இந்த இளஞ்சூட்டு கைக்குலுக்களுக்கும்(தேர்ந்தெடுத்த வார்த்தைகள் அருமை)சேர்த்து பாராட்டுக்கள்
மிஸ் பண்ணிட்டேன் அண்ணா :(
தேனம்மை லெக்ஷ்மணன் said...
மிக அருமை கதிர்.. அபாரமான உழைப்பு..
எழுத்தில் பேச முடிவதுபோல நேரில் பேச முடியவில்லை.. மன்னிக்கவும்..
மிக்க நன்றிகள்.. வேறென்ன சொல்ல..
வாழ்த்துக்கள்.. இன்னும் விரிந்து பெருகட்டும் வருடந்தோறும் சங்கமம்..:)
கதிர் அவுங்க சொன்னத்து முற்றும் உண்மை
நன்றி.. நன்றி.. நன்றி..! உங்கள் அனைவருக்கும்..!
அதீத மகிழ்ச்சியும் கண்கலங்க வைக்கும் என்பதை மேடையில் கண்டேன். சிலருக்கு நா தழுதழுத்தது.))) அதில் ஜாக்கியின் தழுதழுப்பு உச்சம்.. நிகழ்ச்சி மிக சிறப்பாக அமைந்தது .. வாழ்த்துக்கள் muthudotme அருமையான வர்ணன்னனை
அபாரமான நிகழ்வு கதிர்,
நிறைய நண்பர்களையும், நிறைய அன்பையும் அங்கு வந்தபோது பெற்றேன்.
நீங்கள் எப்படி இவ்வளவு கச்சிதமாக நடத்தி முடித்தீர்களோ தெரியாது.
அடுத்தடுத்து மாநிலமெங்கும் நடைபெறப்போகும் பதிவர்சந்திப்புகள் எல்லாம் இனி ஒரு அர்த்தத்துடன் நடைபெற, முன்னோடியாக அமைந்துவிட்டது.
இரவு 10 மணிக்கு வந்து இறங்கியபோதும், இன்முகத்துடன் வரவேற்று, உணவளித்து, இருக்க அறை தந்து அசத்திவிட்டீர்கள்.
உங்கள் (நமது) குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
குறிப்பாக என்னால் மறக்க முடியாத புன்னகையை ஏந்தியிருக்கும் சங்கவிக்கு, ஸ்பெஷல் ஹலோ!
மீண்டும் வருவேன், ஈரோடுக்கு, உங்கள் சகோதரனாக.
சியர்ஸ்!
அப்டியே வெங்கட்ராமன் - அவரப் பத்தியும் கொஞ்சம் சொல்லி, அவர் பொண்ணுக்கான உதவியும் செஞ்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.
அப்டியே வெங்கட்ராமன் - அவரப் பத்தியும் கொஞ்சம் சொல்லி, அவர் பொண்ணுக்கான உதவியும் செஞ்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.
நிகழ்வில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை.நிகழ்வினைப்பற்றிய நண்பர்களது பதிவினை வாசிக்கும் போது ஆச்சர்யம் ஏற்பட்டது.இப்போ உங்கள் பதிவை பார்க்கும் போது இன்னும் பிரமிப்பு ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட நிகழ்வினை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்து சிறப்புற நடத்தியமைக்கு குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
அன்பின் கதிர் - நல்லதொரு நிகழ்வினை நடத்தி - சிறப்புற நடத்தி - வெற்றிகரமாக நடத்தி - கலந்து கொண்ட அனைவரும் மகிழ்வுடன் விடைபெற நடத்தி -ஓய்வெடுத்து - பிறகு எழுதப்பட்ட பதிவு. உண்மையிலேயே மனம் மகிழ்கிறது கதிர். கதிரின் உழைப்பிற்கும் பொறுமைக்கும் திறமைக்கும் - அத்தனை குழும நண்பர்களின் விருந்தோம்பலுக்கும் - ஒத்துழைப்பிற்கும் - மனமார்ந்த நன்றி கலந்த நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா
மன்னிப்புடன்..நேரில் வந்திருந்தா கூட இந்த சுவையை அனுபவித்து இருக்க முடியாது..
அற்புதமான நிகழ்ச்சியை நடத்திய குழுவினருக்கு பாராட்டுகள்
மனந்திறந்து பேசுகிறேன். அருமையான நிகழ்ச்சி. திரு கந்தசாமி பழனியப்பன் (கோவை) அவர்கள் உங்களைப் பற்றி நெல்லை பதிவர் சந்திப்பில் மிகவும் பெருமையாக சொல்லியிருந்தார். எனவே உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். எங்கள் மகனை நியூஜெர்சி அனுப்ப வேண்டியிருந்ததால் இந்த அரிய நிகழ்ச்சியை நழுவ விட்டு விட்டோம். நீங்கள் ராஜபாளையம் அல்லது சிவகாசி வந்தால் எங்களுக்கு தகவல் சொல்லுங்கள். மாமனிதரான உங்களை நாங்கள் சந்திக்கிறோம். மனப்பூர்வமான எங்களது வாழ்த்துகள்.
வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
ஈரோடு கதிர் அவர்களுக்கு சம்பிரதாயத்திற்கு பாராட்டுவது அழகல்ல என்பதாலேயே அன்று எதுவும் சொல்லவில்லை, ஆனால் சென்னை திரும்பி 2 நாட்களாகியும் உங்கள் விருந்தோம்பலின் நிறைவு இப்பொழுதும் நினைவுகளில் நின்று விளையாடுகிறது. இது தான் முதன்முறைக்கு நான் ஈரோடு வந்திருந்தேன் என்பதாலும், இத்தனை நாட்களாக முகம் தெரியாமல் நட்பு பாராட்டிக் கொண்டிருந்த பலர் முகமறிய காரணமாக இருந்ததாலும் ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாக வருவது என முடிவெடுத்திருக்கிறேன்.
விழாவின் முன்கதைச் சுருக்கம் பிரமாதம். எல்லாம் நல்லபடி நடக்க வேண்டுமே என்ற உங்கள் டென்ஷன் உட்பட உணர்வுகள் யாவற்றையும் சரியானபடி தொகுத்திருக்கிறீர்கள். இந்த மாதிரி நிகழ்ச்சிகள் மூலமாக வலைப்பதிவர்கள் ஒரு குடும்பமாக மாறுவது வரவேற்கத்தக்க, பாராட்டப்பட வேண்டிய விஷயம். (புகைப் படத்தில் அழகாக இருக்கிறீர்கள் கதிர்!)
இனிய ஈரோடு கதிர் அவர்கட்கு..
நான் சுந்தரவடிவேலு... திருப்பூரிலிருந்து.. தங்களோடு நானும் கடந்த ஞாயிறன்று சங்கமித்ததை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன்... வயிற்றுக்கு உணவுண்டு என்கிற பொருட்டில் நான் விஜயம் செய்தேன்... ஆனால் உங்களது பேச்சுக்கள் அனைத்தும் ரசமாயும் செவிக்கும் மனசுக்கும் பெருவிருந்தாக அமைந்ததை நான் முதற்கண் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்..
மேடையில் ரெண்டொரு வார்த்தை பேசுகிற திராணியே எனக்கில்லை..குளறிச் சொதப்பி விடுவேன்.. ஆனால் நீங்கள் எல்லாம் விளாசுவதை கவனிக்கையில் நானும் மேடைப் பேச்சினை எனக்குள்ளாக பயிற்றுவிக்கவேண்டும் என்கிற தீரா வெறியைப் புகுத்த நேர்ந்தது...
அடுத்து மேடை ஏறி ஜெயகாந்தன் போல கர்ஜித்து விடுவேன் என்று சொல்லவரவில்லை... பதறாமல் பேச்சு வருகிறதா என்று சோதிக்க வேண்டும்... பார்ப்போம்..
tiruppurtvsundar.blogspot.com என்கிற முகவரியோடு சுந்தரவடிவேலு வலைத்தளம் என்கிற பந்தாவான தலைப்போடு கவிதைகளையும் இன்னபிறக் களையும் கிறுக்கி வருகிறேன்... இயன்றால் சற்று நேரம் ஒதுக்கி என் காவியங்களை அசை போடுவீராக..நன்றி...
Arumaiyana santhippu. Nanri.
வாழ்த்துக்கள்
கூடினோம்; கை குலுக்கினோம்; விருந்துண்டோம்; புகைப்படம் எடுத்துக் கொண்டோம்; எல்லாம் சரி. இன்று தமிழ்நாடும் மக்களும் ச்ந்திக்கும் எந்தப் பிரச்சினை குறித்தும் பேசாமல் கலைந்து சென்றோம் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன். பதிவர்களின் பணியே மக்கள் பிரச்சினை பற்றி எழுதுவதும் பேசுவதும் தானே! எதையாவது செய்தோமா ?
Post a Comment