எனக்கு இல்லையா கல்வி – மனதில் இறங்கும் சாட்டையடி

அருமையாய் சுழலும் சக்கரத்தில், அழகாய் பிறக்கும் மண்பாண்டத்தோடும், மனதை நெகிழச்செய்யும் பின்னணி இசையோடு துவங்கும் படம், இறுதியாய் மனதை நொறுக்கும் என நினைக்கவில்லை.



பழம்பெருமைகள் பேச இந்த தேசத்தில் ஒருபோதும் குறைவில்லை. ஆனாலும் சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் கழித்துத்தான் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியை சட்டமாக்கிய பெருமை நமக்கு வந்திருக்கிறது. சட்டம்தான் சமைக்கப்பட்டிருக்கிறது, கல்வி பரிமாறப்படவில்லை என்ற வெட்கத்தை என்ன சொல்ல?


கல்வியும் மருத்துவமும் ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்பதை இந்த தேசம் இன்றுவரை சற்றும் மதியாமல் கால்களில் போட்டு மிதித்து வருவதை ”எனக்கு இல்லையா கல்வி” ஆவணப்படம் சாட்டை சொடுக்கி நம் மனதில் ஏற்றுகிறது.

20 கோடி குழந்தைகள் இருக்கும் இந்தியாவில் இன்னும் 3 கோடிக் குழந்தைகள் பள்ளியை மிதிப்பதில்லை என்பது உண்மை. சாலைகளில் பிச்சையெடுக்கும் பிள்ளைகள், தேநீர்கடை சிப்பந்திகள், சிறுசிறு உணவங்களில் தட்டுக் கழுவும் பிஞ்சுகள் என பள்ளிகளை அண்டியும் அண்டாமலும் இருக்கும் சிறுவர்களை எதை நோக்கி ஆளாக்கப் போகிறோம்.

கல்வியை வியாபாரமாக்கிய வேசித்தனம், காசு செலவழிக்க முடியாமல் வேறு வழியின்றி கடைசிப் புகலிடமாய் இருக்கும் அரசாங்கப் பள்ளிக்கூடங்கள், கால்நடைகள் கூட வசிக்கப் பாதுகாப்பற்ற வகையில் இருக்கும் பழுதடைந்த வகுப்பறைகள், இரவு முழுதும் சமூக விரோதிகளின் புகலிடமாய் இருக்கும் பராமறிப்பற்ற கல்விக்கூடங்கள், மரத்தடி வகுப்பறைகள், வயது வந்த பிள்ளைகள் கூட கழிவறையின்றி பொதுவெளியில் அமரும் அவலம் என வணக்கத்திற்குரிய கல்வியை நாம் வாழவைக்கும் இடங்கள் தமிழகத்தின் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கொடூரத்தின் உச்சமாக இருக்கிறதை மனது முழுக்க வெட்கத்தோடுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.




பொதுப்பாடத் திட்டத்தை சமச்சீர் கல்வியென மழுங்கடிக்கப்பட்ட மனதோடு ஏற்றுக்கொண்டு நாட்களை வாழ்கிறோம் எனக் கடத்தும் நமக்கு, இந்த ஆவணப்படம் வீசும் சவுக்கின் நொறுக்கும் வலி எப்போது புரியப்போகிறது எனத் தெரியவில்லை. எது சமச்சீர் எனக் கேட்கும் கேள்விகளுக்கு இங்கு எவருக்கும் நேர்மையாக விடையளிக்க யோக்கிதையில்லை!

நாற்பது பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே என நியமிக்கப்படிருக்கும் அயோக்கியத்தனம், பெரும்பாலான பள்ளிகளில் போதிய ஆசிரியர் இன்மை, கட்டமைப்பு வசதிகளற்ற கல்விக்கூடங்களோடு 9% ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி நடைபயில்கிறோம் எனும் இந்தியாவின் மாயப் பிரகடனம், கழிவறையும் குடிநீரும் இல்லாத கொடூரம், மழையும் பாம்பும் எளிதில் வகுப்பறைக்கு பாடம் பயில வரும் அவலம், ஆய்வகம் இல்லாத நிலை என ஒவ்வொன்றும் முகத்தில் அறைகிறது.

”ஸ்கூல் பக்கமா இல்ல சார், அதனால கரும்புக்காட்டுக்கு வேலைக்கு போய்ட்டேன்” என வெள்ளந்தியாய் பேசும் சிறுமியும், ”படிச்சாத்தான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்” கண்ணில் கோர்க்கும் நீர்த்துளியோடு பலமைல் கடந்து உயர்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவியின் உறுதியும் மனதைக் கலைத்துப்போடுகிறது. 

மலைவாழ் மக்களுக்கு மேகம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது, ஆனால் கல்வி கைக்கு எட்டும் தூரத்தில் இல்லையென்பது கசக்கும் உண்மை. ஆரம்பப்பள்ளி முடித்த பிள்ளைகள், அதைத்தாண்டி படிக்க அருகாமையில் கல்விச்சாலைகள் இல்லாததாலே கல்வியைத் தொடரமுடியவில்லை என்ற கொடுமைகளை என்ன சொல்ல.

பல பள்ளிகளில் சாதி விஷ நாக்குக்கு பலியாகி பிள்ளைகளின் கல்வி தடைபடுவதும், தாழ்த்தப்பட்ட சாதி என அடையாளப்படுத்தப்படும் பிள்ளைகள் மிக மோசமாக நடத்தப்படுவதும், கழிவறைகளைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்படுவதும், வேலூர் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் சத்துணவு சமைப்பவர் தாழ்த்தப்பட்ட சாதி என்பதாலே ஒரு பிள்ளை கூட பள்ளிக்கு அனுப்பப்படவில்லை என்பதும் மன்னிக்க முடியாத குற்றங்கள்.

பாடத்திட்டம் என்பது திட்டமிட்டே கடினமாய் வடிவமைக்கப்படுவதும், ஒரு துணைவேந்தருக்கு, ஒரு அமைச்சருக்குத் தெரியாத வார்த்தைகளை இரண்டாம் வகுப்பு பிள்ளை படிக்கும் பாடத்திட்டத்தில் வைத்திருப்பதும், நான்காம் வகுப்பில் இல்லறமும், ஐந்தாம் வகுப்பில் துறவறமும் வைத்திருக்கும் கடுமைத்தனமே பாதிப்பிள்ளைகளை படிப்பை விட்டுத் துரத்துகிறது.

இந்த ஆவணப்படம், மிகப்பெரிய ஒரு எச்சரிக்கை மணி. இது சேர வேண்டியவர்களுக்கு சர்வ நிச்சயமாய்ச் சேரவேண்டும். அப்படி அவர்கள் உற்றுக் கவனிக்க மறுத்தால், இதையே ஒரு நெருப்பாகக் கொண்டு ஒரு புரட்சி உருவாக வேண்டும். இது ஏனோதானோவென்று சில தகவல்களை வைத்துக்கொண்டு உருவான ஆவணம் அல்ல. தமிழகம் முழுதும் ஓடியோடி சேர்த்த அவலங்களின் தொகுப்பு. திண்டிவனம், சிவகங்கை, தேனி, வேலூர், ஈரோடு, நாகப்பட்டினம், கடலூர், தஞ்சாவூர் என பலதரப்பட்ட மாவட்டங்களில் பலதரப்பட்ட சூழலில் இருக்கும் பள்ளிகளைத் தேடித்தேடி அந்தச்சூழலை அப்படியே சுடச்சுட மனதில் பதியனிடும் அற்புதமான முயற்சி.

பாரதி கிருஷ்ணக்குமார் அவர்களின் சமூக அக்கறை மீது அளப்பரிய காதல் எப்போதும் உண்டு. ஏற்கனவே அவர் இயக்கியிருந்த இரண்டு ஆவணப்படங்களும் ஒரு குறிப்பிட்ட சூழலை மையமாகக் கொண்டு சமூகத்தை நோக்கி சவுக்கை சுழட்டியிருந்தாலும், மூன்றாவதாய் வந்திருக்கும் ”எனக்கு இல்லையா கல்வி” ஆவணப்படம் இந்த தேசத்தின் மாயைகளை உடைத்து தோலுரித்துக் காட்டியிருக்கும் அதிமுக்கியப் படம். கல்வியைத் தருவதில் போலித்தன்மையும், கயமைத்தனத்தையும் செய்யும் அரசு ஒரு நாட்டின் மிகக்கொடும் சாபம். அந்த சாபத்தின் மத்தியில் கல்வி என்பதை ஒரு வியாபாரப் பொருளாக பாவிக்கும் நமக்கு, நம் சகமனிதனுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதி குறித்தும் வெட்கம் வரவேண்டியது மிக அவசியம்.

படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பது ஒளிப்பதிவும், அவ்வப்போது மனதை கிடுகிடுக்க வைக்கும் பின்னணி இசையும். மனதை உசுப்பும்  மூன்று நிமிடப் பாடலின் வரிகள் நம் புத்தியை சிந்தனைகளை நிச்சயம் புரட்டிப்போடும். பாடலுக்காக செயற்கையாக காட்சிகள் ஏதும் அமைக்காமல், அற்புதமான இசையோடு நம்மை ஆழ்ந்துபோகச் செய்யும் இசையமைப்பாளர் இரா.ப்ரபாகரும், இயக்குனர் கேட்ட மாத்திரத்தில் ஒரே மூச்சில் பாடல் எழுதிக்கொடுத்த புதுகை.இரா.தனிக்கொடி அவர்களும் போற்றுதலுக்குரியவர்கள்.

இயக்குனரின் அனுமதியோடு அதில் வரும் பாடல்




-0-

13 comments:

ஓலை said...

அருமையான பகிர்வு கதிர்!

vasu balaji said...

Thanks for sharing.

shortfilmindia.com said...

அருமையான பகிர்வு.

நாடோடி இலக்கியன் said...

ப‌கிர்விற்கு ந‌ன்றி க‌திர்.

V.N.Thangamani said...

இந்த பெருமையெல்லாம் நீண்ட நாள் ஆண்ட கங்க்ரச்க்கே சேரும்.

settaikkaran said...

பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் ’ராமய்யாவின் குடிசை," மற்றும் "என்று தணியும்," இரண்டு ஆவணப்படங்களையும் பார்த்திருக்கிறேன். அவரது கருத்துச்செறிவுமிக்க, ஆழமான, அழுத்தம்திருத்தமான மேடைப்பேச்சுகள் பலவற்றைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்த ஆவணப்படத்தையும் காணும் ஆவலை உங்கள் இடுகை ஏற்படுத்தியிருக்கிறது. மிக்க நன்றி கதிர்!

Mahi_Granny said...

சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள் .மனதில் இறங்கும் சாட்டையடி தான் .

க.பாலாசி said...

நல்ல பகிர்வு.. இன்னும் பாக்கலை.. வியாழன் அன்று நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்..

சத்ரியன் said...

இந்த அவலத்திற்கு நாமெல்லாம் கூட உடந்தை தான் எனத் தோன்றுகிறது கதிர்.

நான் சம்பாதித்தது எனது, எனக்கு மட்டும், என்னைச் சார்ந்தவர்களுக்கு மட்டும்.... என்கிற நம் குறுகிய மனப்பான்மையே முக்கிய காரணம் போல தோன்றுகிறது.

மனிதச் சமுதாயம் முழுதும் நம்மைச் சார்ந்தது என்கிற எண்ணம் என்றைக்கு நம்மில் எல்லோரிலும் உருவாகிறதோ, நம் பிள்ளைகளுக்கும் அதை உணர்த்தி வளர்க்கிறோமோ அன்றுதான் விடிவு.

பூனைக்கு மணி யார் கட்டுவது என்கிற மடமையும், அச்சமும் நம்மை விட்டு விலகவில்லை.

விலகும் வரை வெறும் ஆதங்கம் மட்டுந்தான்!

Thamira said...

மிகச்சிறப்பான பொறுப்புடன் கூடிய பதிவு. உங்களுக்கும், படம் சார்ந்த அனைவருக்கும் நன்றியும், வாழ்த்துகளும்.!

முழு படத்தையும் இணையத்தில் காண வசதி செய்யப்படுமா.?

தாராபுரத்தான் said...

கண்ணீர் வரவைத்து விட்டது. தினமும் நேரில் பார்ப்பதுதான் அதையே ஆவணபடுத்தும் போது..ஆமாம் விலைக்கு கிடைக்குமா..எங்கு..

Franklin said...

சிறந்த பதிவுகளில் ஒன்று.நன்றி.கருத்தாழம்மிக்க ஆவணப்படம் என்பதை தங்களின் எழுத்து வீச்சின் மூலம் அறிகிறேன்.விரைந்து பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் உள்ளேன்.

sasiero said...

awesome