தேர் நோம்பி

சொந்த இடத்திலிருந்து அருகாமை நகரங்களுக்கு நகர்த்தப்பட்டவர்கள், எத்தனை பிடுங்கல்களை முன்னிருத்தி நகரத்திலேயே உழன்று கொண்டிருந்தாலும் அவர்களை அவ்வப்போது சொந்த ஊரை நோக்கி நகர்த்துபவைகளில் குறிப்பிடத் தகுந்தவை பொதுவான பண்டிகை நாட்களின் விடுமுறைகளும், அப்பகுதி கிராமத்து திருவிழாக்களும்தான்!

திருவிழாக்கள் கடவுளை முன்னிருத்தியே என்றாலும் அதில் மிஞ்சி நிற்பது கூடிமகிழும் மனிதர்களின் உறவுகள்தான். எங்கேங்கோ நகர்ந்து போனவர்களும்கூட, பால்யத்திலிருந்து பழகி, சூழலின் காரணமாய் பிரிந்த நட்புகளை சந்திக்க முடியுமோ என்ற சிறு நம்பிக்கையோடு ஏங்கி வருவது உள்ளூர் திருவிழாவிற்குதான்.

ஒவ்வொரு ஊருக்கும் திருவிழாவின் முக்கிய அடையாளங்கள் மாறிக்கொண்டேயிருக்கும். தீ மிதிப்பது, தேர் இழுப்பது, ஆயிரக்கணக்கான கிடாவெட்டு, விளக்கு அலங்காரம்,  கம்பம் பிடுங்குதல் என ஒவ்வொரு ஊர் திருவிழாவிற்கு ஒரு அடையாளம் இருந்து கொண்டேயிருக்கிறது. அந்த அடையாளம் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்வதும், நவீன வடிவங்களுக்கு ஆட்படுவதும் தவிர்க்க இயலாததாகிவிட்டது.


பண்டிகை, திருவிழா என்பதின் கொங்கு வட்டாரச்சொல் நோம்பி. தீவாளி நோம்பி, தை நோம்பி என்றே பொதுவான பண்டிகைகளும் அழைக்கப்படும். ஏழெட்டு வருட இடைவெளிக்குப் பிறகு திகட்டத் திகட்ட ஒரு தேர் நோம்பியை வேடிக்கை பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது.

தேர் இழுப்பது இரண்டு நாட்கள் நடக்கும் நிகழ்வு. முதல் நாள் தேர் இழுப்பது தொடங்கி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேர் நிறுத்தப்படும். அன்று தேர் நிறுத்தப்படும் இடத்திற்கு ஆலயத்துக்குரிய மவுசு கிடைத்துவிடும். தேரைச் சுற்றி திடீர்க் கட்டில் கடைகள் முளைக்கும். மூட்டையில் இருக்கும் உப்பை, ஒரு தட்டில் கொஞ்சமாகக் கொட்டி சில மிளகுகளைப் போட்டு, கொஞ்சம் குங்குமம் மஞ்சள் தூவி, தேர் கும்பிட வருபவர்களிடம்உப்புப்போட்டு சாமி கும்பிடுங்க” என நிர்பந்திப்பர். ஏன் உப்பு போடுகிறோம் என்பது பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்காது. உப்புத் தட்டை விற்க விதவிதமான யுக்திகளை திடீர் கடைக்காரார்கள் கையாள்வர். உப்பு வாங்குபவர்களுக்கு கட்டிலுக்கு அடியில் செருப்பு விட்டுச்செல்ல சிறப்புச் சலுகை வழங்கப்படும்.

அடுத்தநாள் மாலை தேர் அங்கிருந்து கிளம்பி, நிலை சேர்வதுதான் சிறப்பான கொண்டாட்டமாகக் கருதப்படுகிறது. தேர் நிலை சேரும் சமயத்தில் எல்லா உப்புக் கடைகளையும் தேர்முட்டி அருகே மாற்றம் செய்து, அங்கும் அதே வியாபார யுத்தத்தில் தொடரும்.


இது போன்ற நோம்பிகளின் போது சாமி கும்பிடுவதைவிட, அங்கு வரும் கொண்டாட்டம்தான் பெரிதும் மகிழ்ச்சிக்குரியது. கொண்டாட்டம் என்பது கூட்டத்தில் கூட்டமாய் இருப்பதும், கூட்டத்திற்குள் இருந்துகொண்டு தன்னைச் சுற்றியிருக்கும் கூட்டத்தை ரசிப்பதுவும்தான். விதவிதமான உடைகளில் அக்கம் பக்கத்துக் கிராமங்களிலிருந்து குவியும் மக்களைக் காண்பதே கண்ணுக்கும், மனதுக்கும் மிகப்பெரிய மலர்ச்சி. பள்ளி நாட்களுக்குப் பின் பிரிந்துபோய், திருமணமாகி, கணவன் குழந்தை குட்டிகள் என வரும் பெண்கள், அதே போல் வரும் சக தோழிகளை அடையாளம் கண்டு, உயரம், பருமன், நரை எல்லாம் அளந்து பார்த்து, அரங்கேறும் மகிழ்ச்சியை அளக்கக் கருவிகளும், கணவர் குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துகையில் சிதறும் வெட்கத்தை அள்ளிட மூட்டைகளும் போதாது.


நோம்பிக்குக் குவியும் கடைகள், கடைகளை மொய்க்கும் எல்லாத் தரப்பு மக்களும் தங்களை கொஞ்சம் புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக அமைகிறது. அதுவரை முக்கிய சாலையாக வாகனம் மட்டுமே உருண்டோடிக் கொண்டிருந்த சாலையில் வெள்ளமாய் அலையும் மனிதர்களை, கடைகளால் கரைகளாய் நின்று ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கும்.

வாங்கம்மா. வாங்கக்கா, எதெடுத்தாலும் பத்து ரூபாய்தான். பத்து ரூபாங்றது நீங்க ஒரு நாளைக்கு டீக் குடிக்கிற காசுதான். டீக்குடிக்கிற காசுல வீட்டுக்குத்தேவையான அருமையான பொருளை வாங்கிட்டுப்போங்க! இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் எங்கள் விளம்பர வாகனம் புறப்படப் போகிறது. உடனே வந்து வாங்கிக்கொள்ளுங்கஎன பதிவு செய்யப்பட்ட குரல் ஒரு கடையில் கரகரத்துக் கொண்டிருந்தது. நான்கு பக்கமும் நடப்பட்ட மரக்குச்சிகள் தாங்கிப்பிடிக்க மேலே ஒரு கூடாரத் துணியோடு எல்லாக் கடைகளுக்குள்ளும் குறைவில்லாமல் பொருட்கள் இரைந்து கிடந்தன.


விற்க விற்க தீராத திருவிழாக்கடைகள் எப்போதும் ஆச்சரியத்தை விதைப்பவை, எப்போதுதான் இந்தக் கடையின் பொருட்கள் எல்லாம் தீர்ந்து போகும். கூட்டமாய் வந்து மொய்த்து பொருட்களை எடுத்துப் பார்க்கும் கைகளை கவனமாக உற்றுக் கவனித்துக்கொண்டே விலை சொல்லிக் கொண்டிருந்தார்கள் கடைக்காரர்கள். சாலையோரம் நிற்கும் தள்ளுவண்டிகளில் சதுரமாய் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட வண்ண வண்ண அல்வாக்களின் மேல்பகுதியில் அடர்த்தியாய் படிந்து கொண்டேயிருந்தது குப்பைகள். பழுத்துச் சிவந்து கிடக்கும் மாம்பழக் கடையை கடக்கும் போது ஏனோ கார்பைட்கல் நினைவிற்கு வந்தது.

 
பெண்களின் தலையில் பயன்படுத்தும் பொருட்கள் வண்ணமயமாய் கொட்டிக் கிடந்த கடைகளில், எல்லாவித வயதுப் பெண்களும் குவிந்து கிடந்தார்கள். சாலையில் வளையத்தை அடிப்பக்கமாய் வைத்து இரும்புக் குழாயில் விதவிதமாய் கோர்த்த ஊதிகளில் ஒவ்வொன்றாய் சம இடைவெளியில் எடுத்து எடுத்து குழந்தைகள் கடக்கும் போதெல்லாம் சிரத்தையாய் ஊதிச் சோதித்துக்கொண்டிருந்தார் அந்த வியாபாரி. ஊதும் போது முளைக்கும் கொம்பும், ”ங்ங்ங்ங்கொய்ய்ய்ய்” என வீறிடும் சத்தமும் வாங்கித்தராத அம்மாக்களால் குழந்தைகளிடம் அழுகையை உருவாக்கிக் கொண்டிருந்தது.

 
தாவணிகள் எல்லாம் சுடிதார்களாய் உருவெடுத்திருந்தன. சின்னப்பையன்கள் கூட அரை டவுசரில் யாரும் தென்படவில்லை. மீசை அரும்பிய சில்வண்டுகள் கூட்டம் கூட்டமாய் ஜீன்ஸ் பேண்டும், இறுக்கமான சட்டையுமாய் தளர்ந்த நடைபோட்டுக் கொண்டிருந்தன. குழுவாய் நகர்பவர்களின் மொத்த நோக்கம் கவன ஈர்ப்பாகவே இருந்தது, அவ்வப்போது அது வெற்றியும் பெற்றுக் கொண்டிருந்தது.

 
டாஸ்மாக் ஆண்டவர் அருளாசியால் தளர்ந்து துவளும் உடலை உறுதியாக இருப்பதாகக் காட்டும்  முயற்சியில், யோசித்து யோசித்து நாட்டியமாய் நகரும் ஓரிரண்டு குடிமகன்கள், நிறம் வெளுத்த காக்கியில் கையில் நீண்ட தடியோடு மேம்போக்காய் கவனித்துக்கொண்டு நகரும் காவல்துறையினர் என எங்கும் விதவிதமான மனிதர்கள் வியாபித்துக் கிடந்தனர். இருமருங்கிலும் இருக்கும் கடைகளை இரண்டு மூன்று முறைகள் என சலிக்கச் சலிக்க சுற்றித் தீர்ந்த குழுக்களில்கால் வலிக்குது வீட்டுக்குப் போகலாம்என அலுக்கும் முணுமுணுப்பு கசிந்து கொண்டிருக்கவும் செய்தது.

 
நிலைகொண்டிருந்த தேரை இழுக்கும் ஏற்பாடுகளின் முன்னேற்பாடாய் , ஒருவர் பறையடித்தபடி சென்றவர் பின்னே, ”ஓரமா நில்லுங்கஎன குச்சியை சாலையில் தட்டியவாறு கூட்டத்தை இருபக்கமும் கரைசேர்க்கத் துவங்கினார். ஊர் முக்கியப் பிரமுகர்கள் முன் நடக்க பெரியதொரு கூட்டம் தேரைப் பிணைத்திருந்த இரும்புச் சங்கிலியை இழுத்துவர வித்தியாசமான ஓசையோடு தேர் மனித வெள்ளத்தினூடே நகர்ந்தது தன் இருப்பிடம் நோக்கி!

 
தேர் கடக்க, கூட்டம் களைய என நோம்பியின் வர்ணம் நீர்க்கத் துவங்கியது. சைக்கிள்களில் பெட்டி வைத்துப்ப்ப்பூஃத்த்த்த்த்….ப்ப்ப்பூஃத்த்த்த்த்…”. என குச்சி ஐஸ் விற்கும் ஐஸ்காரர்கள் ஒருவரையும் காணோம். மினிடோர் வாகனத்தில் ஏற்றப்பட்ட நவீன பெட்டிகளோடு சாலையின் முகப்பில் பத்திற்கு மேற்பட்ட ஐஸ் வாகனங்கள் விதவிதமான பெயர்களைத் தாங்கி நின்று கொண்டிருந்தன. கடக்கும் குழந்தைகளைக் கலைத்து தன் பக்கம் ஈர்க்க அதிலிருந்த மணிணங்ணங்..” என அவ்வப்போது அடிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. வர்ணப்படம் பதித்த சின்னச்சின்ன கப்புகளில் ஏதோ ஒரு சுவை வர்ண ஐஸ்கிரீம்களை குழந்தைகளின் கைகளில் திணித்து விட்டு, வேட்டிக்குள் இருக்கும் பைக்குள் கைவிட்டு காசு எடுத்துச் தரும் தாத்தா, அப்பிச்சிகளிடம் காசுகளை வாங்கிக்கொண்டனர். ஒரு கட்டில் கடையில் மண்ணால் செய்யப்பட்ட உண்டியல்களில் குபேரன் சிரித்துக் கொண்டிருந்தார். காசு போட்டால்தான் உண்டி நிரம்பும் என்ற தத்துவார்த்தச் சிரிப்பாக இருக்கும் அது!.


கொஞ்சம் ஒதுக்குப்புறமாய் இருந்த விளையாட்டு கூடத்துப்பக்கம், பிள்ளைகள் பெரியவர்களை இழுத்துச்சென்று கொண்டிருந்தன. வர்ணம் உரிந்த விதவிதமான பெட்டிகளில் அமர்ந்து சுற்றும் தூரியும், கொஞ்சம் தத்தித்தத்தி வட்டத்தில் தாவிச் செல்லும் ட்ராகன் ரயிலும், தட்டாமாலை சுற்றும் தூரியும் என குழந்தைகள் பட்டாளம் இடம் பிடிக்க திமிறிக்கொண்டிருந்தன. எது விளையாடினாலும் இருபது ரூபாய் என எதோ பெயர் மட்டும் அச்சடித்த காகிதங்களைக் கிழித்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

இரண்டு பக்கம் மரத்தூண்களை நட்டு, இடையில் அச்சுவைத்து, நான்கு செவ்வக
மரப்பெட்டிகளை அமைத்து, பெட்டிக்கு நால்வராய் அமர்த்தி கைகளால் தொங்கித் தொங்கிச் சுற்றும் ராட்டினத்தூரி நினைவுக்கு வந்தது. மடியோடு சேர்த்து காக்கிப் பையைக் கட்டியிருக்கும் தூரிக்காரர் நினைவுக்கு வந்து போனார். தூரி சுற்றும்போதே, ஒரு பெட்டியில் இருக்கும் பெண் தன் கைக்குட்டையை நிலத்தில் போடுவதும், வேறு பெட்டிகளில் இருக்கும் ஆண்கள் அடுத்த சுற்றில் அதை எடுக்க முனைவதும் என உயிர்ப்பாய் இருந்த கலகலப்பு, டீசல் ஜெனரேட்டர் மின்சாரத்தில்டொக் டொக் டொக்கடடொக்என ஓடும் இயந்திர தூரிகளில் தொலைந்து போனதாகத் தோன்றியது.

ஒருவழியாய் எல்லாம் முடிந்து களைத்து சலித்து நகரும்போது, பசித்த மனது நிரம்பியதுபோல் இருந்தது. மனது நிரம்பியிருந்தாலும், நிறைவாக இல்லாத ஒரு உணர்வு உள்ளுக்குள் ஓடிக்கொண்டேயிருந்தது. நீர்த்துப் போன நிகழ்காலக் கலப்படச்சுவையும் காரணமாய் இருக்கலாம்!


-0-

குறிப்பு:
31ஜூலை 2011 திண்ணை இணைய இதழில் வெளியான கட்டுரை. நன்றி திண்ணை!

21 comments:

வானம்பாடிகள் said...

அருமையான விவரணை. படிக்கும்போதே காட்சி கண்முன் விரிகிறது. நன்றிங்ணா.

manjoorraja said...

நேரில் பார்ப்பது போல அருமையான நேர்முக வர்ணனை.

கடைசி வரிகள் ....??!?

ரேவதி மணி said...

கதிர் அருமையான வர்ணனை. சிறிய வயதில் பார்த்த தேர்திருவிழா ஞாபகம் வந்தது.அந்த நாட்கள் போல் இந்த நாட்கள் இல்லை என்பது உண்மைதான்.வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

அருமை... வாழ்த்துகள்

//நன்றிங்ணா.//

இது எப்பயிலிருந்து??

ஷர்புதீன் said...

:-)

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் திருவிழாவை நேரில் பார்த்த உணர்வைத் தந்தது. மிக அருமை. திண்ணை இதழ் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்!

ஓலை said...

நன்றிங்கனா! எந்த ஊரு திருவிழா இது?

தராசு said...

எப்பிடி சார் இத்தனை விஷயங்களை ஞாபகத்துல வெச்சு எழுதறீங்க...

க.பாலாசி said...

அருமையான கட்டுரை... ஒரு உண்மையச் சொல்லனும்னா இந்த கொங்கு மண்ணுல இன்னும் இந்த திருவிழாக் கூட்டம் நீர்த்துப்போகாம இருக்கறது எனக்கு ஆச்சர்யம்தான்.. மனிதர்களின் மனதும் திருவிழாவை கொண்டாடுகிறது.. கிராம்னாலும் எங்கூருப் பக்கம்லாம் இந்தக்கூட்டம் குறைஞ்சிப்போயிடுச்சி.. ஏன்னும் தெரியல.. வாழ்த்துக்களும்..

Mahi_Granny said...

நோம்பி இப்போது தெரிந்து கொண்ட புதிய சொல் . தேர் திருவிழா (எங்க ஊர் வழக்கு ) விவரிப்பு அருமை

jalli said...

senjerimalai thear nompi;
thoori aatum pothu kaikuttai naan poda.aduththa sutril varum adaiyaalam theariyaatha thaavani cittu namma kaikuttaya eadukka..oray kilu kiluppuththaan poanka..intha cell phone yukaththil
elllam maarippoachu..thear nompi....enakku pazhaya ninaivukalai konduvanthichu.(senjerimalai palladam pakkathil irukku) by.palanisamy.g. senior reporter. vikatan group. kovai.

jalli said...

palladam pakkathil ullathu senjerimalai murugan kovil.inku thai busha thear thiruvila 4 naatkal natakkum. thoori peattiyil utkaarnthu sutrrum poathu tharayil kaikuttayai vaikka..mukam theariyaatha oru ilasu athai edukka.vaikka..eadukka... sutrrum thooriyil nadakkum kaadal kooththu
manasukku santhosamana naatkal.thundu karumpai kadiththu mentru mattuvandil sentra naatkal ini thirumpaathu.en pazhaya ninavukalai asaipoatavaiththathu unkal thear nompi. by. g.palanisamy.senior reporter. vikatan group.kovai mandalam.

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - அருமையான விவரணை - நேரடி ஒளி பரப்பு - அக்காலத்தில் தேர்த் திருவிழாவில் எச்சி முட்டாயி எனச் சொல்லப்படும் மிட்டாய் - கைகளீல் மோதிரமாகவும், கடிகாரமாகவும், வாங்கியஉடன் - ஒரு சிறு துண்டு கன்னத்திலும் ஒட்ட்வைக்கப்பட்டு - அடடா அடடா - அதெல்லாம் இப்ப இல்லையே ........திருவிழா என்பது பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் கொண்டாட்டம் தான். திருமணங்கள் நிச்சயிக்கபடுவதும் இங்கு நடக்கும். மலரும் நினைவுகள்

திண்ணையில் வெளி வந்தமைக்கு பாராட்டுகள்

நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா

பழமைபேசி said...

//palladam pakkathil ullathu senjerimalai murugan kovil.//

மந்திரகிரி ஆண்டவர் கோயில்...

நெகமம், சுல்தான் பேட்டை, பெதப்பம்பட்டிங்ற முக்கோணத்துக்கு நடுவால இருக்குதுங்கோ!!

குடந்தை அன்புமணி said...

பதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாத இதழ். மேலும் விவரங்களுக்கு என் வலைத்தளம் வருக...

சேட்டைக்காரன் said...

அலாதியான எழுத்துநடை; அழகான படங்கள்!
திண்ணை-யில் வெளிவந்ததற்குமாய்ச் சேர்த்து டபுள் பாராட்டுக்கள்! :-)

jalli said...

pazhamai peasi...mukkonathukkum senjerimalaikkum 25k.m.thooram.senjerimalai koil 18 kiramathirkku searnthathunko..athila namma oorukkuthaan muthal mariyathinkoov.udumalai pakkam,nekammam pakkamnu sollathinko.palladam taluk.sultanpet union.pacha gounden palayam thaan therku ellai.
pappampatti mearkku ellai.kamanaikkan palayam vadukku ellai, puthur, jallipatti kilakku ellai.maththa oorkkarnka saamikumpida varalaam. urrrimai kidayaathunkov...sari thampi ithu enukku theavai illatha vealai. varkkanattukkaaran solluvathila thappirunthaa mannichudu. thampi.by.jallipatti palanisamy.senior reporter.pasumaivikatan.9940651071.
govindpswami@gmail.com

Indian said...

நோம்பிய புட்டு புட்டு வச்சுட்டீங்க.
திண்ணை பிரசுரத்துக்கு வாழ்த்துகள்.

தேர் ஒண்ணா இல்ல ரெண்டுங்களா?
தேர் இழுக்க ஆரம்பிச்சா நிலை வந்து சேராம நடுவால ப்ரேக் உடறது புதுசா இருக்கு.

//நோம்பி இப்போது தெரிந்து கொண்ட புதிய சொல் .//

நோன்பு என்பதன் மரூஉ ஆக இருக்கலாம்.

Kayathri said...

தேர் நோம்பிக்கு ஊருக்கு சென்றுவந்த உணர்வு..அருமையான தொகுப்பு..

s.viji said...

thanks kadhir sir

Amudha Murugesan said...

awesome!