எச்சங்கள்


மூச்சுத்திணறத் தழுவி தளரும் இருள்
தொலைத்த காதலை மீட்டும் பிறைநிலா
பாசமாய்ப் பிணைந்து பிரியும் குளிர்காற்று
எங்கெங்கோ தெரியும் சில வெளிச்சப்புள்ளிகள்
கைபேசி குறைசப்தத்தில் வழியும் இளையராஜா
ஏதோ தெருவில் தன் இருப்பை உ(கு)ரைக்கும் நாய்
உலகையே இரண்டாய்வெட்ட முயலத் துடிக்கும் இடி
உச்சியில் பொட்டென விழுந்து சிதறும் ஓர் மழைத்துளி
எப்போதாவது ஊரை வெளிச்சத்தில் குளிப்பாட்டும் மின்னல்
எங்கிருந்தோ கரைந்துவந்து காதுகளில் தீரும் ஒலிப்பான் ஒலி
ஏதோவொரு சன்னலில் மெதுவாய்க் கசியும் மழலையின் சிணுங்கல்
மின்சாரம் தொலையும் நள்ளிரவுகளின் மொட்டைமாடி உலாத்தல்களில்
மிதந்துகொண்டேயிருக்கிறது வாழ்க்கையின் சில எஞ்சிய கொண்டாட்டங்கள்

-0-

16 comments:

vasu balaji said...

பார்த்ததும் பச்சென்று ஒட்டிக் கொண்டது படி போன்ற அமைப்பு. உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருப்பவைனை ஒன்றொன்றாய் படியிறக்கி சமமாக்கும் கொண்டாட்டங்கள். அழகு!!

ராமலக்ஷ்மி said...

எஞ்சிய கொண்டாட்டங்கள் வரிக்கு வரி நீண்டு கொண்டே சென்றிருப்பதும் அழகு.

கண்ணாமூசான் said...

கவிதை நல்லாயிருக்கு - குறிப்பா படியமைப்பு.
நான் இளையராஜாவின் இசை கேட்காத இரவுகள் மிக சொற்பம். மொட்டையின் இசை தமிழ்நாட்டில் காற்றில் கலந்துவிட்டதுபோல் ஒரு உணர்வு.

settaikkaran said...

//உலகையே இரண்டாய்வெட்ட முயலத் துடிக்கும் இடி
உச்சியில் பொட்டென விழுந்து சிதறும் ஓர் மழைத்துளி
எப்போதாவது ஊரை வெளிச்சத்தில் குளிப்பாட்டும் மின்னல்//

மொத்தமும் அருமையென்றாலும், வாசிக்கும்போது நறுக்கென்று பட்ட வரிகள் இவை.

(வடிவமைப்பை பிரமாதம்...!)

ஓலை said...

Nice.

ஸ்ரீராம். said...

அருமை. அமைப்பும் அளித்த விதமும் அருமை.

Unknown said...

நல்கவிதை...

Anonymous said...

எதார்த்தம் சொல்லும் படிக்கட்டுகள் அழகு... வானம்பாடி அவர்களின் பின்னுட்டமே என் கருத்தாகவும்....

Chitra said...

இன்னும் மேல சின்னதாக மூன்று வரிகள் சேர்த்து இருந்தால் , பிரமிட் கவிதைகள் என்று புதுமை புகுத்தி இருக்கலாம். :-)

vidivelli said...

அழகான கற்பனை நிறைந்த கவிதை..
அதை வாசிக்கும் போதே மனதில் ஒரு கொண்டாட்டம் தான்...
ரசித்தேன்..
அன்புடன் பதிவுக்கு பாராட்டுக்கள்..

http://sempakam.blogspot.com/

'பரிவை' சே.குமார் said...

எச்சங்கள் அருமை...

Rathnavel Natarajan said...

அருமை.

சத்ரியன் said...

இது கீழிருந்து மேலே ஏறும் படியா?
மேலே இருந்து கீழே இறங்கும் படியா?

படிப்படியா மண்டைக்குள்ள ஊறுதண்ணே, ... எச்சங்கள்.

பழமைபேசி said...

அல்லாடும் மனதைச் சாந்தமாக்கும் சொல்லாடலும் நயமும்... அலாக்கா ஊருக்கே தூக்கிட்டுப் போகுது.

//எப்போதாவது ஊரை வெளிச்சத்தில் குளிப்பாட்டும் மின்னல்//

எப்போதாவது வெளிச்சத்தில் ஊரை குளிப்பாட்டும் மின்னல் என்பதே சரி!

சொற்களை இடம் மாற்றிப் போட்டா, பொருள் மாறும். விளக்கு வெளிச்சம், நிலா வெளிச்சம் வரிசையில ஊரை வெளிச்சம்னு ஆகு பெயரா வரும் இங்க. ஊரை = வரி வரியாகத் தென்படுவது!!

க.பாலாசி said...

அருமையான கவிதை..

vetha (kovaikkavi) said...

மிதந்துகொண்டேயிருக்கிறது வாழ்க்கையின் சில எஞ்சிய கொண்டாட்டங்கள்...''
உண்மை தான் ஒவ்வொரு சிறு விடயத்திலும் எத்தனை கொண்டாட்டங்கள் உள்ளன என்று மனிதன் சிந்திக்க மறக்கிறான் ஆறுதலாக சுவைத்து அனுபவித்தால் அத்தனையுமே இனிமை தான்
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com