நான் யாருன்னு நெனைச்சிக்கிட்டானாம்

காலை அலுலகம் அருகில் நெருங்கும்போது, அலுவலக வாசலையொட்டிய சாலையில் ஏதோ மிகப்பெரிய மாறுதலை உணர முடிந்தது. வழக்கத்தை விட வெட்டவெளியாக, கூடுதல் வெளிச்சமாக இருப்பது போல் தோன்றியது. என்னவாக இருக்கும் என யோசித்தாலும் ஒன்றும் புரிபடவில்லை.

சிறிது நேரத்திற்குப் பிறகு நண்பரோடு சாலையைக் கடக்கும்போது, ”என்னவோ வித்தியாசம் தெரியது என்னாச்சு” எனக்கேட்டபோது அவர் சொல்லித்தான் உணரமுடிந்தது. எதிர்புறம் இருக்கும் அரசு அலுவலக வளாகத்திற்குள், வளாகச் சுவரையோட்டி இரண்டு பக்கமும் இருந்த மரங்களில் உள் பக்கம் இருந்த மரம் அடியோடு விழுந்திருந்தது. பின்னரவில் அடித்த மழையும் புரட்டியெடுத்த காற்றும் அந்த மரத்தை அடியோடு வீழ்த்திப்போயிருந்தது புரிந்தது.

யாராவது விதை போட்டோ, அல்லது பறவையிட்ட எச்சத்தில் வீழ்ந்து தப்பிப் பிழைத்தோ செடியாய் முளைத்து, வளர்ந்து நிமிர்ந்து கிளைபரப்பிய மரத்தின் வாழ்க்கை ஒற்றைக் காற்றில் முடிந்துபோனதை நினைக்கும் போது, கூடுதல் சங்கடமாய் இருந்தது. சுவர்களின் இருபக்கமும் இணையாய் இரண்டு மரங்கள் இருந்ததால் இரண்டின் கிளைகளும் ஒன்றோடு ஒன்று பிணைந்து பரந்துபட்டு நிழலைக் கொட்டியதில் அங்கிருந்தது இரண்டு மரங்களா என்பது கூட பத்து ஆண்டுகளுக்கு மேல் அதே பகுதியில் புழங்கிய எனக்கே நினைவில் பதியவில்லை. இரண்டு மரங்களும் இணைந்து பரந்து வஞ்சனையில்லாமல் வழங்கிய நிழல், இப்போது ஒற்றை மரத்தின் கிளைகளில் கசியும் சூரியக் கதிர்களில் நீர்த்துப் போய்க் கிடந்தது.நீர்த்துக் கிடக்கும் நிழலை அடர்த்தியாக்க, இன்னொரு விதை செடியாக முளைத்து, மரமாக நின்று, கிளைகள் பரப்பி…. ம்ம்ம்ம்… நடக்கலாம், நடவாமலும் போகலாம். எனினும் ஒவ்வொரு நிகழ்வும் பக்கம் பக்கமாய் ஒரு பாடத்தை கிறுக்கிச்செல்கிறது. வாசிக்க மனமுள்ளவர்களுக்கு அது ஒரு அழகிய பாடம், வெறுமென புரட்டிப்பார்ப்பவர்களுக்கு அது சில பக்கங்கள். 

ஒரு செடியோ, மரமோ, கோட்டையோ, ஆட்சியோ, வாழ்க்கையோ… வேர்விட்டு கிளைபரப்பி திடகாத்திரமாய் நிற்பது என்பது ஓரிரு நிமிடங்களிலோ, ஓரிரு மணிகளிலோ நிகழ்ந்து விடுவதில்லை, ஆனால் அது சரிந்து போக ஒற்றை நிமிடமோ, ஓரிரு மணிகளோ அல்லது ஓரிரு நாட்களோ போதுமானதாகவே இருக்கிறது.

உதாரணங்களை அடுக்கினால், இதுவரை நாம் கண்ட அத்தனை முறிவுகளும், விபத்துகளும், கொலைகளும், சரிவுகளும், வீழ்ச்சிகளும், அழிவுகளும் வரிசை கட்டி நிற்கும். எதுவும் என்னை அசைக்கமுடியாது என்று நீண்ட நெடுங்காலம் வறட்டு நம்பிக்கைகளை ஒற்றை நிகழ்வுகள் அடித்து நகர்த்திப் போனதும் வரலாறுகளில் பதிவாகித்தானே இருக்கின்றன.
தொடர் வெயிலைப் புரட்டிப்போடும் ஒற்றைப் பெரு மழையாகட்டும், பதவியேற்கச் சென்ற அமைச்சரின் எதிர்கால வரலாற்றை விநாடியில் முறித்துப் போட்ட விபத்தாகட்டும், இலவசங்களால், பணத்தால் அடுத்ததும் ஆட்சியென கட்டமைத்த மாயைகளை வீழ்த்திய ஒரு பகல் பொழுது வாக்குப் பதிவாகட்டும், திட்டமிடலில் உலகின் மிகப்பெரிய சூத்திரதாரி என உலகமே வியந்தவனை ஒரு முக்கால் நேர மணி இரவில் வீழ்த்திய யுக்தியாகட்டும்….. எல்லாம் சட்டென நிகழ்ந்து நின்று நிதானிப்பதற்குள் கடந்து போய், எல்லாவற்றையும் வீழ்த்தும் வல்லமை இன்னொன்றுக்கு இருக்கிறது என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றது.

குறுக்கும் நெடுக்கும் கோடுகளாய் ஓடும் சிந்தனைகளை இறுகப் பிடித்து, அடுக்கடுக்காய் மனதில் படியவைத்து, நிதானமாய் அதை அசைபோட்டு, அடர்மௌனம் சூழ அமைதியாக, உள்மனது இறுகிக் குழையும் தருணத்தில், அருகாமையில் இருக்கும் டாஸ்மாக் உதவியால் தனக்குள் இருக்கும் இன்னொருவனைக் கண்டறிந்த புத்திசாலி “டேய்… எவனும் என்ன ஒரு மசிரும் புடுங்க முடியாதுடா, நான் யாருன்னு நெனைச்சிக்கிட்டானாம்” என ஓங்காரமாய்க் குரல் கொடுத்துக்கொண்டே தள்ளாடி என் கண்களிலும், காதுகளிலும் நிரம்பியவன் மெதுவாய்க் கரையத் தொடங்கினான்

---------------------------------------

பொறுப்பி: சிறகு இதழில் வெளி வந்த கட்டுரை. சிறகு ஆசிரியர் குழுவிற்கு நன்றிகள்

-0-

2 comments:

guru said...

"தொடர் வெயிலைப் புரட்டிப்போடும் ஒற்றைப் பெரு மழையாகட்டும், பதவியேற்கச் சென்ற அமைச்சரின் எதிர்கால வரலாற்றை விநாடியில் முறித்துப் போட்ட விபத்தாகட்டும், இலவசங்களால், பணத்தால் அடுத்ததும் ஆட்சியென கட்டமைத்த மாயைகளை வீழ்த்திய ஒரு பகல் பொழுது வாக்குப் பதிவாகட்டும், திட்டமிடலில் உலகின் மிகப்பெரிய சூத்திரதாரி என உலகமே வியந்தவனை ஒரு முக்கால் நேர மணி இரவில் வீழ்த்திய யுக்தியாகட்டும்….. எல்லாம் சட்டென நிகழ்ந்து நின்று நிதானிப்பதற்குள் கடந்து போய், எல்லாவற்றையும் வீழ்த்தும் வல்லமை இன்னொன்றுக்கு இருக்கிறது என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றது".
Yaaralum marukka mudiyaatha varigal. Nalla pathivu Edwin Sir.

Rathnavel said...

நல்ல பதிவு.