கூடிக்களிக்கும் தனிமை




கழுத்தைக் கவ்விக்கொண்டு
தொட்டிலாடுகிறது
மனிதர்களற்ற வீட்டில்
உடனுறங்கும் தனிமை…

இரவு முழுதும் எண்ணச்சேற்றுக்குள்
முதுகுதூக்கி முன்னோக்கி ஊர்ந்து
நெளிந்து நெளிந்து நகர்கிறது
ஒரு மண்புழு போல

நள்ளிரவு விழிப்பில்
புத்திக்கு முன் துயிலெழுந்து
இடவலமாய்த் துழாவும் கைகளில்
தாவி அப்பிக்கொள்கிறது

சன்னலோர மரக்கிளைகளில்
சிதறும் பறவைக் கொஞ்சல்களும்
வெளிச்சக் கீற்றுகளையும்
தட்டியெழுப்ப அனுமதிக்கிறது

நேரம் தவறிய தேநீர் சிற்றுண்டி
பசிக்கு கொஞ்சம் பகல் உறக்கம்
தொட்டுக்கொள்ள ஒரு முட்டை
இரு ரொட்டித்துண்டுகளுமென
எதையும் கலைத்துப்போட்டுக்கொள்ளும்
ஏகாந்த சௌகரியத்தை ஊட்டுகிறது

இறுகப்பூட்டிய யாழின் நரம்புகளாய்
அதிரும் தனிமையை
மீட்ட மீட்ட இதமாய் தெறிக்கிறது
அன்றைய தனிமையின் தனித்துவ இசை

தனிமையை அனுபவித்து
திளைத்துக் கொண்டாடி களைத்து
தனிமையை உற்றுப்பார்க்கையில்
குழுவாய் கூடிச்சிரிக்கிறது தனிமை!

~
நன்றி திண்ணை

7 comments:

manjoorraja said...

கதிர்... தனிமை தனித்துவமாக இருக்கு. வாழ்த்துகள்

சத்ரியன் said...

கதிர்,

ரொம்ப நாள் கழிச்சி தனிமை வாய்ச்சிருக்கு போல!

அருமையா இருக்கு.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து இதுக்கு!
/இறுகப்பூட்டிய யாழின் நரம்புகளாய் அதிரும் தனிமையை
மீட்ட மீட்ட இதமாய் தெறிக்கிறது
அன்றைய தனிமையின் தனித்துவ இசை/

ஓலை said...

Nice.

ராமலக்ஷ்மி said...

//குழுவாய் கூடிச்சிரிக்கிறது தனிமை!//

முடித்த விதம் அழகு.

மச்சவல்லவன் said...

வாழ்த்துக்கள் சார்.

Unknown said...

தனிமையை ரசித்தவிதம் தான் கவிதையின் ஹைலைட்.....