ஈரோடு புத்தகத் திருவிழா - சில பகிர்வுகள்

இப்போதுதான் சமீபத்தில் ஈரோடு பெருந்துறை சாலையில் இருந்த ராணா திருமண மண்டபத்தில் புத்தகத் திருவிழா ஆரம்பித்தது போல் இருக்கிறது. அதற்குள் 7 வருடங்கள் கடந்துவிட்டது என்பதை வியப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. வளர்ச்சியின் அடையாளமாகவே ராணா திருமண மண்டபத்திலிருந்து ..சி. பூங்காவிற்கு இடம்பெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.ஈரோடு பகுதி மக்களுக்காக திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களும் மக்கள் சிந்தனைப் பேரவையும் அமைத்துக் கொடுத்திருக்கும் இந்தப் புத்தகத் திருவிழா இந்தப் பகுதி மக்களுக்கான ஒரு வரப்பிரசாதம் என்பதில் துளியும் மாற்றுக் கருத்தில்லை.

வெறும் கண்காட்சி, சந்தை எனப் பெயர் வைக்காமல் திருவிழா எனப் பெயரிட்டது அற்புதமான ஒரு முடிவும் கூட. இந்தப் பகுதியில் கொண்டாடும் எந்தவொரு பண்டிகையையும் விட அதிகமாக ஆவலோடு காத்திருந்து கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு ஈரோடு புத்தகத் திருவிழா.

இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவிற்கு இதுவரை ஐந்து நாட்கள் சென்று வந்து விட்டேன். அதுவும் பலதரப்பட்ட நேரங்களில்.  தனிப்பட்ட முறையில் கவிஞர். மகுடேஸ்வரன் அவர்களை ஒரு சந்தர்ப்பத்திலும், மணல்வீடு மு.ஹரிகிருஷ்ணன் அவர்களை பிறிதொரு சந்தர்ப்பத்திலும் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

சமீபத்தில் தமிழ்மணம் பரிசாக அளித்த புத்தகங்களே இன்னும் வாசிக்காத சூழலில் முடிந்தவரை புத்தகம் வாங்குவதை தவிர்த்தாலும் இதுவரை 8 புத்தகங்கள் அலமாரியை வந்தடைந்துவிட்டன. முந்தைய ஆண்டுகளில் புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகங்களில் இன்னும் சில வாசிக்கப்படாமல் கிடப்பதை நினைக்கும் போது பச்சை வெக்கம் படரத்தான் செய்கிறது.புத்தகத் திருவிழா குறித்த சில துளிகள்:
 • பெரும்பாலான நேரங்களில் நல்ல கூட்டம் இருந்தது. ஓரிரு முறை அலையலையாய் நகரும் மக்களிடையே இடித்துக்கொண்டுதான் கடக்க வேண்டியிருந்தது. 
 • பலமுறை பல பதிப்பகங்களின் அரங்கிற்குள் நுழைய முடியாத அளவிற்கு கூட்டம் நின்று புத்தங்களை மேய்ந்து தின்று கொண்டிருந்தது. 
 • முதல்முறையாக 200 அரங்குகள் நிறுவப்பட்டுள்ளன. அரங்குகளுக்கு இடையே கடந்த ஆண்டைவிட அதிகமாக விடப்பட்டிருக்கும் நடைபாதை இடைவெளி வசதியாக இருக்கிறது. 
 • தினமும் மாலையில் சிந்தனை அரங்கில் நடத்தப்படும் கூட்டத்திற்கு வந்து குவியும் கூட்டம் பல்லாயிரக்கணக்கில். 
 • ஒவ்வொரு நாளும் மாலை சிந்தனை அரங்கில் நிகழ்த்தப்படும் உரைவீச்சு அடுத்த நாள் காலை முதல் குறுந்தகடாக விற்பனைக்கு கிடைக்கிறது. ஒலி வடிவில் ரூ.50 / காணொளி வடிவில் ரூ.60 
 • சிந்தனை அரங்கில் நான் பார்த்ததில் தமிழருவிமணியன் உரை நிகழ்வின் போது 6000 பேருக்கு மேல் மக்கள் இருந்தனர். சில நாட்களில் அதைவிடவும் கூடுதல் கூட்டம் வந்ததாகவும் தகவல். 
 • முந்தைய ஆண்டுகளில் நிகழ்த்தப் பட்ட உரைவீச்சுகளின் குறுந்தகடுகளும் கிடைக்கின்றன. இவை ஒரு அரிய பொக்கிசம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 
 • தினமணி அரங்கில் தினமணி நாளிதழ் & இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இரண்டிற்கும் சேர்ந்து ஒரு ஆண்டுச் சந்தா ரூ.550க்கு கிடைக்கிறது. 
 • பிரபல இலக்கிய பதிப்பகங்கள் தவிர்த்து, குழந்தைகளுக்கான ஆங்கிலப்புத்தகங்களை வைத்திருக்கும் அரங்குகளிலும் கூட்டம் வழிகிறது. 
 • பல விற்பனை அரங்குகளில் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து காகித அட்டை பைகளைத் தருகின்றனர்.  
 • மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்க ரூ.250க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு புத்தக ஆர்வலர் என்ற சான்றிதழ் மக்கள் சிந்தனைப் பேரவையால் வழங்கப்படுகிறது.
 • குழந்தைகளின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் 10 ரூபாய் மதிப்புள்ள அழகிய உண்டியல் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதில் அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழா தேதி பொறிக்கப்பட்டிருக்கிறது.
 • மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் உண்டியலில் சேர்க்கும் காசை அடுத்த வருடம் புத்தகத் திருவிழாவில் உடைத்து அதில் இருக்கும் தொகைக்கு புத்தகம் வாங்கும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 • உடுமலை.காம் அரங்கு ஏன் இடம் பெறவில்லை என சில இணைய நண்பர்கள் விசாரித்தனர்.
 • குறிப்பிட்ட ஒரு சில பதிப்பக அரங்குகள் நான் பார்த்த பொழுதெல்லாம் காலியாகவே கிடந்தன.
 • எதிர்பார்த்து வந்த சில புத்தகங்கள் வரவில்லை என்றும் சில நண்பர்கள் சலித்துக்கொண்டனர்.

தன்னலம் சிறிதும் பாராது இந்தக் கொங்கு தேசத்தில் அறிவுத் தீபம் ஏற்ற முனைந்து, பல முயற்சிகளின்பால் இந்த திருவிழாவை தொடர்ந்து நிகழ்த்திவரும் மக்கள் சிந்தனைப் பேரவையும் திரு. ஸ்டாலின் குணசேகரனுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை எத்தனை முறை பகிர்ந்தாலும் அது தீராத கடனாகவே இருக்கும்

-0-

10 comments:

Mahi_Granny said...

வாசிக்கநேரம் இருந்தும் தமிழ் புத்தகங்கள் கிடைக்காத இடத்தில் நான் . எனவே எப்போதும் போல் பொறமை தான்

senthil said...

மிக அருமையாகச் செய்திகளைத் தொகுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது என சிலர் வாதிட்டாலும், இது போன்ற புத்தக் திருவிழாக்கள் இல்லை இல்லை புத்தகம் படிப்பவன் எப்போதும் படித்துக் கொண்டே தான் இருக்கிறான் என்பதை நினைவூட்டுகிறது. அடுத்த முறை ஊருக்கு வரும் போது என் புத்தக வெறி தீரும் அளவுக்கு புத்தகம் வாங்குவதாக எண்ணியுள்ளேன்.

வானம்பாடிகள் said...

சென்னையை விட ஈரோடு புத்தகத் திருவிழாவில் என்னைக் கவர்ந்த அம்சம், எனக்கு வேண்டிய புத்தகங்களை எடுத்து பில் போடும்போது இது படிப்பீங்கன்னா இந்த எழுத்தாளரும் பாருங்களேன்னு அறிமுகப் படுத்தினது. உள்ளுக்குள்ள தீனிக் கடையைப் போட்டு இடைஞ்சல் இல்லாம இருந்தது. அடுத்த முறை சென்னை போலவே கடனட்டை மூலம் வாங்கவும் வசதி செய்தால் நன்றாக இருக்கும். அருமையான அனுபவத்துக்கும், இந்த இடுகைக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் said...

மிக அருமையாகச் செய்திகளைத் தொகுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

ஓலை said...

நல்ல தகவல்.

Latha Vijayakumar said...

How are you my dear friend.

Priya said...

நல்ல தகவல்!
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல விஷயம்.. தொடரட்டும்..

இந்த வருஷம் சில பணிகள் காரணமா வர முடியல நண்பா.. உங்கள சந்திக்கிறத மிஸ் பண்றேன்..:-((

jalli said...

'neasippum...vaasippum..ulla makkalai kondathu. erode. enpatharkku puththaka thiruvizha
verri pala aandukalaaka 'kattiyam"
koori varukirathu.innum virivaana pathivai eathirpaarkkirean.intha aandu 'kovai coddissia"sentruvittataal, erode varamutiya villai, appuram..kathir..vazhakkam poal intha varusamum nadikar sivkkumaar.
108 pookkalin pearai moochu vidamal
sonnara?....jalli

ஈரோடு சுரேஷ் said...

விவசாயம் சம்பந்தமான பதிப்பக அரங்குகளில் கூட்டம் இல்லாதது வருத்தமாக இருந்தது...