எங்கேயும் எப்போதும் – நிரம்பி நீடிக்கும் வலி

விபத்து நடவாத சாலைகளும், மரணம் நிகழாத வீடுகளும் இங்கே உண்டா. ஆனாலும் ஒவ்வொரு விபத்தும், ஒவ்வொரு மரணமும் சொல்லொணாத் துயரத்தை திணித்துவிட்டே செல்கின்றது.

இயற்கையாய் நிகழும் விபத்துகள் தவிர, கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளில் நிகழ்த்தப்படும் மரணம் சந்தேகமின்றி கொலைக்கும் தற்கொலைக்கும் சமம்.

அதிகம் சினிமா பார்க்க முனையாத என்னை, ”எங்கேயும் எப்போதும்” படம் குறித்து வந்த விமர்சனங்கள் படம் பார்க்க தொடர்ந்து தூண்டிக்கொண்டேயிருந்தது.


இதுவும் ஒரு படம்தானே என பார்க்கத்துவங்கிய எனக்கு, இது படம் அல்ல பாடம் எனப் புரியும் போது நான் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அறிந்தேன்.

தனியார் மற்றும் அரசு என இரண்டு சொகுசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதுவதை தத்ரூபமாகக் காட்டும் காட்சியோடு படம் துவங்குகிறது. அதில் பயணப்படும் இரண்டு ஜோடிகளின் பயணம் குறித்த காரணம் கவிதையாக இருக்கிறது. முக்கால்வாசிப்படம் கவிதைபோல். கவிதைகளில் லாஜிக் மீறல்கள் இருப்பது குறித்து பேசவேண்டிய அவசியம் இருப்பதாயும் தெரியவில்லை.

பயணங்களில் பலவிதமுண்டு. பெரும்பாலும் இரவு நேரப் பயணங்களையே தெரிவு செய்கிறோம். பேருந்தில் ஏறும்போது உறங்கும் உலகம், காலையில் இடம் அடைந்து இறங்கும் போதுதான் விழிக்கிறது.

ஆனால் பகல்நேரத்துப் பயணம் அதுபோல் அல்ல. அது மனிதர்களை வாசிக்கும் ஒரு புத்தகம் போன்றது. இரவுப் பயணங்கள் பெரும்பாலும் தடங்கள்களின்றி சென்றுகொண்டிருக்கும், பகல் நேரத்து தொலைதூரப் பயணங்களில் எதிர்பார்த்தததைவிட போக்குவரத்து நெருக்கடியால் பயண நேரம் நீண்டுகொண்டேபோகும், அடுத்து வண்டி முழுதும் நிரம்பாததால் ஆங்காங்கே தென்படும் பயணிகளை ஏற்றி இறக்குவதுமுண்டு. இதன் பொருட்டு பயணம் முழுதும் புதிதுபுதிதாய் மனிதர்களைச் சந்தித்துக்கொண்டேயிருப்போம். 

பயணம் நயமாகவும் அலுப்பாகவும் இருக்கும். அலுப்பாய் நீளும் பயணத்தில் நம்மை இலகுவாக்குவது, அலுப்பிலிருந்து மீட்பது சக பயணிகளிடமிருந்து கசியும் சுவாரசியமே என்றால் அது மிகையல்ல.
அப்படிப்பட்டதொரு பயணத்தில் ஏற்படும் விபத்தையும், அதையொட்டி நிகழும் வலியின் உச்சம் குறித்த பதிவுதான் ”எங்கேயும் எப்போதும்”.

பகல் நேரப் பயணங்களில் கவனித்து ரசித்த, கவனிக்கத்தவறிய பல மனிதர்களை இந்தப் பயணம் முழுதும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

தன்னை அழகாய் இருப்பதாய் சொல்லும் சின்னப்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்கிறாயா எனக் கேட்கும் புது மனைவியைப் பிரிய முடியாத கணவன், வெளிநாட்டில் பணியாற்றி அதுவரை பார்த்திராத மகளிடம் தான் வந்துகொண்டிருப்பதை ஆதாரத்தோடு சொல்ல வேண்டி பக்கத்து இருக்கைப் பெரியவரிடம் போனை நீட்ட, அவர் கடுப்பாய் போனை வாங்க, அப்போது அந்தக்குழந்தை “சாப்ட்டீங்ளா” எனக்கேட்பதில் ஏற்படும் நெகிழ்வு, தொந்தரவு செய்யும் குழந்தையை அப்படியே வாரி தன்மேல் போட்டுக்கொள்ளும் பயணத்தூக்கத்தை தொலைக்க விரும்பாத அம்மா, கடுகடுப்போடு வேக முடுக்கியை அழுத்தும் அரசுப்பேருந்து ஓட்டுனர், பஞ்சர் ஆன சக்கரத்தை மாற்றிவிட்டு முட்டிக்கையால் பாட்டிலைக் கவ்விக்கொண்டு கைகழுவும் நடத்துனருக்கு உதவும் ஜெய், அரசூரில் நிறுத்த மாட்டேன் என மறுத்த நடத்துனரின் மனமாற்றம், முதலில் நிறுத்த மறுத்து பின்னர் நிறுத்த முன்வரும் நடத்துனரிடம் வீம்பு பேசும் அரசூர் தலைவர், மீனப்பாக்கத்திலிருந்து விழுப்புரத்தை தாண்டிவிட்டேனா எனக் கேட்டுப் படுத்திய பயணி விழுப்புரத்தைத் தாண்டியும் தூங்கியதால் அரசூரில் இறங்கிக்கொள்ள நிர்பந்திக்கப்படும் நிலை, விளையாட்டுப்போட்டி சீருடை மற்றும் கோப்பையோடு கும்மாளமிடும் பள்ளி மாணவிகள், எதிரெதிர் பேருந்தில் பயணப்படும் நாயக காதல் இணை, இடையில் பேருந்து நிலையத்தில் வாங்கிய மல்லிகைப்பூ….. என எல்லாமே பகல் நேர தொலைதூரப்பயணங்களில் அன்றாடம் நாம் சந்தித்த மனிதர்களாகவோ அல்லது பிறர் சந்தித்த நாமாகவோ இருப்பதை மனம் முழுக்க நிரப்பும் போது, அங்கு நிகழும் விபத்து நமக்கே நேரிடையாக நிகழ்வதாக அமைகிறது.

மோதும் விநாடியில் கண்ணாடி வழியே துளைத்து முந்திக்கொண்டு விழும் ஆளை இரண்டு பேருந்துகளும் சேர்ந்து நசுக்கும் கணம், இரண்டு பேருந்தும் நேருக்குநேர் மோதியதை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் பார்க்கும்போது அதன் கோரம் மனதை அறுத்தெடுக்கிறது. அரசுப்பேருந்தின் மேலிருந்து அப்படியே சரிந்து பரவி சிதறும் இலைக்கட்டு, இரண்டு பேருந்தின் முன்சக்கரங்கள் மோதிக்கொண்டு நிற்பதில் உணரப்படும் வேகத்தின் விபரீதம், துண்டிக்கப்பட்ட காலோடு ஒருவர் கதறும் கதறல், ”ரிங்கடிக்குதுப்பா போனெடுங்கப்பா” என செல்லமாய் போன் அழைப்பு ஓசையில் குழந்தை அழைப்பதை எடுத்துப்பார்த்து கதறும் அந்தப் பெரியவர், மருத்துவமனையில் உடல்தானத்திற்கு கதறிக்கதறிப்பேசும் அஞ்சலி  என ஒவ்வொன்றுமே விபத்தின் வலியை அப்படியே மனதில் அப்புகிறது.

விபத்து நடந்த கணத்தில் கடந்துசெல்லும் பேருந்தில் அதிர்ச்சியாய்ப் பார்க்கும் முகங்கள், அக்கம் பக்கத்திலிருந்து ஓடிவரும் மனிதர்கள், டேங்கர் லாரியிலிருந்து இறங்கி ஓடிவரும் ஓட்டுனர் பேருந்து அருகே எம்பியெம்பிக் குதித்து காப்பாற்ற முனைந்த கணத்தில் செல்போனை எடுத்து 108க்கு தகவல் சொல்வது, பெரும் விபத்தை தலைப்புச் செய்தியாக்க விரும்பு ஊடகம், பேருந்துகள் அகற்றப்பட்ட பின் எச்சங்களாய் கிடக்கும் இலைகள், அடுத்தநாளில் அழிந்துபோகும் அந்தக் கோரத்தின் சுவடு, எச்சரிக்கைக்காக நடப்படும் பலகை  என வெகு யதார்த்தமான காட்சியமைப்புகள்.

“மரணத்தைக்கொல்ல ஒருவரும் இல்லை” எனும் அந்தப்பாட்டு ஆறுதலாய் இருந்தாலும் அது ஆறுதல் இல்லையென்பதே உண்மை.

ஆங்காங்கே நெடுஞ்சாலைகளில் அவ்விடத்தில் நிகழ்த்தப்பட்ட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை  தெரிவிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை பலகைகள் குறித்து பெரிதாய் நாம் அலட்டிக்கொண்டதாய்த் தெரியவில்லை. உண்மையில் ஊடகம் முதற்கொண்டு அது ஊட்டும் செய்திகளை (சு)வாசிக்கும் மனிதர்கள் வரை விபத்து என்பது ஒரு சுவாரசியப் பண்டமே. பண்டமாற்று செய்யமுடியாதா பண்டம். 

விபத்தில் சிக்கிய அந்தஸ்துமிகு நபர்கள், விபத்தின் கோரம், விபத்தில் மரணத்தின் எண்ணிக்கை என்பதனையொட்டி சுவாரசியம் கூடுவதும் குறைவதுமுண்டு. வெகு சிலநேரத்தில் மட்டுமே வலிப்பதுண்டு. நம், சுற்றம், நட்பின் பங்கு இருப்பதைப் பொறுத்தும் சில நேரங்களில் சுவாரஸ்யமும், வலியும் மிகுவதுண்டு

விபத்து ஒருபோதும் வசதி வாய்ப்புகளை, காதலை, அந்தஸ்த்தை, கதாநாயகத்தனத்தை, மிஞ்சியிருக்கும் கடமையை என எதையுமே கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. விபத்தின் கோரப்பசி அகோரமானது என்பதை ஆழ்ந்து நோக்கினாலோ அல்லது பட்டாலோதான் புரியும்.

இது படமல்ல, பாடம்…. விபத்தின் வலியறியாதவர்களுக்கு, விபத்தை ஏற்படுத்துவது குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளாதோருக்கும்.

எனக்குத் தெரிந்து எந்தச் சினிமாவிற்கும் நான் இவ்வளவு கலங்கியதில்லை, எந்தச் சினிமா குறித்தும் ”இதைக்கட்டாயம் பாருங்கள் ”என எவருக்கும் குறுந்தகவல் அனுப்பியதாக நினைவில்லை, இந்தப் படம் பார்த்தபோது எல்லாம் நிகழ்ந்தது.

துணிவான, நேர்மையான, பொறுப்பான முயற்சிக்கு படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் அனைவரையும் பாராட்டுவதைவிட வணங்கவே தோன்றுகிறது.

-0-

15 comments:

க.பாலாசி said...

//தொந்தரவு செய்யும் குழந்தையை அப்படியே வாரி தன்மேல் போட்டுக்கொள்ளும் பயணத்தூக்கத்தை தொலைக்க விரும்பாத அம்மா//

இந்தக் காட்சி ஏனோ காலைலேர்ந்து திரும்பத்திரும்ப கண்ணுக்கு வந்துகிட்டே இருந்தது. இயல்பான அந்த குழந்தையின் நடிப்புகூட அழகாக இருந்தது. அனைவரும் பார்க்க வேண்டியப்படம்.

manjoorraja said...

அண்ணே... நல்லா எழுதியிருக்கிங்க... உங்க வலியை

அகல்விளக்கு said...

//குழந்தை அழைப்பதை எடுத்துப்பார்த்து கதறும் அந்தப் பெரியவர்,//

கண்களை மூடி வலியை உணரச்செய்த காட்சி...

வேகம் எப்போதும் மரணத்தை நோக்கியே செல்லும் என்பதற்கு ஒரு வலிமிகு உதாரணம் இப்படம்...

ஓட்டுனர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும்...

settaikkaran said...

எங்கேயும் எப்போதும் - ஒரு அனுபவம். குறைகள் மிகக்குறைவான, நிறைகள் பிரம்மாண்டமான ஒரு படைப்பு. இதை ஒரு கதையாகக் கருதி, நாளாவட்டத்தில் மறந்துவிடாமல், நீங்கள் குறிப்பிட்டதுபோல ஒரு பாடமாக எடுத்துக்கொண்டால் நமக்கும் மற்றவர்களுக்கும் பெரிய நன்மை செய்தவர்களாகலாம். பகிர்வுக்கு நன்றி கதிர்!

பிரபாகர் said...

கதிர்.... விமர்சனமே மனதை அழுத்துவதாயிருக்கிறது. பார்த்து வேறு கஷ்டப்படுத்திக்கொள்ள வேண்டுமா எனும் எண்ணம் எழுகிறது. பாடம் என்பதால் பார்க்கிறேன் வரும் வார இறுதியில்ல்...

பிரபாகர்...

ராமலக்ஷ்மி said...

பொறுப்பான படத்தைப் பற்றி பொறுப்பான பகிர்வும்.

தெய்வசுகந்தி said...

பார்க்கணும்ங்கற ஆர்வம் அதிகமாகுது. இந்த வாரம் கண்டிப்பா பார்க்க போகிறேன்.

Naanjil Peter said...

Well-written review.
Thanks
Naanjil Peter

selvishankar said...

எங்கேயும்,எப்போதும்-திரைப்படம் பார்த்ததும் என் மகன் சொன்னது அம்மா உங்களால் தாங்கவே முடியாது..என்று..ஏன் அப்படிச்சொன்னான் என்று உங்கள் விமரிசனம் படித்துப்புரிந்துகொண்டேன்..வலியும் வேதனையும் இழப்புகளும் எல்லோருக்கும் பொதுதான்..கணநேர கவனக்குறைவு..எவ்வளவு இழப்பு... இந்தப்பாடம் நம் எல்லோருக்கும்தான்...

Riyas said...

நச்,

ஸ்ரீராம். said...

இந்தப் படம் வலைப் பதிவர்களால் ஏகோபித்து பாராட்டப் பட்டிருக்கிறது.

Vishy said...

நல்லொதொரு விமர்சனம்.. படம் எப்படியோ, உங்கள் விமர்சனத்திற்காகவாவது ஒரு முறை பார்க்கிறேன் :)

vasu balaji said...

நல்லாருந்துச்சு படம். நன்னி

Balaji said...

படத்தொடக்கத்தில் காட்டப்படும் விபத்துக்காட்சியை பார்த்து ஒரு சின்ன மனவருத்தம் இருந்தது.. ஆனால் முழுப்படமும் பார்த்து இறுதியில் காட்டப்படும் அந்த விபத்துக்காட்சியை என்னால் பார்க்க முடியவில்லை.. வலி அது கொடியது..

MANIKANDAN said...

நாம் சந்தித்த மனிதர்களாகவோ அல்லது பிறர் சந்தித்த நாமாகவோ... A class words