பல இரவுகளில் ஓர் இரவு



இரவின் நிறம் கூடக்கூட அழுத்தமும் கூடத்தொடங்கியது. ஏன் உடைந்ததென்று தெரியவில்லை, அந்தக்கணத்தில் அது உடைந்திருக்கலாமாவென்றும் தெரியவில்லை. ஆனாலும் மனது சுக்கு நூறாய் உடைந்து சிதறிக் கிடந்தது. தோல்வி தோல்வி தோல்வி என எல்லாவற்றிற்கும் மனது அரற்றிக் கொண்டேயிருந்தது.

இதுவரை அணிந்திருந்த முகமூடிகள் மீது சொல்லொணா வன்மம் வந்து குடியேறியது. எப்படியேனும் முகமூடியை அணிந்து, யாரும் அறியாவண்ணம் முடிச்சிட்டு நேர்த்தியாய் மறைத்த உழைப்பு மறந்துபோனது. அப்படியே கூரிய நகங்களை இருபக்க கன்னப்பகுதியில் அழுத்தி முகமூடியை பிய்த்தெறியும் வெறியோடு இழுத்தான். சற்றும் முகமூடி அசையவில்லை, நகங்களை அழுந்த அனுமதிக்க மறுத்து கெட்டித்துக்கிடந்தது. நகங்கள் மட்டும் மடங்கி, நகக்கண்ணில் வலி பூத்தது.

முகத்தை அழுந்த தடவிப்பார்த்தான், கொஞ்சம் சுருக்கம் பாய்ந்திருந்தது. என்ன வேடம் இப்போது அணிந்திருக்கிறோமென்று புரிபடவில்லை. பூண்ட வேடங்களும், அணிந்த முகமூடிகளும் ஒன்றா இரண்டா!? எந்தக்கணத்தில் சுயம் தொலைந்ததென்பது மறந்துபோயிருந்தது. எப்போதிலிருந்து முகமூடிகள் சுயத்தை சிதைக்கத் துவங்கின என்பதும் மறந்துபோய்விட்டது. முகத்தைத் தடவிய விரல்களில், இப்போது எந்த வேடம் புனைந்திருக்கிறொமென்பதை உணரமுடியவில்லை. நெற்றி ஒரு வேடத்தை, புருவம் ஒரு வேடத்தை, கன்னம் மூக்கு மூக்கு பிரிதொரு வேடத்தை நினைவூட்டியது. கண் இமைகள் இமைக்க மறந்துபோய் விரைத்திருந்தது. உதடுகளிலொரு நிரந்தரச்சிரிப்பு அப்பிக்கிடந்தது. சிரிக்கும் உதடுகளை விரல்கள் கடக்கும் போது, உள்ளுக்குள் இருந்து பொங்கிவந்தது ஒரு குமட்டல். உள்ளுக்குள் சொல்லொணாத் துயரோடு சுமக்கும் ரணங்களில் வழியும் சீழ் குமட்டி வெளிவந்து, நிரந்தரமாய் பொய்யாய் சிரிக்கும் உதடுகளில் வழிந்தது. சீழின் நாற்றமும், உதடுகளில் படிந்திருக்கும் சிரிப்பின் போலிப்புரட்டும் சேர்ந்து அதீத அயற்சியைப் புகட்டியது.

”வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற வாசகம் ஒரு கணம் மனதிற்குள் வந்துபோனது. ”எவண்டா இதச் சொன்னது” என்ற ஓங்காரக் கோபம் வந்தது. ”வாழ்வேமாயம்” என்ற வாசகம் மனதிற்குள் வந்து ”வாழ்க்கை வாழ்வதற்கே” வாசகத்தை துரத்தியடித்தது. ஏன் இப்படியொரு வாழ்க்கை வாழவேண்டும் எனத்தோன்றியது, உடன் இலவச இணைப்பாக ”ஏன் வாழக்கூடாது” என்ற கேள்வியும் வந்தது. இரண்டுமே செயற்கைத்தனமான கேள்விகளாகத்தோன்றியது. சினிமாவும் இன்னபிற பொழுதுபோக்குகளும் இது போன்ற நாடகத்தனமான பல சொற்றொடர்களை, கேள்விகளை தனக்குள் திணித்திருப்பதை உணரும் போது, எது நிஜம், எது நாடகத்தனம் என்பதே குழப்பமாய் இருந்தது.

எதை நோக்கிய பயணம் இந்த வாழ்க்கை என்பதில், ஒன்றேயொன்று மட்டும் விடையாகத் தெரிந்தது. அது மரணம். மரணம் என்பதை நினைக்கும்போதே அது அபசகுணம் என்ற உணர்வு வந்தது. அது எத்தனை நிஜமாய் இருந்தாலும் அது பற்றிச் சிந்திக்க மனதில் வலுவிருப்பதில்லை. விருப்பமுமிருப்பதில்லை. மரணிப்பதற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோமென்று நினைக்கும்போதே வறட்டுப் புன்னகையொன்று உதட்டில் வந்துபடிந்தது.

மரணத்தை நோக்கிய பயணத்திற்காக மட்டுமே பிறக்கிறோம், அதை நோக்கி கடிகாரத்தின் நொடிமுள்போல், ஒவ்வொருநொடியும் ’டிக்டிக்’கென நகர்ந்து கொண்டிருக்கிறோம் எனத்தோன்றியது. இப்படித் தோன்றுவதும்கூட நாடகத்தனமோ எனவும்பட்டது. அவன் மேலேயே அவனுக்கு சொல்லொணாக்கோபம் கொப்பளித்து. ’எதுதாண்டா நிஜம்’?, ’எல்லாமே நாடகமோ?’ எனத் தோன்றியபோது அவன்மேலேயே அவனுக்கு அயற்சியும் அலுப்பும் கூடியது.




சிந்தனைகள் பின்னிக்கிடந்த மூளை எதையும் புதிதாய் சிந்திக்கமறுத்தது. எதைச் சிந்திக்கத் முனைந்தாலும் சிந்தனை சிக்கலையும், மரணத்தையுமே மையப்படுத்தியது. வாழ்வது வீணென்று சொன்னமனதே சாவதும் எளிதன்று எனவும் சொன்னது. மூளைக்குள் ஏதோ ஒன்று நெளிவது போலவும், அந்த ஒன்று இரண்டாகி நான்காகி எட்டாகி பதினாறாகி என நினைக்கும்போது இதுதான் பைத்தியத்தின் முதல்கட்டமென்றோ எனவும் தோணியது. சிந்தித்து சிந்தித்து மூளை களைத்துப்போய், சிந்தனைகளைத் தொலைத்து மௌனித்துக்கிடந்தது. மௌனம் சூழ்ந்திருக்கிறதென நினைக்கும்போது விழிப்புத்தட்டியது. விழிப்பெது, சிந்தனை தொலைந்த உறக்கமெது எனவும் குழப்பம் குடிபுகத் தொடங்கியது!

சிந்தனை ஊறல்கள், விழிப்பு எரிச்சல், உறக்க மௌனம் என ஒவ்வொன்றாய்க் கடந்து, வெதுவெதுப்பும், வெளிச்சமும் படியப்படிய அது விடியல் எனத்தோன்றியது. எப்போது தூங்கினோம், என்ன நடந்தது, இன்னும் உயிரோடுதான் இருக்கிறோமா, பைத்தியம் பிடித்துவிட்டதா என்ற குழப்பத்தோடு கண்ணில் கட்டியிருந்த பூளையைத் துடைக்க, விழிகள் விடுதலையடைந்தது போன்ற உணர்வு படிந்தது.

மெதுவாய் எழுந்து கதவு திறக்க, காற்றும் வெளிச்சமும் குபீரெனப் புகுந்தது. வீதி அதன்போக்கில் கிடந்தது, தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் அவரவர் போக்கில் நடமாடிக்கொண்டிருந்தனர். அடிக்கடி கண்ணில்படும் ஒற்றைக்கால் இல்லாத அந்த தெருநாய் ஒரு ரிதத்தோடு ஓடிக்கொண்டிருந்தது. முதன்முறையாக அந்த நாய்க்கு சாப்பிட எதாவது போட வேண்டும் என அவனுக்குத் தோன்றியது.

--------------------------------------------------------------------------------------------------


 வல்லமைhttp://www.vallamai.com/blog/archives/7148/ மின்னிதழில் வந்த இடுகை. நன்றி வல்லமை.

16 comments:

அகல்விளக்கு said...

தேடித்தேடி தொலைந்து விடும் சிந்தனை இது...

அபூர்வமாய் என் சூழலுக்கும் பொருந்தி விட்டது இவ்விடுகை...

vidivelli said...

சிந்தனை ஊறல்கள், விழிப்பு எரிச்சல், உறக்க மௌனம் என ஒவ்வொன்றாய்க் கடந்து, வெதுவெதுப்பும், வெளிச்சமும் படியப்படிய அது விடியல் எனத்தோன்றியது. எப்போது தூங்கினோம், என்ன நடந்தது, இன்னும் உயிரோடுதான் இருக்கிறோமா, பைத்தியம் பிடித்துவிட்டதா என்ற குழப்பத்தோடு கண்ணில் கட்டியிருந்த பூளையைத் துடைக்க, விழிகள் விடுதலையடைந்தது போன்ற உணர்வு படிந்தது.


supper........

Unknown said...

ரஜினி கிட்டத்தட்ட ஏனெனில் அவர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையில் அது சித்தரிக்கப்பட்ட உள்ளது வழியில், அசல் வார்த்தை பொருள்படுவதாகவே மாறிவிட்டது. ஒரு படி மேலே இந்த எடுத்து, ரஜினி இப்போது அசல் இருப்பது எப்படி அது நீண்ட கால பலன் பற்றி பேசுகிறது. இங்கே கிளிக் செய்வதன் மூலம், அவர் அது பற்றி செல்கிறது எவ்வாறு மேலும் கண்டுபிடிக்கவும்
http://bit.ly/n9GwsR

Chitra said...

மெதுவாய் எழுந்து கதவு திறக்க, காற்றும் வெளிச்சமும் குபீரெனப் புகுந்தது. வீதி அதன்போக்கில் கிடந்தது, தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் அவரவர் போக்கில் நடமாடிக்கொண்டிருந்தனர். அடிக்கடி கண்ணில்படும் ஒற்றைக்கால் இல்லாத அந்த தெருநாய் ஒரு ரிதத்தோடு ஓடிக்கொண்டிருந்தது. முதன்முறையாக அந்த நாய்க்கு சாப்பிட எதாவது போட வேண்டும் என அவனுக்குத் தோன்றியது.


....very profound message.

ILA (a) இளா said...

அருமை என்ற ஒற்றை வார்த்தையால் இதற்கு மறுமொழியிட விருப்பமில்லீங். ஆனா, அதைத்தவிர ஒன்னும் தோண விட மாட்டேங்குது

க.பாலாசி said...

இது நல்ல மொழிக் கையாடல்.. ஒரு இரவை தனிமை அடைத்துக்கொள்ளும்போது உண்டாகும் சிந்தனைகளில் இதுபோன்ற அலாதிகள் கிடைக்கும்.. அருமை..

vasu balaji said...

/க.பாலாசி said...

இது நல்ல மொழிக் கையாடல்.. ஒரு இரவை தனிமை அடைத்துக்கொள்ளும்போது உண்டாகும் சிந்தனைகளில் இதுபோன்ற அலாதிகள் கிடைக்கும்.. அருமை../

எழுத்தாளர் சொல்லுக்கு எதிர் சொல்லு உண்டுமா?

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

தராசு said...

//இரவின் நிறம் கூடக்கூட அழுத்தமும் கூடத்தொடங்கியது//

Darkness does not have an intensity, It is dark, that is it.

கருமை நிறத்தின் சிறப்பே அது தானோ....

ராமலக்ஷ்மி said...

ஓரிரவில் ஓடிய சிந்தனைகளின் தொகுப்பு சிறப்பு.

ஓலை said...

”எவண்டா இதச் சொன்னது” - Naan thaan.

Nice narration Kathir.

ஓலை said...

பாலா சார் பதில இன்னும் பழமை பார்க்கலை போலிருக்கு? சார்! ரெடியா ?

தெய்வசுகந்தி said...

தூக்கம் தொலைத்த இரவு!!! அருமை!!

தாராபுரத்தான் said...

சிந்தனை செய் மனமே..

f said...

அருமை!!

Rathnavel Natarajan said...

அருமை சார்.