மதியம் இரண்டு மணியளவில் நண்பரின் கைபேசியில் இருந்து அந்தக் குறுந்தகவல் வந்தது. வழமையாய் குறுந்தகவல் அனுப்பாத நண்பரிடமிருந்து குறுந்தகவலா என்ற ஆச்சரியத்தோடு திறந்து பார்க்க ”ஈரோடு மாவட்ட ஆட்சியர் தனது மகள் கோபிகாவை குமலன்குட்டை அரசு ஆரம்ப பள்ளியில் இரண்டாம் வகுப்பில் இணைத்துள்ளதற்கு மகிழ்ச்சியடைவதாக”க் கூறியது அச்செய்தி.
வாசித்து முடிக்கும் போதே, உள்ளுக்குள் ஒரு வெப்பம் பூத்தது. எதையும் நம்பமுடியாத ஒரு சூழலுக்கு ஆட்பட்டேன். அவரிடம் அழைத்து செய்தி உண்மைதானா எனக் கேட்டபோது, அவருக்கு வந்த குறுந்தகவலை எனக்கு அனுப்பியதாகச் சொன்னார். மனசு பரபரத்தது. இப்படியும் நடக்குமா என்ற ஆச்சரியம் மனதுக்குள் கிடந்து தவித்தது.
குமலன் குட்டை அருகே தமிழக அதிரடிப்படையில் பணியாற்றும் நண்பனை அழைத்து பள்ளியில் விசாரித்து தகவல் கொடு என்றேன். எதேச்சையா ஃபேஸ்புக்கில் அரட்டையில் சிக்கிய நண்பர் அல்போன்ஸ் சேவியரை பள்ளிக்குச் சென்று கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன். எனக்கே வியப்பாக இருந்தது எனக்குள் ஏன் இத்தனை அலைச்சல் என்று.
நண்பன் சிரிப்போடு அழைத்தான் செய்தி உறுதிதான் என்று, அடுத்த சிறிது நேரத்தில் சேவியர் அழைத்தார். ”உண்மைதான், படம் கூட எடுத்துள்ளேன் சிறிது நேரத்தில் அனுப்புகிறேன்” என்று. மனதுக்குள் ஒரு வெப்ப உருண்டை ஓடிக்கொண்டேயிருந்தது. வாழ்க்கை குறித்து நாம் கட்டமைத்து வரும் மாயைகள், அதன் மேல் பூசி வரும் வர்ணங்கள் குறித்து மிகப் பெரிய அயர்ச்சி தோன்றியது.
கிராமத்திலிருந்து நகரத்துக்கு நகர்ந்து வந்ததில், தொழிற்சூழல் ஒரு காரணமாய் இருந்தாலும் மகளின் கல்வி என்ற மாயைதான் மிகப் பெரிய காரணமாக முன்வைக்கப்பட்டது. குழந்தை வளரத் துவங்கியதும், எந்தப் பள்ளியில் சேர்த்துறீங்க என்ற இலவசக் கேள்விகளும், இந்தப் பள்ளியில் சேர்த்துங்க என்ற இலவச அறிவுரையும் பெரும்பாலும் கிராமத்தான்களை நகருக்கு நகர்த்தி வருகிறது என்பது என் அனுபவமும் கூட. தனியார் மெட்ரிக் பள்ளிதான் சிறப்பு என்ற நடுத்தரச் சிந்தனை எனக்குள்ளும் ஆழ வேரூண்டப்பட்டுள்ளதை உணரமுற்படும் போது, வெட்கம் பிடுங்கித் தின்கின்றது. மூனரை வயதில் பிள்ளைகளை பள்ளியில் திணித்து, அதைப்படி இதைப்படி என்ற திணிப்புகளில் அந்தக்குழந்தை தனது குழந்தைத்தன்மையை தொலைப்பதை எதிர்த்ததில் பலமுறை இல்லத்தில் யுத்தமும் நிகழ்ந்தேறியிருக்கிறது. எழுத்துக்குக்கும், சிந்தனைக்கும், எனக்கும் இருக்கும் இடைவெளிகள் கண்ணா மூச்சியாடிக் கொண்டிருப்பதை கனத்த வெட்கத்தில் மனது அமிழ்ந்து கிடக்கிறது.
மாவட்ட ஆட்சியரின் மகள் அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டது குறித்த குறுந்தகவலை நண்பர்களுக்கு, அனுப்புவதிலும், அது குறித்து சமூக வலைத்தளங்களிலும் மகிழ்ச்சியாகப் பகிர்ந்தாலும், அந்த செய்தி கிடைப்பதற்கு சிறிது நேரம் முன்புதான் மூன்றாம் வகுப்பு படிக்கும் எனது மகளின் பள்ளிக்கட்டணத்தை வங்கியில் செலுத்தி தந்தை கடமையாற்ற சிரமப்பட்டது குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்தது.
அடுத்த சிறிது நேரத்தில் ஆட்சியர் மகளைப் பள்ளியில் சேர்ப்பித்தது குறித்து செய்திகள் பரவலாகத் தொடங்கின. செய்தி இணையங்கள், தொலைக்காட்சிகள் என கவனம் பெறத் துவங்கின. அதன் மூலமும், நேரில் முயற்சித்ததிலும் அறிந்த செய்திகள் மிகச் சுவாரசியம் மிகுந்தது.
நேற்று அரசு ஆணையின்படி பள்ளி திறந்து, வழக்கம் போல் பணியாற்றிக்கொண்டிருந்த குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. ஆனந்தகுமார் IAS வந்ததைக் கண்டு தலைமையாசிரியை திருமதி ராணி, உட்பட ஆசிரியைகள் திடீர் சோதனைக்கு வந்திருப்பதாக நினைத்திருக்கிறார்கள். ஆனால் தனது மனைவி, மகளோடு வந்த அவர், தனது மகள் கோபிகாவை இரண்டாம் வகுப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும் என மாற்றுச் சான்றிதழ் அளித்து கேட்டிருக்கிறார்.
இன்ப அதிர்ச்சியில் உறைந்த தலைமையாசிரியை, ஆட்சியர் அவர்களை தனது இருக்கையில் அமர வேண்டிருக்கிறார். அதை மறுத்த ஆட்சியர் சேர்க்கைக்கு காத்திருக்கும் பெற்றோருக்கான பலகையில் அமர்ந்து, படிவத்தைப் பூர்த்தி செய்து தனது மகளை சேர்த்திருக்கிறார். கோபிகா இதற்கு முன் தருமபுரியில் ஒரு மெட்ரிக் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்திருக்கிறார். முதல் நாள் வண்ண உடையில் வந்த தனது மகளுக்கு சீருடை கிடைக்குமா எனக் கேட்டதற்கு, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் சீருடை தருவதாக தலைமையாசிரியை கூற சத்துணவுப் பட்டியலிலும் தமது குழந்தையை இணைக்க வேண்டியிருக்கிறார். மகளின் சேர்க்கை குறித்து கருத்துக் கேட்ட செய்தியாளர்களிடம் இது தனது தனிப்பட்ட விசயம் எனவும் கூறியிருக்கிறார் ஆட்சியர்.
ஆட்சியரின் மனைவி ஸ்ரீவித்யா அவர்கள் மருத்துராக அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். ஆட்சியர் திரு.ஆனந்தகுமார் அவர்கள் 36 வயதான கால்நடை மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2003ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணிக்குழுவில் தேர்வு பெற்றவர். முதன் முறையாக தருமபுரி மாவட்டத்தில் ஆட்சியராக பணியமர்த்தப்பட்டு, சமீபத்தில் ஈரோடு மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டவர். ஒரு கிராமப் பின்னணியைச் சார்ந்தவர், கவிஞர், எழுத்தாளர், வலைப்பதிவர் என்பது மகிழ்ச்சிக்குரியது.
மதியத்தில் மனதில் வெதுவெதுப்பாய் குடிபுகுந்த அந்தக் குழந்தையின் சேர்க்கை, இரவு முழுதும் ஒரு மாதிரி தூக்கத்தில் மனதுக்குள் ஓடிக்கொண்டேயிருந்தது. அதிகமுறை விழித்த இரவாகக் கூட இருந்தது. பல இடங்களில் எதையும் செய்யத்துணியாமல் மாற்றம் மாற்றம் எனவிரும்பும் மனது குறித்து குறுகுறுத்தது. கல்வி எனும் காரணத்தை முன்னிறுத்தி என் மகளை நகரக் கூண்டுக்குள் அடைத்து ஒரு கூட்டுக்குடும்ப அற்புதத்திலிருந்து வெளியேறிய வலி கடுமை காட்டியது. பகட்டுச் சூழலில் நாமே வழிய சிக்க வைத்த குழந்தைகளின் வாழ்வை அதிலிருந்து இனி மீட்க முடியுமா என்ற கேள்வி மனதுக்குள் இருளை விதைத்தது.
கடனை வாங்கியாவது ஆங்கில வழி தனியார் பள்ளிகளில் சேர்க்கும், எதற்கும் அடிமைப்பட்ட புத்திஜீவிகள் நிறைந்திருக்கும் உலகத்தில், நன்கு கற்றறிந்த தம்பதி தங்களது மகளை தமிழ்வழியில், தங்கள் இல்லத்திற்கு அருகில் இருக்கும் ஒரு அரசுப் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் இணைக்க முனைந்ததை வெறும் எளிமை என்று மட்டும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. இது ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் முதல் எழுத்தாகவே தோன்றுகிறது.
சமீப ஆண்டுகளில் தமிழ் சமூகத்தை அடிமைப்படுத்தியுள்ள ஆங்கிலக் கல்வி மோகத்தை சற்றே தணிக்கவும், பல அழுத்தங்களுக்கிடையே, மிகச் சிரமப்பட்டு தனியார் ஆங்கிலவழிக் கல்விக்கூடங்களின் பிடியில் அடிபட்டுக் கிடக்கும் பெற்றோர்களின் அழுத்தங்களை விடுவிக்க இது ஒரு சிறு திறவுகோலாக இருக்கும். திணறித் திணறி கட்டணம் கட்டி, சீருடை வாங்கி, காலணிக்குள் கால் திணித்து, பலமடங்கு விலை கொடுத்து புத்தகம் வாங்கி, வாகனத்தில் அனுப்ப கையசைக்கும், நடுத்தர மற்றும் அதற்கும் கீழான வர்க்க மனிதர்கள் தங்களுக்குள் பூட்டியிருக்கும் அடிமைச் சங்கிலியை உடைக்க இது ஒரு சுத்தியலாக இருக்கலாம், இருக்கும். ”போங்காடா நீங்களும் உங்க…….” என உடைபட்டு, ”ஆட்சியரே தன்மகளை அரசுப் பள்ளியில் இணைக்கும் போது எனக்கு மட்டும் என்ன” என வெளியே வர ஏதுவாக இருக்க இது ஒரு தூண்டுகோலாக இருக்கலாம்.
ஆட்சியர் தனது மகளை அரசுப் பள்ளியில் இணைத்தது தனது தனிப்பட்ட சுதந்திரம் எனக் கூறிய பின்னர் அதுகுறித்து எந்த விமர்சனத்தையும் வைப்பது மூர்க்கத்தனமானது. அதே சமயம் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது.
ஈரோடு மாற்றங்களின் பிறப்பிடமாக பல நேரங்களில் இருந்திருக்கிறது. அது போன்றதொரு மாற்றத்தை குமலன்குட்டை ஊராட்சிய ஒன்றியத் துவக்கப்பள்ளியில், அழுத்தம் நிறைந்த தேவையான பொழுதில் மிகச் சிறந்த ஒரு இளைஞர் ஏற்படுத்திக் காட்டியிருக்கிறார். இந்த மாற்றத்தின் வெளிச்சம் ஒட்டு மொத்தமாக கல்வி மேல் இருக்கும் மாயையைக் கழுவித் துடைக்க உதவும் என்று பெரிதும் நம்புகிறேன்.
மதிப்பிற்குரிய இளைஞரை எங்கள் ஆட்சியராகப் பெற்றதில் பெருமகிழ்வெய்துகிறேன். அவரின் அற்புதமான உதாரணச் செயலுக்கு வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.
-0-
51 comments:
பல அரசு பள்ளிகள் குழந்தைகள் இல்லாம தொடர்ந்து நடத்தமுடியா இருக்கு
நான்லாம் இப்போ வரைக்கும் உறுதியா இருக்கேன் நான் படிச்ச அதே அரசுப்பள்ளில தான் நாளை என் குழந்தையும் படிக்கனும்னு :-))
மிகச்சிறந்து முன்னுதாரணம்...
ஆனால் மாற்றம் மக்கள் கையில்தான் இருக்கிறது...
கண்டிப்பாக வரவேற்கப்படவேண்டிய செயல் மாவட்ட ஆட்சித் தலைவருடையது. தலைவணங்கவேண்டும்.. தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோர்கள் இப்போது கொஞ்சமாவது யோசிப்பார்கள்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
Super. படிக்கின்ற போதே மனதுக்கு சந்தோசமாக இருந்தது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களின் அற்புதமான உதாரணச் செயலுக்கு வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.
நல்ல முன்னுதாரணம்.
நல்ல பகிர்வுங்க நன்றியும்
நிச்சியம் நல்லதொரு எடுத்துகாட்டுதான்
:)
ஒரு நல்ல செயல் நடந்துள்ளது .இதை போலவே அரசு பள்ளிகள் மற்று அரசு உதவி பெரும் பள்ளி ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அவரவர் பள்ளிகளில் சேர்க்கவேண்டும்
நல்ல முன் உதாரணம். நல்ல பகிர்வு.
மிகவும் சிறப்பான முன்னுதாரணம்.
வாழ்த்துகள்.
பாராட்டும், அவருக்கு வணக்கங்களும். ஆனால் இது நம்மில் எத்தனை பேரால் சாத்தியப்படும்? அச்சமே மிஞ்சுகிறது.
//இந்த மாற்றத்தின் வெளிச்சம் ஒட்டு மொத்தமாக கல்வி மேல் இருக்கும் மாயையைக் கழுவித் துடைக்க உதவும் என்று பெரிதும் நம்புகிறேன்.//
நம்புவது இருக்கட்டும் எழுத்தில் புரட்சி செய்யும் ஈரோட்டு காரரே....இந்த நிகழ்வு உங்களுக்கு பக்கத்தில் தான் இது நிகழ்ந்து உள்ளது...
அப்ப அடுத்த வருடம் உங்கள் குழந்தையை தமிழ் வழி கல்வியில் சேர்க்க போகிறீர்கள் ...அப்படி தானே?
இல்லை ...எல்லோரும் போல ஒரு பதிவு தேறி விட்டது என்று கமுக்கமாக இருந்து விடுவீர்களா?
பார்க்கலாம்..... :))
// கார்த்திக் said...
பல அரசு பள்ளிகள் குழந்தைகள் இல்லாம தொடர்ந்து நடத்தமுடியா இருக்கு
நான்லாம் இப்போ வரைக்கும் உறுதியா இருக்கேன் நான் படிச்ச அதே அரசுப்பள்ளில தான் நாளை என் குழந்தையும் படிக்கனும்னு :-))
//
"சபாஷ் கார்த்திக்" ன்னு வாழ்த்துற நிலமையில நம்ம இருக்கோம். நீங்க படிச்ச அரசுப்பள்ளியில தான் உங்க குழந்தையும் படிக்கனும்ன்னு சொல்றதுக்கு அந்த பள்ளி மேல இருக்கிற நம்பிக்கையும், அதன் தரமும் காரணமாக இருக்க வேண்டும். ஆனால் அது போன்று எத்தனை பள்ளிகள் உள்ளன?
அரசுப் பள்ளிகளின் சரியான வகுப்பறைகளும், ஆசிரியர் விகிதமும், நன்கு பாடம் நடத்தும் தரமும் ஏற்றார் போல அமைந்தால் எல்லாருமே அரசுப் பள்ளிகளுக்கு படைஎடுப்போமே !!
வாழ்துக்கள் ! ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆனந்தகுமார் அவரது இந்த செயல் அனைவருக்கும் ஒரு முன் உதரணம். முதல் நாள் வண்ண உடையில் வந்த தனது மகளுக்கு சீருடை கிடைக்குமா எனக் கேட்டதற்கு, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் சீருடை தருவதாக தலைமையாசிரியை கூற சத்துணவுப் பட்டியலிலும் தமது குழந்தையை இணைக்க வேண்டியிருக்கிறார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. இதை எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றி !
தனிக்காட்டு ராஜா....
||அப்ப அடுத்த வருடம் உங்கள் குழந்தையை தமிழ் வழி கல்வியில் சேர்க்க போகிறீர்கள் ...அப்படி தானே? ||
என் மகள் 4 ஆண்டுகள் வேறு பள்ளிச்சூழலில் படித்த காரணத்தால், மாறுவதற்கு மகள் ஒப்புக்கொள்ளவேண்டும், அடுத்து என் மனைவி ஒப்புக்கொள்ள வேண்டும்!!!
நான் மட்டும் இனி தனிப்பட்ட முறையில் என் மகளுக்கான முடிவை எடுக்க முடியாது என்பதை ஒரு தந்தையாக உணர்கிறேன்.
நாளை முதல் எல்லோரும், அரசுப்பள்ளிக்கு மாற்ற வேண்டும் என நான் எழுத்துப் புரட்சி செய்யவில்லை!
தனியார் பள்ளியில் படிக்கவைக்க பொருளாதார, இன்னபிற சூழலில் இருக்கும் சிரமப்படும் பெற்றோர்களுக்கு, ஆட்சியர் செய்த காரியம் அரசுப் பள்ளி நோக்கி வருவதில் இருக்கும் தயக்கத்தை உடைக்க உதவும் என்பதுதான் இந்த எழுத்தின் நோக்கம்!
அது புரியாத யாருக்கும் பதில் சொல்லும் அவசியம் அற்றது.
----
||எழுத்தில் புரட்சி செய்யும் ஈரோட்டு காரரே||
இந்த நக்கலால் என்ன சாதிச்சுட்டீங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கீங்களோ... :)
||எல்லோரும் போல ஒரு பதிவு தேறி விட்டது என்று கமுக்கமாக இருந்து விடுவீர்களா?||
ஆமாம், பதிவு படிக்கிறவங்க எல்லாம் தலைக்கு 100 ரூவா தந்தாங்க என்ற சந்தோசத்தோடு கமுக்கமாத்தானே இருக்கனும் :)))
- கதிர்
//என் மகள் 4 ஆண்டுகள் வேறு பள்ளிச்சூழலில் படித்த காரணத்தால், மாறுவதற்கு மகள் ஒப்புக்கொள்ளவேண்டும், அடுத்து என் மனைவி ஒப்புக்கொள்ள வேண்டும்!!!//
இந்த பதிலை எதிர் பார்த்து தான் இந்த கேள்வியை நான் கேட்டேன் :))
சமுக மாற்றம் என்றெல்லாம் நாம் பேசுகிரோம்...கடசில நம்ம கலைஞர் மாமா மாதிரி வீட்டையே திருத்த முடியாம இப்படி புள்ள பாசத்துல்ல சிக்கி போகிரோமே :)
நீங்க இந்த விசயத்தை ஒரு இரவு தூக்கம் கெடுத்து யோசித்ததே நல்ல விஷயம் தான்....சரி அடுத்த ஸ்டெப் ஏதாவது புரட்சிகரமா எடுப்பிங்களோ-நுதான் கேட்டு பார்த்தேன் :)
//இந்த நக்கலால் என்ன சாதிச்சுட்டீங்க.//
என்ன பண்ணறது ...பழகி போச்சு :)
இப்படிப்பட்டவர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் படித்தால்தான் ஆசிரிய-ஆசிரியைகள் தரமாகக் கற்பிப்பார்கள்; அரசின் கவனமும் சரிவர வரும். மற்ற மாணவ-மாணவிகளுக்கும் புத்துணர்வு கிடைக்கும்; அரசு பள்ளிகளின் தரம் மேலோங்கும். அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளிலேயே படிக்க வைக்க வேண்டும்; இதற்காக, அரசு சட்டமியற்ற வேண்டும் - அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளிலேயே படிக்க வைக்க வேண்டும்; இல்லையெனில், .....
எல்லாம் சரிதான்...
தாமாக திருந்துகிற காலகட்டமெல்லாம் தாண்டியாகிவிட்டது...
சாட்டை எடுத்தால்தான் மாற்றம் நிச்சயம்...
அரசு பள்ளி ஆசிறியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் குழந்தைகளை கட்டாயம் அரசு பள்ளிகளில் மட்டுமே சேர்ப்பிக்க வேண்டும் இல்லையெனில் அரசுப்பணியை இழக்கவேண்டி வரும் என ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படட்டும்...
அரசு பள்ளிகளின் தரம் அமெரிக்காவையும் மிஞ்சிவிடும் அப்போது...
நுகர்பொருள் கலாச்சார திணிப்புக்கு பின்னான மக்களின் வாழ்வியல் கலாச்சாரங்கள் அதீத பயங்கொண்டதாகவும், எப்போதும் போட்டியில் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் இல்லையெனில் எதுவும் கிட்டாது என்ற செயற்கையான மனநிலை உருவகங்களுக்குபின்னான காலகட்டங்களில் தமக்கு கிட்டாத சவுகர்ய அதிக உடலுழைப்பு சாரா சம்பாத்தியங்களை எளிதாய் அடைய ஒரே வழி கல்வி மட்டும்தான்...
அந்த எதிர்கால நம்பிக்கையையும் அரசுப்பள்ளிகளில் அடமானம் வைக்க யாரும் துணிவதில்லை என்பதுதான் நிதர்சனம்...
மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு பாராட்டு தெரிவிக்கும் அதே நேரம் அளவில்லா குற்றவுணர்வில் அமிழ்ந்திருக்குமளவு எந்த தவறும் நம்மால் செய்யப்படவில்லை என்பதை புரிந்துகொள்வதும் நல்லது.
முதலில் தனியார் பள்ளிகளில் தன் பிள்ளைகளை சேர்க்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை உதைக்க வேண்டும்
கண்டிப்பாக வரவேற்கப்படவேண்டிய செயல் மாவட்ட ஆட்சித் தலைவருடையது. தலைவணங்கவேண்டும்.
manikandan
ஆட்சியருக்கு பாராட்டுக்கள்.
அதைப் பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றி.
மற்றபடி ஒருவரை பாராட்ட வேண்டுமென்றால், அவர் செய்த சாதனையை நாமும் செய்ய வேண்டுமென்று கிடையாது.
இந்த நிகழ்வு, நிச்சயமாக மற்றவர்களை யோசிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி.
நிச்சயமாக பாராட்டப்படவேண்டிய விஷயம். மாற்றத்திற்கு முன் உதரணமாக திகழ்ந்துள்ளார். இது நிச்சயம் அவரது தனிப்பட்ட முடிவாகமட்டும் இருந்திருக்காது. அவரது முடிவிற்கு உறுதுணையாய் இருந்த அவரது மனைவியும் பாராட்டப்படவேண்டியவர்...
மிகவும் வெட்கத்தோடு இந்த தகவல் குறித்து நேற்று வீட்டில் விவாதித்தபோது எனது மனைவி எனது மகனை அரசு பள்ளியில் சேர்க்க மறுத்துவிட்டார்.
மக்களே நாம் எப்போது மாறுவோம்?
நாம் மாறினால் தனியார் கல்வி நிலையங்களுக்கான டிமான்ட் நிச்சயம் குறையும். அப்போது கல்வி கட்டணமும் தானாக குறையும். எந்த நீதியரசர் குழுவின் அறிக்கைக்கும் நாம் காத்திருக்கத்தேவையில்லை.
பூங்கொத்துப் பதிவு!
ஈரோட்டுக்காரங்க கலக்குறாங்க!
நல்ல முன்னுதாரணம். வாழ்த்துகள்.
நம்ப்பினால் நம்புங்கள்., இறந்துபோன எனது இரண்டரை வயது பெண் குழந்தையை நகராட்சி பள்ளியில்தான் சேர்க்கவேண்டும் என்பதை உறுதியாக எண்ணியிருந்தேன்.
குழந்தைகள் "கற்றுகொள்வதில்" பெற்றோரின் பங்கே அதிகம் என்பதில் அசாத்திய நம்பிக்கை உண்டு!
ஆனால் அதற்க்கு முன் கான்வென்ட்டில் சேர்க்கும் அளவிற்கு பணம் படைத்தவனாய் மாறிவிடவேண்டும் இல்லையெனில் எனது சுற்றத்தார்கள் என் குழந்தையிடம் அவள் நகராட்சி பள்ளியில் சேர்த்ததற்கு 'வேறு' காரணம் சொல்லிவிடுவார்களே என்ற பயம்!
காரணம் நான் நகராட்சி பள்ளியில்தான் சேர்க்க எண்ணியுள்ளேன் என்று பேச்சில் தெரிவித்தபொழுது அவர்களின் உடல் மொழி அதனைத்தான் சொல்லவந்தது!
மிகவும் சிறப்பான முன்னுதாரணம்.
வாழ்த்துகள்!
ஆங்கில, தனியார் பள்ளிகளில் தன் பிள்ளைகளை சேர்க்கும் அரசு அதிகாரிகள், ஆசிரியர்க்ளை, அரசியல்வாதிகளை உதைக்க வேண்டும்
அருமையான செயல், முன்னுதாரணம்.
வாழ்த்துகள்
நடத்திக் காட்டியவர்க்கும்
பகிர்ந்தவருக்கும்.
அந்தப் பள்ளி முன்னேற ஒரு அருமையான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ள கலெக்டருக்கு வணக்கம்.
#அரசுப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவன்.
இப்போது நடைமுறையில் இருக்கும் கல்லூரிகளுக்கான போட்டித் தேர்வுச் சூழ்நிலையில், மெற்றிக் பள்ளிகளில் படிக்க வைப்பது தவிர்க்க இயலாதது.. முதலாவது மாறும் போது இரண்டாவது குறையும்.. இதற்கு எதற்கு நீங்கள் குற்றவுணர்வு கொள்ள வேண்டும்?
கலெக்டராக இருக்கும் ஒருவர் தன் மகளைச் சேர்த்துவிட்டார் என்று நினைப்பதை விட, அரசு அதிகாரத்தில் உள்ள ஒருவர் இப்படிச் சேர்த்திருப்பது பள்ளிக்கு நல்லது, அங்கு பயிலும் எல்லோருக்கும் நல்லது.. சத்துணவுக் கூடம் முதற்கொண்டு எல்லோரும் தவறு செய்ய பயப்படுவார்கள்..
பள்ளி அவரது கவனிப்பில் இருக்கும், உருப்படுவதற்கும் வழிவகுக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது..
இறுதிப் புகைப்படம் மனதைக் கொள்ளை கொண்டது..
இவர் எனக்கு இரண்டு ஆண்டுகள் முதுநிலை(சீனியர்) மாணவர். இவர் ஒரு மதிப்பெண்ணில் மருத்துவ (மனித) படிப்பைத் தவற விட்டார்.இவருடன் பல நாட்கள் ஆனைகொப்பு (செஸ்) விளையாடி இருக்கிறேன் பல முறை தோற்ற நான் ஒரே ஒரு முறை வென்றுள்ளேன்.
எனது ஆட்டோகிராப் இல் இவர் எமனுக்கே வைத்தியம் பார்க்க நினைத்து அவனது வாகனமான எருமைக்கு வைத்தியம் பார்க்க வேண்டியதாகி விட்டது என்று எழுதியது இன்றும் நினைவு இருக்கிறது . இவரது வலைமனை முகவரி இருந்தால் தாருங்கள் கதிர் அண்ணே
''மதிப்பிற்குரிய இளைஞரை எங்கள் ஆட்சியராகப் பெற்றதில் பெருமகிழ்வெய்துகிறேன். அவரின் அற்புதமான உதாரணச் செயலுக்கு வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.'' வாழ்த்துக்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன் .
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். எனது மகன் அரசுப்பள்ளியில் படித்து தற்போது இ.இ.இ இன்சினியரக உள்ளான்.எனது மகள் பிளஸ் டுவில் 1068 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவி என்ற பெருமையும் பெற்றுள்ளார். அரசு பள்ளிகள் தரமாகதான் உள்ளது ஆனால் நாம் தான் ஆங்கில கல்வி என்ற மாயையில் முழ்கி கிடக்கிறோம். அதிலிருந்து ஒவ்வொருவரும் வெளிவரவேண்டும் அப்போதுதான் இந்த கல்வி கட்டணக் கொள்ளை என்ற அவலம் மாறும்.
பதிவுக்கு நன்றி
அன்புடன்
மை.செய்யது
அபுதாபி
Excellent article Kathir.
மாவட்ட ஆட்சியர் என்றாலெ பொதுமக்களிஅட்மிருந்து அந்நியப்பட்டவர்களாக இருந்தார்கள். இப்போது நம்பிக்கை வருகிறது.
அரசு அதிகாரிகள் தஙள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் தான் அரசு பள்ளிகள் ந்னறாக இஅய்ங்கும். இதை சுய விமர்சனப் பூர்வமாக ஈரோடு ஆட்சியர் அமல்செய்திருக்கிறார். அவரை வாழ்த்துவோம், அதே வழியில் நடக்க முயற்சிப்பொம்.
இதை பற்றி சஞ்சய் ஒரு பஸ்ஸில் போட்டிருப்பது:
Sanjai Gandhi v2.0 - ம்ம்கும்.. தினமலர்ல அரைப்பக்கம், போட்டோவோட எழுதி இருக்காங்க. அந்தப் பள்ளியின் திடீர் சுத்தம், முக்கிய அதிகாரிகளின் தொடர் விசிட், அதன் விளைவாக சுகாதாரமான உணவு, கை, கால் கழுவிட்டு தான் உணவு சமைக்க வேண்டும் என்ற கண்டிப்பு என ஒரு நட்ச்சத்திர உணவகம் அளவுக்கு சமையல் நடந்திருக்கு. அதை ஒரு பெண் அதிகாரி ஆய்வு வேற செஞ்சிருக்கார். அப்படியும் அந்தக் குழந்தைக்கு டாடா சுமோவில் வீட்டு சாப்பாடு வத்திருக்கு. இந்த ஆனந்தக் குமார் தருமபுரி கலெக்டரா இருந்தவரைக்கும் இவர் அடிச்ச விளம்பர ஸ்டண்ட் தாங்காது. இப்போ ஈரோட்டுக் காரங்களுக்கு புல்லரிக்கிற நேரம். :))
உங்களுக்கு ஏற்பட்ட இதே மகிழ்ச்சி செய்தியை படித்தவுடன் எனக்கும் எற்பட்டது. அதனால் இந்செய்தியை உடனடியாக என்னுடைய வலைப்பதிவில் வெளியிட்டேன்.
அதே நேரத்தில், தமிழனின் பணத்தில் தமிழனின் தாலியருக்கும் “தினமலர்” என்ற “தினமலம்” இன்று (17.06.2011) ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. ஆட்சியர் மகளுக்கு வீட்டிலிருந்து சாப்பாடு வந்ததாகவும், அவர் சத்துணவு சாப்பிடவில்லை என்றும் செய்தி வெளியிட்டு, ஆட்சியரையும், அவரின் செயலையும் இழிவுபடுத்தும் நோக்கத்தோடு வெளியிட்டுள்ளது.
மெட்ரிக் பள்ளிகளுக்கு ஆதரவாகவும் தமிழினத்திற்கு எதிராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தினமலரை மானமுள்ளவர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
@ manjoorraja
:(((
பிறிதொரு கோணத்தில் நன்றாக, பொறுமையாக, மனித நேயத்தோடு யோசித்துப் பாருங்கள், 7 வயது குழந்தை பெற்றோர் நிலையில்இருந்து யோசித்துப் பாருங்கள். எல்லாம் புரியும்!
விளம்பரம் செய்து பேர் வாங்க, இன்னும் எளிதான யுக்திகள் ஆயிரம் கிடக்குங்க! அதுவா ஒரு விசயம்.:)
தினமலர் செய்தியை நான் ஆதரிக்க வில்லை அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்களையும் தினமலரை கண்டிக்க வேண்டுகிறேன்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. ஆனந்தகுமார் IAS அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள் !
வீ முருகேசன், பம்பாய், இந்தியா.
+91 22 25115590 - 92
மாவட்ட ஆட்சியர் டாக்டர்.இரா.ஆனந்த குமார் அவர்கள் எங்கள் மாவட்டத்தில் பணிந்த நல்ல ஒரு மனிதர். மிகவூம் எளிமையானவர.மிகவூம் நேர்மையானவர்.தமிழ் நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வது மகிழ்ச்சியாக உள்ளது.
தன் மாவட்டத்திற்காக மாற்றத்தையும் புதுமையையும் தன்னிலிருந்து ஆரம்பித்து வைத்திருக்கும் ஆட்சியரை வாழ்த்த வயதோ, அனுபவமோ இல்லை. அவரது செயலை தலை வணங்கி வரவேற்கிறேன். தங்களது எண்ணங்களின் வெளிப்படையான பகிர்வுக்கு நன்றி கதிர் சார்.
சிறப்பான முன்னுதாரணம்.
கும்க்கி அண்ணனின் கருத்தும் மிகப் பிடித்திருந்தது.
கல்வி குறித்த மாயையிலிருந்து நடுத்தர வர்க்கத்தினர் வெளியேறுவது அவசியமான ஒன்று. நீங்கள் சொன்னதுபோல அதற்கு இது ஒரு முதல் எழுத்தாக இருக்கட்டும்.
பகிர்வுக்கு நன்றி கதிர் அண்ணா.
தினமலரின் நேற்றைய செய்தியையும் கண்டேன். Keep my fingers crossed.
அன்பின் கதிர் - முன்னுதாரண்மாகத் திகழும் ஆட்சியர் ஆனந்த குமாருக்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள்.
//ஆட்சியர் தனது மகளை அரசுப் பள்ளியில் இணைத்தது தனது தனிப்பட்ட சுதந்திரம் எனக் கூறிய பின்னர் அதுகுறித்து எந்த விமர்சனத்தையும் வைப்பது மூர்க்கத்தனமானது. //
உண்மை - இடுகைக்கு நன்றி கதிர் - நட்புடன் சீனா
கோடியில் ஒருத்தர்.
மதுரையச்சுற்றி ஒரே வேலம்மாள் பள்ளிகள் மூட்டைகட்டிக்கொண்டு அலையுது மிடில்க்ளாஸ்.ராசிபுரம் பள்ளிக்கு திருப்பதியை விட மவுசு அதிகம்.பிஎஸ்ஜி யில பிள்ளைபடிப்பதை
ப்ரேம் போட்டு வாசலில் மாட்டிக்கொள்வது இப்போதைய பேசன்.
இந்த யுகத்தில் ஒரு ஆட்சியர் தனது பிள்ளையை ப.யூ.பள்ளிக்கனுப்புவது வாஞ்சியைப்போல,ராஜகுருவைப்போல துணிச்சலானது.
வாழ்த்துக்கள்
பிறிதொரு கோணத்தில் நன்றாக, பொறுமையாக, மனித நேயத்தோடு யோசித்துப் பாருங்கள், 7 வயது குழந்தை பெற்றோர் நிலையில்இருந்து யோசித்துப் பாருங்கள். எல்லாம் புரியும்!
விளம்பரம் செய்து பேர் வாங்க, இன்னும் எளிதான யுக்திகள் ஆயிரம் கிடக்குங்க! அதுவா ஒரு விசயம்.:)
உண்மை தான்,நமது ஊரிலே புத்தனுக்கு 30 வயதிலே ஞானம் வந்ததாக கூறினால் கூட _லைப்பால் குடிக்கும்போது ஏன் வரவில்லை என்றுதான் கேட்பார்கள் ,கெட்டதை விட்டு நல்ல முயற்சிக்கு வாழ்த்துவோம்
ஆங்கில மோகம் அதிகமாக இருக்கின்ற இந்த நேரத்தில், பகட்டும் ஆடம்பரமும் நிறைந்த பள்ளிகளை நாடி பல ஆயிரங்களை கொட்டி தன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி தன் வசதியை பிள்ளையின் மீதான அக்கறையை வெளியுலகத்திற்கு காட்டுகின்ற பெற்றோர்களின் மத்தியில் ஒரு சிறந்த பெற்றோராக இருந்து தன் பிள்ளைக்கு நல்ல செயலை செய்திருக்கின்ற அந்த பெற்றோருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். அரசு வேலையில் இருந்து அரசின் ஊதியம் பெற்று மக்களின் வரிப்பணத்தில் வாழும் பலரிடமிருந்து தன்னை ஒரு நேர்மையான அரசு ஊழியர் என்பதை இதன்வழி காட்டியிருக்கின்ற அரசு ஊழியருக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் வாழ்த்த வேண்டும்
THERE R FEW PEOPLES LIKE HIM. I KNOW A CIVIL JUDGE WHO WORKED IN SALEM ADMITTED HIS CHILDREN IN A CORPORATION SCHOOL NEAR HIS QUARTERS FEW YEARS AGO
இது தொடர்பான பாலோ-அப் செய்தி ஏதும் இருக்குங்களா?
ஏன் கேக்கறேன்னா, முதல்நாள் ஆட்சியர் குழந்தைக்கு வீட்டிலிருந்து ஜீப்பில் உணவு வந்ததாக தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. அதன் பின் எந்த நாளிதழும், பத்திரிகையும் செய்தியைத் தொடர்ந்ததாக நினைவு இல்லை. அவர்களுக்கு ஆர்வம் இருப்பதாகவும் தெரியவில்லை.
உண்மையாகவே ஆட்சியர் மகள் அரசு பள்ளியில் தொடர்ந்து படித்து, சத்துணவை உண்டு வந்தால் அப்பள்ளியின் பிற மாணவர்களுக்கும் விடிவு பிறக்கும். மற்ற அரசுப் பணியாளர்களையும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஊக்குவிக்கும்.
இல்லாவிட்டால் இது 'ஒரு நாள் கூத்தாகவே' நோக்கப்படும்.
சஞ்சய் காந்தி கூறியது உண்மையோ என நினைக்கத் தோன்றுகிறது.
Congrats to Erode Collector. I have stuided in Gov school at Kanchipuram, now I work as Project Manager in Melbourne. We should really motivate this kind of activities.
Tweeterல் பள்ளி வரலாறு படித்த பரவசத்தோடு கசியும் மௌனத்திற்குள் வந்தேன்.இங்கும் அரசுப் பள்ளியில் நிகழ்ந்த அற்புதம் கண்டு வியந்தேன்.அறிந்த தகவல் எனினும் பதிவு செய்திருக்கும் விதம் அருமை.
Post a Comment